முன்னோக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்யும் இருகட்சிகளின் முனைவைத் தோற்கடி!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அதிவேகமாக முன்தள்ளப்பட்ட அப்பட்டமான ஜனநாயக-விரோத தேர்தல் சட்டமசோதாக்களுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கிடையே ஒரு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

பெருநிறுவன ஊடகங்கள் வாய்மூடி இருக்கின்ற நிலையில், வெறும் 24 மணி நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அந்த சட்டமசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, மக்களின் முதுகுக்குப் பின்னால், தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் தொழிற் கட்சி கை கோர்த்துள்ளது.

மே 18, 2019 சனிக்கிழமை, கூட்டாட்சி தேர்தலில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள டவுன் ஹாலில் வாக்காளர்கள் வாக்களித்தனர். (AP Photo/Rick Rycroft) [AP Photo/Rick Rycroft]

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் பாகமாக உள்ள இந்த சட்டமசோதா, மோசமடைந்து வரும் கோவிட்-19 நோய்தொற்றுக்கு மத்தியில் மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களை விலையாக கொடுத்து இலாபங்களை அதிகரிக்க முதலாளித்துவ அரசாங்கங்கள் பின்பற்றும் “மீண்டும் திறந்துவிடும்” கொள்கைகளுக்குத் தொழிலாள வர்க்கத்திடையே நிலவும் எதிர்ப்புக்கு மத்தியில், எதேச்சதிகார ஆட்சி வடிவத்திற்கு திரும்புவதாக உள்ளது.

இந்த மசோதாக்கள் அதிகரித்தளவில் மதிப்பிழந்து வரும் அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான எதிர்ப்பைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகும், ஆஸ்திரேலியாவில் இந்த பெருந்தொற்று கட்டுப்பாட்டை மீறி மீண்டெழுந்து வருகின்ற நிலையில், மக்கள் 'வைரஸுடன் வாழ வேண்டும்' என்ற அடிப்படையில் தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகம் உறுதியாக உள்ளது.

உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 500 இல் இருந்து 1,500 ஆக மூன்று மடங்காக்கியதன் மூலம், தற்போது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத சோசலிச சமத்துவக் கட்சி (SEP) உட்பட அத்தகைய அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் கட்சிப் பதிவை அகற்ற இந்த சட்டங்கள் முயல்கின்றன.

பரந்த சமூக அடைப்புகளுக்கு மத்தியில், குறைந்தபட்சம் அடுத்த மே மாதம் பெடரல் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சிகள் புதிய விரிவாக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்களை ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்திடம் மூன்று மாதங்களுக்குள் வழங்கி ஆக வேண்டும், இதுவே கூட அரசியல் தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும்.

கட்சியை பதிவு செய்ய குறைந்தது 500 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்ற முந்தைய விதியே கூட ஒரு ஜனநாயக-விரோத வழிவகையாகும், அது இருகட்சி தொழிற் கட்சி-கூட்டணி ஏகபோகத்திற்கு முட்டுக்கொடுக்கும் முயற்சியாக 1984 இல் ஹாக் தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி எப்போதுமே இத்தகைய கட்சி பதிவு சட்டங்களை எதிர்த்து வருகிறது, இது மாதிரியான சட்டங்கள் முதலாளித்துவ அரசு எந்திரத்திற்கு அரசியல் கட்சிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தையும், மக்களிடையே எந்தக் கட்சிகளுக்கு ஆதரவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கும் அதிகாரம் வழங்குகின்றன. அவை அரசியல் ஆதரவு மட்டங்களைத் தீர்மானிப்பதற்காக இருக்கும் தேர்தல் நோக்கத்தையே மீறுகின்றன. இந்த சட்டங்கள், கட்சிகள் அவற்றின் உறுப்பினர்களின் விவரங்களை ஒப்படைக்க நிர்ப்பந்திக்கின்றன, இது அவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்க வழி வகுக்கிறது.

எவ்வாறிருப்பினும், சோசலிச சமத்துவக் கட்சி அவற்றை எதிர்த்தாலும் கூட, தேர்தல்களில் நம் கட்சி பெயரில் வேட்பாளர்களை நிலைநிறுத்துவதற்கான நம் அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையம் கோரியவாறு ஒவ்வொரு தேர்தலிலும் அது 500 கட்சி உறுப்பினர்களின் பெயர்களைச் சமர்ப்பித்துள்ளது.

