JDE இல் தொழிற்சங்கத்தின் சரணடைதல் ஒப்பந்தத்தை நிராகரிக்கவும்: எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை அமைக்கவும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Unite தொழிற்சங்கம் நிறுவனத்துடன் செய்துகொண்ட இழிந்த ஒப்பந்தத்தை Jacobs Douwe Egberts (JDE) தொழிலாளர்கள் நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்பு விடுக்கிறது.

JDE தொழிலாளர்களின் இரண்டு மாத கொள்கைரீதியான போராட்டத்திற்குப் பின்னர், Unite தொழிற்சங்கம் ஜூன் 25 அன்று தொழில்துறை வேலைநிறுத்தத்தை நிறுத்திவிட்டு பின்கதவு வழியாக பேச்சுவார்த்தைக்கு சென்றது. இதன் விளைவாக, JDE நிர்வாகத்தினதும் பங்குதாரர்களினதும் ஆணைகளை அமல்படுத்தும் ஒரு அழுகிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

JDE இன் நடவடிக்கைகள், உலகளாவிய நிறுவன மறுசீரமைப்பின் அலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. தொற்றுநோய்களின் போது பங்குச் சந்தைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பிணை எடுப்பதற்காக அரசாங்கங்கள் செலவழித்த ட்ரில்லியன்களை தொழிலாள வர்க்கத்திடமிருந்து கூட்டுத்தாபனங்களும் வங்கிகளும் திரும்பப் பெற முற்படுகின்றன.

Unite மணிநேர ஊதிய வெட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளதுடன், மேலதிக வேலை நேரத்திற்கான இரட்டை மற்றும் ஒன்றரை விகித ஊதியங்களை குறைத்தல், இரவுநேர பணிக்கு கட்டாயப்படுத்தும் புதிய பணிமாற்ற முறைகள், வாரத்தில் 3 மணி நேர வேலை அதிகரிப்பு, மாத ஊதிய முறைக்கான மாற்றம் மற்றும் இரகசியமாக ஒரு தேர்வு செயல்முறையின் அடிப்படையில் வெறும் 23 ஊழியர்களுக்கு ஒரு நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கப்படுவது இதில் அடங்கும். ஓய்வூதியங்களைக் குறைப்பது Unite இன் சமீபத்திய ஒப்பந்தத்தின் அனைத்திற்கும் மேலாக உள்ளது.

ஜூன் 10 அன்று JDE மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் (credit: WSWS Media)

'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' (“fire and rehire”) அச்சுறுத்தல் திரும்பப் பெறப்படவில்லை. மாறாக Unite ஒரு இறுதி எச்சரிக்கையை தொழிலாளர்களுக்கு முன்வைக்க நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது: ஒன்று அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் அல்லது செப்டம்பர் 13 முதல் பணிநீக்கங்கள் நடைமுறைக்கு வரும்போது அவர்கள் நீக்கப்படுவார்கள். தொழில்துறை நடவடிக்கை 'வெறுமனே இடைநிறுத்தப்பட்டுள்ளது' மற்றும் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் வேலைநிறுத்தம் தொடர்பான வாக்களிப்பு தொடங்கும் என்ற அதிகாரி ஜோ கிளார்க்கின் கூற்று ஒரு மோசடியாகும். அதன் தற்போதைய ஒப்பந்தம் “பேச்சுவார்த்தை மூலம் அடையக்கூடிய சிறந்தது” என்று அறிவித்து, Unite இன் உண்மையான நிலையை அவர் செவ்வாயன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த வாரம் அறியப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் Unite இனையும், அதன் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தலைமையையும் கண்டித்தனர். 'JDE இல் உள்ள தொழிலாளர்கள் அவர்கள் விரும்பாத ஒரு ஒப்பந்தத்தை ஏற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்!' என்று பான்பரி 300 குழு திங்களன்று ட்வீட் செய்தது.

