சீனாவில் பெய்த கடும்மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 69 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் குறைந்தது 65.5 பில்லியன் யுவான் (10 பில்லியன் அமெரிக்க டாலர்) சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

2021 ஜூலை 24 சனிக்கிழமையன்று மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஷெங்சோவில் பெய்த மழையின் பின்னர் ஒரு பெண் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சாலையில் மணல் மூட்டையை அடுக்குகின்றார் (AP Photo/Dake Kang)

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஷெங்சோவில் சுமார் 1.24 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வார இறுதியில் நகரத்தின் வெள்ளம் நிறைந்த பகுதிகளில் மீட்பு குழுக்கள் தொடர்ந்து வெள்ளத்தை வெளியேற்றி தப்பிப்பிழைத்தவர்களைத் தேடினர். இத்தொழில்துறை நகரத்தில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பிற நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஷெங்சோவின் வடக்கே உள்ள ஆறு மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நகரமான ஜின்க்சியாங் இதேபோன்ற சாதனையளவு மழையை அனுபவித்தது. இரண்டு மணி நேரத்தில் 260 மிமீ மழை பெய்தது. வை நதியானது, நிரம்பி வழிந்து நகரத்தின் ஊடாக ஓடி மேலதிக வெள்ளத்திற்கு வழிவகுத்தது. ஷெங்சோவுக்கு மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோங்ஜியில், வெள்ளமும் மற்றும் நிலச்சரிவுகளும் குறைந்தது நான்கு பேரைக் கொன்றன.

வெப்ப அலைகள் மற்றும் தீவிர காட்டுத்தீ உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெறுவதால், காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் காலநிலை அறிவியல் பேராசிரியர் கிறிஸ் ராப்லி, பைனான்சியல் டைம்ஸிடம், “நாங்கள் காண்பதையிட்டு சற்று அதிர்ச்சியடைகிறோம் என்று பல காலநிலை விஞ்ஞானிகளின் சார்பில் நான் அக்கருத்தை கூறலாம் என்று நினைக்கிறேன். தீவிர [வானிலை] நிகழ்வுகள் நிகழும் கால இடைவெளிகளில் ஒரு பாரிய மாற்றம் உள்ளது” என்றார்.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது, இந்த அதிகரித்த மழைக்கு பங்களிக்கிறது. அதிகரித்த வெப்பநிலையின் ஒவ்வொரு C க்கும், காற்று ஏறக்குறைய 7 சதவிகிதம் அதிக நீர் ஈரப்பதத்தை ஈர்த்து வைத்திருக்க முடியும். இதன் பொருள் மழைக்காலங்கள் உள்ள பகுதிகள் வழக்கத்தை விட அதிக அளவு மழையை பொழிகின்றன. ஷெங்சோ, உண்மையில் ஒரு வருடத்திற்கு உரிய மழையை அனுபவித்தது. மூன்று நாட்களில் 671.1 மி.மீ, ஜூலை 20 அன்று ஒரு மணி நேரத்தில் 201.9 மி.மீ மழை பொழிந்தது.

தீவிர வானிலை நிகழ்வுக்கு போதுமான அளவு திட்டமிடத் தவறியதற்காக சீன அதிகாரிகள் விமர்சிக்கப்படுகிறார்கள். ஷெங்சோவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களைப் பாதுகாக்க குறைந்த நடவடிக்கையே எடுக்கப்பட்டது. சீன நீர்வள மற்றும் நீர் மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பேரழிவு தணிப்பு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செங் சியாடாவோ சீன ஊடகத்திடம், “எச்சரிக்கைகளுக்குப் பிறகு, எந்த வகையான சூழ்நிலையில் நாம் வேலை மற்றும் உற்பத்தியை நிறுத்த வேண்டும்? எவ்வாறு பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும்? இதற்கு பதிலளிக்க எடுக்கவேண்டிய உண்மையான அவசர நடவடிக்கைகள் எவை?” என்று கூறினார்.

