ஆப்கானிஸ்தான் தோல்விக்குப் பின்னர்: அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி எப்போது வரும்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட தோல்வி, அந்த நாட்டில் மீதான அதன் நவகாலனித்துவ நடவடிக்கைகளின் விளைவு மட்டுமல்ல. மாறாக அது அதன் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளை இராணுவ வழிமுறைகள் மூலம் எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட கடந்த மூன்று தசாப்தங்களாக தீவிரத்தன்மையோடு பின்பற்றப்படும் நிகழ்ச்சி நிரலின் விளைவாகும்.

இது மற்றொரு நீடிக்கும் பேரழிவுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அதாவது அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை பராமரிக்க முயன்ற முக்கிய ஊண்டுகோலான முழு நிதியியல் அமைப்பின் சிதைவுடனும் மற்றும் சரிவுடனும் தொடர்புபட்டுள்ளது.

இடது: அமெரிக்க Chinook வானூர்திகள் காபூலின் அமெரிக்க தூதுவரகத்தின் மீது பறக்கின்றது (AP Photo/Rahmat Gul, File); வலது: பங்குவர்த்தகர்கள் நியூயோர்க் பங்குச்சந்தையில் பணிபுரிகின்றனர் (AP Photo/Richard Drew)

இந்த இரண்டு நிகழ்ச்சிப்போக்குகளின் வரலாற்று வளர்ச்சியை ஆராய்ந்தால் அவை எவ்வளவு நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளன மற்றும் அவை எவ்வாறு ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

1980 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த மந்தநிலையை அடுத்து வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு ஊகவாணிபம் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க நிதி அமைப்பு ஒரு பெரிய நெருக்கடிக்குள் நுழைந்தமை 1980 களின் இறுதியில் தெளிவாகத் தெரிந்தது. Dow 22.6 சதவிகிதம் சரிந்து, இன்றுவரை மிகப்பெரிய ஒற்றை நாள் வீழ்ச்சியாக பதிவு செய்யப்பட்ட அக்டோபர் 19, 1987 பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் இந்த நெருக்கடி அதன் வருகையை அறிவித்தது.

இந்த வீழ்ச்சியின் ஆழத்தின் காரணமாக மட்டுமல்லாமல், அதனை பின்தொடர்ந்து வந்தவற்றிற்கும் இது முக்கியமானதாக இருந்தது. வோல் ஸ்ட்ரீட் உருகிய அந்த நாளில், மத்திய வங்கி, சந்தைக்கு நிதிய உதவியளிப்பது என்ற உறுதிமொழியுடன் தலையிட்டது. இது ஒரு தடவை எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல, ஆனால் அதிலிருந்து நீட்டிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு புதிய கொள்கையின் தொடக்கமாகும்.

மத்திய வங்கியின் பணி ஊக குமிழிகள் தோன்றுவதைத் தடுப்பது அல்ல. மாறாக அவை வெடிக்கும்போது ஒரு பெரிய சுற்று ஊகங்களுக்கு அடித்தளத்தை வழங்குவதற்காக பாரிய பண உட்செலுத்துதல் மூலம் தலையிடுவதாகும்.

இந்த புதிய நிகழ்ச்சி நிரல் பின்வரும் அனைத்து நெருக்கடிகளிலும் செயல்படுத்தப்பட்டது: 1990 களின் நெருக்கடிகளில் தலையீடுகள், 1998 இல் நீண்டகால தனியார் மூலதன மேலாண்மை மீட்பு உட்பட; 2000-2001 தொழில்நுட்ப குமிழி சரிந்ததை தொடர்ந்து வட்டி குறைப்பு; 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் தொடங்கப்பட்ட வங்கிகளுக்கான மீட்பு நடவடிக்கை மற்றும் சொத்து வாங்குதல் (பணத்தை அச்சிட்டு வெளிவிடல்); மார்ச் 2020 சந்தை முடக்கத்திற்குப் பின்னர் 4 டிரில்லியன் டாலர்கள் தலையீடு என இன்றுவரை தொடர்கிறது, நிதி அமைப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் உத்தரவாதமாக மத்திய வங்கி நுழைந்தது.

