இலங்கைத் தமிழ் அகதிகள் மீது இந்திய ஆட்சியாளர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பங்கள், முகாம்களில் உள்ள மோசமான நிலைமைகள் காரணமாக விரக்தியில் பலமுறை தற்கொலைக்கு முயன்றனர். கோவிட்-19 தொற்றுநோயை உத்தியோகபூர்வமாக கையாண்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், இது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒரு போலித்தனமான அறிக்கையை விடத் தூண்டியது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Wikimedia Commons)

அவருடைய 9 நிமிட பேச்சில், “முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் வெளிப்புறப் பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகள் வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கைக்குத் திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடு செய்தல் போன்ற நீண்டகால தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்படும்”. இதற்காக “317கோடியே 40 லட்சம் ரூபாய்கள் (51 மில்லியன் டாலர்கள்) ஒதுக்கீடு செய்யும் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

முகாம்களில் உள்ள 7,469 பாழடைந்த வீடுகளுக்கு மின்சாரம், கழிப்பறை, குடிநீர், குழந்தைகளுக்கான கல்விக்கான வசதிகள் மற்றும் இலவச எரிவாயு அடுப்பு உள்ளிட்ட உபகரணங்களை வழங்கப்படுமென உறுதியளித்தார்.

ஸ்டாலினின் சகோதரியும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் குடும்ப நண்பியுமான கனிமொழி, “முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் அவர்களுக்கு நன்றி. கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு” என ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கூடுதலாக, “இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்” என்பதை இனி “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” என அழைக்க வேண்டும் என ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தமிழ் நாட்டின் திமுக மட்டுமல்ல அதன் போட்டியாளரான அஇஅதிமுக, மற்றும் ஸ்ராலினிஸ்டுகள், ஏனைய தமிழ் தேசியவாதிகள் உட்பட அனைத்து ஆளும் தட்டின் மிருகத்தனத்திற்கு உதாரணமாக இருந்து இழிபெயரெடுத்த கொடூரத்தின் பதிவிலிருந்து தங்களை ஒதுக்கி வைக்கும் ஒரு இழிந்த முயற்சியாகும்.

திமுக மற்றும் அதிமுகவின் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட காகிதத்திற்கு கூட மதிப்பற்றவை. பல தசாப்தங்களாக, கடந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல்கள் உட்பட, அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதாகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் அவர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். எப்போதுமே, இந்த வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கைவிடப்பட்டன.

தொற்றுநோயைப் போலவே, இந்திய துணைக் கண்டத்தில் இன மோதலின் கசப்பான மரபுகளுக்கு எதிரான போராட்டத்தை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை, 1947 ஆம் ஆண்டு இந்திய பிரிவினை மூலம் கருக்கலைப்பு செய்து உருவாக்கப்பட்ட முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பின் கட்டமைப்பிற்குள் போராட முடியாது. ஒரு உண்மையான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பையும் அணிதிரட்டலையும் வேண்டிநிற்கிறது.

ஸ்டாலினின் அறிவிப்புக்கள், தெளிவாக கணக்கிடப்பட்ட பிற்போக்கு அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளன:

