COP26 காலநிலை உச்சிமாநாடு தோல்வியில் முடிவடைந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் உலகளாவிய காலநிலை உச்சிமாநாடான COP26 இந்த வாரம் பரிதாபகரமாக முடிவுக்கு வருகையில், தேசிய மற்றும் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரிய முதலாளித்துவ சக்திகள் மற்றும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவை, உலகளாவிய காலநிலை அவசரநிலைக்கு தீர்வு காண்பதில் “முன்னேற்றம்” இருப்பது போல காட்டுவதற்கு உச்சிமாநாட்டை பயன்படுத்திக் கொள்ள முயன்றதில் பெரும் தோல்வி கண்டன.

COP26 ஐ.நா. காலநிலை உச்சிமாநாட்டை நடத்தும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் வீதிகளில் நவம்பர் 5, 2021, வெள்ளிக்கிழமை அன்று காலநிலை ஆர்வலர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். (AP Photo/Scott Heppell)

2015 ஆம் ஆண்டில் பாரிஸில் நடந்த முக்கிய உலக உச்சிமாநாட்டைப் போல, அரைகுறை நடவடிக்கைகளுடன் முற்றிலும் தன்னார்வ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இந்த உச்சிமாநாட்டில் போட்டி சக்திகளால் குறிப்பிடத்தக்க உடன்பாடு எதையும் எட்ட முடியவில்லை. மேலும், கிளாஸ்கோ கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளது போல, இந்த உச்சிமாநாட்டில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளும் மற்றும் வாக்குறுதிகளும் பெரும்பாலும் தோல்வியடைந்தன.

“COP இன் முதன்மைக் கொள்கைக்கு விழுந்த கடுமையான அடியாக, நிலக்கரி உற்பத்தியை படிப்படியாக நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட” மறுத்த அமெரிக்காவின் முடிவை குறிப்பிட்டு, பைனான்சியல் டைம்ஸின் தலையங்கம் “COP26 இன் முன்னேற்றத்தை விட சூடானது” என்று எழுதிய அதேவேளை, Business Insider செய்தி வலைத் தளம் இந்த நிகழ்வை “வரலாற்று தோல்வி” என அறிவித்தது.

வார இறுதியில் வெளிவந்த ஒரு அறிக்கை, கிளாஸ்கோ நிகழ்வின் அரைகுறை தன்மைக்கான தெளிவான காரணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Global Witness என்ற சுற்றுச்சூழல் பிரச்சாரக் குழு, ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட மாநாட்டின் பங்கேற்பாளர்களின் தற்காலிக பட்டியலை ஆய்வு செய்து, COP26 இல் எந்தவொரு தனி நாட்டையும் விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தான் மிகப்பெரிய ஒற்றை பிரதிநிதிகள் குழுவைக் கொண்டிருந்ததை உறுதிசெய்தது.

நேரடி பிரதிநிதிகளையும் மற்றும் புதைபடிவ எரிபொருள் தொழில்துறையின் சார்பாக பங்கேற்ற குழுக்களின் ஒரு பகுதியினரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடைய குறைந்தது 503 பேர் கலந்து கொண்டதை குழு கண்டறிந்தது. “மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் நச்சு நலன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் பங்கேற்பு, இந்த மாநாட்டை உலகத் தலைவர்களின் தடுமாற்றம் மற்றும் கால தாமதத்திற்கான முக்கிய சான்றாக பார்க்கும் காலநிலை ஆர்வலர்களின் சந்தேகத்தை மட்டுமே அதிகரிக்கும்,” என்று Global Witness இன் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.நா.வின் காலநிலை அமைப்பின் தலைவர் பாட்ரிசியா எஸ்பினோசா, பங்கேற்ற அனைத்து 190 நாடுகளும் அவை விரும்பும் பிரதிநிதிகளை அனுப்பும் சுதந்திரத்தைக் கொண்டிருந்ததாக அறிவித்தார். “ஒவ்வொரு அரசாங்கமும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் ஒரு பகுதியாக பொருத்தமானவராக அது கருதும் எந்தவொரு நபரையும் பிரதிநிதியாக அங்கீகரித்து அனுப்புவது அதன் இறையாண்மை உரிமையாகும்” என்று CNN க்கு தெரிவித்தார்.

