முன்னோக்கு

அமெரிக்க வேலைநிறுத்த அலை உலகளாவிய வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தை முன்னறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை நள்ளிரவில், ஜோன் டீர் விவசாய உபகரண உற்பத்தி ஆலையின் 10,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் அமெரிக்க மத்திய மேற்கு முழுவதிலுமான மாநிலங்களில் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) இந்த வேலைநிறுத்தத்தைத் திணறடிக்க இன்னமும் பெருநிறுவன நிர்வாகத்துடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து வருகிற போதினும், அச்சங்கம் சாமானிய தொழிலாளர்களிடையே நம்பிக்கை இழந்துள்ளது. கடந்த வாரம் தான், டீர் ஆலை தொழிலாளர்கள் UAW சங்கத்தின் ஆதரவு பெற்ற ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்தனர்.

Workers assembling axles at the Dana plant in Toledo, Ohio, May 18, 2020 [Credit: REUTERS/Rebecca Cook]

டீர் ஆலை தொழிலாளர்களின் கிளர்ச்சி அமெரிக்கா எங்கிலும் அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய தீவிரப்பாட்டைக் கொடுத்தது: கென்டக்கி மதுபான ஆலையின் 500 தொழிலாளர்கள் செப்டம்பர் 11 இல் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்; நியூ யோர்க்கின் பஃபலோவில் 2,000 மருத்துவமனை தொழிலாளர்கள் அக்டோபர் 1 இல் இருந்து வேலைநிறுத்தத்தில் உள்ளனர்; மிச்சிகன், நெப்ரஸ்கா, பென்சில்வேனியா மற்றும் டென்னஸியில் கெல்லோக் உணவுப் பண்டங்கள் உற்பத்தி ஆலையின் 1,400 தொழிலாளர்கள் அக்டோபர் 5 இல் வெளிநடப்பு செய்தனர்; கலிபோர்னியாவில் ஃபிரண்டையர் டெலிகாம் நிறுவனத்தின் 2,000 தொழிலாளர்கள் அக்டோபர் 6 இல் வேலையை நிறுத்தினர். வடக்கு அலபாமாவில் 1,000 க்கும் அதிகமான வோரியர் மெட் சுரங்கத் தொழிலாளர்கள் ஏப்ரலில் இருந்து வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக பல உள்ளூர் வெளிநடப்புகளும் போராட்டங்களும் தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் ஆழத்தையும் அகலத்தையும் எடுத்துக் காட்டுகின்றன: வறுமை மட்டத்திலான கூலிகள் மற்றும் சலுகைகள் சம்பந்தமாக கனக்டிக்கட்டில் 28 குரூப் ஹோம்ஸ் மற்றும் டே புரோகிராம்ஸ் நிறுவனத்தின் 185 தொழிலாளர்கள் செவ்வாய்கிழமை காலை வெளிநடப்பு செய்தனர்; இந்த வாரம் கென்டக்கியின் புல்லிட் உள்ளாட்சி மற்றும் மேரிலாந்தின் கால்வெர்ட் உள்ளாட்சியில் டஜன் கணக்கான பள்ளி வாகன ஓட்டுனர்கள் சம்பள உயர்வு கோரி மருத்துவ விடுப்பு எடுத்தனர்; ஓரேகனின் McKenzie-Willamette மருத்துவ மையத்தில் 400 மருத்துவப் பராமரிப்பு தொழிலாளர்கள் கடந்த வாரம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்திருந்தனர்; பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் வேலையிட நிலைமைகள் தொடர்பாக கலிபோர்னியாவின் அன்ட்யோச்சில் 350 சுகாதார கவனிப்பு தொழிலாளர்கள் கடந்த வாரம் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைநிறுத்தம் தொடங்க இருக்கும் கலிபோர்னியாவின் 60,000 தொலைக்காட்சி மற்றும் ஒளிப்பட உற்பத்தி தொழிலாளர்கள்; மேற்கு கடற்கரை பகுதி நெடுகிலும் வேலைநிறுத்தத்திற்கு அண்மித்து ஒருமனதாக ஒப்புதல் வழங்கி உள்ள 40,000 க்கும் அதிகமான கெய்சர் பெர்மனென்ட் செவிலியர்கள் மற்றும் சுகாதாரக் கவனிப்பு தொழிலாளர்கள்; டேனா இன்க் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலையின் 3,500 தொழிலாளர்கள் உள்ளடங்கலாக, பெருவாரியான எண்ணிக்கையில் ஏனைய தொழில்துறைகளின் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். டீர் ஆலை வேலைநிறுத்தம் டேனா தொழிலாளர்களை வெளியில் வர ஊக்கப்படுத்தும், ஏனென்றால் டேனா ஆலை தொழிலாளர்கள் UAW ஆதரவு பெற்ற ஒப்பந்தத்தைக் கடந்த மாதம் பாரியளவில் நிராகரித்தப் பின்னர் ஓர் ஒப்பந்தம் இல்லாமலேயே வேலை செய்து வருகிறார்கள்.

