முன்னோக்கு

9/11 சம்பவங்கள் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" இருந்து 20 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 11, 2001 கொடூர தாக்குதல்களின் 20 ஆம் ஆண்டை இன்று குறிக்கிறது, அந்த சம்பவங்களின் போது கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியூ யோர்க் நகர உலக வர்த்தக மையத்தின் மீது மோதி வெடிக்கச் செய்யப்பட்டன, மற்றொன்று பென்டகன் மீதும் நான்காவது விமானம் கடத்தப்பட்டவர்களிடம் இருந்து கட்டுப்பாட்டை மீட்கப் பயணிகள் போராடியதில் பென்சில்வேனியாவின் வயல்வெளியிலும் மோதியது. அந்த சம்பவங்களில் அண்மித்து 3,000 பேர் கொல்லப்பட்டனர், இது உள்நாட்டு போருக்குப் பின்னர் அமெரிக்க நிலத்தில் ஒரே நாளில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

மீண்டுமொருமுறை, ஊடகங்கள் அமெரிக்க மற்றும் உலக மக்கள் மீது 9/11 கொடூர குற்றம் மற்றும் துயரத்தின் கொடூரமான படங்களைப் பொழிந்து வருகின்றன, அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா பின்வாங்கல் மற்றும் உண்மையில் ஒட்டுமொத்த 20 ஆண்டுகால 'உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்' படுதோல்விக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஊகித்து பேச பிரபல பேச்சாளர்களை அழைத்துள்ளன.

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 175 உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் மோதியது (ஆதாரம்: Wikimedia Commons)

அவை 'எல்லாவற்றையும் மாற்றிவிட்டதாக' இடைவிடாமல் நமக்கு கூறப்படும் இந்த 9/11 சம்பவங்கள் பற்றி மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவற்றில் பெரும்பாலானவை இன்னும் அறியப்படாமலேயே உள்ளதுடன் அவை எப்படி நடந்தன என்பதும் இதுவரையில் மர்மமாக உள்ளன.

அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தரப்பில் ஏற்பட்ட 'கற்பனையின் தோல்வி' இன் விளைவாகவே 9/11 நிகழ்ந்தது என்ற உத்தியோகபூர்வ கதை, முரண்பாடுகளாலும், செய்ய வேண்டியதைச் செய்யாததாலும் மற்றும் மூடிமறைப்புகளாலும் வெடித்து சிதைந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள ஒருவர் சதிக் கோட்பாட்டாளராகவோ அல்லது அந்த இரட்டைக் கோபுரங்களில் யாரோ வெடிப்பொருட்களை வைத்திருந்தார் என்று நம்புவராகவோ இருக்க வேண்டியதில்லை.

அந்த தாக்குதலுடன் பல்வேறு விதத்தில் தொடர்புடைய சவூதி முடியாட்சி சம்பந்தப்பட்ட தகவல்களை அங்கே அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள் அசாதாரணமான அளவுக்கு இழுத்தடித்து இரகசியமாக வைத்துள்ள நிலையில், அவற்றை வெளியிடுமாறு அத்தாக்குதல்களில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் 9/11 இல் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆயிரக் கணக்கானவர்கள் கோரும் கோரிக்கைகளுக்கு விடையிறுத்து, இந்த நினைவுதினத்திற்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஒரு நிர்வாக ஆணை வெளியிட்டார். “அந்த தாக்குதல்கள் பற்றி அவர்கள் அரசாங்கத்திற்கு என்ன தெரியும் என்பதைக் குறித்து ஒரு முழுமையான சித்திரத்தைக் கோர அமெரிக்க மக்களுக்கு முழு தகுதி உள்ளது,” என்று பைடென் குறிப்பிட்டாலும், அந்த உத்தரவு 'வெளியிடுவதைக் குறித்து மறுபரிசீலனை' செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது, இது 'தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக' நீதித்துறை, CIA, FBI மற்றும் பிற முகமைகள் தகவலை இரகசியமாக வைக்க அனுமதிக்கிறது.

