"நீங்கள் மாசற்ற புரட்சிகர நேர்மை உள்ள ஒரு மனிதன்"

இலங்கை ட்ரொட்ஸ்கிச தலைவர் விஜே டயஸின் 75 வது பிறந்தநாளில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 3, 2016 அன்று, இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி அதன் பொதுச் செயலாளர் விஜே டயஸின் எழுபத்தைந்தாவது பிறந்தநாளை கொண்டாடியது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த் தோழர் டயஸுக்கு அனுப்பிய வாழ்த்துக்களை கீழே வெளியிடுகிறோம்.

அன்புடன் தோழர் விஜே,

இன்று உங்கள் எழுபத்தைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட உங்கள் தோழர்கள் இலங்கையில் ஒன்றுகூடுகையில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியிலும், உலகெங்கிலும் உள்ள அனைத்துலகக் குழுவின் பிரிவுகளிலும் உள்ள உங்கள் தோழர்களும் நண்பர்களும் உங்களுடன் இணைந்துள்ளனர். அவர்கள் நான்காம் அகிலத்திற்கும், உலக சோசலிசத்திற்கும் மற்றும் முதலாளித்துவ சுரண்டல், ஒடுக்குமுறை, வன்முறையிலிருந்து மனிதகுலத்தின் விடுதலைக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் ஆழ்ந்த மரியாதையும் நன்றி கலந்த மதிப்பையும் கொண்டிருக்கின்றனர்.

விஜே டயஸ்

ஆனால் நாங்கள் இதனை கொண்டாடும்போது கூட, உங்கள் சமூக அனுபவம் மற்றும் அரசியல் முடிவுகளின் கட்டமைப்பை நிர்ணயித்த வரலாற்று சகாப்தத்தின் சூழலில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தை பின்னோக்கி பார்ப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. உங்கள் பிறந்த ஆண்டான 1941 ஒரு அதிர்ஷ்டமான வருடம். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. ஏகாதிபத்தியம் அதன் திகிலூட்டும்விதத்தில் எவ்வாறான காட்டுமிராண்டித்தனத்திற்கு தான் தயாராக உள்ளது என்பதை காட்டியது. நீங்கள் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஜேர்மனியில் நாஜி ஆட்சி சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது. 1941 ஆம் ஆண்டின் இறுதியில், ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை பரந்த ஆசியக் கண்டத்தினை எந்த ஏகாதிபத்திய சக்தி ஆள்வது என்பதைத் தீர்மானிப்பதற்காக கடுமையான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

ஆனால் இந்த சக்திகள் அதிகாரத்திற்காக கொடூரமாக போட்டியிட்டாலும், ஆசியா முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். எந்த ஏகாதிபத்திய சக்தி தங்கள் புதிய அதிபதியாக வெளிப்படும் என்பதை முடிவு செய்யும் போருக்கு அமைதியாக காத்திருக்க தயாராக இருக்கவில்லை. மாறாக, மக்கள் காலனித்துவ ஒடுக்குமுறையின் முழு ஆட்சியையும் கவிழ்க்க முயன்றனர்.

ஆனால் இதை எப்படி அடைவது? ஆசிய முதலாளித்துவத்தின் பல்வேறு தேசியவாதத் தலைவர்கள் எச்சரிக்கையையும் பொறுமையையும் அறிவுறுத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக, காலனித்துவத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டம் தங்கள் சொந்த வர்க்க நலன்களை அச்சுறுத்தும் ஒரு சோசலிச பரிமாணத்தை எடுத்துக் கொள்ளக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர். காந்தியின் அமைதிவாதம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலுக்கு எதிராக இயக்கப்பட்டமை, இந்தியாவை விட ஆசியாவில் எங்கும் இந்த வர்க்க அடிப்படையிலான பயம் வெளிப்படையான வெளிப்பாட்டைக் காணவில்லை. தங்கள் பங்கிற்கு, இந்திய ஸ்ராலினிஸ்டுகள், சோவியத் அதிகாரத்துவத்தின் நிலைப்பாட்டைப் பின்பற்றி, முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆதிக்கத்திற்கு தொழிலாள வர்க்கம் அடிபணிய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், போர் நடக்கும் வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களை அச்சுறுத்தும் எதையும் அவர்கள் செய்யவில்லை.

முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் அவர்களின் ஸ்ராலினிச கூட்டாளிகளின் வேலைத்திட்டத்திற்கு எதிராக, மற்றொரு முன்னோக்கு மக்கள் முன் எழுப்பப்பட்டது. அதுதான் நிரந்தர புரட்சியாகும். ஜூலை 1939 இல், இரண்டாம் உலகப் போர் வெடித்ததை முன்னிட்டு லியோன் ட்ரொட்ஸ்கி 'இந்தியாவின் தொழிலாளர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்' என்பதில் பின்வருமாறு எழுதினார்:

இந்திய முதலாளித்துவம் ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்த இயலாதது. அவர்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த சொத்துக்காக நடுங்குகிறார்கள். அவர்கள் மக்களுக்கு பயந்து நிற்கிறார்கள். அவர்கள் என்ன விலை கொடுத்தாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை நாடுவதுடன் மற்றும் மேலிருந்து வரும் சீர்திருத்தங்களின் நம்பிக்கையினால் இந்திய மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த முதலாளித்துவத்தின் தலைவரும் மற்றும் தீர்க்கதரிசியுமே காந்தியாகும். இவர் ஒரு போலித் தலைவர் மட்டுமல்ல, ஒரு தவறான தீர்க்கதரிசியுமாவார்! …

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்திய மக்கள் தங்கள் தலைவிதியை ஆரம்பத்திலிருந்தே பிரித்துக்கொள்ள வேண்டும். ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் அகழிகளின் எதிர் பக்கங்களில் நிற்கிறார்கள். அடிமை உடமையாளர்களுக்கு எவ்வதமான உதவியும் இல்லை! மாறாக, போர் அதன் பின்னணியில் கொண்டுவரும் அந்த பாரிய சிரமங்களை, அனைத்து ஆளும் வர்க்கங்களுக்கும் ஒரு மரண அடியாகப் பயன்படுத்த வேண்டும். எல்லா நாடுகளிலும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், ஜனநாயக அல்லது பாசிச முகமூடிக்கு பின்னால் மறைந்து இருந்தாலும் இவ்வாறே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் மக்களும் செயல்பட வேண்டும்.

அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்த ஒரு புரட்சிகரக் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் முன்னணியில் இருக்க வேண்டும். அத்தகைய கட்சி இந்தியாவில் இன்னும் இல்லை. நான்காம் அகிலம் இந்த கட்சிக்கு அதன் வேலைத்திட்டம், அதன் அனுபவம், அதன் ஒத்துழைப்பை வழங்குகிறது. அத்தகைய கட்சிக்கான அடிப்படை நிபந்தனைகள்: ஏகாதிபத்திய ஜனநாயகத்திலிருந்து முழுமையான சுதந்திரம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களில் இருந்து முழுமையான சுதந்திரம் மற்றும் இந்திய தேசிய முதலாளித்துவத்திலிருந்து முழுமையான சுதந்திரம்.

தொலைதூர மெக்சிகோவில் இருந்து எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், இந்திய துணைக் கண்டத்தில் பாரிய ஆளுமையை ஏற்படுத்தி, குறிப்பாக இலங்கையில் புதிய லங்கா சம சமாஜ கட்சியின் இளம் தலைவர்களுக்கு அவசியமான அரசியல் நோக்குநிலையை வழங்கியது. 1942 இல், லங்கா சம சமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party - LSSP) நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவாக மாறியது. உங்கள் வாழ்க்கையின் முதல் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த வரலாற்று முடிவு, அரசியல் மற்றும் அறிவுசார் கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. இது இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (Bolshevik Leninist Party of India) இன் பின்னாலும் 1940 களின் பிற்பகுதியிலிருந்து 1960 களின் முற்பகுதிவரை லங்கா சம சமாஜ கட்சியின் பின்னால் திரண்டிருந்த உங்களின் மீதும், ஒட்டுமொத்த தலைமுறை இலங்கை இளைஞர்களின் மீதும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொல்வின் டி சில்வா

தோழர் விஜே, 1960களின் முற்பகுதியில் அதிர்ஷ்டமான ஆண்டுகளில் லங்கா சம சமாஜக் கட்சியின் இளைஞர் இயக்கத்தில் உங்கள் அனுபவங்களைத் தெரிவிக்குமாறு பலமுறை உங்களிடம் நான் கேட்டது உங்களுக்கு தெரியும். கொல்வின் டி சில்வா மற்றும் பிறர், தாம் ஆதரித்த புரட்சிகரக் கோட்பாடுகளிலிருந்து பின்வாங்கியதை நீங்கள் கண்டிருந்தீர்கள்.