1987 வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் மற்றொரு முக்கிய விளைவு, இதுபற்றி மிகவும் குறைவாக அறியப்பட்டிருந்தாலும், றேகன் நிர்வாகத்தின் மார்ச் 1988 இல் நிதியச் சந்தைகளுக்கான ஜனாதிபதி பணிக்குழு, நிறைவேற்று அதிகார உத்தரவின் மூலம் நிறுவப்பட்டது.

பின்னர் வீழ்ச்சியை பாதுகாக்கும் குழு (Plunge Protection Team - PPT) என அழைக்கப்படும் இது, மத்திய வங்கி அதிகாரிகள், நிதியியல் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவைக் கொண்டிருந்தது. இதற்கு ஒருமைப்பாடு, செயற்திறன், ஒழுங்கு மற்றும் எமது நாட்டின் நிதியியல் சந்தைகளின் போட்டித்திறன் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நிர்வகிப்பது போன்ற கடமைகள் ஒப்படைக்கப்பட்டது'.

அதன் செயல்பாடுகள் ஊடகங்களில் சிறிதளவு கவனத்தை ஈர்த்திருந்தாலும், PPT றேகனுக்குப் பின்னர் ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் சந்தித்து செயல்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் நடந்தது போன்ற சந்தையின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகளைக் தடுப்பதற்கு இது தலையிட்டதாகக் கூறப்படுகிறது. S&P 500 குறியீடு வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்றபோது டிசம்பர் 24 அன்று PPT இனது தொலைபேசி கலந்தரையாடலின் பின்னர், கிறிஸ்துமஸ் இடைவேளையின் பின்னர் சந்தை கூர்மையாக மேல்நோக்கி நகர்ந்தது.

ஒருபோதும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத PPT இன் செயல்பாடுகளின் துல்லியமான தன்மை எதுவாக இருந்தாலும், மத்திய வங்கி மற்றும் அடுத்தடுத்து பதவிக்குவந்த நிர்வாகங்களின் நடவடிக்கைகள், அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்தின் தூணாக கருதப்படும் மிகவும் புகழ்பெற்ற 'சுதந்திர சந்தை' உண்மையாகவே கடந்த காலத்திற்குரிய ஒரு விடயமாகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டியது. பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, நிதியியல் அமைப்பின் ஆழமடைந்துவரும் ஸ்திரமற்ற தன்மையினால் அதன் உயிர்வாழ்வை உறுதி செய்ய, அரசாங்கத்தின் நாளாந்த தலையீடு தேவையாக இருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மேலாதிக்கத்திற்கான பிரச்சனை போலவே இதுவும் அதன் இராணுவ மேலாதிக்கத்திற்கான கேள்வியாகின்றது. இது இன்னும் முக்கியமானது என்றும் வாதிடலாம்.

ஆப்கான் தோல்வி அனைத்து அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் ஒரு மூலோபாய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதன் நிதி அமைப்பின் சரிவு, குறுகிய காலத்தில் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் மற்றும் நீண்ட காலத்திற்கு ஆழமான தாக்கங்களையும் ஏற்படுத்தும்.

1971 ஆகஸ்ட் 15உம் 2021 ஆகஸ்ட் 15 உம்

இந்த இரட்டை நெருக்கடிகள் பொதுவான மூலவேர்களை கொண்டவை. இதனை ஆகஸ்ட் 15, 1971 அன்று அமெரிக்க டாலருக்கான தங்க மாற்று முறையை அகற்றுவதற்கான ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் முடிவில் இருந்து கண்டுகொள்ளலாம். இந்த நடவடிக்கை போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஏற்றத்திற்கு முக்கிய பொருளாதார அடித்தளத்தை வழங்கிய 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் நிறுவப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் நாணய அமைப்பு முறையை முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று காபூலின் வீழ்ச்சி சரியாக அந்த நிகழ்வின் 50 வது ஆண்டுவிழாவில் நடந்தது என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்றாகும்.

தங்கத்தின் உதவியுடன் அவுன்ஸ் ஒன்றுக்கு 35 டாலர் என்ற விகிதத்தில் டாலர் தொடர்பாக விலைநிர்ணயிக்கப்பட்ட நாணயங்களின் பெறுமதி நிலையானவை என்பதை அடிப்படையில் பிரெட்டன் வூட்ஸ் நாணய அமைப்பு முறையின் அடித்தளத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய வலிமை காலவரையின்றி தொடரலாம், உலகளாவிய ஏற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் மற்றும் கீன்சியனின் தேவையின் அடிப்படையிலான மேற்பார்வை கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கங்களின் தலையீடுகள் மூலம் எந்தவொரு பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும் என்று கூறப்பட்டது.