உச்சிமாநாட்டில், பெரும் மாசுபடுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க முழு அனுமதி வழங்கப்பட்டிருந்த அதேவேளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பு பெரிதும் தவிர்க்கப்பட்டிருந்தது. COP26 உச்சிமாநாட்டிற்கு அரண்மனை காவலாளி போல சேவையாற்றும் ஜோன்சன் அரசாங்கத்துடன் சேர்ந்து பிரிட்டனுக்குள் நுழைவதை முற்றிலும் தடுப்பதற்கு அல்லது அந்த ஆர்வலர்களை ஸ்காட்லாந்தில் உச்சிமாநாட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர், தொற்றுநோய் தொடர்புபட்ட உடல்நலக் கவலைகள் குறித்து காலநிலை உச்சிமாநாடு ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் பிரிட்டனில் நாளாந்தம் 20,000 நோய்தொற்றுக்கள் பதிவாகின. ஆனால் இன்று, பாரிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தும், பிரிட்டனில் நாளாந்தம் 30,000 நோய்தொற்றுக்கள் பதிவாகின்றன, பள்ளிகள் மற்றும் வணிகங்களை மீளத்திறக்கும் ஜோன்சன் அரசாங்கத்தின் மிருகத்தனமான கொள்கைக்கு நன்றி.

ஆண்டு முழுவதும், தொற்றுநோய் மற்றும் காலநிலை அவசரநிலை இரண்டும் மோசமடைந்துள்ளன, மேலும் இவ்விரண்டு ஆபத்துக்களினால் மனிதகுலத்திற்கான அச்சுறுத்தலும் தீவிரமடைந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, பெரும்பாலான இளைஞர்கள் உட்பட கிட்டத்தட்ட 100,000 பேர் கிளாஸ்கோவின் வீதிகளில் அணிவகுத்து, COP26 உச்சிமாநாட்டில் கூடியிருந்த அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது உச்சிமாநாட்டிற்கு ஒரு முறையீடு செய்வதைக் காட்டிலும், குறைந்தபட்சம் பல சுவரொட்டிகளையும் பதாகைகளையும் வைத்து ஆராயும் வகையில் இருந்தது, மேலும் இந்த நடவடிக்கைகளை ஒரு போலித்தனம் என்று கண்டனம் செய்த சுவீடனைச் சேர்ந்த 18 வயது இளம் ஆர்வலர் கிரெட்டா துன்பேர்க் போன்ற பேச்சாளர்களுக்கு அப்போது பலத்த கரகோஷம் அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டை “வழமையான வணிகத்தின் இரண்டு வார கால கொண்டாட்டம் மற்றும் ஆரவாரமே” என்று துன்பேர்க் விவரிப்பது குறித்து வாதிடுவது கடினமே.

“தலைவர்கள் எதுவும் செய்வதில்லை. இந்த அழிவுகரமான அமைப்பிலிருந்து தாம் பயனடைவதற்கும், தொடர்ந்து இலாபமீட்டுவதற்கும் ஏற்ற வகையில் அவர்கள் திறம்பட ஓட்டைகளை உருவாக்கி, கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது, மக்களையும் இயற்கையையும் சுரண்டுவதையும், மற்றும் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்க்கை நிலைமைகளின் அழிவையும் தொடர்ந்து அனுமதிப்பதற்கான தலைவர்களின் சிறந்த தெரிவாகும்” என்று பெரும் கூட்டத்தின் முன்னிலையில் அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் சீற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு நாவன்மையுள்ள பேச்சாளராக துன்பேர்க் இருக்கிறார், மேலும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தினாலும், அரசியல் முன்னோக்கின் வழியில் எதையும் முன்னெடுப்பதில் தவிர்க்க முடியாமல் முற்றிலும் திறமையற்றவராக உள்ளார்.

உலகளாவிய தொற்றுநோய்க்கு ஒரு முடிவு காண்பதை விட வரவிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு எந்தவித தீர்வும் காண முடியாது, அதாவது இவையிரண்டிற்கும் எதிரான போராட்டத்துடன் எவரது நலன்கள் பிணைக்கப்பட்டுள்ளதோ அந்த ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பாமல் இவற்றிற்கு தீர்வு கிடையாது.

தொற்றுநோயைப் போல, காலநிலை மாற்றமும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடியே, அதற்கான ஒரே மாற்றாக சோசலிசம் மட்டுமே உள்ளது, அதாவது இலாப அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பிற்போக்குத்தன தேசிய-அரசு கட்டமைப்பை அகற்றுவதற்கும், மற்றும் உலகளாவிய சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

கிளாஸ்கோ உச்சிமாநாட்டின் செய்திகளை வழங்கிய செய்தி ஊடகங்களில், 71 சதவீத உலக உமிழ்வுகளுக்கு 100 உலகளாவிய நிறுவனங்கள் தான் பொறுப்பு என்ற உண்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. இது முதன் முதலில் 2017 Carbon Majors அறிக்கையில் விவரிக்கப்பட்டது, இவ்வறிக்கை ExxonMobil, Royal Dutch Shell, BP, Chevron, Peabody மற்றும் BHP Billiton போன்ற இராட்சத நிறுவனங்களையும், அத்துடன் சீனா, சவுதி அரேபியா, ரஷ்யா, மெக்சிகோ, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களையும் அடையாளம் கண்டுள்ளது.