கட்சியைப் பதிவு செய்யாமல், தேர்தல் வேட்பாளர்களால் வாக்குச் சீட்டில் அவர்கள் அரசியல் அமைப்பை அடையாளம் காட்ட முடியாது. அவர்கள் கட்சி பெயர் இல்லாமல் போட்டியிட வேண்டும், அல்லது விவரிக்க முடியாத 'சுயேட்சைகளாக' போட்டியிட வேண்டியிருக்கும். இது வேட்பாளர்களின் அரசியல் தளங்களை அறிந்து கொள்வதற்கான வாக்காளர்களின் அத்தியாவசிய உரிமையை மறுக்கிறது.

இந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சிகள் மற்றும் தனிநபர்களின் ஜனநாயக உரிமை மீதுள்ள எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் கோரி சோசலிச சமத்துவக் கட்சி ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அதே நேரத்தில், நம் கட்சிப் பதிவை தக்க வைத்து இந்த தாக்குதலைத் தோற்கடிக்க உதவியாக சோசலிச சமத்துவக் கட்சியில் ஓர் உறுப்பினராக சேருமாறு நாம் நம் எல்லா ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மசோதாக்கள் செனட் சபை மூலம் வேகவேகமாக கொண்டு செல்லப்பட்ட அதே நாளில் —ஆகஸ்ட் 26 இல்— நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் (NSW) கூட்டணி அரசாங்கம், எந்தவொரு ஆஸ்திரேலிய அதிகார எல்லையிலும் இல்லாத வகையில் முதல்முறையாக அங்கே நாளாந்த கோவிட்-19 நோய்தொற்றுக்கள் 1,000 ஐ விஞ்சிவிட்டதாக அறிவித்தது.

இந்த அளவு அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மீண்டும் பெருகி வரும் அளவை விட மிகவும் குறைவு தான் என்றாலும், இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கு ஆஸ்திரேலியா விதிவிலக்காக உள்ளது என்ற கட்டுக்கதை இது தகர்க்கிறது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. பல காலமாக குறைந்த பணியாளர்களைக் கொண்ட பொது மருத்துவமனைகளால் அதிகரித்து வரும் நோயாளிகளின் அலையை ஏற்கனவே சமாளிக்க முடியாமல் இருப்பதாக பொது சுகாதார வல்லுநர்கள், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் தலையிட்டு தடுக்காவிட்டால், இந்த நெருக்கடி வரவிருக்கும் மாதங்களில் பல மடங்காக அதிகரித்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து இந்தியா மற்றும் இந்தோனேஷியா வரையில், ஏனைய இடங்களிலும் பார்த்துள்ள கொடூரமான சுகாதாரத்துறை முறிவு போன்ற ஒன்றை உண்டாக்கிவிடும்.

கோவிட்-19 பேரிடருக்கு ஆஸ்திரேலியா விதிவிலக்கல்ல என்பது போலவே, ஆளும் வர்க்கங்களின் பேரழிவுகரமான கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் உலகளாவிய போராட்டங்களை நசுக்குவதற்காக, அமெரிக்கா முதல் ஜேர்மனி மற்றும் பிரேசில் வரையில் ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதல் மற்றும் பாசிச சக்திகளை வளர்ப்பதிலும் அது விதிவிலக்காக இல்லை.

பாராளுமன்றத்தால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் மசோதாக்கள் அமெரிக்க மாநிலங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுடன் ஒப்பிடத்தக்கவை, அவை தொழிலாள வர்க்க வாக்காளர்களின் வாக்களிக்கும் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்திரேலியாவில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியானது, அமெரிக்காவில் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியைத் தூண்டிவிட்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைக் கவிழ்ப்பதற்கான டொனால்ட் ட்ரம்பின் சதியில் வெளிப்பட்டதை விட பயங்கரத்தில் குறைந்ததில்லை.

