முன்னோக்கு

அமெரிக்க முதலாளித்துவம் பாரியளவிலான மரணத்தை வழமையாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தோன்றி இருபத்தி இரண்டு மாதங்களாகியும் தொற்றுநோய் முடிவதற்கான அறிகுறி எதுவும் இல்லை, அது தொடர்ந்து ஏராளமானோரை கொல்கிறது.

டெட்ராய்டில் உள்ள பெல்லி தீவில் ஆகஸ்ட் 31, 2020, திங்களன்று, டெட்ராய்டின் கோவிட்-19 பாதிப்பாளர்களின் கடந்தகால புகைப்படங்களுடன் வாகன ஊர்வலம் நடக்கிறது. (AP Photo/Carlos Osorio) [AP Photo/Carlos Osorio]

அமெரிக்கா மீண்டும் தொற்றுநோயின் மையமாக உள்ளது, அங்கு உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இந்த வாரம் 700,000 ஐ தாண்டியது. Annals of Internal Medicine சஞ்சிகையில் இந்த வாரம் பிரசுரமான ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் கோவிட்-19 க்கு 9.1 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாழ்க்கை இழக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை 935 பேர்; செவ்வாய்க்கிழமை 2,152 பேர்; புதன்கிழமை 2,228 பேர் மற்றும் வியாழக்கிழமை 1,944 பேர் என்ற எண்ணிக்கைகளில் அங்கு மக்கள் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர். இந்த வாரம் தொடங்கியதிலிருந்து நான்கு நாட்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் 7,000 பேர் இறந்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும், நெருக்கடிக்குள்ளான மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 51,000 பேர் இறந்துள்ளனர்.

ஜூலை 4 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், “நாம் நமது வாழ்க்கையை வாழ முடியும், நமது குழந்தைகள் பள்ளிக்குத் திரும்ப முடியும், நமது பொருளாதாரம் முழு வீச்சில் செயல்படுகிறது” என்று கூறி, கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து “விடுதலை” கிடைத்துவிட்டதாக அறிவித்தார். முகக்கவசம் அணிவதையும், தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று கூறி, தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் பைடென் அவசியமற்றதாக்கினார். அப்போதிருந்து 80,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் தொற்றுநோயினால் இறந்துள்ளனர்.

நோய்தொற்றுக்கள் பெரியளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கோவிட்-19 காட்சி மையம் வெளியிட்ட ஒரு காட்சி போன்ற மிகவும் நம்பிக்கைக்குரிய சூழ்நிலை இருந்தாலும் கூட, வசந்த காலத்தில் இறப்பு எண்ணிக்கை 800,000 அளவிற்கு உச்சத்தை எட்டும்.

ஆனால், நாளொன்றுக்கு 1,726 பேர் இறந்து கொண்டிருக்கும் தற்போதைய இறப்பு வீதத்தின்படி பார்த்தால், அடுத்த ஆறு மாதங்களில் 300,000 க்கும் அதிகமான மக்கள் இறப்பார்கள் என்ற நிலையில், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு அதிகமாகும்.

இறந்தவர்களில், கடந்த வாரத்தில் மட்டும் இறந்த 20 குழந்தைகள் உட்பட, 480 குழந்தைகள் அடங்குவர். ஜூலையில் வெளியான ஒரு ஆய்வின்படி, 100,000 க்கு அதிகமான குழந்தைகள் தொற்றுநோயினால் தங்கள் பராமரிப்பாளர்களை இழந்துள்ளனர்.

விஸ்கான்சின் முதல் கலிபோர்னியா வரையிலுமாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அவற்றின் கொள்ளளவை மீறி நிரம்பி வழிகின்றன. செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் ஏனைய உயிர்காக்கும் கருவிகளின் பற்றாக்குறை காரணமாக, யார் வாழ வேண்டும், மற்றும் யார் இறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கொடூரமான முடிவை எடுக்கும் தர்மசங்கடமான நிலைக்கு செவிலியர்களையும் மருத்துவர்களையும் ஆளாக்கும் அவசர நெறிமுறைகளை மருத்துவமனைகள் வழங்குகின்றன.

கோவிட்-19 நோய்தொற்றுக்குள்ளானவர்களில் மூன்று பேரில் ஒருவருக்கு இரண்டு வாரத்திற்கு மேலாக நோயறிகுறிகள் நீடிக்கும் “லோங் கோவிட்,” பாதிப்பு ஏற்படுகிறது. இது, நூறாயிரக்கணக்கானவர்களுக்கு நிரந்தர பலவீனம் ஏற்படுவதைக் குறிக்கிறது: அதாவது நாள்பட்ட சோர்வு, வலி மற்றும் முழு தலைமுறை குழந்தைகள் உட்பட, அவர்களுக்கு நீண்டகால அறிவாற்றல் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆனால், அமெரிக்கா இதுவரை நடத்திய எந்த போரையும் விட அதிகமானதாக ஒவ்வொரு நாளும் 2,000 க்கும் அதிகமான மக்கள் இறந்து கொண்டிருக்கையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் தொற்றுநோய் முற்றிலும் முடிந்துவிட்டதாக அறிவிக்கிறது. “இந்த தொற்றுநோயை நாம் முடிவுக்குக் கொண்டு வருவதால், அடுத்த வேலைக்கு நாம் தயாராக வேண்டும்,” என்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை ட்வீட் செய்தார்.