நகரின் சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், முன்தயாரிப்பு இல்லாததால் பலர் ஆபத்தில் உள்ளனர். சுரங்கப்பாதை இரயிலில் ஆக்குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு இறப்பு சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய இறப்பு எண்ணிக்கையை உயர்த்தியது. ஷெங்சோவில் உள்ள ஜிங்குவாங் போக்குவரத்து சுரங்கப்பாதையில் சிக்கியதில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அங்கு 200 முதல் 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த துயரங்கள் முற்றிலும் தவிர்த்திருக்கக்கூடியவையே. ஜிங்குவாங் சுரங்கப்பாதை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதியில் கட்டப்பட்டது. பெய்ஜிங்கில் ஒரு பெரிய புயலைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த அடிநிலவழியில் சிக்கி 80 பேர் இறந்த அதே ஆண்டில் இது 2012 இல் திறக்கப்பட்டது. புதிய சுரங்கப்பாதையின் ஆபத்துகள் குறித்த விசாரணை 2011 இல் வெளியிடப்பட்டதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “சுரங்கத்தில் தண்ணீர் குவிந்தால் அது சுரங்கப்பாதையின் பாதுகாப்பான செயல்பாட்டை கடுமையாக அச்சுறுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவின் 654 முக்கிய நகரங்களில் 98 சதவிகிதம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து மிகவும் கடுமையானது. சீனாவின் 1.4 பில்லியன் மக்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் வாழ்கின்றனர். “உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமாக, மழை புள்ளிவிவரங்கள் எதிர்காலத்தில் புதிய மட்டங்களை முறியடிக்கும்” என்று அரசுசாரா அமைப்பான சீன பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டு அறக்கட்டளையின் ஜொவ் ஜின்ஃபெங் எச்சரித்தார்.

இந்த வகையான வானிலை நிகழ்வுகளைச் சமாளிப்பதாகக் கருதப்படும் சீனாவின் “உறுஞ்சும் நகரங்கள்” என்று அழைக்கப்படுபவற்றின் நம்பகத்தன்மையை வெள்ளம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் சேர்க்கப்பட்ட நகரங்களில் ஷெங்சோவும் இருந்தது. இதில் ஊடுருவக்கூடிய நிலத்தட்டுகளின் பயன்பாடும் வெள்ளநீரை திருப்பி பசுமை இடங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.

ஷெங்சோவில், சுமார் 125 வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை அகற்றுவதற்கும், புதிய பசுமையான இடங்களை உருவாக்குவதற்கும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் புதிய வடிகால் கட்டப்பட்டது. அவற்றில் சில விரைவாக பெருமழை பெய்ததால் நகரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 'உறுஞ்சும் நகரங்கள்' என்று அழைக்கப்படுபவை கடந்த வாரம் ஏற்பட்ட மழையின் அளவை உறிஞ்சுவதற்காக ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை.

நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளபடி, சியான் ஜியாடோங்-லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் கான்ஸ்டான்டினோஸ் பாபாடிகிஸ் இவ்வாறு விளக்கினார்: “உறுஞ்சும் நகர முயற்சி பாயும்நீரை நிர்வகிப்பதற்கு ஒரு சிறந்த நிலையான அபிவிருத்தி அணுகுமுறையாக இருந்தாலும், அதை மாறிவரும் காலநிலையில் வெள்ள அபாயத்தை நிர்வகிப்பதற்கு முழுமையான தீர்வாக இன்னும் கருத்தில் கொள்ள முடியுமா என்பது விவாதத்திற்குரியது”.

சமீபத்திய தசாப்தங்களில், சீனா தொழிற்துறைமயமாக்கி கிராமப்புறங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரங்களுக்கு ஈர்த்துள்ளதால், பாரிய நகர்ப்புற விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு வர்ணனையாளரின் கூற்றுப்படி, குறைந்தது 93 நகரங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் உள்ளனர். மேலும் ஷெங்சோவைப் போன்றவற்றில் மக்கள் தொகை 10 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இவற்றில் கணிசமான பகுதியானது நதிப்படுகைகளில் கட்டப்பட்டுள்ளன. இதனால் அவை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவையாகும். மேலும் காலநிலை மாற்றத்துடன் ஆபத்தும் அதிகரிக்கும்.

ஹெனான் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு முக்கிய காரணியாக இருந்த In-fa கடும்புயல், பிங்கு நகரத்தைத் தாக்க வடக்கு நோக்கிச் செல்வதற்கு முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கடலோர நகரமான ஷாங்காயை தாக்கியது. திங்கள்கிழமை மாலை நிலவரப்படி எந்த இறப்பும் ஏற்படவில்லை. ஆனால் கடுமையான வானிலை காரணமாக தரைவழி ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், உள்ளூர் இருட்டடிப்பும் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

Loading