உலகளவில், ஜனநாயக நெறிமுறைகள் 1930 களில் நடந்ததைப் போலவே, வர்க்க மற்றும் புவிசார்-மூலோபாய பதட்டங்களின் அழுத்தத்தின் கீழ் சர்வதேச அளவில் மீண்டும் உடைந்து வருகின்றன. இந்த முனையில், ஆஸ்திரேலியா மற்ற மேற்கத்திய நாடுகளை விட கூடுதலாகவே முன்னேறியுள்ளது. இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்களை நாட்டுக்கு முற்றிலும் பாரபட்சமின்றி “விசுவாசமாக” இருப்பவர்களாக கருத முடியாது என்று அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக, தொழிற் கட்சியும் அரசாங்க கூட்டணியும், தீவிரப்படுத்தப்பட்ட சீன-விரோத பிரச்சாரத்திற்கு மத்தியில், ஒரு தேசியவாத சூனிய வேட்டையை முடுக்கி விட 2017-18 இல் ஒன்றிணைந்தன. அது புலம்பெயர்வு பின்னணி கொண்ட சுமார் ஆறு மில்லியன் பேரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கூட திறம்பட தகுதியிழக்கச் செய்தது.

1975 இல், உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் கடைசி எழுச்சி காலகட்டத்திற்கு மத்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விட்லம் தொழிற் கட்சி அரசாங்கத்தை கவர்னர் ஜெனரல் பதவி நீக்கம் செய்த போது, ஆஸ்திரேலியாவில் ஜனநாயகத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது என்பதை ஒருபோதும் மறந்துவிட முடியாது.

1975 ல், விட்லம் தொழிலாளர் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து தொழிலாளர்கள் மெல்போர்னில் போராட்டம் நடத்தினர் (WSWS Media)

அரசியல் ஸ்தாபகத்திற்கும் அதன் பெருந்தொற்றுக் கொள்கைகளுக்கும் பொதுமக்களிடையே நிலவும் விரோதப் போக்கைக் குறித்து ஆஸ்திரேலிய ஊடக கருத்துக் கணிப்புக்கள் ஒரு பார்வை வழங்குகின்றன. இறப்புக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிக்கப்புகளை அதிகரிப்பதால் எந்தவிதமான மறுதிறப்பையும் வெறும் 12 சதவீத மக்களே சௌகரியமாக உணர்வதாக எசென்ஷியலின் இந்த வார கருத்துக் கணிப்பு குறிப்பிட்டது.

பிரதம மந்திரி ஸ்காட் மோரிசனின் கூட்டணிக்குப் பெருவாரியான தேர்தல் தோல்வியைக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு அவருக்கான ஆதரவு விகிதம் 36 சதவீதத்திற்குக் குறைந்திருப்பதை Newspoll எடுத்துக்காட்டியது. தொழிற் கட்சிக்கு சிறிது முன்னேற்றம் இருந்தாலும், பசுமைக் கட்சி மற்றும் அதிவலது ஒரே தேசம் கட்சிக்கான ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், பெயரிடப்படாத 'மற்ற' கட்சிகளுக்கான ஆதரவு 11 சதவீதமாக உயர்ந்தது. அந்த கட்சிகள் தான் இப்போதைய இந்த புதிய சட்டத்தின் விளைவாக கட்சிப் பதிவு நீக்கத்தை எதிர்கொள்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், கூலிகள் மற்றும் நிலைமைகளை சீரிழத்து, சேவைகளைப் பின்னுக்குத் தள்ளி, சமூக சமத்துவமின்மையை விரிவுபடுத்துவதற்கு வழிவகுத்த இருகட்சி வணிக சார்பு வேலைத்திட்டத்தின் விளைவாக, கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த கூட்டணி மீதும் மற்றும் தொழிற் கட்சி மீதும் எதிர்ப்பு வளர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்ததைப் போல, அமெரிக்க தலைமையிலான குற்றகரமான போர்களில் ஆஸ்திரேலியா பங்களிக்கெடுத்ததால் இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது. 2019 தேர்தலில், சுமார் 25 சதவீத வாக்காளர்கள் தொழிற் கட்சி மற்றும் தாராளவாத-தேசிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தனர்.

சுகாதாரம் மற்றும் உயிர்களை விட இலாபத்தை முன்னெடுத்துள்ள இரண்டு பெருவணிக கட்சிகளான இந்த கூட்டணி மற்றும் தொழிற் கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் கோபத்தையும் கோவிட்-19 பெருந்தொற்று ஆழப்படுத்தியுள்ளது. இந்த விரோதப் போக்கு அடுத்த தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகளுக்கான வாக்குகளில் வெளிப்படுத்தப்பட்டு, முதலாளித்துவ வர்க்கம் நீண்டகாலமாக நம்பியிருக்கும் இந்த இரண்டு கட்சிகளது ஆட்சி முறையை மேலும் ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குமோ என்பதே ஆளும் வட்டாரங்களின் கவலையாக உள்ளது.

