பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் உண்ணாவிரதப் போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெல்ஜியத்தில் 430 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் பெல்ஜிய அதிகாரிகளின் கைகளில் அவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டதற்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

2021 ஜூன் 29 செவ்வாய்க்கிழமை, பிரஸ்ஸல்ஸில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் ULB பல்கலைக்கழகத்தின் ஒரு பெரிய அறையை ஆவணமற்றவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒருவரை மருத்துவமனைக்கு ஏற்றிச்செல்ல செஞ்சிலுவைச் சங்க சுகாதார ஊழியர் ஆம்புலன்ஸ் ஒன்றை அழைக்கிறார். (AP Photo/Francisco Seco)

தொழிலாளர்கள் முக்கியமாக துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா, எகிப்து மற்றும் பாக்கிஸ்தானிலிருந்து வந்தவர்களாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் வதிவிட ஆவணங்களைப் பெறாமல் பல ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய பின்னர், நாட்டில் தங்குவதற்கான உரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். பெல்ஜிய அதிகாரிகள் அவர்கள் நாடு கடத்தப்பட்டு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் புதனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் ஒன்றான பிரஸ்ஸல்ஸிலுள்ள பெகினாஜ் தேவாலயத்தில், அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தனர். 'நேற்றும் இன்றும், அரசாங்கத்துடனும் ஆதரவாளர்களுடனும் சந்திப்புகள் நடந்தன. இன்னும் அங்கீகரிக்காத ஒப்பந்தங்களை எங்களால் எட்ட முடிந்தது. அவர்கள் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே தேவாலயத்திற்குள் இனி வேதனை இருக்காது, நாங்கள் தண்ணீர் அருந்தாமையை நிறுத்தவும், இப்போதைக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்தோம்' என்று அவர்கள் கூறினர். எவ்வாறெனினும், பல எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர் என்று கூறப்படுகிறது.

வியாழனன்று பிற்பகல், பிரஸ்ஸல்ஸிலுள்ள தேவாலயம் மற்றும் இரண்டு பல்கலைக்கழக உணவகங்கள் ஆக்கிரமிக்கப்படும் என்று ஆவணமற்றவர்களை முறைப்படுத்துவதற்கான ஒன்றியம் (Union for the Regularisation of Sans-Papiers - USPR) பேஸ்புக்கில் அறிவித்தது.

புகலிடம் மற்றும் இடம்பெயர்வு வெளிவிவகாரச் செயலர் சம்மி மஹ்தி (கிறிஸ்துவ-ஜனநாயகவாதிகள்) அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கையில் எதுவும் மாறவில்லை என்று RTBF (தொலைக்காட்சி) இடம் வலியுறுத்தினார். உண்ணாவிரதப் போராட்டம் முழுவதிலும், அவர் பலமுறையும் எதிர்ப்பாளர்களை கண்டனம் செய்தார்.

'எங்கள் இடம்பெயர்வு கொள்கை குறித்து நாங்கள் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை' என்று அவர் புதன்கிழமை கூறினார். 'பின்பற்றப்பட வேண்டிய விதிகளுடன் ஒரு கொள்கை உள்ளது. நாம் பல முறை விளக்கினோம் ...' மஹ்தி புதனன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார், அவமதிப்புடன் அறிவித்தார்: '60 நாட்களுக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் தங்கள் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர், இது அவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரங்களில் நிலைமை மோசமடைந்த விதம் எனக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கூட்டு முறைப்படுத்துதல் (collective regularisation) ஒரு தீர்வு அல்ல என்பதையும், தற்போதுள்ள நடைமுறைகள் மனிதாபிமானம் கொண்டவை என்பதையும் பல்வேறு குடிமக்கள் குழுக்களை எங்களால் நம்ப வைக்க முடிந்தது என்பது நல்லது.'