நாளுக்கு நாள் 2,000 பேர் இறந்து கொண்டிருக்கையில் கோவிட்-19 தொற்றுநோயின் “முடிவு” பற்றி பேசுவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மாறுபட்ட தர்க்கத்தின்படி, தொற்றுநோயை “முடிவுக்குக் கொண்டுவருவது” என்பது வெறுமனே அதை புறக்கணிப்பதாகும். அமெரிக்காவில் காணப்படும் இறப்பின் அளவு “புதிய இயல்பாக” கருதப்பட வேண்டும்.

அங்கு நடப்பது என்னவென்றால் திகிலூட்டும் வகையில் மரணம் இயல்பாக்கப்படுகிறது.

உலகின் பணக்கார மற்றும் மிகுந்த சக்திவாய்ந்த முதலாளித்துவ நாட்டில், ஒரு தடுக்கக்கூடிய நோயினால் ஒரு மில்லியனுக்கு நெருக்கமான மக்கள் இறந்துள்ளனர். இந்த மரணங்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதுமாக நோய்தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கையில் பொதுமக்களை ஏமாற்றி நிராயுதபாணியாக்கிய ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் காங்கிரஸின் பொய்கள் மற்றும் மூடிமறைப்புகளின் விளைவாகவே ஏற்பட்டன.

மே 14, 2020 அன்று, Subcommittee on Health of the House Committee on Energy and Commerce “கோவிட்-19 பதிலிறுப்பில் விஞ்ஞான ஒருமைப்பாடு,” என்ற தலைப்பில் ஒரு விசாரணை நடத்தியது, இதில் இரகசிய செய்தி வெளியீட்டாளர் ரிக் பிரைட் தொற்றுநோய்க்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் பதிலிறுப்பை தோலுரித்துக் காட்டினார். “ஜனவரி 2020 தொடக்கத்திலேயே கோவிட்-19 எழுச்சியின் அச்சுறுத்தல் பற்றி பொது சுகாதார அதிகாரிகள் முழுமையாக அறிந்திருந்தனர்” என்று பிரைட் அறிவித்தார். ஆனால் அமெரிக்க அரசாங்கம் “இந்த பேரழிவுகர அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டவே நோக்கம் கொண்டிருந்தது.”

இது இதுபோன்ற முதலும் கடைசியுமான மற்றும் ஒரே விசாரணையாக இருக்கும். சாட்சியம் அளிக்க பொது சுகாதார அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும், அது பள்ளிகள் மற்றும் வணிகங்களை மீண்டும் திறப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தும் கட்டமைப்பிற்குள் தான் இருக்கும். தொற்றுநோய்க்கான அமெரிக்காவின் பதிலிறுப்பை நிராயுதபாணியாக்கியதான, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரின் ஈடுபாட்டிலான முறையான மூடிமறைப்பு பற்றிய பிரைட்டின் குற்றசாட்டுக்களை விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

தொற்றுநோய்க்கான பதிலிறுப்பு குறித்து பைடென் நிர்வாகத்தின் போதும் விசாரணை செய்யப்படவில்லை, மாறாக தொற்றுநோயை ட்ரம்ப் நிர்வாகம் பேரழிவுகரமாக கையாண்டதை மக்கள் எதிர்த்ததன் அடிப்படையில் அமெரிக்க மக்களிடம் அது முறையீடு செய்தது.

கோவிட்-19 க்கான அமெரிக்க பதிலிறுப்பை போல மிகக் குறைவாக ஆராயப்பட்ட எந்த நிகழ்வும் அமெரிக்க வரலாற்றில் இல்லை. தொற்றுநோய் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கு விற்பனை செய்வது போன்ற தவறான நடவடிக்கைகளுக்கான தெளிவான சான்றுகள் இருந்தபோதிலும், இது எந்த தீவிர விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை, இது தொடர்பாக செனட் புலனாய்வு குழு தலைவர் ரிச்சார்ட் பர் பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டார்.

தொற்றுநோய்க்கான பேரழிவுகர பதிலிறுப்புக்கு எவரையும் பொறுப்பாக்கத் தவறியது வேண்டுமென்றே செய்யப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டின்படி, பாரிய இறப்புகளுக்கு பங்களித்த நடவடிக்கைகள் தவறுகள் அல்ல. அதனால்தான் எந்த விசாரணையும் செய்யப்படவில்லை என்பதுடன், எவரும் பொறுப்பாக்கப்படவில்லை, ஏனென்றால் இதுவே முழு ஆளும் வர்க்கத்தாலும் மற்றும் முழு முதலாளித்துவ அமைப்பினாலும் பரிந்துரைக்கப்படும் கொள்கையாகும்.