அந்த 19 கடத்தல்காரர்களில் 15 பேர் சவூதியர்கள் என்பது நன்கறியப்பட்டதாகும், அதேபோல அல் கொய்தாவின் ஒசாமா பின் லேடன், 1980 களில் CIA ஆப்கானிஸ்தானில் நடத்திய பினாமிப் போரில் அதன் முன்னாள் கூட்டாளியாக இருந்தவர். சவூதி அதிகாரிகள், இராஜாங்க தூதர்கள் மற்றும் உளவுத்துறை முகவர்களும் விமானக் கடத்தல்காரர்களுக்கு நிதியளிப்பதிலும், விமானப் பயிற்சிப் பள்ளிகளில் அவர்களைச் சேர்த்து விட்டதிலும் மற்றும் சான் டியாகோ முஸ்லீம் சமூகத்திதல் உள்ள முக்கிய FBI உளவாளி வீடு உட்பட அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியா அரபு உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய கூட்டாளியாக இருப்பதால் மட்டுமல்ல, மாறாக சவூதி மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்கு இடையிலான நெருக்கமான உறவுகளாலும் அந்த சம்பவத்தில் சவூதியின் தொடர்பு மிகவும் முக்கியமானதாக ஆகிவிடுகிறது, கடத்தல்காரர்களில் பலர் CIA இன் உளவுபார்ப்பின் கீழ் இருந்தனர் என்பதோடு, அவர்களில் பலர் அமெரிக்காவில் சுதந்திரமாக நுழைந்து சுற்றித் திரிந்த நிலையில் FBI இன் கண்காணிப்பு பட்டியல்களில் இருந்தனர் என்ற நிலையில், FBI, CIA மற்றும் பிற முகமைகளில் ஒருவருக்கு கூட அந்த கடத்தல்காரர்களின் திட்டங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை என்பது எப்படி சாத்தியமாகும் என்ற சிக்கலான கேள்விகள் எழுகின்றன.

இது அமெரிக்க வரலாற்றிலேயே 'மிகப் பெரிய உளவுத்துறை தோல்வியாக' விவரிக்கப்படும் நிலையில், வெளிப்படையான கேள்வி என்னவென்றால், சிஐஏ இயக்குனர் முதல் விமானக் கடத்தல்காரர்களுக்கு விசா வழங்கிய தூதரக முகவர்கள் வரை ஏன் ஒரேயொரு அதிகாரி கூட 9/11 சம்பவங்களுக்குப் பின்னர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. பேர்ல் துறைமுகம் மீதான ஜப்பானின் தாக்குதலை அடுத்து, மூத்த அமெரிக்க தளபதிகள் அவர்கள் கட்டளையகங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் இராணுவத்தில் இருந்தே கூட வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து போதுமானளவுக்கு எச்சரிக்கைகள் இருந்த போதும் மற்றும் அதன் குற்றவாளிகள் பலர் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்த போதினும், 9/11 சம்பவங்கள் நடக்க எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதன் மீது ஒரு நம்பகமான தீவிர விசாரணை ஒருபோதும் நடத்தப்படவில்லை. இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் மிகவும் ஆக்கிரோஷமாக பாதுகாத்து வரும் இரகசியங்களைப் பைடென் நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்க அங்கே எந்த காரணமும் இல்லை.

9/11 தாக்குதல்களின் துல்லியமான தோற்றுவாய் எதுவாக இருந்தாலும், அவை உடனடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால திட்டநிரலை கூர்மையாக தீவிரப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 1991 இல் சோவியத் ஒன்றியம் மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்ட பின்னர், உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க வீழ்ச்சியை ஈடுகட்டவும் மற்றும் உலக அரசியலை மறுஒழுங்கு செய்யவும் அதன் சவால் செய்ய முடியாத இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் தீர்மானகரமாக இருந்தது.

9/11 பயங்கரவாத தாக்குதல்கள் போர் அறிவிப்புக்கு ஒரு சாக்குபோக்கை வழங்கியது என்பது மட்டுமல்ல, மாறாக மக்களை அச்சுறுத்துவதற்கும் குழப்புவதற்கும் மற்றும் மக்களின் பரந்த போர்-எதிர்ப்பு உணர்வுகளை நசுக்குவதற்கும் ஒரு வழிவகையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஊடகங்கள் அவற்றின் பங்கிற்கு, மேற்கொண்டு கூடுதல் பயங்கரவாத நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற அச்சுறுத்தலுடன் மக்களை இடைவிடாமல் மிரட்டிக் கொண்டிருந்தன.