  • முதலாவது, கோவிட்-19 பெருந்தொற்றை மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசாங்கமும் தமிழ்நாட்டில் அதிமுகவும் தற்போது திமுகவும் குற்றவியல்தனமாக கையாளும் முறை உழைக்கும் மக்கள் மத்தியிலும் குறிப்பாக வாகனத்துறை தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்தியிலும் பாரிய கோபத்தையும் எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தமிழ் தொழிலாளர்களிடையே பரவலான ஆதரவைக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை மோசமாக கையாளும் முறை வெளிவரத்தொடங்குவது பாரிய சமூக வெடிப்புக்கு வழிவகுக்கும் என திமுக அஞ்சுகிறது. எனவே திமுக தனது தமிழ் தேசியவாத நற்சான்றிதழ்களுக்கு மெருகூட்டுவதற்கூடாக எதிர்ப்புகளை கட்டுப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.
  • இரண்டாவது, மோடி அரசாங்கத்தின் மீதும், தமிழ்நாட்டில் அதன் ஆதரவு கட்சிகளினதும் மீதுள்ள பாரிய கோபங்களை எதிர்வரும் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள்” திருப்பி விடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சிபிஐ, சிபிஎம்) மற்றும் சாதிவாத, வகுப்புவாத கட்சிகளும் திமுகவுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த அகதிகள் இலங்கையில் 1983-2009 உள்நாட்டு போரின்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர். அஇஅதிமுகவும் தற்போது திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்த கடந்த 38 வருடங்களில் எந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளோ மிக மிக அடிப்படையான சமூக வசதிகளோ இன்றி முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. மதுரை, ஈரோடு, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, காஞ்சிபுரம், திருச்சி மற்றும் திருவள்ளூர் உட்பட தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் 115 முகாம்களில் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34,135 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் முகாமில் இல்லாத அகதிகளாக தங்கியுள்ளனர்.

1983ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த வேளையில், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும், மாநிலத்தில் ஸ்ராலினிஸ்டுகள் உடனான தேர்தல் கூட்டின் மூலம் ஆட்சிக்கு வந்திருந்த அதிமுக அரசாங்கமும் இந்தியக் கடற்கரை கடல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி அகதிகளை இந்தியாவுக்குள் அனுமதித்தனர். தமிழ் தேசியவாத தலைவர்கள் கடற்கரைக்கு சென்று அகதிகளை வரவேற்றனர். பொதுக்கூட்டங்களை ஒழுங்கமைத்து சிங்கள வெறி பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அவற்றில் “சிங்கள இராணுவம் தமிழ் சகோதரிகளை மாறி மாறி கற்பழிக்கிறார்கள்” “சிங்களவனுடன் கூடி வாழ முடியாது” என்பவை முதலிடத்தில் இருந்தன.

அமெரிக்க அரசாங்கத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நடந்த பனிப்போரின் போது, இந்திய முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இந்தியாவில் அகதிகளின் வருகைக்காக பிரச்சாரம் செய்தனர். இலங்கையில் 'மனித உரிமை மீறல்களை' முன்னிலைப்படுத்தி தங்கள் பிராந்திய மேலாதிக்க நலன்களை முன்னெடுக்க அவர்கள் இதைப் பயன்படுத்தினர். இலங்கை இராணுவ அட்டூழியங்கள் மற்றும் அகதிகளின் அவல நிலைகள் பற்றிய செய்திகள் இந்திய பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் நிரம்பி வழிந்தன.

1991 இல் ஸ்ராலினிஸ்டுகளால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், இந்திய முதலாளித்துவம் வாஷிங்டனை நோக்கி திரும்பத் தொடங்கியதோடு, இந்திய அரசியல் ஸ்தாபகம் அவர்களை 'சட்டவிரோத குடியேற்றவாசிகள்' என்று கண்டனம் செய்தது. இனவாதப் போரில் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் தேசிய போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உடனான 'சந்தேக நபர்கள்' என்று அகதிகள் அதிகளவில் முத்திரை குத்தப்பட்டனர்.

பழைய தலைமுறை அகதிகள் எந்த வேலையும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குழந்தைகள் பட்டம் பெற்றிருந்தாலும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை மறுக்கப்படுகிறார்கள். வீடுகளுக்கு பூச்சு அடிப்பது, கட்டிட வேலை, சாலை அமைத்தல், மூட்டைகள் சுமத்தல் மற்றும் கடை வேலைகள் போன்ற அன்றாட வேலைகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தினக்கூலிகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சில அகதிகள், விடுதலைப் புலிகளுடனான உறவு தொடர்பாக இந்திய அரசாங்கத்தால் சந்தேகிக்கப்பட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருச்சி உட்பட பல இடங்களில் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த 'சிறப்பு முகாம்கள்' உண்மையில், சிறைச்சாலைகளைப் போன்றது. அவர்களுக்கு வெளியில் சென்றுவர உரிமை இல்லை. இந்த முகாம்கள் மாவட்ட நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் காவல்துறை மற்றும் தமிழ்நாடு கியூ உளவு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. முகாமில் உள்ள உறவினர்களைப் பார்க்க வரும் வெளியாட்கள் காவல்துறை மற்றும் உளவுத்துறையால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