பழி சுமத்தப்படும் அளவிற்கு, இது அமெரிக்க கொள்கை பதிலிறுப்பை குற்றம்சாட்டாத ஒரு கட்டுக்கதையின் அடிப்படையில் இருக்க வேண்டும். இதுவே, கோவிட்-19 தொற்றுநோய்க்கு சீனாவை பழி கூற முனையும் “ஆய்வக கசிவு” பொய்யின் தோற்றுவாயாக உள்ளது.

இன்றுவரை அமெரிக்காவின் கொள்கையாகவுள்ள “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அரசாங்கத்தின் மூடிமறைப்பு இருந்தது. “எந்தவித நிபந்தனைகளும் இல்லாத கைக்குழந்தைகள், குழந்தைகள், பதின்மவயதினர், இளைஞர்கள், இளம் வயதுவந்தவர்கள், நடுத்தர வயதினர் மற்றும் ஏனையோருக்கு சிறு ஆபத்து கூட இல்லை… எனவே சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்க நாம் அவர்களை பயன்படுத்துகிறோம்… அவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட நாம் விரும்புகிறோம்,” என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரி பால் எலியாஸ் அலெக்சாண்டர் குறிப்பிட்டார்.

இதே கொள்கை தான் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், “இனி பூட்டுதல்கள் இல்லை, ஆயிரக்கணக்கில் உடல்கள் குவியட்டும்” என்று அறிவிக்க வழிவகுத்தது.

ஆளும் வர்க்கம் தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கான ஒரு மூலோபாயத்தைக் கொண்டிருக்கும் அளவிற்கு, மக்கள் மத்தியில் பெரியளவில் நோய்தொற்று பரவ இது அனுமதிக்கும், அதேவேளை தடுப்பூசிகளால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்தியுடன் இணைந்து நோயின் புதிய எழுச்சிகளை இது தடுக்கும் என கூறப்படுகிறது. இதன் பொருள், ஒவ்வொரு ஆண்டும் அநேகமாக பல்லாயிரக்கணக்கானவர்களை கொல்லும் வகையில் மக்கள் மத்தியில் பரவலாக தொற்றும் நோயாக இது உருவெடுக்கும் என்பதே.

நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுத்த டெல்டா மாறுபாடு போன்ற புதிய கோவிட்-19 மாறுபாடு தோன்றாது என்ற பிரார்த்தனையை “நம்பிக்கைவாத” சூழ்நிலை நம்பியுள்ளது.

பாரிய மரணங்களை ஏற்றுக்கொள்ளும் மற்றும் “இயல்பாக்கும்” அமெரிக்க முதலாளித்துவத்தின் திறன் ஒரு எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். மில்லியன் கணக்கான உயிர்களின் இழப்பை சமூகம் ஏற்கத் தயாராக இல்லை என்பதால் ஒரு அணுசக்தி போரை நினைத்துப் பார்க்க முடியாது என்ற அனைத்து வாதங்களும் தொற்றுநோய்க்கான பதிலிறுப்பின் மூலம் மறுக்கப்பட்டுள்ளன. தடுக்கக்கூடிய நோயால் ஏற்படும் ஒரு மில்லியன் உயிர்களின் இழப்பை ஏற்க அமெரிக்க ஆளும் வர்க்கம் தயாராக இருந்தால், ஒரு அணுசக்தி போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியிடப்படுவதையும் அது ஏற்றுக்கொள்ளும். ப்ளூம்பேர்க் செய்திகள் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தபடி:

ஆம், அமெரிக்கா கோவிட்-19 க்கான தனது நடவடிக்கையை சீர்குலைத்துவிட்டது. அதே நேரத்தில், ஒரு தேசமாக அமெரிக்காவால் ஏராளமான உயிரிழப்புக்களை உண்மையில் பொறுத்துக்கொள்ள முடியும் என்ற அதன் அனுபவத்தைக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் “மென்மையானவர்கள்” மற்றும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாதவர்கள் என்பது நீண்டகால சீனக் கோட்பாடாக இருந்தது. நீங்கள் ஒரு சீன போரை திட்டமிடுபவராக இருப்பீர்களானால், இப்போது இந்த அனுமானத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாமா?

முழு முதலாளித்துவ ஒழுங்கும் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைக்கு பின்னால் நிற்கும் அதேவேளை, தொழிலாள வர்க்கத்தால் தொடர்ச்சியான பாரிய மரண அலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவும், வைரஸை முற்றிலும் ஒழிக்கத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்கக் கோரவும் மற்றும் அமல்படுத்தவும், அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் இது தலையீடு செய்ய வேண்டும்.

Loading