ஆனால் வெறும் 27 வருடங்களுக்குப் பின்னர், வரலாற்று அடிப்படையில் கண் இமைக்கும் நேரத்தில், அந்த கட்டுக்கதை அந்த அமைப்பினுள் உள்ளடங்கியிருந்த முரண்பாடுகளால் வெடித்தது.

அமெரிக்க முதலாளித்துவம் அதன் போட்டியாளர்களை, எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி மற்றும் ஜப்பானை புத்துயிர்ப்பு பெறவிட நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் இதன் விளைவாக, இரண்டு தசாப்தங்களுக்குள் அமெரிக்க முதலாளித்துவம் சந்தைகளுக்கான போராட்டத்தில், தான் ஒரு விளிம்பில் இருப்பதை கண்டு கொண்டது. போருக்குப் பிந்தைய உடனடிக் காலத்தில் பாரிய விகிதாசாரத்தை எடுத்துகொண்ட மற்றும் அதன் அமைப்புமுறை சார்ந்து இருந்த அதன் நேர்மறையான வர்த்தக நிலுவை சீராக சரிந்து, பின்னர் 1971 இல் எதிர்மறையாக மாறியது.

1960 களின் பிற்பகுதியில் நெருக்கடி அதிகளவில் வெளிப்படையாகத் தோன்றியதால், அமைப்பிற்கு உந்துதலளிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. பொருளாதார ஏற்றம் அதிகரித்ததால் அதிகரித்து வந்த இலாப விகிதங்கள் கூர்மையாக வீழ்ச்சியடைந்ததுடன், மேலும் அமெரிக்க முதலாளித்துவம் போர்க்குணம்மிக்க தொழிலாள வர்க்க எழுச்சியை எதிர்கொண்டது. இந்த நிக்சன் 5 சதவிகித ஊதிய வரம்பினால் எதிர்கொள்ள முயன்று, அதே தொலைக்காட்சி உரையில் அவர் டாலரின் தங்க மாற்று ஆதரவை அகற்றுவதாக அறிவித்தார்.

டாலர் மீதான முடிவு பணவீக்க சுழற்சியை உருவாக்கியது. இது அனைத்து பிரச்சனைகளையும் ஒருங்கிணைத்ததுடன் மற்றும் மே-ஜூன் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தில் தொடங்கி பல முக்கிய முதலாளித்துவ நாடுகளில் ஏற்கனவே சாத்தியமான புரட்சிகர போராட்ட அலைக்கு உந்துதலளிக்க உதவியது.

ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்கத் தலைமைகளின் நேரடி ஒத்துழைப்புடனும், ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்திலிருந்து உடைத்துக்கொண்டுபோன பப்லோவாதத் திருத்தல்வாத சக்திகளின் முக்கிய உதவியுடனும், ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை ஒடுக்க முடிந்தது. இதன் மிகவும் கொடூரமான உதாரணமாக இருந்தது சிலியாகும். அங்கு சிஐஏ இனால் உதவியளிக்கப்பட்டு அலெண்டேயின் அரசாங்கத்தை கவிழ்த்து மற்றும் பினோசேயின் இராணுவ சர்வாதிகாரத்தை செப்டம்பர் 1973 இல் நிறுவியது.

அரசியல் ஸ்திரத்தன்மை விரைவில் மீட்டமைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொருளாதார முரண்பாடுகள் தீவிரமடைந்தன. அவை எல்லாவற்றிற்கும் மேலாக அதிக பணவீக்கம், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் குறைந்த பொருளாதார வளர்ச்சியினால் குறிப்பிடப்பட்ட 1970 களில் தேக்கவீக்கநிலையினால் (stagflation) எடுத்துக்காட்டப்பட்டன.