பல JDE தொழிலாளர்கள் ஜூலை 26 ஆம் தேதி ஆரம்பிக்கும் வாக்குப்பதிவில் 'இல்லை' வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அவர்களில் பலர், Unite ஒரு நிறுவனத்தின் தொழிற்சங்கமாக செயல்படுகிறது என்பதை அங்கீகரிக்கின்றனர். JDE உடனான அதன் அன்பான ஒப்பந்தத்தை, அவதூறான மீம்ஸ்களால் தாக்கி மற்றும் 'தொழிலாளர்களின் முதுகின் பின்னால் பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் கையூட்டு' என்று கண்டித்தனர்.

தொழிலாளர்கள் போராட விரும்புகிறார்கள், ஆனால் வெற்றியை அடைய ஒரு புதிய மூலோபாயமும் வேலைத்திட்டமும் தேவை. 1984-85 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டதிலிருந்து கடந்த நான்கு தசாப்தங்களாக, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை வரலாற்றில் மிகக் குறைந்த மட்டங்களுக்கு அடக்கியுள்ளன. அதே நேரத்தில் பெரும் செல்வந்தர்கள் தொழிலாளர்களின் செலவில் தங்களைத் செல்வந்தராக்கி கொண்டுள்ளனர். இப்போது, தொற்றுநோயின் மத்தியில் வேலைகள், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் மீதான கொடூரமான வெட்டுக்களுக்கு எதிராக உலகளவில் வேலைநிறுத்தங்கள் உருவாகும்போது, பெயரில் மட்டுமே 'தொழிற்சங்கங்களாக' உள்ள அமைப்புகளை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். Unite, GMB, Unison மற்றும் மீதமுள்ள தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் தொங்குதசைகளாக முழுமையாக மாற்றப்பட்டுள்ளன.

JDE க்கு எதிரான எந்தவொரு போராட்டமும், அதன் பின்னால் இழுபடும் தொழிற்சங்கத்துடன் ஒரு அரசியல் மற்றும் அமைப்புரீதியான முறிவுக்கு வெளியே வெற்றிபெற முடியாததுடன் மற்றும் இத்தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை இல்லாதொழித்து அவர்களால் சுமத்தப்பட்டவையை பின்வாங்கசெய்து பாதுகாக்காமல் முடியாது. JDE இல் தொழிலாளர்களை Unite காட்டிக் கொடுத்ததுபோல், இங்கிலாந்திலும் சர்வதேச அளவிலும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் ஒப்பந்தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒவ்வொரு போராட்டத்திலும், தொழிற்சங்கங்கள் நிறுவன நிர்வாகிகள் கோரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. உதாரணமாக:

British Gas: மார்ச் மாதத்தில், வேலைநிறுத்தம் செய்த 7,000 பிரிட்டிஷ் எரிவாயு பொறியாளர்களிடம் GMB தொழிற்சங்கங்கம், எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். மறுத்த 460 தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் எதிர்ப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வார போராட்டம் ஒரு 'வெற்றி' என்று கூறுவதற்கான சிடுமூஞ்சித்தனம் GMB அதிகாரிகளுக்கு இருந்தது. ஆனால் 'ஒரு சிறிய காவல்நாய் போல உருண்டு விழுந்ததாக' உறுப்பினர்களினால் அது தூற்றப்பட்டது.

British Airways: ஏப்ரல் 2020 இல், பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ் 12,000 வேலைகளை இலக்காகக் கொண்ட எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் ஒப்பந்தங்களுக்கான திட்டங்களை அறிவித்ததோடு, 20 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய வெட்டுக்களை அறிவித்தது. Unite இன் விமானப்பணியாளர் குழுப் பிரிவு BASSA 4,000 வேலைகளை அழிக்க, 15 சதவிகித ஊதியக் குறைப்பு மற்றும் மிகவும் தாழ்ந்த வேலைநிலைமைகளுக்கு ஒப்புக் கொண்ட பின்னரே ஒப்பந்தங்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆத்திரமடைந்த விமானப்பணியாளர் குழுவினர் Unite இனை 'முழு குப்பை' என்று கண்டித்தனர்.