ஒரு சில வாரங்களுக்குள், அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அதன் மக்கள் மீது ஆயிரக்கணக்கான டன் குண்டுகளை வீசியதுடன், பிடிபட்ட ஆயிரக்கணக்கான ஆப்கானிய போராளிகளைப் படுகொலை செய்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், அது 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' பற்றியும் சதாம் உசேனுக்கும் அல் கொய்தாவுக்கும் இடையே இருந்திராத தொடர்புகளைப் பற்றியும் கூறிய பொய்களைக் கொண்டு ஈராக்கிற்கு எதிராக அது தொடங்கிய இரண்டாவது போரை நியாயப்படுத்தியது.

இந்தப் போர்கள் வாஷிங்டன் கூறியது போல அமெரிக்க மக்களைப் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவின் முக்கிய எரிசக்தி உற்பத்தி பிராந்தியங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

9/11 க்குப் பின்னர் உடனடியாக இராணுவப் படையைப் பயன்படுத்துவதை அங்கீகரித்து அது கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அமெரிக்க மக்களிடையே சிறிதளவும் ஒப்புதலின்றி, அமெரிக்க பாதுகாப்பு அல்லது பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எந்த நாட்டிற்கு எதிராகவும் 'முன்கூட்டிய' போர்களைத் தொடங்க காங்கிரஸ் சபை அமெரிக்க ஜனாதிபதிக்கு முழுமையாக அதிகாரம் வழங்கியது.

ஒபாமா நிர்வாகம் லிபியாவிலும் பின்னர் சிரியாவிலும் ஆட்சி மாற்றத்திற்கான புதிய போர்களை தொடங்கிய நிலையில், 'பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்' என்ற சாக்குப்போக்கு இன்னும் அதிக அபத்தமானதாக மாறியது. அவ்விரு நாடுகளிலும், அல் கொய்தாவுடன் தொடர்புடைய போராளிகள் வாஷிங்டனின் பினாமி தரைப்படைகளாக செயல்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த தாக்குதல்களை உள்ளடக்கிய நீண்ட கால மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. இதில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, தேசப் பாதுகாப்புச் சட்டம், ஒட்டுமொத்த மக்கள் மீதும் உளவு பார்த்தல், உத்தரவாணையின்றி சோதனை நடவடிக்கைகள், குற்றச்சாட்டுக்கள் இல்லாத தடுப்புக்காவல்கள் மற்றும் 'அசாதாரண கடத்தல்கள்' ஆகியவையும் உள்ளடங்கும். சித்திரவதை முறைகள் வெள்ளை மாளிகையில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு, குவாண்டனாமோவில் இருந்து அபு கிரைப், பக்ராம் மற்றும் உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் சிஐஏ 'இருட்டு அறைகள்' வரையில் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஒபாமாவின் கீழ், படுகொலைகளை அரசு கொள்கையாக நிறுவனமயப்படுத்திய வெள்ளை மாளிகை, எந்த விளக்கமும் இல்லாமல், மிகக் குறைந்த குற்றச்சாட்டுக்கள் அல்லது உரிய விசாரணை வழிமுறைகள் இல்லாமல் உலகெங்கிலும், அமெரிக்க குடிமக்கள் உட்பட, 'எதிரிப் போராளிகள்' என்று குறிப்பிடப்படுபவர்களைக் கொலை செய்யும் அதிகாரத்தைத் தனக்குத்தானே வழங்கிக் கொண்டது. இந்த 'இலக்கு வைக்கப்பட்ட கொலைகளில்' பல அப்பாவி மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசின் பொலிஸ் அதிகாரங்களில் செய்யப்பட்ட இந்த பாரியளவிலான அதிகரிப்பு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டு, அமெரிக்க வரலாற்றிலேயே சமூக சமத்துவமின்மை மிக வேகமாக அதிகரித்து, இயல்பாகவே ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குப் பொருந்தாத மட்டங்களை எட்டியதற்கு மத்தியில் கொண்டு வரப்பட்டன.