தொழிலாள வர்க்கத்தின் தலைமைகளால் நடத்தப்பட்ட துரோகங்களின் உதவியில் தங்கியிருந்து ஆளும் வர்க்கங்கள் தாக்குதலை நடத்தின. தொழில்துறையின் குறைந்த இலாபகரமான பிரிவுகளை அழிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்டது. 1981 இல் றேகன் நிர்வாகத்தால் அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தை அடித்து நொறுக்கி மற்றும் அவர்களின் தொழிற்சங்கம் PATCO அழிக்கப்பட்டமை இதன் முன்னணியில் இருந்தது. 1984-85 இல் தாட்சர் அரசாங்கத்தின் கீழ் நிலக்கரி தொழிலாளர்களுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் வருடகால உள்நாட்டு யுத்தம் இதனை பின்தொடர்ந்தது.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், ஒரு புதிய பொருளாதார ஒழுங்கு நிறுவப்பட்டது. இதில் இலாபக் குவிப்பு, பெருகிய முறையில் தொழில்துறையின் விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டல்லாமல் மாறாக நிதிய ஊகங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இந்த புதிய அமைப்புமுறையின் 'வீரர்கள்' கடந்தகால தொழில்துறை பெருமுதலாளிகள் அல்ல, ஆனால் குப்பை பங்குப்பத்திர மன்னர் மைக்கல் மில்கன் போன்ற குற்றவியல் மற்றும் அரை குற்றவியல் நிதியியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். இவர்கள் சொத்துக்களை பறிக்கும் நிறுவனங்களுக்கான வழிகளை வகுத்து, 1982 ஆம் ஆண்டு தொடங்கி பங்குச் சந்தையில் உயர்வுக்கு மத்தியில் பாரிய இலாப திரட்சிக்கு வழிவகுத்தனர்.

ஆனால் இந்த கடுதாசி கட்டுமானத்தின் அடிப்படையிலான நிதி நிறுவனம் ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருந்தமை, அக்டோபர் 1987 இன் உடைவில் தெரியவந்தது. பின்னர் ஒரு தற்செயலான நிகழ்வு வந்தது.

1920களில் சோவியத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை அபகரித்ததிலிருந்து உலக முதலாளித்துவத்திற்கு மிக முக்கியமான பாதுகாவலானாக இருந்த சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதல்முதலான தொழிலாளர்களின் அரசில் எஞ்சியதை கலைத்து முதலாளித்துவத்தை மறுபுனருத்தாரணம் செய்ததன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு அதன் இறுதிச் சேவையை செய்தது.

தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற பிற்போக்கு தேசியவாத கோட்பாடு உருவாக்கிய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளால் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் இயக்கத்தை எதிர்கொண்டதோடு, தான் தூக்கியெறியப்படலாம் என்ற அச்சத்தில், ஆளும் ஸ்ராலினிச ஆட்சி ஒரு முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டு தன்னை சொத்துக்களை வைத்திருக்கும் முதலாளித்துவ வர்க்கமாக மாற்றிக்கொண்டது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, அரசியல் தலைவர்கள், ஊடக பண்டிதர்கள், குறுகிய பார்வை கொண்ட கல்வியாளர்கள் மற்றும் 'இடது' அரசியல் போக்குகள் என்று அழைக்கப்படும் அனைத்து வகையறாக்களினாலும் முதலாளித்துவத்தின் சக்தியையும் 'சுதந்திர சந்தையின்' வெற்றியையும் நிரூபிக்கின்றது என்று புகழப்பட்டது.

பூகோளமயமாக்கமும் தேசிய அரசமைப்பு முறையின் நெருக்கடியும்

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவின் மீதான இந்த நிகழ்வின் பாரிய தாக்கத்தை அங்கீகரித்தபோதிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, அது முதலாளித்துவத்தின் புதிய பிறப்பை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என வலியுறுத்தியது. மாறாக, அது அதன் உலகளாவிய பொருளாதார ஒழுங்கின் ஆழ்ந்த நெருக்கடியைக் குறிக்கிறது என விளக்கியது.