Go North West: பிப்ரவரியில், மான்செஸ்டரில் 500 பேருந்து ஓட்டுநர்கள் எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் ஒப்பந்தங்களுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை தொடங்கினர். அவர்கள் 11 வாரங்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். Unite அந்த நிறுவனத்திற்கு 1.3 மில்லியன் டாலர் செலவுக் குறைப்பை வழங்கியதோடு, உறுப்பினர்களை தரக்குறைவான வேலைநிலைமைகள் மற்றும் கட்டாய மேலதிக நேர வேலைகளுக்கு திருப்பி அனுப்பியது. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டது.

எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதற்கு எதிரான Unite இன் பிரச்சாரம் ஒருபோதும் வேலைகள், ஊதியம் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதல்ல. இது நிர்வாகத்தின் மேலாளர்களின் அறைகளின் மேசையில் தங்களை இருத்தி வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. தொழிலாளர்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், நிறுவனங்கள் தங்கள் நம்பகமான வர்த்தக கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

JDE இந்த மோதலை தனிமைப்படுத்துவது, ஜோன்சன் அரசாங்கத்திற்கும் தொற்றுநோய்கால கோடீஸ்வரர்களுக்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கான பரந்த அரசியல் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். Trades Union Congress (TUC- தொழிற்சங்க காங்கிரஸ்) மற்றும் தொழிற் கட்சியுடன் சேர்ந்து, Unite டோரிகளுக்கு எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதை சட்டவிரோதமாக்குவதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் ஒரு வேண்டுகோளை ஊக்குவித்துள்ளது. இத்தகைய முறையீடுகள், தொழிற் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாரி கார்டினரின் தனிஉறுப்பினர்கள் மசோதாவில் கவனம் செலுத்தியுள்ளன. அவை இன்னும் வரைவு செய்யப்படாததுடன், JDE மற்றும் பிற வேலைநிறுத்தங்களும் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர் இறுதியில் அது அறிமுகப்படுத்தப்படும்போது வெற்றிபெற வாய்ப்பில்லை. தொழிற் கட்சி, பெருநிறுவன நலன்களை பற்றியே கவனம் செலுத்துகிறது. அதன் 199 சட்டமன்ற உறுப்பினர்களில் 46 பேர் மட்டுமே மே மாதத்தில் எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதற்கு எதிரான ஒரு ஆரம்பகால பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

சமீபத்திய நாட்களில், JDE இன் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை ஆதரிக்க உள்ளூர் டோரி கவுன்சிலர்கள் மறுத்ததை பற்றி கவலைப்பட்ட JDE தொழிலாளர்கள் மத்தியில், பான்பரி மற்றும் பைசெஸ்டர் தொகுதி தொழிற் கட்சி கிளையின் அறிக்கை பரவியுள்ளது. என்ன ஒரு கோரமான கேலிக்கூத்து!

தொழிற் கட்சி போன்ற தவறான நண்பர்களிடமும் மற்றும் அப்பட்டமான டோரி எதிரிகளிடமும் முறையிடுவதற்கு பதிலாக, JDE இல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் இங்கிலாந்திலும் சர்வதேச அளவிலும் உள்ள சக தொழிலார்களை நோக்கி தீர்க்கமாக திரும்ப வேண்டும்.

Unite வேண்டுமென்றே தொழில்துறைரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் JDE தொழிலாளர்களை தனிமைப்படுத்தியுள்ளது. JDE பங்குதாரர்கள் மற்றும் பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், BA, British Gas, Go North West, Weetabix, McVitie மற்றும் தேசிய இரயில் மற்றும் பஸ் தொழிலாளர்கள் அனைவருமே மோதலில் இறங்கியுள்ள தொழிலாளர்களுடன் கூட்டு நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதாகும்.

மேலும், ஒவ்வொரு JDE தொழிலாளியும், உலகின் மிகப்பெரிய நாடுகடந்த குளிர்பான நிறுவனங்களில் ஒன்றை எதிர்கொள்கின்றோம் என்பதை அறிவார்கள். இது ஆறு கண்டங்களில் 15 பில்லியன் யூரோக்கள் சந்தை மூலதனத்துடன் செயல்படுகிறது. அவர்களை உறுதியாக தாக்கும் ஒரே வழி அதன் உலகளாவிய தொழிலாளர்களின் ஆதரவை வெல்வதுதான்.

பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் உள்ள JDE தொழிலாளர்களுடன் கூட்டு நடவடிக்கை எடுக்க JDE தொழிலாளர்கள் பலமுறை அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் Unite தொழிலாளர்களின் முதுகில் பின்னால் காட்டிக்கொடுப்புகளை ஒழுங்கமைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கூட்டு தொழிற்சங்க-நிர்வாகக் குழுவான அதன் ஐரோப்பிய தொழிலாளர் குழு வழியாக ஐக்கியம் பற்றிய கூற்றுக்களுடன் அவர்களை ஏமாற்றியது.

JDE இன் தாக்குதலைத் தடுப்பது என்பது, Unite இலிருந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வது மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கான சுயாதீன அமைப்புகளை உருவாக்குதல் என்பதாகும். தொழிலாளர் பிரிவின் நம்பகமான பிரதிநிதிகளான தலைவர்களுடன், Unite இலிருந்து சுயாதீனமாக ஒரு சாமானிய தொழிலாளர் குழு நிறுவப்பட வேண்டும்.

ஒரு சாமானிய தொழிலாளர் குழு, ஒப்பந்தத்திற்கு 'இல்லை' என வாக்களிப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து, எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதை தோற்கடிக்க மற்றும் கடினமாக போராடி வெற்றிபெற்ற நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகளின் பட்டியலை உருவாக்கி, எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஐக்கியத்திற்கு அழைப்பு விடுக்கும்.

அமெரிக்காவின் வொல்வோவில் நான்கு வாரங்கள் ஏற்பட்ட மோதல் மற்றும் வொல்வோ தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு நடத்திய போராட்டத்தின் படிப்பினைகளைப் படிக்குமாறு JDE தொழிலாளர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். தொழிலாளர்கள் பலமுறை அதன் காட்டிக்கொடுத்த ஒப்பந்தத்தை நிராகரித்ததை அடுத்து, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம் (United Auto Workers union) வேலைக்கு திரும்புவதை அமல்படுத்தியுள்ளது. ஆனால் சாமானிய தொழிலாளர் குழு அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பிற ஆலைகளுடன் உறவுகளை உருவாக்கி, இப்போது போராட்டம் எவ்வாறு தொடரப்பட வேண்டும் என்பதைக் காட்டியுள்ளது. இது, நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத்திற்கு இடையிலான கூட்டணிக்கு ஒரு தெளிவான மூலோபாய மாற்றீட்டைக் காட்டியுள்ளது.

JDE தொழிலாளர்கள் ஒரு திருப்புமுனையில் நிற்கிறார்கள். பான்பரி (Banbury) இல் எடுக்கப்படும் ஒரு நிலைப்பாடு, இங்கிலாந்திலும் சர்வதேச அளவிலும் ஒரே தாக்குதல்களையும் மற்றும் அதே நிறுவன சார்பு தொழிற்சங்கங்களளையும் எதிர்கொள்ளுவோருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் ஐரோப்பாவில் உள்ள JDE தொழிலாளர்களுக்கு கோரிக்கைகளை மொழிபெயர்ப்பது மற்றும் விநியோகிப்பது உட்பட சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும். உங்கள் கோரிக்கைகளை பிரபலப்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை எச்சரிக்கவும் நாங்கள் உதவுவோம். ஆனால் JDE தொழிலாளர்கள் தாங்களே தங்கள் போராட்டத்தில் இந்த அடுத்த முக்கியமான கட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இதற்கு உடன்படும் JDE தொழிலாளர்களை இன்றே சோசலிச சமத்துவக் கட்சியை மின்னஞ்சல் (sep@socialequality.org.uk) பேஸ்புக் அல்லது ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு முன்னோக்கி செல்லும் பாதைக்கான ஒரு கலந்துரையாடலை தொடங்க அழைக்கிறோம்.

JDE தொழிலாளர்களுக்கு ஆதரவு செய்தி அனுப்புங்கள்!

Loading