1964 இல் பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்த லங்கா சம சமாஜக் கட்சியின் துரோகம், உங்கள் அரசியல் 'இளமைப்பருவத்தை' முடிவுக்குக் கொண்டுவந்த முதல் பெரிய அரசியல் பரிசோதனையாகும். உங்கள் முன்னோடிகளுக்கு எதிராக நீங்கள் அவர்களின் சரணடைதலை மறுத்து, இலங்கையில் உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தின் பதாகையை நிலைநாட்டத் தொடங்கினீர்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகள் மிகவும் சவாலானவை. லங்கா சம சமாஜக் கட்சியின் துரோகம் ஒரு நோக்குநிலையின்மை மற்றும் ஊக்கமின்மையை உருவாக்கும் ஒரு பரிமாணத்தை கொண்டிருந்தது. 1953 முதல் சர்வதேச பப்லோவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் மீதான திருத்தல்வாதம் லங்கா சம சமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியை நியாயப்படுத்தி, இலகுவாக்கி இலங்கையில் துரோகத்தின் வேர்களைப் பற்றிய ஒரு தீவிரமான பகுப்பாய்வைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்தது. அதில் முக்கிய பங்கு பப்லோவாதத் தலைவர் ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் அவரது கூட்டாளிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சி (புரட்சிகர) க்கு வழங்கப்பட்டது.

கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அரசியல் தெளிவுபடுத்தலின் முக்கியமான வேலை தொடர்ந்தது. வில்பிரட் 'ஸ்பைக்' பெரேராவின் முக்கிய உதவியுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உங்களோடு மற்றும் சக்தி குழுவில் உள்ள மற்றவர்களான முக்கியமாக தோழர்கள் ரத்நாயக்க, கீர்த்தி மற்றும் விக்ஸ் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் லங்கா சம சமாஜக் கட்சியின் (புரட்சிகர) மத்தியவாத ஏமாற்றுக்களில் இருந்து உடைத்துக்கொண்டுவர முயன்றனர். நிச்சயமாக, இந்த நிகழ்ச்சிப்போக்கு சிக்கலானதும் மற்றும் முரண்பாடானதுமாகும். ஆனால் 1966 மற்றும் 1968 க்கு இடையில், இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஒரு பிரிவாக நிறுவப்பட்டதன் மூலம் புரட்சிகரக் கொள்கைகளின் பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்த மகத்தான அரசியல் அனுபவத்தை ஏற்கனவே கடந்துவிட்ட நீங்கள், இன்னும் உங்கள் இருபதுகளில் ஒரு இளைஞனாக இருந்தீர்கள். ஆனால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொண்ட சவால்களுக்கு ஓய்விருக்கவில்லை. மீண்டும் மீண்டும், கட்சித் தலைமை தனது அரசியல் உறுதியை நிரூபிக்க வேண்டியிருந்தது.

இந்த அனுபவங்களின் விரிவான கணிப்பெடுப்பு, இலங்கையினதும் ஆசிய துணைக் கண்டத்தினதும் அரசியல் வரலாற்றையும் மற்றும் நிச்சயமாக, கடந்த அரை நூற்றாண்டில் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியையும் காட்டுவதை தவிர வேறொன்றாக இருக்கப்போவதில்லை.

எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் நிகழ்வுகள் 1) 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜனதா விமுக்தி பெரமுன - JVP) கிளர்ச்சி. இதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு இந்த மாவோவாத அமைப்புடன் தடையற்ற வேறுபாடுகள் இருந்தபோதிலும் மற்றும் தனக்கு பெரும் ஆபத்து இருந்தபோதிலும், காட்டுமிராண்டித்தனமான அரசாங்க அடக்குமுறைக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியையும் அதன் கீழ் கிராமப்புற இளைஞர்களையும் பாதுகாத்தது; 2) 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மோசமான எதிர் தாக்குதல்; 3) 1983 இல் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து, இதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொழும்பு ஆட்சியின் இனவெறி தமிழர் விரோதக் கொள்கைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாளித்துவ-தேசிய மற்றும் பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கும் எதிராக தனித்து நின்றது. மற்றும் 4) 1980 களின் பிற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை பிரச்சாரம், சிங்களப் பேரினவாதத்திற்கு அதன் இடைவிடாத எதிர்ப்பு காரணமாக புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தை குறிவைத்தது.

கீர்த்தி பாலசூரியா

1971 மற்றும் 1985 க்கு இடையில், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) ஆகியவை அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச அடித்தளங்களை மறுக்கும் நிலையில் இருந்த அரசியல் நிலைமைகளில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சிக்கலான சர்வதேச நிலைமைகளின் கீழ் தொடர்ச்சியான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெளிப்படையாகச் சொல்வதானால், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமை, இந்திரா காந்தியின் இந்திய அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட 1971 கிழக்கு பாக்கிஸ்தான் படையெடுப்புக்கு பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் வழங்கிய சந்தர்ப்பவாத ஆதரவிற்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் குழுவின் ஆதரவுடன் தோழர் கீர்த்தி முன்வைத்த சரியான மற்றும் பெரும்தாக்கம் மிக்க விமர்சனத்தை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ இல்லை.

தொழிலாளர் புரட்சிக் கட்சி, அனைத்துலகக் குழுவிற்குள் கொள்கைரீதியான அரசியல் கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயன்றது. 1982 மற்றும் 1984 க்கு இடையில் வேர்க்கஸ் லீக்கால் எழுப்பப்பட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு மீதான விமர்சனங்களைப் பற்றி புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் முற்றிலும் அறியாமல் வைக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 1984 இல் வேர்க்கஸ் லீக்கிற்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றி விவாதிக்க அழைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூட்டத்திற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் அழைக்கப்பட வேண்டும் என்ற எனது குறிப்பிட்ட கோரிக்கையை தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமை புறக்கணித்தது. ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் இந்த கொள்கையற்ற சூழ்ச்சியை மேற்கொண்டனர் என்பது வெளிப்படையானது. ஏனெனில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை கைவிடுவது மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளுடன் அவர்களின் பிற்போக்கு கூட்டணி பற்றிய அமெரிக்க வேர்க்கஸ் லீக்கின் விமர்சனங்களுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமை உடன்படும் என்று கருதினர்.

எவ்வாறாயினும், 1985 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் ஒரு அரசியல் நெருக்கடி வெடித்தது. இது அனைத்துலகக் குழுவின் மீதான அதன் பிற்போக்கு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

அக்டோபர் 1985 இல் லண்டனில் நடந்த அனைத்துலக் குழுவின் பிரதிநிதிகளின் கூட்டம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புதிய மற்றும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தைக் குறித்தது. 1953 இல் பகிரங்க கடிதத்தை வெளியிடுவதன் மூலம் தொடங்கிய நான்காம் அகிலத்திற்குள் நீடித்த உள்நாட்டுப் போர் என்று நாங்கள் வகைப்படுத்தியிருக்கும் பப்லோ மற்றும் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாதத்திற்கு எதிரான கிளர்ச்சி, ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு சக்திகளை அனைத்துலகக் குழுவினுள் இருந்து களையெடுப்பதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதிகளுடனான பிளவின் போக்கில், அதன் உடனடி விளைவுகளில், தோழர் கீர்த்தி பாலசூரிய அனைத்துலகக் குழுவின் தலைமைக்குள் ஒரு முக்கியமான மற்றும் தீர்க்கமான பங்கை வகித்தார். எவ்வாறாயினும், ட்ரொட்ஸ்கிசத்திற்கான முந்தைய தசாப்தங்களின் போராட்டங்களிலிருந்து பெறப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமை மற்றும் காரியாளர்களின் மகத்தான அனுபவத்தையும் அரசியல் உறுதியையும் அவரது மிகைமதிப்பற்ற பங்களிப்பு பிரதிபலித்தது.