ஏனெனில், இறுதி ஆய்வில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது, 1971 இனைத் தொடர்ந்து அதிக வேகத்தில் முன்னேறிய பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வளர்ச்சிக்கும் தேசிய அரசமைப்பு முறைக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாட்டின் ஆரம்ப வெளிப்பாடாகும். இந்த நெருக்கடி ஸ்ராலினிச ஆட்சிகளில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது. ஏனெனில் அவை நேரடியாக ஒரு தேசியவாத பொருளாதார வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

எவ்வாறாயினும், உடனடி காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் சீன மாவோயிச-ஸ்ராலினிச ஆட்சி ஒரு முதலாளித்துவ அடிப்படையில் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை நோக்கி முழு முனைப்புடன் செல்ல முடிவெடுத்தமை பல்வேறு மட்டங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்புகளையும் நன்மைகளையும் வழங்கியது.

தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப குழப்பமும் நோக்குநிலையின்மையும் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதில் முக்கிய உதவியாக இருந்தது. வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை குறிகாட்டியான வேலைநிறுத்தங்களின் அளவுகள் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் மிகக்குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தன.

அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய புவிசார் அரசியல் மூலோபாயத்திற்கான சாத்தியங்களை வழங்கியது.

அமெரிக்க தூதரகத்தின் கூரையிலிருந்து வானூர்திகளில் வெளியேற்றப்பட்ட படங்களில் வெளிப்படுத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டு சைகோனில் நடந்த நிகழ்வுகளில் இருந்த 'வியட்நாம் நோய்க்குறியை அகற்ற' அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்றது. உலக அரசியலில் இருந்து சோவியத் ஒன்றியம் அகன்றமை, அதன் தற்போதைய பொருளாதார சரிவை எதிர்கொள்வதற்கு இராணுவ வழிமுறைகளில் இறங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது.

ஈராக் குவைத்தை கைப்பற்றியது என்ற போலிக்காரணத்துடன் 1990-91 இல் முதல் வளைகுடாப் போர் தொடங்கப்பட்டது. இது, அமெரிக்கா அதன் இராணுவ வலிமையின் அடிப்படையில் ஒரு 'புதிய உலக ஒழுங்கை' உருவாக்குகிறது என்ற அடிப்படையில் நிறுவப்பட்டது.

இது தொடர்ந்த முடிவில்லாத போர்களுக்கு முன்னுரையாக இருந்தது. கப்பல் ஏவுகணைகள், ஆளில்லா விமான ட்ரோன்கள், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் தேவையான இடங்களில் துருப்புக்களின் தலையீடு ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் எனப்பட்டது.

'நிதியியல் பொறியியல் முறையின்' (financial engineering) வளர்ச்சியுடன், அதன் பங்குச் சந்தையின் முன்னொருபோதுமில்லாது உயர்ந்த உயர்வு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியுடன், உலகச் சந்தைகளில் டாலருக்கு இருந்த முக்கிய இடத்துடன், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார சக்தியாக தன்னை நிலைநிறுத்துமுடியும் என்ற நம்பிக்கையுடன் இராணுவவாதம் இணைக்கப்பட்டது.

இங்கேயும், சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் சீன ஆட்சியின் நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா கணிசமான உதவியைப் பெற்றது. சோவியத் ஒன்றியத்தை கலைத்தல் மற்றும் சீனாவில் முதலாளித்துவத்தை கட்டவிழ்த்து விடுதல், இந்தியா மற்றும் பிற முன்னாள் காலனித்துவ நாடுகளில் தேசிய அடிப்படையிலான பொருளாதார திட்டங்களின் அடுத்தடுத்த சரிவுடன் இணைந்து பெரும் நிதிய விளைவுகளை ஏற்படுத்தியது.

நிதியச் சந்தைகளை அதிக உயரத்திற்கு அனுப்பும் 1990கள் மற்றும் தற்போதைய நூற்றாண்டு வரை மத்திய வங்கி குறைந்த வட்டி விகித முறையைத் தொடர ஒரு முக்கிய காரணங்களில் ஒன்று பணவீக்கம் இல்லாததாகும். சீனா மற்றும் பல நாடுகளில் மலிவான உழைப்பை சுரண்டுவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களை முக்கிய முதலாளித்துவ பெருநிறுவனங்கள் மலிவாக பெறுவதே இதற்குக் காரணமாகும்.

இங்கும் இரண்டு இணையான நிகழ்வுகள் இருந்தன. இராணுவவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, சர்வதேச சட்டத்தை முழுமையாகக் கைவிடுவதன் மூலமும், வெளிப்படையான குற்றத்திற்குள் இறங்குவதாலும் குறிக்கப்பட்டது. 2003 இல் 'பேரழிவு ஆயுதங்கள்' என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஈராக் படையெடுப்பு இதற்கான மிக மோசமான உதாரணமாகும்.