உண்மையில், பெல்ஜிய அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளின் விளைவாக அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர்ப்பாளர்கள் விவரித்துள்ளனர். பெருந்தொற்று நோய் முழுவதிலும் அவர்களுக்கு அரசாங்க உதவி எதுவும் கிடைக்கவில்லை, அவர்களில் பலர் தங்கியிருத்தல் துறை (hospitality), கட்டுமானம், சுத்தம் மற்றும் சேவைகள் துறையில் முறைசாரா முறையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பெருந்தொற்று நோய் முடக்கங்களின் போது பட்டினி கிடக்க விடப்பட்டார்கள்.

முதலில் நேபாளத்தைச் சேர்ந்த கிரண் அஹைகாரி, உணவகங்கள் மூடப்படும் வரை ஒரு சமையல்காரராக பணியாற்றினார். அவர் பெல்ஜியத்தில் 16 ஆண்டுகளாக வசித்து வருகிறார், ஆனால் இன்னும் சட்ட பாதுகாப்பு இல்லை. அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்: 'எனக்கு 37 வயதாகிறது. நான் இந்த சமூகத்தை, அதன் மக்களை நேசிக்கிறேன், ஆனால் எனக்கு சட்டபூர்வ இருப்பு இல்லை. இந்த நகரத்தில், நாங்கள் எலிகளைப் போல வாழ்கிறோம். நான் அவர்களிடம் (பெல்ஜிய அரசாங்கம்) கெஞ்சுகிறேன், தயவுசெய்து மற்றவர்களைப் போலவே எங்களுக்கும் வேலைக்கான அணுகலை வழங்குங்கள். நான் வரி செலுத்த விரும்புகிறேன், நான் என் குழந்தையை இங்கே வளர்க்க விரும்புகிறேன்.' வேலை அனுமதி இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கு 3 யூரோக்கள் என்ற குறைந்த ஊதியம் வழங்கும் முதலாளிகளால் சுரண்டப்படுவதாக தொழிலாளர்கள் விவரித்துள்ளனர்.

நாடு முழுவதும் இந்த நிலைமைகளின் கீழ் அதிர்ச்சியூட்டும் வகையில் 150,000 பேர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய அவதூறாக வளர்ந்தது, இது அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற கொள்கைகளுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பைத் தூண்டியது. போராட்டத்தில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் தங்கள் உதடுகளை மூடிக்கொண்டு இறக்கும் அபாயத்தில் இருந்தனர். ஜூலை 8 ம் தேதி பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு அறிக்கையாளர்கள் விஜயம் செய்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டது: 'எங்களுக்கு கிடைத்த தகவல்கள் அச்சமூட்டும் வகையில் உள்ளன. பல உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் உள்ளனர்.' நாடு முழுவதும் 150,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற தொழிலாளர்களின் 'மனித உரிமை மீறல்' குறித்து அது எச்சரித்தது.

திங்களன்று மாலை, பிரெஞ்சு மொழி நாளேடான Le Soir, அரசாங்கத்தின் துணைப் பிரதம மந்திரி பிராங்கோஃபோன் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பியர் ஈவ் டெர்மான், ஒரு ஆர்ப்பாட்டக்காரர் இறந்தால் PS மந்திரிகளும் அரசு செயலாளர்களும் இராஜிநாமா செய்வார்கள் என்று அச்சுறுத்தியதாகத் தெரிவித்தது. இதில் கரீன் லாலியூ (ஓய்வூதியங்கள்), லுடிவின் டெடோண்டேர் (பாதுகாப்பு) மற்றும் மூலோபாய முதலீடுகளுக்கான இளநிலை அமைச்சர் தோமாஸ் டெர்னின் ஆகியவர்கள் அடங்குவார்கள்.

