போரின் விளிம்பில் கிழக்கு ஐரோப்பா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போலந்து-பெலாருஸ் எல்லையில் அகதிகள் குறித்த பதட்டங்கள், ரஷ்யா உடனான உக்ரேனின் மோதல், மற்றும் கருங்கடலில் நேட்டோவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கிழக்கு ஐரோப்பாவில் உலகின் பெரும் வல்லரசுகளை ஒரு இராணுவ மோதலுக்குள் இழுக்க அச்சுறுத்துகிறது.

நவம்பர் 10, 2021 புதன்கிழமை அன்று பெலாருஸ் குடியரசின் State Border Committee வெளியிட்ட இந்தக் கையேடு புகைப்படத்தில், பெலாருஸின் க்ரோட்னோவிற்கு அருகிலுள்ள பெலாருஸ்-போலந்து எல்லையில் மத்திய கிழக்கு மற்றும் பிற இடங்களில் இருந்து குடியேறியவர்கள் கூடாரம் அமைத்துள்ள காட்சி. (State Border Committee of the Republic of Belarus via AP)

வியாழக்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கருங்கடலில் நடத்தப்படும் பயிற்சிகளின் ஒரு பகுதியாக, நேட்டோ குண்டுவீச்சு விமானங்கள் தனது நாட்டின் எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் பறந்ததாக அறிவித்தார், இந்த செயலை “எல்லை மீறப்படுகிறது” என அவர் விவரித்தார். இந்த ஆண்டு ஏப்ரலில் நாட்டிற்கு வழங்கிய தனது வருடாந்திர உரையில், புட்டின் இதே பாணியில், “சிவப்புக் கோடுகள்” மீறப்படுவதாக அவரது அரசாங்கம் தீர்மானித்தால் “சமச்சீரற்ற, விரைவான மற்றும் கடினமான” நடவடிக்கைகளை அது எடுக்கும் என்று எச்சரித்திருந்தார்.

கிரெம்ளின் தலைவர், வியாழனன்று, வெளியுறவு அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில், மேற்கு, உக்ரேனுக்கு நவீன ஆயுதங்களை வழங்குவதன் மூலம், நாடுகளின் நிலைமையை மோசமாக்குவதாக குற்றம் சாட்டினார், இது தற்போது நாட்டின் கிழக்கில் இரண்டு ரஷ்ய சார்பு பிரிவினைவாத பகுதிகளை மீட்டெடுக்க உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியில் அதன் சூழ்ச்சிகளுக்கு மேலதிகமாக, நேட்டோ ரஷ்யாவின் எல்லைகளின் பிற பகுதிகளுக்கு மிக அருகில் பயிற்சி நடவடிக்கைகளை நடத்தியதாக அவர் கூறினார்.

அதே சமயம், உக்ரேனின் கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்கத் தவறியதற்குப் பின்னணியில் பாரிஸூம் பேர்லினும் உள்ளதே தவிர, மாஸ்கோ அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களுக்கு எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதங்களை வெளியிட்டமை, மின்ஸ்க் உடன்படிக்கையை செயல்படுத்த முயற்சிக்கும் விதமாக, போரிடும் கட்சிகள் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்துவதை சுட்டிக்காட்டுகிறது.

இது வெளிப்பட்டு வரும் நிலையில், கியேவில் இருந்து பிரிந்து செல்ல விரும்பும் பகுதிகளில் ஒன்றான லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் சில பகுதிகளில் உக்ரேனியப் படைகள் இந்த வாரம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ரஷ்யா உடனான தனது எல்லைக்கு, கூடுதலாக 8,500 துருப்புக்களை அனுப்பியதான ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கம், அதன் கடற்படையினர் இப்போது கருங்கடலில் கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகே பயிற்சிகளை நடத்தி வருவதாக கூறியது.

