கோவிட்-19 “ஆய்வக கசிவு" கூற்றுக்களுக்கு அமெரிக்கா ஆதாரம் வழங்க தவறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 சீனாவின் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சதிக் கோட்பாட்டை மே 25 இல் பகிரங்கமாக தழுவிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், இந்நோய் மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் சாத்தியக்கூறு மீது 90 நாட்களுக்குள் ஓர் அறிக்கை வழங்குமாறு அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு உத்தரவிட்டார்.

A view of the P4 lab inside the Wuhan Institute of Virology is seen after a visit by the World Health Organization team in Wuhan in China's Hubei province on Wednesday, Feb. 3, 2021. (AP Photo/Ng Han Guan)

மூன்று மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்க உளவுத்துறை முகமைகள் ஓர் ஆய்வக கசிவு 'நம்பத்தகுந்த' சூழலே என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின், பைடென் நிர்வாகம் மற்றும் ஒவ்வொரு முக்கிய அமெரிக்க செய்தி ஊடகத்தின் கூற்றுக்களை நிரூபிக்க ஒரு துளி ஆதாரத்தையும் உருவாக்க தவறி உள்ளன.

ஊடகத் தகவல்களின்படி, இது ஒரு 'மாபெரும்' அமெரிக்க முயற்சியாக இருந்த போதிலும் அவற்றால் சாத்தியமாகவில்லை. 'சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட வைரஸ் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு விபரங்கள் கொண்டிருக்கும் மாபெரும் தகவல் தொகுப்பை' அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக CNN ஆகஸ்ட் 5 இல் குறிப்பிட்டது.

அதன் வசமிருந்த பாரியளவிலான தரவுகளை ஆய்வு செய்ய, அமெரிக்க உளவுத்துறை முகமைகள், '17 உயரடுக்கு அரசு ஆராய்ச்சி அமைப்புகளின் தொகுப்பான எரிசக்தி துறையின் தேசிய ஆய்வகங்களின் சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி' இருந்தன.

மருத்துவ மற்றும் விஞ்ஞான அமைப்புகள் மீது அமெரிக்கா இணையவழி தாக்குதல் நடத்தியதைப் பலமாக சுட்டிக்காட்டிய CNN, அதன் அறிக்கையில், 'வைரஸ்களின் இந்த வகையான மரபணு தரவை உருவாக்குவதிலும் செயலாக்குவதிலும் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் பொதுவாக வெளியுலக க்ளொவ்ட் சர்வர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன — அவற்றில் ஊடுருவி மோசடி செய்ய வாய்ப்புள்ளது,' என்றது எழுதுகிறது.

சரி இதெல்லாம் இருக்கட்டும், என்ன கண்டுபிடித்தீர்கள்? நியூ யோர்க் டைம்ஸின் வரிகளின் வழவழ வார்த்தைகளில், அந்த அறிக்கை 'தீர்மானங்கள் இல்லாதது' என்று வரையறுத்தது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வார்த்தைகளில் கூறுவதானால், அது 'ஓர் உறுதியான முடிவை' கொடுக்கவில்லை. அவ்விரண்டு பத்திரிகைகளும் 'மூத்த அதிகாரிகளின்' அறிக்கைகளை வழங்குவதாக கூறி கடந்து விடுகின்றன.

'தொடர்ந்து சர்வதேச விசாரணைகளுக்கு சீனா ஒத்துழைக்க மறுப்பதாலும்' மற்றும் 'சில தரவுத் தொகுப்புகளைச் சீனா அணுக விடாததாலும்' உளவுத்துறை முகமைகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்று டைம்ஸும் ஜேர்னலும் கூறுகின்றன.

ஆனால், இரகசிய தரவுகளின் 'மாபெரும்' தொகுப்பை அமெரிக்கா அணுகியது குறித்த CNN செய்தியைக் குறித்தோ, சீனா 'மறைத்து' வைத்துள்ள தரவுகள் அமெரிக்காவுக்குக் கிடைத்தும் கூட ஏன் அது எதையும் கண்டறிய வில்லை என்பதைக் குறித்தோ அவ்விரண்டு அறிக்கைகளும் எதுவும் குறிப்பிடவில்லை.

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் எதையும் கண்டுபிடிக்கத் தவறியதற்கான காரணங்கள் மிகவும் சாதாரணமானவை: அங்கே எந்த ஆதாரமோ, இரகசியமோ எதுவும் இல்லை அல்லது வேறுவிதமாக கூறுவதானால், கோவிட்-19 இன் தோற்றுவாய்க்கும் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திற்கும் (WIV) எந்த தொடர்பும் இல்லை.