இந்தக் காரணத்தினால்தான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் டிசம்பர் 1987 இல் தோழர் கீர்த்தியின் அகால மற்றும் முற்றிலும் எதிர்பாராத இழப்பைத் தாங்க முடிந்தது. அவரது 39 வது வயதில் அவர் இறந்தது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவுக்கு கொடூரமான மற்றும் சோகமான இழப்பாகும். உள்நாட்டுப் போர், மக்கள் விடுதலை முன்னணி (JVP) கொலையாளிகளின் தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான அரசாங்கத் துன்புறுத்தல் ஆகியவற்றின் நடுவில், கீர்த்தியின் மரணத்தின் தாக்கத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் தாங்க முடிந்தது என்பது எந்த புறநிலை மதிப்பீடுகளிலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையின் அசாதாரண அரசியல் வலிமையின் எடுத்துக்காட்டாகும். ஆனால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியிலோ அல்லது அனைத்துலகக் குழுவிற்குள்ளோ இந்த தீர்ப்பை சவால் செய்யும் ஒரு தோழர் கூட இல்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள், தோழர் விஜே, புரட்சிகர சர்வதேசியவாத நோக்குநிலையை பேணுதல் மற்றும் அதை முன்னோக்கி வழிநடத்துதலில் கட்சியின் ஐக்கியத்தை பேணுவதில் தீர்க்கமான பங்கை வகித்தீர்கள்.

நாங்கள் முதலில் சந்தித்து 45 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். ஒரு தோழர், போராளி மற்றும் ஒரு மனிதர் என்ற முறையில் உங்கள் மீதான எனது மரியாதையின் ஆழத்தை என்னால் போதுமான அளவு வார்த்தைகளால் தெரிவிக்க முடியாதுள்ளது. நீங்கள் தவறுகளை விட்டிருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் இப்போது ஒன்று கூட மனதில் வரவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் மார்க்சிச கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் சமரசமற்றவராக இருந்தீர்கள். நீங்கள் சிறை தண்டனையை அனுபவித்தபோது, சோசலிசப் புரட்சிக்கான உங்கள் அர்ப்பணிப்பால் சிறைக்காவலர் கூட ஈர்க்கப்பட்டார்!

இலங்கை முழுவதும், —உங்கள் அரசியல் எதிரிகளால் கூட— புரட்சிகர உறுதிப்பாடு கொண்டவராக மதிக்கப்படுகிறீர்கள். சிங்கள, தமிழ் சமூகங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதையை கொண்டுள்ள மற்றும் போற்றப்படும் இலங்கையின் ஒரே அரசியல் தலைவர் நீங்கள் மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறது மற்றும் அதேபோல் அனைத்துவகையான இனம் சார்ந்த கருத்துக்களையும் எதிர்க்கிறது என்பதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் போராட்டங்களின் போக்கிலும், எண்ணற்ற கஷ்டங்களை எதிர்கொள்ளும் போதும் —உங்கள் அன்பு மனைவி தோழர் பியசீலியின் இழப்பு உட்பட— நீங்கள் நான்காம் அகிலத்தின் பதாகையை தாங்கிப்பிடித்துள்ளீர்கள்.

இந்த பிறந்த நாள் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் எப்படி புள்ளிவிவரங்களை ஏமாற்றினாலும், 75 என்பது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆண்டுகள். ஆனால் வயதுக்கு ஏற்ப அதிக ஞானம் வருகின்றது. சில வருடங்களுக்கு முன்பு உங்கள் நீண்ட ஆயுளுக்கு இரண்டு பெரிய அச்சுறுத்தல்களாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் சிகரெட் புகைத்தல்ளை நீங்கள் முன்கண்டீர்கள். அதனால் நீங்கள் பல ஆண்டுகளாக புரட்சிகர போராட்டத்தின் முன்னணியில் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்க எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன.

எப்போதும் உங்களுடைய தோழர்,

டேவிட் நோர்த்

Loading