நுகர்வு பண்டங்கள் மற்றும் சேவைகளின் பணவீக்க அதிகரிப்பானது, தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு எரியூட்டி வருகிறது, அதாவது தொழிலாளர்களின் நிஜமான கூலிகளில் கூர்மையான மற்றும் ஒரே சீரான சரிவை அது அர்த்தப்படுத்துகிறது.

கடந்த 15 ஆண்டுகளில், வங்கிகள் மற்றும் சந்தைகளைப் பிணையெடுக்க உலகளாவிய மத்திய வங்கிகள் வரைமுறையின்றி ஆதார வளங்களை வழங்கி உள்ளன. 2008 நிதியியல் பொறிவுக்கு முன்னர் 1 ட்ரில்லியனுக்கும் குறைவாக இருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வின் இருப்புநிலைக் கணக்கு, நிதித்துறை சொத்திருப்புகளை வாங்குவதற்காக குறிப்பாக பணத்தை அச்சிட்டதன் மூலம், இன்று அண்மித்து 8.5 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து அண்மித்து 4 ட்ரில்லியன் டாலர் அதிகரிக்கப்பட்டிருப்பதும் இதில் உள்ளடங்கும்.

2008 இல் பொறிவை முகங்கொடுத்த பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைப் பிணையெடுக்க, ஆளும் வர்க்கம் பயன்படுத்திய பொறுப்பற்ற பணவீக்க நடவடிக்கைகளும், அத்துடன் கடந்தாண்டு காங்கிரஸ் நிறைவேற்றிய CARES சட்டமும் சேர்ந்து, தாக்குப் பிடிக்க முடியாத நிதியியல் குமிழியை உருவாக்கி உள்ளன. வட்டி விகிதங்கள் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதால், பெருநிறுவனங்கள் 11 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான கடனைக் குவித்து வைத்துள்ளன. பெடரல் ரிசர்வோ வெறித்தனமாக கொள்முதல் செய்யும் போக்கில் உள்ளது. செல்வந்தர்களுக்குக் கையளிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் இப்போது தொழிலாள வர்க்கத்தைத் தீவிரமாக சுரண்டுவதன் மூலம் உறிஞ்சி ஆக வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் நிதியியல் சொத்திருப்புகள் மற்றும் செல்வவளத்தின் செயற்கையான பணவீக்கம் இப்போது பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது.