நிதிய உலகில், நிதியியல் விவேகத்தின் முந்தைய அனைத்து விதிமுறைகளும், ஒரு குற்றவியல் சாசனத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மீறிய ஊகவாணிப வெறிக்கிடையில் ஒதுக்கித்தள்ளி வைக்கப்பட்டன. ஒருவர் என்ரோன் Enron விவகாரத்தை நினைவுகூர வேண்டும். அரசியலிலும் அதே செயல்முறை, நிதிய பாதாள உலகத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு எழுந்ததில் பிரதிபலித்தது.

ஆனால் இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி ஒரு புதிய கட்டத்தில் நுழைந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.

அவரது புகழ்பெற்ற டூரிங்கிற்கு மறுப்பு என்ற பிரசுரத்தில் ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் நேரடியாக ஒய்கென் டூரிங் முன்வைத்த 'பலம் தொடர்பான தத்துவத்தை' எடுத்துக்கொண்டார். அது, வரலாற்று வளர்ச்சியின் உந்து சக்தியாக இருந்தது, அதற்கு அடிப்படையாக இருந்த பொருளாதார வளர்ச்சி அல்ல, இராணுவ வளர்ச்சியே என்பதை அடிப்படையாகக் கொண்டது.

முதலாளித்துவத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலாளித்துவ சமுதாயத்தை 'அழிவு அல்லது புரட்சியை' நோக்கி செலுத்துவதாக ஏங்கெல்ஸ் விளக்கினார். ஆனால், 'நீராவி இயந்திரத்தின் பொருளாதார விளைவுகள் மற்றும் அதனால் இயக்கப்படும் நவீன இயந்திரங்கள், இன்றைய நாட்களின் உலக வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் கடன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் சரிந்துவரும் பொருளாதார சூழ்நிலையிலிருந்து க்ரூப் சுடுகலன்கள் மற்றும் மவுசர் துப்பாக்கிகளால் காப்பாற்றும்படி பலத்திற்கு அழைப்புவிடலாம் என்று முதலாளித்துவம் நம்பினால் அது வெறும் மாயையாகவே இருக்கும்”.

இராணுவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியிலும் மற்றும் இன்றைய மிகவும் சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருளாதார மற்றும் நிதி செயல்முறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் தேவையான திருத்தங்களை செய்தால், ஏங்கெல்ஸின் கருத்துக்கள் அவற்றின் பொருத்தத்தை இன்றும் இழக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் இராணுவ தோல்விக்கு மத்தியில், 2008 மற்றும் 2020 ஆம் ஆண்டின் பாரிய பிணையெடுப்புகளால் திசைதிருப்பப்பட்ட நிதி வீழ்ச்சியின் அறிகுறிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஊகத்தின் அளவு பற்றிய செய்திகளைக் கொண்டுவருகிறது.

வோல் ஸ்ட்ரீட்டில் பாரிய அதிகரிப்பினதும் மற்றும் கட்டுக்கடங்கா மின்னணு நாணய (cryptocurrency) ஊகம் மற்றும் வீட்டின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இந்த வாரம் ஃபைனான்சியல் டைம்ஸ் 'ஒப்பந்தம் செய்யும் வெறித்தனமான கோடைக்காலம்' என அழைக்கப்பட்ட அறிக்கை இந்த ஆண்டு அதிக நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையை சாதனை படைத்துள்ளதை காட்டுகின்றது. அது 2007ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடிக்கு முன்னால் அது 4.3 டிரில்லியன் டாலர்களை தாண்டும் என உறுதியளித்தது. இந்த புதிய இணைப்பு வெறி குறைந்த கடன் செலவுகள் மற்றும் தனியார் முதலீட்டு குழுமங்களின் கஜானாவில் உள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களால் தூண்டப்பட்டது.

