பேர்லின் மருத்துவமனைகளில் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவும்! நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் உள்ள அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. கடந்த வாரம் மூன்று நாள் 'எச்சரிக்கை' வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய பல்கலைக்கழக மருத்துவமனையான சரிட்டி (Charité) இல் 98 முதல் 99 சதவிகித தொழிற்சங்க அங்கத்தவர்கள் மற்றும் விவான்டெஸ் மருத்துவமனை குழும சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், சமையலறை சேவைகள் மற்றும் போக்குவரத்துக்காக அதன் துணை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் காலவரையற்ற வேலைநிறுதத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

25 ஆகஸ்ட் 2021இல் சரிட்டி மற்றும் விவான்டெஸ் இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர்

இந்த வேலைநிறுத்தம் இரண்டு காரணங்களுக்காக முழு உழைக்கும் மக்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் பெறத் தகுதியானது. முதலாவதாக, வேலைநிறுத்தம் பல வருட சிக்கன நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையில் வெட்டுக்களின் விளைவுகளுக்கு எதிராக இயக்கப்படுகிறது. இது வேலையில் தாங்க முடியாத அளவுக்கு வேலைப்பழுவை அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, வேலைநிறுத்தம் செய்பவர்கள், இலாபத்தை அதிகரிப்பதற்காக ஆகக்கூடியளவிற்கு நிதியுதவி வெட்டப்பட்ட நகரத்தின் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளை அழிப்பதை எதிர்க்கிறார்கள்.

வேலைநிறுத்தத்தில் 2,000 தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று சுகாதார ஊழியர் சங்கம் வேர்டி (Verdi) எதிர்பார்க்கிறது. கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட எச்சரிக்கை வேலைநிறுத்தங்களின் போது வெளிநடப்பு செய்யத் தயாராக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் பேச்சுவார்த்தையாளர் மைக்க ஜேகர் கூறினார். மதிப்பீடுகளின்படி, சரிட்டி மற்றும் விவான்டெஸ் ஆகியவற்றிலுள்ள 9,000 படுக்கைகளில் 1,500 வேலைநிறுத்தத்தால் செயற்படாது இருக்கும்.

வேர்டி நிவாரண ஒப்பந்த உடன்பாடு என்று அழைக்கப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது செவிலியர்களுக்கு குறைந்த நபர்களுடன் இயங்கும் நாட்களில் செய்யப்படும் மேலதிக வேலைக்கான அதிக பணிச்சுமைகளுக்கான மேலதிகக்கொடுப்பனவு அல்லது வேலை விடுமுறையை நஷ்ட ஈடாக வழங்குகிறது. அதே நேரத்தில், விவாண்டெஸ் இன் துணை நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை பொதுத்துறை ஊழியர்களுக்கான ஒப்பந்த உடன்படிக்கையின் படி (TVÖD) வழங்குமாறு வேர்டி அழைப்பு விடுகிறது. தற்போது, விவான்டெஸ் துணை நிறுவனங்களில் பணிபுரியும் 2,500 ஊழியர்கள், அதே வேலையைச் செய்யும் இந்த நிறுவனத்தால் நேரடியாக பணியமர்த்தப்பட்டவர்களை விட பல நூறு யூரோக்கள் குறைவாகப் பெறுகின்றனர்.

எவ்வாறாயினும், தொழில்துறை நடவடிக்கைகளுக்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை. செவிலியர்கள் மனிதாபிமானமற்ற வேலை நிலைமைகளின் கீழ் மற்றும் மோசமான ஊதியங்களுக்காக முக்கிய வேலையைச் செய்கிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய் இந்த நிலைமையை தாங்க முடியாததாக்கியுள்ளது. தீவிர பணிச்சுமை மற்றும் குறைந்த ஊதியம் என்பது வழக்கமாகிவிட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

இரண்டு அரசுக்கு சொந்தமான மருத்துவமனை குழுமங்களில் உள்ள தொழிலாளர்கள், நோயாளிகளுக்கு நல்ல மற்றும் பாதுகாப்பான பராமரிப்பு வழங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்கள் தேவைப்படும் ஒரு மாற்று வேலைமுறையில் தனியாக வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். மிதமான மதிப்பீடுகள் கூட அரசுக்குச் சொந்தமான மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1,000 செவிலியர்களின் பற்றாக்குறை இருப்பதைக் குறிக்கிறது.

இதேபோன்ற அனுபவங்களை இரயில்வே ஓட்டுனர்கள் மற்றும் பரிசோதகர்கள், பொதி வினியோக ஒட்டுனர்கள், பண்டகசாலை தொழிலாளர்கள் மற்றும் அதிகரித்தளவில் பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் போன்ற பொருளாதாரத்தின் பிற துறைகளில் எண்ணற்ற தொழிலாளர்கள் காண்கின்றனர். இலாப ஓட்டத்தை உறுதி செய்வதற்காக அவர்களின் உடல்நலமும் மற்றும் தொற்றுநோய் காலங்களில் அவர்களின் உயிர்களும் பலியிடப்படுகின்றன. குறைந்த ஊதியம், வானளாவிய உயர்ந்த வாடகை மற்றும் விலை உயர்வு ஆகியவை மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் தாங்க முடியாததாக ஆக்குகின்றன.