எகோலோவின் (பசுமைவாதிகள்) இணைத் தலைவர், 'எங்கள் நடவடிக்கைகள் கேட்கப்படும் மற்றும் எங்கள் வார்த்தைகளுடன் தெளிவான கடிதப் போக்குவரத்து மூலம்' கட்சி 'நேற்று பிரதமருக்கு தெரியப்படுத்தியது' என்று கூறி, அதையே செய்வதாக உறுதியளித்தார். பசுமைக் கட்சியும் சோசலிஸ்ட் கட்சியும் பெல்ஜியத்திலுள்ள ஏழு கட்சிகளின் அரசாங்க கூட்டணியின் ஒரு பகுதியாகும், இதில் பிரெஞ்சு மொழி பேசும் மற்றும் பிளெமிஷ் சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகள், தாராளவாதிகள் மற்றும் பிளெமிஷ் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் உள்ளனர்.

1978ல் பிராங்கோஃபோன் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து மொழிவழியில் பிரிந்த பிளெமிஷ் சோசலிஸ்ட் கட்சியானது பெல்ஜிய ஜனாதிபதி அலெக்சாண்டர் டு க்ரூவின் எதிர்ப்பாளர்கள் மீதான வெளிப்படையான கண்டனங்களை ஆதரித்தது. 'முறைப்படுத்துதல் ஒரு விதிவிலக்கான நடைமுறையாக உள்ளது மற்றும் ஒரு உதவி, ஒரு உரிமை அல்ல,' என்று அது கூறியது.

சோசலிஸ்ட் கட்சியும் பசுமைக் கட்சியும் இராஜிநாமா செய்யப்போவதான அச்சுறுத்தல்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவிடுமோ என்ற அச்சத்தால் உந்துதல் பெற்றவை. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளர்கள் இறந்துவிட்டால் என்ற நிலை குறித்து பிரதிநிதிகள் தங்கள் சீற்றத்தை அறிவித்தாலும், பெல்ஜியம் முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட சமூக துயரநிலைமைகள் குறித்து அவர்களுக்கு ஒரே மாதிரியான மனப்பான்மை இல்லை.

இது போலி-இடது பெல்ஜிய தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவரான நபில் புக்லி ஜூலை 2 ம் திகதியன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர்களின் நடவடிக்கைகளைப் புகழ்வதை தடுக்கவில்லை. புக்லி கூறினார், 'திரு வெளிவிவகாரச் செயலர், உங்கள் அரசாங்கத்திற்குள்ளும் கூட, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பசுமைவாதிகள் போன்ற கட்சிகள் இந்த நிலைமைக்கு ஒரு தீர்வைக் கோரி உயர்ந்துள்ளன. இந்த முயற்சியில் நான் அவர்களை ஊக்குவிக்கிறேன் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன்.'

உண்மையில், பெல்ஜியத்திலும் அண்டை நாடான பிரான்சிலும், சோசலிஸ்ட் கட்சி பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை பேணி ஆழப்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தில் உண்ணாவிரதப் போராட்டம் முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத ஆட்சியின் குற்றவியல் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மத்தியதரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளைத் தடுக்க செயல்படுகிறது - ஆபிரிக்கா அல்லது மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய முயற்சிக்கும் போது ஆயிரக்கணக்கான அகதிகள் மூழ்கடித்து- தஞ்சம் கோருவோர் தஞ்சம் கோரும் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாக இது நடைபெறுகிறது. கிரேக்கத்தின் மோரியா போன்ற அதன் எல்லைகளைச் சுற்றி தடுப்புமுகாம்களின் வலையமைப்பை அது நிறுவியுள்ளது, அங்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொடூரமான நிலைமைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கண்டத்திற்கு வந்து பின்னர் நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பவர்களுக்கு வழக்கமாக அரசு ஆதரவு மற்றும் வேலை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் இறுதியில், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஐரோப்பாவில் பிறந்தவர்கள் என முழு தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. முழு குடியுரிமையுடன், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நாட்டிலும் வாழவும் வேலை செய்யவும் அனைத்து நாடுகளின் அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும்.

Loading