நிதிய வெறியின் மற்றொரு அறிகுறியாக, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஊக-தர அமெரிக்க பெருநிறுவன பத்திரங்களின் இலாபம் 3.53 சதவிகிதமாகக் குறைந்ததாகக் கூறியது. இது கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு எந்த நேரத்திலும் அடைந்ததை விட ஒரு சதவிகிதம் குறைவாகும். கடந்த வாரம், ஐரோப்பிய பத்திரங்கள் மற்றும் சந்தைகள் ஆணையம் (ESMA) ஒரு முக்கிய அறிக்கையை அளித்தது: 'நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு மேலும் -சாத்தியமான குறிப்பிடத்தக்க- சந்தை திருத்தங்களின் ESMA பணம் முழுவதும் உள்ள அதிகூடிய அபாயத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” என அதில் குறிப்பிட்டது.

இந்த குறிகாட்டிகள் ஏனைய பலவற்றோடு சேர்ந்து, ஒரு பெரிய நெருக்கடியின் வெடிப்பை சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் மாறுதலடையும் நிலைமைகளின் கீழ் வளரும் ஒன்றாகும்.

மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பௌல் மற்றும் பிற நிதி அதிகாரிகளின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், தற்போதைய பணவீக்கம், தற்காலிகமாக அமெரிக்காவில் 4 முதல் 5 சதவிகிதம் மற்றும் ஐரோப்பாவில் 3 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து வருவது பற்றி கவலைகள் அதிகரித்து வருகின்றன. அப்படியானால், கடந்த மூன்று தசாப்தங்களாக நிதியச் சந்தைகளை தக்கவைத்துக்கொண்ட மிகக் குறைந்த வட்டி விகித முறையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றை அது அகற்றும்.

தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கான போராட்டம்

நிதியச் சந்தைகளுக்கான இன்னும் முக்கிய விடயமாக இருப்பது, அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்கப் போர்க்குணமும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான அதன் நேரடி மோதலுமாகும். இது ஊகவாணிப வெறிக்கான முக்கிய காரணமாக உள்ள வர்க்கப் போராட்டத்தை அடக்குவதை தீர்க்கமாக முடிவுக்கு கொண்டுவர அச்சுறுத்துகிறது.

முதலாளித்துவத்தின் அனைத்து பொருளாதார முரண்பாடுகளும் இறுதியில் வர்க்கப் போராட்டத்தில் தீர்க்கப்படுகின்றன என்று மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கம் தற்போதைய சூழ்நிலையின் இருப்புநிலைக் குறிப்பை வரைந்து தேவையான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுகையில் பைடென் போர் எதிர்ப்பு உணர்வுக்கு வேண்டுகோள் விடுத்தாலும், இது போரின் ஆபத்து குறைந்துவிட்டது என்று அர்த்தப்படுத்தாது. மாறாக, அது அதிகரித்து வருகிறது. ஏனென்றால், பைடென் தெளிவுபடுத்தியபடி, ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறுதல், சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் பொருளாதார உயர்வு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகவும், அதனை எந்த விலையை செலுத்தியாவது எதிர்க்கப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.

கோவிட்-19 நெருக்கடி, ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளும் என்ற எச்சரிக்கையை வழங்கியுள்ளது. இது அதே இரக்கமற்ற தன்மையுடன் பதிலளிக்கும். இலாபங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் 'ஆரோக்கியம்' வாழ்க்கை உட்பட எல்லாவற்றையும் விட முன்னுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆளும் வர்க்க மூலோபாயம் பெருகிய முறையில் நம்பிக்கையற்றதாகி வருகிறது. ஆனால் அது சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி வடிவங்கள் உட்பட தேவையான எந்த வகையிலும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் இலாப அமைப்பின் அதிகரித்து வரும் நெருக்கடியை திணிக்க ஒரு மூலோபாயத்தைக் கொண்டுள்ளது.

அதன்படி, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீன முன்னோக்கை உருவாக்கி, தொழிற்சங்க அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தின் மூலம், அதன் இறுதி முடிவுவரை அபிவிருத்தி செய்யவேண்டும். இந்த மூலோபாயத்தின் மத்தியில் இருப்பது, காலாவதியான மற்றும் அழிவுகரமான முதலாளித்துவ அமைப்பை தூக்கிவீசி, சர்வதேச அளவில் சோசலிச அடித்தளங்களில் சமூகத்தின் மறுகட்டமைப்பை தொடங்குவதற்காக அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளும் அரசியல் போராட்டமாகும்.

Loading