WIV ஆராய்ச்சியாளர்கள், அந்த பெருந்தொற்று வெடிப்பதற்கு முன்னர், 'பொதுவான பருவகால நோய்களுடன் … பொருந்திய,' அறிகுறிகள் இருந்ததைக் காட்டும் ட்ரம்ப் வெளியுறவுத் துறையின் ஓர் உண்மை அறிக்கை வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், அந்த ஆய்வக கசிவு 'கோட்பாட்டை' ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வகையில் ஒரு துளி ஆதாரமும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை அல்லது சூசகமாக கூட கூறப்படவில்லை.

கோவிட்-19 இன் தோற்றுவாய்களை விசாரித்து வரும் உலக சுகாதார அமைப்பு (WHO) குழு அதன் அறிக்கையில் மார்ச்சில் குறிப்பிடுகையில், அது ஆய்வக கசிவு கருதுகோளைத் தீவிரமாக பரிசீலித்ததாகவும், ஆனால் ஆதாரங்கள் இல்லாததன் அடிப்படையில் 'மிகவும் சாத்தியமற்றது' என்று அறிவித்ததாகவும் கூறியது. 'ஆய்வக கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதைச் சுற்றி வழங்கப்படும் புதிய ஆதாரங்களை' தொடர்ந்து பின்தொடர விரும்புவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது, ஆனால் அதற்கு பின்னர் எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை.

அக்குழுவின் உறுப்பினர்களுக்கு 'பின்தொடர்வதற்கான ஆதார குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை,' இன்றுவரை அது அப்படியே உள்ளது, அவர்கள் புதனன்று Nature பத்திரிகையின் ஒரு கட்டுரையில் எழுதுகையில், உளவுத்துறை முகமைகளின் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு உரிய நேரத்தையும் ஒதுக்கி இருந்தனர்.

இந்த தொற்றுநோய்க்கு சீனா மீது பழி சுமத்துவதற்கான அமெரிக்காவின் உறுதியான முயற்சிகள், அந்நோயின் உண்மையான தோற்றுவாய்களைத் தீர்மானிப்பதற்கான போராட்டத்தைக் கீழறுப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்தனர். “SARS-CoV-2 இன் தோற்றுவாய்கள் மீதான தேடல் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சர்வதேச குழு மற்றும் சீனக் குழு இரண்டுமே முன்னோக்கி நகர விருப்பமாக உள்ளன,” என்றவர்கள் எழுதினர்.

ஆனால் காலப்போக்கில், 'SARS-CoV-2 எதிர்ப்பு சக்திகள் குறைகின்றன', அதேவேளையில் காட்டு விலங்குகளை மக்கள் முன் கொண்டு வரும் பண்ணைகள் 'இப்போது மூடப்பட்டு, அந்த விலங்குகள் அழிக்கப்பட்டு விட்டன, இது ஆரம்பகால கொரோனா வைரஸ் வெளிப்பாடு மீதான எந்தவொரு ஆதாரத்தையும் கண்டறிவதை அதிகரித்தளவில் சிக்கலாக்குகிறது.”

'ஆய்வக கருதுகோளுடன் தொடர்பில்லாத பெரும்பாலான பரிந்துரைகள் மீது உண்மையில் நடைமுறையளவில் எந்த விவாதமும் இல்லை என்பது குறித்தும், ஆனால் குறிப்பாக அமெரிக்காவில் இருந்து வரும் ஆய்வகக் கட்டுக்கதைப் பற்றி நிறைய விவாதங்கள் இருப்பது குறித்தும், நாங்கள் சிறிது கவலை கொண்டோம்,” என்று உலக சுகாதார அமைப்பு பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினரும் டச் நுண்கிருமியியல் துறை நிபுணருமான Marion Koopmans நியூ யோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

“அந்த வலியுறுத்தலின் காரணமாக, மீதி எதற்கும் எந்த கவனமும் கொடுக்கப்படுவதில்லை என்பதே எங்கள் கவலை,” என்றார்.

அதன் ஆத்திரமூட்டும் சதிக் கோட்பாட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவினால் எந்த ஆதாரமும் வழங்க முடியவில்லை என்கின்ற நிலையில், அமெரிக்க ஊடகமோ ஆத்திரமூட்டும் சதிக் கோட்பாடுகளை ஊக்குவித்து சீனா மீது பழி சுமத்துவதில் அதன் முழு கவனத்தையும் திருப்பி உள்ளது. இந்த பெருந்தொற்றுக்கு அமெரிக்க இராணுவத்தின் 'ஆய்வக கசிவு' தான் காரணம் என்று சீனாவுக்குள் நிலவும் புள்ளிவிவர கூற்றுக்களுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சீனா செய்வதாக அமெரிக்க ஊடகங்கள் இப்போது குற்றம் சாட்டும் அனைத்தும் அமெரிக்க ஊடகத்துக்கு இன்னும் கூடுதலான செல்லுபடியாகும் வகையில் பொருந்துகின்றன.