9/11 ஐ சம்பவங்களைத் தொடர்ந்து 20 ஆண்டுகால தடையற்ற போரின் விளைவுகள் என்ன? அமெரிக்க தாக்குதல்களுக்கு உள்ளான ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, யேமன் மற்றும் பிற நாடுகளில் சுமார் ஒன்று முதல் இரண்டு மில்லியன் வரையிலான மக்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மில்லியன்களாக இருந்தன, பல மில்லியன் கணக்கானவர்கள் போரால் நாசமாக்கப்பட்ட சமூகங்களில் இருந்து அகதிகளாக மாற்றப்பட்டன. சுமார் 7,000 அமெரிக்க துருப்புக்களும் இவர்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட இதை விட இரண்டு மடங்கு இராணுவ ஒப்பந்தக்காரர்களோடு கொல்லப்பட்டனர், அதேவேளையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர், இன்னும் பலர் அந்த அருவருக்கத்தக்க காலனித்துவ பாணியிலான போர்களில் பங்கேற்றதால் உளவியல்ரீதியான பாதிப்புக்களை அனுபவித்தனர்.

இந்தப் போர்களின் நிதிச் செலவுகளோ அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் முடிவை அறிவிக்கும் அவரது ஆகஸ்ட் 30 உரையில் கூறுகையில், 'அமெரிக்க மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று கூறியதுடன், போர் நலன்களுக்காக மக்களுக்கு ஒரே சீராக பொய்கள் உணவூட்டப்பட்டுள்ளன என்பதை சுற்றி வளைத்து ஒப்புக் கொண்டார். ஆப்கானிஸ்தான் போருக்கு மட்டும் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ஒவ்வொரு நாளும் 300 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரௌன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்ட மதிப்பீடு, மூத்த இராணுவப் படையினருக்கான நீண்டகால கவனிப்பு உட்பட 9/11 போர்களுக்குப் பிந்தைய மொத்த செலவுகளை சுமார் 8 ட்ரில்லியன் டாலராக குறிப்பிடுகிறது. இதில், அமெரிக்க அரசு அதன் இராணுவ சாகசங்களுக்கு நிதியளிப்பதற்காக பெற்ற டிரில்லியன் கணக்கான டாலர் கூடுதல் கடன்கள் உள்ளடங்கவில்லை. மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று ஊனப்படுத்தியதற்குப் பதிலாக, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு இந்தளவுக்கான பெரும் தொகைகள் செலவிடப்பட்டிருந்தால் அது என்ன சாதித்திருக்கும்?

20 ஆண்டுகால போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன சாதித்துள்ளது? எங்குமே அதன் நோக்கங்களை அது கைவரப் பெறவில்லை. அது மொத்த சமூகங்களையும் வெறும் இடிபாடுகளாக ஆக்கிய நிலையில், அது தாக்கிய எந்த நாடுகளிலும் நம்பகமான கைப்பாவை ஆட்சிகளை அதனால் திணிக்க இயலவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தலிபான் காபூலை எடுத்துக் கொண்ட நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியமை ஓர் அவமானகரமான இராணுவத் தோல்வி மட்டுமல்ல, மாறாக பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்ட மொத்த உலகளாவிய அமெரிக்க மூலோபாயத்திற்கும் ஏற்பட்ட சின்னாபின்னமாக பின்னடைவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது காபூலில் இருந்து வெளியேறியதன் மீது அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள் நிலவும் அரைவாசி-வெறித்தனத்தை விளக்குகிறது.

இத்தகைய வரலாற்று ரீதியான தோல்வியை, தவறான இராணுவ கணக்கீடுகள் அல்லது உளவுத்துறை தோல்விகளைக் கொண்டு விளக்க முடியாது, மாறாக அது ஒட்டுமொத்த அமெரிக்க முதலாளித்துவ அமைப்புமுறையையும் பீடித்துள்ள ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை வெளிப்படுத்துகிறது.