உலகளாவிய முதலாளித்துவத்திற்கான முக்கிய வக்காலத்து வாங்குபவர்களில் ஒருவரான, உலகின் முன்னனி “ஆரவார” பயிற்சியாளரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பராக் ஒபாமா, கிளாஸ்கோவில் திங்கட்கிழமை ஒரு நாள் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பொங்கியெழும் பெருங்கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் உள்ள தீவுகள் மீதான அவரது அனுதாபத்திற்கு சான்றாக அவர் ஹவாய் தீவை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது பற்றியும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தனது சொந்த நிர்வாகத்தின் சாதனை பற்றியும் அதிகம் குறிப்பிட்டாலும், உச்சிமாநாட்டில் அவர் வழங்கிய உரை வெறுமனே வெறுக்கத்தக்கதல்ல.

வெள்ளை மாளிகையில் ஒபாமா எட்டு ஆண்டுகள் இருந்தபோது, புவி வெப்பமடைதல் விவகாரத்திற்கு ஒரு சிறு பங்களிப்பு கூட செய்யாமல் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டது, மேலும் அமெரிக்க நிறுவனங்கள் கணக்கிட முடியாத அளவிற்கு கார்பனையும் மற்றும் நச்சுக் கழிவுகளையும் உருவாக்கின என்பதே உண்மை.

ஒபாமா, அவரது முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடெனின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய இலக்குகளாக உள்ள ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக பல போர் உந்துதல்களை உருவாக்கினார். உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் சீன ஜனாதிபதி ஜி ஐயும் கண்டனம் செய்தார், இது “ஆபத்தான அவசரமின்மையை” எடுத்துக் காட்டுவதாகக் கூறினார்.

2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் முற்றிலும் மாயையான ஆதாயங்களுக்காக அவர் பாராட்டப்பட்டார், என்றாலும் அப்போதிருந்து “நாங்கள் இருக்க வேண்டிய இடத்திற்கு அருகில் இல்லை” என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர், “நம் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது. நாம் அனைவரும் வேலை செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும். … ஆனால், பணக்கார நாடுகளில் வாழும், மற்றும் பிரச்சினையை துரிதப்படுத்த உதவிய எங்களுக்குத் தான் அதிக சுமை உள்ளது” என்று தெரிவித்து அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை வெளிப்படையாக அச்சுறுத்தினார்.

மேலும், வெளியில் உள்ள இளம் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு பொதுவான புனிதமான சொற்பொழிவை வழங்குவதற்கு இந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தினார், அடிப்படையில் அவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்குச் சென்று முதலாளித்துவ அரசியலில் அடிவருடிகளாக மாறச் சொல்கிறார். வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அரசியல் பிரச்சாரங்களிலும், முற்றிலும் ஊழல் நிறைந்த மற்றும் இணங்கிப் போகும் தன்மை கொண்ட அதையொத்த கட்சிகளிலும் சேருமாறு அவர்களிடம் கூறி, அவர்களை “தூய்மைவாதிகளாக” இருக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

இந்த வாரம், காலநிலை உச்சிமாநாடு முடிவடையும் நிலையில், காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினர், மற்றும் ஒரு சில குடியரசுக் கட்சியினரின் பிரதிநிதிகளால் ஒபாமா வலுப்படுத்தப்படுகிறார். சபாநாயகர் நான்சி பெலோசியும் மற்றும் பிற ஜனநாயகக் கட்சியினரும், அப்போது தான் ஒப்புதல் அளித்திருந்த உள்கட்டமைப்பு மசோதா பற்றியும், மற்றும் காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அமெரிக்காவின் பெரும் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக அப்போது தான் ஒத்திவைக்க ஒப்புக்கொண்ட சமூக செலவு மற்றும் காலநிலை மசோதா பற்றியும் பாசாங்கு செய்வார்கள்.

உண்மை அதற்கு முற்றிலும் மாறானது. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே காலநிலை மாற்றத்தின் பெயரில் அமெரிக்கத் தொழிலாளர்களின் நுகர்வைக் குறைக்கத் தயாராக உள்ளனர், அதேவேளை அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபத்தில் ஒரு பைசா குறைவதைக் கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

பைடென் நிர்வாகம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார மற்றும் மூன்றாவது பெரிய அணுசக்தி திறன் கொண்ட சீனாவிற்கு எதிராக இராணுவ வன்முறையை கட்டவிழ்த்து விடும் வகையில், விரைவில் முன்னெடுக்கவுள்ள அதன் சீன எதிர்ப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக காலநிலை உச்சிமாநாட்டை பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.

Loading