தற்போது பல சிறிய கட்சிகள் வலதுசாரி குணாம்சத்தில் இருந்தாலும், அரசியல் ஸ்தாபகத்தை அலைக்கழிக்கும் உண்மையான அச்சம் என்னவென்றால், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி அடைந்து வரும் போராட்ட நிலைமைகளின் கீழ், எதிர்ப்பானது குறிப்பிடத்தக்க வகையில் ஒரு சோசலிச மாற்றீட்டை நோக்கி இடது பக்கம் திரும்பி விடுமோ என்று அஞ்சுகிறது.

மோரிசனின் பலவீனமான கூட்டணி அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை முன்னெடுக்க தொழிற் கட்சியை நம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில், தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை நசுக்குவதில் மிகவும் அப்பட்டமாக இருந்தனர். 'சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் இந்த மாற்றத்தைப் பற்றி மக்கள் சிணுங்குகிறார்கள் மற்றும் புலம்புகிறார்கள்' என்று ஒருவர் கண்டனம் செய்தார்.

இந்த பெருந்தொற்றுக்குப் பெருநிறுவன மற்றும் அரசாங்க விடையிறுப்பைக் கண்காணிப்பதில், தொழிற் கட்சி வகிக்கும் பாத்திரம் தொழிற்சங்கத்துடன் சேர்ந்து அதன் “ஆக்கப்பூர்வமான” ஆதரவுடன் பிணைந்துள்ளது. இந்த இருகட்சி முகப்பு, மத்திய, மாநில மற்றும் பிராந்திய அரசாங்கத் தலைவர்களின், பெரும்பாலும் தொழிற் கட்சி தலைவர்களின், 'தேசிய மந்திரிசபையில்' வேரூன்றி உள்ளது, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் கூட்டங்கள் மற்றும் இரகசிய வழிவகை மூடிமறைப்பு ஆகியவற்றுடன் இந்த தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பு தோற்றப்பட்டாளவில் ஒரு 'போர்க்கால அமைச்சரவையை' உள்ளடக்கி, நாட்டை கட்டளைகள் மூலம் ஆட்சி செய்து வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) சக கட்சிகளுடன் சேர்ந்து, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்கள் வேலையிடங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சாமானிய குழுக்களை அமைத்து உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போராடுவதன் மூலம் விவகாரங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராட ஒரு சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது. இந்தப் போராட்டத்தை உலகம் முழுவதும் அபிவிருத்தி செய்ய, சாமானிய குழுக்களின் ஒரு சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்குமாறு ICFI அறிவுறுத்தி உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் குரலைக் கொண்டிருக்க வேண்டும், ஆளும் வர்க்கம் அதன் சமீபத்திய சட்டத்தின் மூலம் அதை தான் நெரிக்க முற்படுகிறது. பெருவணிகம் மற்றும் அதன் அரசியல் சேவகர்களின் கட்டளைகளுக்கு எதிரான எதிர்ப்பு, செல்வந்தர்களின் தனிப்பட்ட இலாபங்களை விட உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை —எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் சுகாதாரம் மற்றும் உயிர் வாழ்க்கையை— முன்னிலைப்படுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்கிற்காக போராடுகிறது.

தற்போதுள்ள கட்சியின் நம் உறுப்பினர்கள், நம் வாசகர்கள், சாமானிய குழுக்களின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுப்பது இது தான்: நம் கட்சியின் பதிவைத் தக்க வைத்துக் கொள்ள கூடுதலாக 1,000 தேர்தல் உறுப்பினர்களை நியமிக்க எங்களுக்கு உதவுங்கள்.

இந்த போராட்டத்தைக் குறித்து விவாதிக்கவும் இதை முன்னெடுக்கவும், நம் வலைத் தளம் அல்லது பேஸ்புக் அல்லது ட்வீட்டர் மூலமாக சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்பு கொள்ளுமாறு நாம் நம் வாசகர்களை வலியுறுத்துகிறோம்.

Loading