உக்ரேனும் அதன் மேற்கத்திய ஆதரவு நாடுளும், உக்ரேன் மற்றும் கியேவ் உடனான அதன் எல்லைகளில் குவித்துள்ள துருப்புக்களை ரஷ்யா வெளியேற்ற வேண்டும் என்று கோருகின்றன, மேலும் பெரும்பாலான ஊடகங்கள் மாஸ்கோ படையெடுப்பின் விளிம்பில் இருப்பதாக அறிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லொயிட் ஆஸ்டின், வாஷிங்டனின் ஆதரவு குறித்த பொதுவான உறுதிமொழியை வழங்க அவரது உக்ரேனிய சமதரப்பை சந்தித்து, “உக்ரேனிய எல்லையில் படைகளை கட்டமைப்பதில் பொறுப்பாகவும் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் நடந்துகொள்ளுமாறு ரஷ்யாவை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்வோம்” என்று கூறி, ஒரே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதை நிறுத்தினார். மேலும், “புட்டின் என்ன செய்கிறார் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை,” என்றும் கூறினார்.

இதற்கிடையில், போலந்து-பெலாருஸ் எல்லையில் நிலைமை தொடர்ந்து அச்சுறுத்துவதாக உள்ளது. புதன்கிழமை, ஜேர்மனிக்கு செல்வதற்காக நாட்டிற்குள் முதன்மையாக நுழைய முயன்ற ஆயிரக்கணக்கான ஈராக்கிய அகதிகள் மீது போலந்துப் படைகள் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை ஏவிவிட்டன. போலந்து எல்லையில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடியை உருவாக்குவதாக கூறி மின்ஸ்க் “கலப்பினப் போரில்” ஈடுபடுவதாக வார்சோ, புரூஸ்ஸெல்ஸ் மற்றும் வாஷிங்டன் உடன் சேர்ந்து அதனை குற்றம்சாட்டிய ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அதே நாளில் “போலந்துடன் ஜேர்மனி முழுமையாக ஒத்துழைக்கும்” என்று அறிவிக்க போலந்து பிரதமருக்கு அழைப்புவிடுத்தார்.

24 மணிநேரத்திற்குப் பின்னர் ஜி7 ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது “பெலாருஸ் ஆட்சி அதன் எல்லைகளில் ஒழுங்கற்ற குடியேற்றத்தை ஒழுங்கமைப்பதை கண்டிக்கிறது. இந்த இரக்கமற்ற செயல்கள் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துகின்றன [sic]” என்றும் அது கூறுகிறது.”

“ஒழுங்கற்ற குடியேற்றத்தை ஒரு கலப்பின தந்திரமாக ஆத்திரமூட்டும் வகையில் பயன்படுத்தும் இந்த நடவடிக்கையின் இலக்காக உள்ள போலந்து, லித்துவேனியா மற்றும் லத்வியா நாடுகளுக்கு ஒத்துழைப்பதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

போலந்து எல்லைகளில் உள்ள காடுகளில் உறையும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு, வாயுவால் தாக்கப்பட்டு, மற்றும் அப்படியே இறந்துபோக விடப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும், பெரும் வல்லரசுகளால் சீரழிக்கப்பட்ட நாடுகளை விட்டு வெளியேறியவர்களாவர். அவர்களின் துயரத்திற்கு பெலாருஸின் சீர்குலைந்த சர்வாதிகார ஆட்சிதான் உண்மையான காரணம் என்ற தலைகீழ் யதார்த்தத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் துன்புறுத்தப்படுவதை இப்போது அவை பாராட்டுகின்றன.

ஏகாதிபத்தியம், அதன் பாதிக்கப்பட்டவர்களிடம் இரக்கமற்று உள்ளது. இதுவரை குறைந்தது பதினோரு அகதிகள் உறைந்து இறந்துள்ளனர், மற்றும் போலந்து மற்றும் பெலாருஸ் எல்லைகளின் இருதரப்புகளில் இருந்தும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உணவு, கூடாரங்கள், மற்றும் மருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்கும் தன்னார்வப் பணியாளர்கள் இன்னும் பல உடல்களை கண்டுபிடிப்போம் என எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.

போலந்து படைகளின் புதன்கிழமை தாக்குதல் மற்றும் மேர்க்கெல் உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பெலாருஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆயிரம் அகதிகளை அருகிலுள்ள hangar பகுதிக்கு அகற்ற உத்தரவிட்டார், அங்கு அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கப்படுகிறது. சுமார் ஒரு மைல் தொலைவில் காட்டிற்குள் இன்னும் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர் என்றாலும், அந்த பகுதியிலிருந்து அகதிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக அவரது அரசாங்கம் கூறியது.