பேர்லின் செனட்டில் ஒரு கூட்டணியில் ஆட்சி செய்யும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), இடது கட்சி மற்றும் பசுமை கட்சிகள் பெருகிய முறையில் பதட்டமடைந்து வருகின்றன. செப்டம்பர் 26 அன்று, பேர்லினில் செனட் மற்றும் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு (Bundestag) புதிய தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த கட்சிகள் தொழிலாளர்களிடையே திரண்டுள்ள கோபம் வெடிப்பதை கண்டு பயப்படுகின்றனர்.

அதனால்தான் இந்த கட்சிகளின் முன்னணி வேட்பாளர்கள் செப்டம்பர் 3 அன்று அவர்கள் பேரணியில் கூறியதுபோல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் தாங்க முடியாத இந்த நிலைமைகளுக்கு பொறுப்பான அதே கட்சிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் தான் தேர்தலுக்குப் பின்னர் நிலைமையை இன்னும் மோசமானதாக்குவர்.

பேர்லின் மருத்துவமனைகளை இலாபக் கோட்பாட்டின் படி செயல்படும் அரசுக்கு சொந்தமான இரண்டு பெரிய நிறுவனங்களாக மாற்றுவதும், பல செவிலியர்கள் வேலைகளிலிருந்து வெளியேறுவதற்கு காரணமான ஊழியர்களின் தொடர்ச்சியான குறைப்பு மற்றும் குறைந்த ஊதியங்கள் அனைத்துக்கும், கடந்த 20 ஆண்டுகளாக பேர்லினில் ஆட்சி செய்யும் சமூக ஜனநாயகக் கட்சியும் அதன் கூட்டணி பங்காளிகளான இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியினதும் பொறுப்பாகும். மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையை கணிப்பிட்டு அதற்கான செலவுத்தொகை வழங்கப்படும் முறையானது கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு நெம்புகோலாக செயல்படுகிறது. இந்த முறை, நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹெர்கார்ட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்தியாஸ் கொலாட்ஸ் ஆளும் கட்சிகளினது முற்றுமுழுதான பாசாங்குத்தனத்தை மிகத் தெளிவாக உள்ளடக்கியுள்ளார். இந்த சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி, நிதி செனட்டரும் மற்றும் விவாண்டஸ் இன் மேற்பார்வை குழுவின் தலைவருமாவார்.

இந்த மோதலில் வேர்டி தொழிற்சங்கம் ஒரு இரட்டைத்தன்மையான மற்றும் சந்தேகத்திற்குரிய பாத்திரத்தை வகிக்கிறது. மூன்று செனட் கட்சிகளையும் இணைக்கும் தனிநபர்கள் மற்றும் அரசியலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக, வேர்டி வேலைநிறுத்தக்காரர்களின் கோபத்தை குறைக்க முயற்சிக்கின்றது. அதே நேரத்தில் வேலைநிறுத்தத்தை முடிந்தவரை விரைவாக தடுத்து நிறுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றது. திரைக்குப் பின்னால் வேர்டி, செனட் மற்றும் நிர்வாகத்தினர் சுகாதார ஊழியர்களைப் பிரித்து வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுக்க முனைப்புடன் இருப்பதை ஒருவர் உறுதியாக நம்பலாம்.

வேர்டி பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான மைக்க ஜேகர் திங்களன்று 'கட்டாய வேலைநிறுத்தத்திற்கு' தயாராக இருப்பதாக அறிவித்தார். இது காலவரையின்றி இருக்கும் மற்றும் ஒரு முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும் என்றார். அதே நேரத்தில், செனட் மற்றும் நிர்வாகத்தின் சார்பாக, வேலைநிறுத்தத்திற்கான ஆதரவான வாக்கெடுப்பு முடிவு இருந்தபோதிலும், இரண்டு மருத்துவமனை குழுக்களின் நிர்வாகிகளுடன் பேச தொழிற்சங்கம் மீண்டும் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

புதன்கிழமை விவான்டஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, வெளிப்படையாக வெற்றி பெறாதிருந்த போதலும் ஆரம்பத்தில், வேர்டி வியாழக்கிழமை சரிட்டி ஊழியர்களை மட்டுமே வேலைநிறுத்தத்திற்கு அழைத்தது. புதன்கிழமை பிற்பகல் ஒரு செய்திக்குறிப்பில் மைக்க ஜேகர், 'நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம்: பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வை அடைய விரும்புகிறோம், எப்போதும் பேசத் தயாராக இருக்கிறோம். சரிட்டி மற்றும் விவாண்டஸில் தற்போது மேசையில் இருக்கும் தீர்வு சரியான திசையில் நகர்கிறது.” என்று வலியுறுத்தினார்.

வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்பு, இரு மருத்துவமனை குழுக்களும் சரிட்டி பணியாளர்களுக்கான மேலாளர் கார்லா ஐசெல் 'விரிவான மற்றும் கவர்ச்சிகரமான' சலுகையை முன்வைத்தார். இருப்பினும், இது செவிலியர்களின் கூடுதல் வேலைநேரம் மற்றும் அதிக பணிச்சுமையை ஈடுசெய்வதற்காக வேலைநிறுத்தக்காரர்களால் கோரப்பட்ட நிவாரண ஒப்பந்தம் அல்ல. அதற்கு பதிலாக, இது நோயாளிகளுக்கு சாதகமற்ற ஒரு வகையான நிலையான சேவை ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் சில சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும்.

ஆயினும்கூட, வேர்டி பேச்சுவார்த்தையாளர் ஐவோ கார்பே இந்த வாய்ப்பை 'ஒரு பெரிய வெற்றி' என்று விவரித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும்போது முதலாளிகளின் முன்வைக்கப்படும் என்றார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற பிரிவுக் கட்சித் தலைவர் ரெயிட் சலேஹ், கடந்த வாரம் ஏற்கனவே விவான்டஸ் துணை நிறுவனங்களின் ஊழியர்களின் ஊதியத்தை பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதிய நிலைக்கு சமப்படுத்துதல் பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்படாது என்று உறுதியளித்தார். SPD தேர்தலுக்கு முன் சமூக ஜனநாயகக் கட்சி விவான்டஸின் புதிய நிதியுதவிக்கு உறுதியளிக்கிறது. புதிதாக தெரிவுசெய்யப்படும் செனட் இதனை கடைபிடிக்கவேண்டும் என்பதற்கான எந்த கடமைப்பாடும் இல்லை.

பேர்லின் செனட், வேர்டி மற்றும் ஊடகங்களும் தீவிர சிகிச்சைப் படுக்கைகளை வேகமாக நிரப்பும் தொற்றுக்குட்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, வேலைநிறுத்தக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும். செவ்வாயன்று, பேர்லினில் ஏழு நாள் தொற்றுவிகிதம் 87.9 ஆக இருந்தது. இது முந்தைய நாளை விட (82.5) கணிசமாக அதிகமாகும். 80 கோவிட் நோயாளிகள் தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு, இந்த எண்ணிக்கை 50 ஆக இருந்தது.

இந்த அதிகரிப்புக்கான பொறுப்பு செனட்டின் குற்றவியல் கொள்கையாகும். இது விஞ்ஞானிகளின் அவசர எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பள்ளிகள் மற்றும் பிற அத்தியாவசியமற்ற பணியிடங்களை திறந்து வைப்பதன் மூலம் தடையற்ற தொற்றுநோய் பரவுதலை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இதற்காக இது வேர்டியின் ஆதரவையும் நம்பலாம்.

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவமனை தொழிலாளர்கள் இந்த அழுத்தத்திற்கு அடிபணியக் கூடாது. சகிப்புத்தன்மையற்ற பணி நிலைமைகளுக்கு எதிரான போராட்டம், மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சுகாதார அமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் இணைந்து செல்கிறது. மேலும், பங்குதாரர்கள் மற்றும் தனியார் நிதியங்களின் சிறிய பிரிவினருக்கு பெரும் இலாபங்களை வழங்குவதற்குப் பதிலாக அது மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது.

இந்தப் போராட்டத்தை நடத்த, சுயாதீன நடவடிக்கை குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும். ஏனெனில் வேர்டி அதிகாரிகள் அல்ல, தொழிலாளர்களே போராட்டத்தை வழிநடத்துகின்றனர். வேர்டி பல ஆண்டுகளாக தொழிலாளர்களின் எந்தவொரு தீவிர எதிர்ப்பையும் நாசப்படுத்தி வருகிறது. ஒரு உதாரணம், சரிட்டி சேவை நிறுவனமான CFM ஆகும். அங்கு குறைந்த ஊதியத்திற்கு எதிரான போராட்டத்தை 15 ஆண்டுகளாக பயனற்ற போராட்டங்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் மூலம் வேர்டி தடுத்து வருகிறது.

வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யாத எந்த ஒப்பந்தத்திலும் வேர்டி கையெழுத்திடக்கூடாது என்பதை புதிய நடவடிக்கை குழுக்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழுக்கள் நாடு முழுவதும் மற்றும் தேசிய எல்லைகளை கடந்து ஏனைய மருத்துவமனைகள் மற்றும் பணியிடங்களில் உள்ள சக ஊழியர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தவேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, பேர்லின் மற்றும் கூட்டாட்சித் தேர்தல்களில் தனது சொந்த வேட்பாளர் தேர்தல் பட்டியல்களுடன் போட்டியிடுகிறது. உலகம் முழுவதும் உள்ள அதன் சகோதர சோசலிச சமத்துவக் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும் ஆதரிக்கும்.

Loading