உளவுத்துறை முகமைகள் ஆய்வக தோற்றுவாய் மீது ஆதாரங்களைக் காணத் தவறியதை அறிவிக்கும் கட்டுரையை விட பெரிய ஒரு அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் நேற்று பின்வருமாறு எழுதியது:

கொரோனா வைரஸ் ஓர் அமெரிக்க இராணுவ ஆய்வகத்தில் இருந்து வெளிப்பட்டது என்று சீனாவில் ஒரு சதிக் கோட்பாடு பரவத் தொடங்கிய போது, அது பெரும்பாலும் விளிம்போரத்திலேயே இருந்தது. இப்போதோ, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக அந்த கருத்தைப் பிரதான நீரோட்டத்தில் முன்தள்ளி உள்ளது. …

இந்த பெருந்தொற்றின் தோற்றுவாய்களைச் சீனாவில் விசாரிக்கும் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்காவைப் பின்வாங்க செய்ய, அமெரிக்கா தான் கொரோனா வைரஸின் உண்மையான ஆதாரமாக இருக்கலாம் என்ற அடிப்படையற்ற கோட்பாடுகளை பெய்ஜிங் பரப்பி வருகிறது. இந்த தவறான தகவல் பிரச்சாரம் கடந்தாண்டு தொடங்கியது, என்றாலும் சமீபத்திய வாரங்களில் பெய்ஜிங் இதன் அளவை உயர்த்தியுள்ளது, இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ள இந்த பெருந்தொற்றுக்குப் பழிச் சுமத்துவதில் அதன் ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த வரிகளைப் பின்வருமாறு மாற்றி எழுதினால் அது முற்றிலும் சரியாக இருக்கும்:

கொரோனா வைரஸ் ஒரு சீன இராணுவ ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டது என்று அமெரிக்காவில் ஒரு சதிக்கோட்பாடு பரவத் தொடங்கிய போது, அது பெரிதும் விளிம்போரத்திலேயே இருந்தது. இப்போதோ, ஆளும் ஜனநாயகக் கட்சி உறுதியாக அந்த கருத்தைப் பிரதான நீரோட்டத்தில் முன்தள்ளி உள்ளது. …

இந்த பெருந்தொற்றின் தோற்றுவாய்களை விசாரிப்பதற்கான முயற்சிகளில் இருந்து அது பின்வாங்கி வரும் நிலையில், வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகம் கொரோனா வைரஸின் உண்மையான ஆதாரமாக இருக்கலாம் என்ற அடிப்படையற்ற கோட்பாடுகளை வாஷிங்டன் பரப்பிக் கொண்டிருக்கிறது… இந்த தவறான தகவல் பிரச்சாரம் கடந்தாண்டு தொடங்கியது, என்றாலும் வாஷிங்டன் சமீபத்திய வாரங்களில் இதன் அளவை உயர்த்தியுள்ளது, இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ள இந்த பெருந்தொற்றுக்குப் பழி சுமத்துவது மீதான அதன் பேரார்வத்தைப் பிரதிபலிக்கிறது.

ஸ்டீவ் பானன் மற்றும் அதிவலது Epoch Times பத்திரிகையைச் சுற்றியுள்ள சீன வெளிநாட்டவர்களின் பாசிச வட்டாரங்களில் தோன்றிய, 'வூஹான் ஆய்வக' சதிக் கோட்பாடு, பைடென் வெள்ளை மாளிகை, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றால் ஊக்குவிக்கப்படுகிறது, ஏனென்றால் அது அமெரிக்க முதலாளித்துவத்திற்கான ஓர் அதிஅவசர தேவைக்குச் சேவையாற்றுகிறது.

கோவிட்-19 தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் கிட்டத்தட்ட 650,000 பேர் இறந்துள்ளனர், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் அந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது அன்புக்குரியவரை இழந்துள்ளனர். கோவிட்-19 ஐ ஒழிப்பதன் மூலம் இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோருகின்ற நிலையில், தனியார் இலாபத்தை பாதுகாக்கும் பெயரில் மனித உயிர்களைத் தியாகம் செய்த அரசியல் பிரமுகர்களிடமிருந்து இதற்கு பொறுப்பானவர்களை முன்கொண்டு வர வேண்டுமென்ற அழைப்புகள் வரும். இந்த பேரழிவிற்கான பொறுப்பு சீனாவிடம் இல்லை, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் மீது தான் உள்ளது என்ற முடிவை தொழிலாளர்கள் எடுக்க வேண்டும், எடுப்பார்கள்.

Loading