அதேவேளை, இந்தியாவில் இன்னமும் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் எஞ்சியிருக்கும் தலைமை மட்டத்தில் இருந்தவர்களும், இரண்டாம் மட்டத்தில் இருந்தவர்களும் மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் வாழ்பவர்களும், இந்திய உளவு நிறுவனங்களுடன் கூடி செயற்பட்டவர்களும், இந்திய இராணுவத்திற்கு கையாட்களாக செயற்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தமிழ்நாடு ஆளும் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளனர். திமுக, அஇஅதிமுக, ஸ்ராலினிஸ்டுக்கள் உட்பட, சீமானின் நாம் தமிழர் கட்சி, வைகோ வின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பல அரசியல் கட்சிகளுடனும், சினிமா வர்த்தக துறையிலும் கணிசமான செல்வாக்கை அனுபவிக்கின்றனர்.

ஆனால் அகதிகளோ, சிறு குற்றங்களுக்காக அல்லது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் கூட, “சிறப்பு முகாம்” என்ற பெயரில் உள்ள சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், ஜாமீனில் வெளியே வந்தவர்களும் கைது செய்யப்பட்டு மீண்டும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2009ல் இலங்கை அகதிகளால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மேல்விசாரணை 2021 ஆகஸ்டில் நடக்கையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என வகைப்படுத்தியது. மனுதாரர்களுக்கு குடியுரிமை வழங்குவது பெரும்பாலும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மர் (ரோஹிங்கியாக்கள்), ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சாத்தியங்களைத் திறக்கும். எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என நிராகரித்தது. இது இலங்கை அகதிகள் மத்தியில் இருந்துவந்த நீண்டகால எதிர்பார்ப்பை தகர்த்ததோடு, தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது.

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை விடுவிக்கவும், தங்கள் குடும்பத்துடன் வாழவும் அனுமதி கோரி பல்வேறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், 'சிறப்பு முகாமில்' உண்ணாவிரதம் தொடர்பாக 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர், தூக்க மாத்திரைகளை உட்கொண்ட, தூக்கில் தொங்க அல்லது வயிற்றை கிழிக்க முயன்ற 16 பேரின் கூட்டு தற்கொலை முயற்சி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் நீதிகேட்டு, ஆகஸ்ட் 29 சனிக்கிழமை 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் உள்ள மகேந்திரன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்று இறுதியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் பரந்துபட்ட மக்களின் வாக்குகளை குறிவைத்து, அகதிகள் மீது அனுதாபம் காட்டுவதான வெற்று வாக்குறுதிகளை வெளியிடும் திமுக அஇஅதிமுக உட்பட அனைத்து தமிழ் தேசியவாத கட்சிகளும், எந்த வெட்கமும் இன்றி அவற்றிற்கு முண்டுகொடுக்கும் இரட்டை ஸ்ராலினிச கட்சிகளும் அகதிகளின் பாதுகாவலர்கள் அல்ல என்பதை கடந்த நான்கு தசாப்தங்களின் அனுபவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அவர்கள், போருக்கு வழிவகுக்கும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் கோடிக்கணக்கான அகதிகளை உருவாக்கிய முதலாளித்துவ ஒழுங்கின் பாகமாக உள்ளனர்.
உழைக்கும் மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை அழித்து, கோவிட் -19 தொற்றுநோயை தடுப்பதற்கு ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கைக்காக போராட அணிதிரட்டப்பட்டதும், சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் இப்பகுதி முழுவதும் உள்ள மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க கூடியதுமான இந்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமே இலங்கை அகதிகளின் உண்மையான பாதுகாவலர் ஆகும்.

Loading