நுகர்வு விலை குறியீடு முந்தைய ஆண்டை விட 5.4 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பதாக அமெரிக்க தொழிலாளர் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்தாண்டு இதுவரை கச்சா எண்ணெய் விலை 64 சதவீதம் அதிகரித்திருப்பது உட்பட எரிபொருட்களின் விலைகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன, இயற்கை எரிவாயு விலைகள் கடந்த ஆறு மாதங்களில் இரண்டு மடங்காகி உள்ளது, இரண்டுமே ஏழு ஆண்டுகளில் இல்லாதளவு அதிகபட்சமாக உள்ளன. அமெரிக்க எரிசக்தி தகவல்தொடர்பு நிர்வாகம் நேற்று கூறுகையில், குடும்பங்களின் வீட்டு வெப்பமூட்டல் செலவு கடந்த குளிர்காலத்தை விட இந்த குளிர்காலத்தில் 30 இல் இருந்து 54 சதவீத அளவுக்கு அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டது.

இன்னும் பரந்த விதத்தில் கூறுவதானால், வர்க்கப் போராட்ட வெடிப்பில் வெளிப்படும் கோபம் கடந்த நான்கு தசாப்தங்களாக வாழ்க்கை தரங்கள் மீது நடத்தப்பட்ட இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் அதற்கேற்ப மலைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்களின் அதிகரிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க கோடீஸ்வரர்களின் மிகப்பெரிய செல்வம் இந்த பெருந்தொற்றின் போது 1.8 டிரில்லியன் டாலரில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்டில் 4.8 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்குள் எழும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை விட வேறெதுவும், இந்த பெருநிறுவன மற்றும் நிதியியல் தன்னலக்குழுவை இந்தளவுக்கு அதிகமாக பயமுறுத்துவதாக இல்லை. அமெரிக்காவில் வர்க்க உறவுகளைக் குணாம்சப்படுத்திய போர்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களின் நீண்ட வரலாறை அது மறந்துவிடவில்லை.

வர்க்கப் போராட்டத்திற்கு குழிபறிக்கவும் ஒடுக்கவும், ஆளும் வர்க்கம் அதன் கையிருப்பில் உள்ள எல்லா வழிவகைகளையும் பயன்படுத்துகிறது. அது, பல தசாப்தங்களாக, தொழிலாள வர்க்கத்தின் மீது பொலிஸ் வேலை செய்ய பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களையே சார்ந்து இருந்துள்ளது. 1981 இல் PATCO வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டதற்குப் பின்னர், இந்த தொழிற்சங்கங்கள் தங்களைப் பெருநிறுவனங்களின் தொங்குதசைகளுக்கு அதிகமாக ஒன்றுமில்லை என்பதாக மாற்றிக் கொண்டு விட்டன.

அதிகரித்து வரும் தொழிலாளர்கள் கிளர்ச்சிக்கு விடையிறுப்பதில், பைடென் நிர்வாகம் குறிப்பாக இந்த பெருநிறுவன அமைப்புகளைப் பலப்படுத்துவதை ஆளும் வர்க்கத்தின் ஒரு மூலோபாய நிர்பந்தமாக பார்க்கிறது. வினியோக சங்கிலி நெருக்கடிக்கு விடையிறுப்பாக, இந்தாண்டின் எஞ்சிய நாட்களில் அமெரிக்க துறைமுகங்களை வாரத்தின் ஏழு நாட்களும், நாள் முழுவதும் 24 மணி நேரமும் திறந்து வைக்க, அமெரிக்க வர்த்தகத் துறைக்கும் Teamsters மற்றும் AFL-CIO தொழிற்சங்கங்களுக்கும் இடையே எட்டப்பட்ட ஓர் உடன்படிக்கையை பைடென் நேற்று அறிவித்தார்.

ஆனால் தொழிற்சங்கங்களின் சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்தளவில் நடைமுறைக்கு உதவாததாக ஆகி வருகிறது, ஏனென்றால் இந்த கோடையில் வொல்வோ ட்ரக் ஆலை, கடந்த மாதம் டேனா இன்க். ஆலை, இந்த வாரம் ஜோன் டீர் ஆலை உள்ளடங்கலாக தொழிற்சங்கங்கள் கட்டளையிட்ட ஒப்பந்தங்களைத் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் பாரியளவில் நிராகரித்திருப்பதால் இது எடுத்துக்காட்டப்பட்டது.

வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பு நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளுக்கு ஆழ்ந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது, அவர்களின் சார்புரீதியிலான செல்வசெழிப்பு பாரியளவில் பெருநிறுவன இலாபங்கள் மற்றும் ஊதிப் பெரிதாக்கப்படும் வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகளுடன் பிணைந்திருப்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அவர்களின் பொருளாதார நலன்கள் மற்றும் சமூக நிலைப்பாட்டில் வர்க்கப் போராட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த அடுக்குகள் உணரும் அச்சம், இனம், பாலினம் மற்றும் பிற அடையாள அரசியல் வடிவங்களை அவர்கள் இடைவிடாது ஊக்குவிப்பதில் சித்தாந்தரீதியிலும் அரசியல்ரீதியிலும் வெளிப்பாட்டைக் காண்கிறது.

1920 கள் மற்றும் 1930 களில் இருந்ததைப் போலவே, வர்க்க மோதலைக் கட்டுப்படுத்துவதற்குப் பாரம்பரிய ஜனநாயக அமைப்புகளின் திறனில் நம்பிக்கையை இழந்து வரும், ஆளும் வர்க்கத்தின் பெருவாரியான பிரிவுகள், முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கு ஒரு பாசிச 'தீர்வை' தீவிரமாக பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன. சனிக்கிழமை அயோவா பேரணியில் ட்ரம்ப் அறிவித்தவாறு, 'தீவிரக் கொள்கை சோசலிஸ்டுகள் [யார் இவர்கள்] நம் நாட்டை கைப்பற்றி வருகிறார்கள்' என்று அவர்களுக்கு எதிரான அவரின் கூச்சல்கள், தற்போது இந்த போக்கின் மிகவும் வெளிப்படையான மற்றும் ஆபத்தான வெளிப்பாடாக உள்ளன. தேர்தல் முடிவுகளை மாற்றி ஒரு தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜனவரி 6 பாசிச எழுச்சிக்கு ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் தலைவராக ட்ரம்பின் அந்தஸ்து பலமடைந்து மட்டுமே உள்ளது.

இறுதியாக, 1914 முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் வெடித்ததைப் போலவே, முதலாளித்துவ வர்க்கம் இணைக்கவியலாத சமூகப் பிளவுகளாக பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தை இராணுவ மோதலைக் கொண்டு செயற்கையாக 'ஒன்றிணைப்பதற்கான' ஒரு வழிவகையைப் பார்க்கிறது. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் வூஹான் ஆய்வகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யை மையப்படுத்திய, இடைவிடாத சீன-விரோத பிரச்சாரம், ஒரு போரைத் தொடங்குவதற்கு அவசியப்படும் திசைதிருப்பப்பட்ட தீவிரமான சமூக உளவியலை உருவாக்குவதையும் கூட நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழிலாள வர்க்கம் எதிர் கொண்டிருக்கும் ஆபத்துக்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆனால் சோசலிச மூலோபாயத்தை நெறிப்படுத்தும் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியைக் குறைத்து மதிப்பிடுவது இன்னும் பெரிய தவறாக இருந்து விடும். அமெரிக்க தொழிலாள வர்க்கம் சர்வதேச வர்க்கத்தின் பாகமாகும், அதன் ஒருமித்த பலம் இப்போது வரலாற்றின் எந்த தருணத்திலும் இருந்ததை விட மிகப் பிரமாண்டமாக உள்ளது.