9/11 சம்பவங்கள் மற்றும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஆகியவற்றின் சமூக மற்றும் அரசியல் மரபுகள் நீண்டகால தாக்கம் கொண்டுள்ளன. வெள்ளை மாளிகை முதல் காங்கிரஸ், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் என இரண்டு கட்சிகள், இந்த போர்களை விற்றுத் தள்ளிய ஊடகங்கள், அவற்றிலிருந்து இலாபமீட்டிய நிதி உயரடுக்கு, அவர்களுக்கு அனுதாபம் காட்டிய கல்வித்துறைசார் போலி-இடது உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகள் வரை அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பையும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போர்கள் மதிப்பிழக்கச் செய்துள்ளன.

மாஃபியா முதலாளிகள் போன்ற அவர்களின் எதிரிகளை 'களைவது' பற்றி அமெரிக்க ஜனாதிபதிகள் பேசிக் கொண்டிருந்தாலும், வழமையான சித்திரவதை மற்றும் படுகொலைகள் உட்பட வெளிநாடுகளில் கட்டுப்பாடற்ற வன்முறை, உள்நாட்டில் அமெரிக்க சமூகத்தை மிருகத்தனமாக நடத்துவதில் பங்களித்துள்ளது, வழக்கமான பாரிய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் ஏனைய வன்முறை வெடிப்புகளால் இது குறிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒரு நபர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக்கூடிய மற்றும் ஓர் அமெரிக்க தேர்தலை கவிழ்க்க ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி செய்யக்கூடிய அரசியல் சூழலை உருவாக்குவதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 20 ஆண்டு கால பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் படுதோல்வி கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அதன் கொலைபாதக கொள்கையுடன் இணைந்துள்ளது, இலாப நலன்களுக்காக பொது சுகாதாரத்தை அடிபணிய செய்ததன் காரணமாக இது தடுத்திருக்ககூடிய நூறாயிரக் கணக்கானோரின் மரணங்களில் போய் முடிந்துள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஈராக்கியர்கள் அல்லது ஆப்கானியர்களின் உயிரை விட அதிகமாக ஒன்றும் அமெரிக்கர்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் போரில் அவமானப்பட்டுள்ளது, ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் நூறாயிரக்கணக்கான முற்றிலும் தேவையற்ற கோவிட் மரணங்களை உருவாக்கியுள்ளன, இரண்டு கடற்கரைகள் வெள்ளத்தால் சூறையாடப்பட்டுள்ள நிலையில், தீயினால் மேற்கு சூழப்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கொள்கை எதுவும் அதனிடம் இல்லை. இதற்கிடையே, ஊக மூலதனத்தில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அச்சிட்டு, அவற்றை பெரும் செல்வந்தர்களுக்கு ஒப்படைப்பதை அடிப்படையாகக் கொண்ட அதிகரித்தளவில் நிதிமயமாக்கப்பட்ட ஒரு பொருளாதாரம் ஒரு பொருளாதார பேரழிவுக்குத் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த அபிவிருத்திகளை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், அவை ஆழமான புரட்சிகர தாக்கங்களைக் கொண்டுள்ளன.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்' படுதோல்வி அமெரிக்க இராணுவவாதத்தின் முடிவை சமிக்ஞை செய்யவில்லை. மாறாக, பைடெனே தெளிவுபடுத்தியவாறு, ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்குவது 'மூலோபாய போட்டியாளர்கள்' அல்லது 'வல்லரசு' போட்டியாளர்கள் என்று பென்டகன் விவரிக்கும், அணுஆயுதம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யாவுடனான மோதலை நோக்கி அமெரிக்க இராணுவ பலத்தை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே மிக முக்கிய பணியாகும். கடந்த 20 ஆண்டுகள் நமக்கு ஏதாவது கற்றுக் கொடுத்திருக்கிறது என்றால், அது இத்தகைய இயக்கம் ஜனநாயகக் கட்சியையோ அல்லது அமெரிக்க சமூகத்தின் தற்போதைய அமைப்புகளையோ அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பதையே கற்றுக் கொடுத்துள்ளது. அது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்ட, சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும்.

Loading