உலகளவில் முதலாளித்துவம் ஒருங்கிணைந்துள்ளது, ஆகவே தொழிலாளர்களின் எல்லா குறிப்பிடத்தக்க போராட்டங்களும் ஒரு சர்வதேச தன்மையைப் பெறுகின்றன. சொல்லப் போனால், அமெரிக்காவில் இந்த வேலைநிறுத்த இயக்கமே கூட, நடந்து வரும் போராட்டங்களின் சிறிய எண்ணிக்கையை மேற்கோளிடுவதானால், தென் ஆபிரிக்காவின் உலோக தொழிலாளர்களில் இருந்து இலங்கையில் சுகாதார கவனிப்பு தொழிலாளர்கள் வரை, ஜேர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வரை, துருக்கியில் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித்துறை தொழிலாளர்கள் வரை நீளும் ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியின் பாகமாக உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவம் மிக அடிப்படையான மனிதத் தேவைகளுடன் பொருந்தாமல் இருப்பது கூர்மையாக அம்பலப்பட்டு வரும் நிலைமைகளின் கீழ் தான், இந்த அபிவிருத்தி அடைந்து வரும் வேலைநிறுத்த இயக்கம் கட்டவிழ்ந்து வருகிறது. கடந்த 18 மாதங்களாக, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பயங்கரங்களுடன் வாழ்ந்துள்ளனர். உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் எடுக்க மறுத்ததால் அமெரிக்காவில் அண்மித்து 750,000 பேரும், உலகெங்கிலும் அண்மித்து ஐந்து மில்லியன் பேரும் உயிரிழக்க நேரிட்டது.

தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெடிப்பு ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காகும். ஆனால் ஒழுங்கமைப்பு மற்றும் முன்னோக்கு சம்பந்தமான அளப்பரிய சவால்கள் எழுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் சக சிந்தனையாளர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதரத்துவக் கட்சிகளும் இந்த வர்க்க போராட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி இருந்ததுடன், தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெல்வதற்கு அவசியமான மூலோபாயம் மற்றும் ஒழுங்கமைப்பை அமைத்து கொடுத்துள்ளன.

மே மாதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க தொடங்கியது. அப்போது நாம் எழுதுகையில், IWA-RFC “சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களில் தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயகரீதியான மற்றும் போர்குணமிக்க சாமானிய தொழிலாளர் அமைப்புகளின் புதிய வடிவங்களுக்கான கட்டமைப்பை உருவாக்க செயல்படும்' என்று குறிப்பிட்டோம்.

இந்த முன்முயற்சி, தொழிலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது, இவர்கள் வொல்வோ ட்ரக்ஸ் ஆலை, டேனா ஆலை மற்றும் இப்போது ஜோன் டீர் ஆலையிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கி உள்ளனர். பள்ளிகளைப் பாதுகாப்பின்றி மீண்டும் திறப்பதை எதிர்க்க கல்வியாளர்களும் பெற்றோர்களும் சாமானியர் குழுக்களை உருவாக்கி உள்ளனர். கோவிட்-19 ஐ ஒழிக்கவும் அகற்றவும் ஏன் உலகளவில் நடத்தப்படும் ஒரு பாரிய போராட்டம் தேவைப்படுகிறது என்பதை விளக்கி தொழிலாள வர்க்கத்திற்குக் கல்வியூட்டுவதற்காக விஞ்ஞானிகளின் ஆதரவைக் கொண்டு வருவதற்கான உலக சோசலிச வலைத் தளத்தின் முயற்சிகள் இந்த நடவடிக்கையின் அதிமுக்கிய கூறுபாடாக இருந்துள்ளது.

உலகெங்கிலும் சாமானியர் கமிட்டிகளின் ஓர் ஒருங்கிணைந்த வலையமைப்பை அபிவிருத்தி செய்வது தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச தலைமையைக் கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது. சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தை, இந்த பெருந்தொற்று, அதிகரித்து வரும் உலக போர் அபாயம், சர்வாதிகாரம் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறை அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க, தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் செயலூக்கத்துடன் தலையிடுவதே சோசலிசவாதிகளின் முக்கிய பணியாக இருக்க முடியும்.

Loading