மேர்க்கெல் உடன் கலைந்துரையாடியதன் பின்னர் லுகாஷென்கோ புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த தொடங்கினார், அண்ணளவாக 400 அகதிகள் வியாழனன்று ஈராக்கிற்கு திருப்பியனுப்பப்பட்டனர், மேலும் 5,000 பேரை திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பெலாருஸின் தேசிய விமான சேவையான பெலாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான், லிபியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளிலிருந்து உஸ்பெகிஸ்தான் தலைநகரம் தாஷ்கண்ட் வழியாக மின்ஸ்க் நகருக்குள் நுழைய முனையும், ஆனால் போலந்து நுழைவு ஆவணங்கள் எதுவும் இல்லாத நபர்களை கொண்டு செல்வதை நிறுத்தியுள்ளது. துருக்கி, ஈரான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து பெலாருஸூக்கு பயணிக்கும் ஈராக்கியர்களை கொண்டு செல்ல மற்ற விமான சேவைகளும் மறுக்கின்றன.

2000 அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் வகையில் ஒரு மனிதாபிமான புகலிடத்தை உருவாக்க மேர்க்கெலுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக லுகாஷென்கோவின் செய்தித் தொடர்பாளர் வியாழனன்று தெரிவித்தார்.

லுகாஷென்கோ மற்றும் மேர்க்கெல் இடையே மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் தன்மை இன்னும் தெளிவாக இல்லை, பேர்லின் இவர்களின் கலந்துரையாடல் வெறுமனே “பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான கவனிப்பையும் மற்றும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அவர்கள் திரும்புவதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று விவரிக்கிறது. இரண்டு தலைவர்களும் “பெலாருஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டனர் என்றும், இரு தரப்பினரும் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளை நியமிப்பார்கள்” என்றும் மின்ஸ்க் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களின் முன்னேற்றங்கள் எப்படி இருந்தாலும், இறுதியில் ரஷ்யாவுக்கு எதிராக இயக்கப்படும் லுகாஷென்கோ ஆட்சிக்கு எதிரான பிரச்சாரம் தொடரும் என்பது தெளிவாகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் பெலாரூஸூக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்கிறது, மேலும் செவ்வாயன்று அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனம் Mandiat, “Ghostwriter” என்ற தலைப்பிலான தகவல் திருட்டு மற்றும் தவறான தகவல் அளித்தல் பிரச்சாரம் “பெலாருஸ் அரசாங்க நலன்களுடன் ஒருங்கிணைந்தது” என்று அது “அதிக நம்பிக்கை” வைத்திருப்பதாகவும், அதனால் “ரஷ்ய பங்களிப்புகளை நிராகரிக்க முடியாது” என்றாலும் “அத்தகைய பங்களிப்புகள் தொடர்புபட்ட நேரடி ஆதாரங்களை அது வெளிப்படுத்தவில்லை” என்றும் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“பெலாருஸ் அரசாங்க நலன்களுடன் ஏதோவொன்று ஒருங்கிணைந்தது” –இது தவறான செய்திகளை பரப்புபவர்கள் உட்பட எதையோ குறிக்கலாம்- என்ற கூற்றின் பொருள் மேற்கத்திய ஊடகங்களில் மாற்றப்பட்டுள்ளது, சமீபத்திய AP கட்டுரை தெரிவித்தது போல, “பெலாருஸ் தகவல் திருட்டில் ஈடுபட்டதற்கான கட்டாய தடையவியல் சான்றுகள்” உள்ளன.

லுகாஷென்கோவை சந்தித்ததற்காக மேர்க்கெலை விமர்சித்த நேட்டோ அங்கத்துவ நாடுகளான எஸ்தோனியா மற்றும் லாத்வியா இரண்டும், அவற்றின் ரஷ்ய மற்றும் பெலாருஸ் எல்லைகளுக்கு துருப்புக்களை உடனடியாக அனுப்புவதாக அறிவித்துள்ளன. இந்த இரண்டு பால்டிக் நாடுகளும் இந்த வாரம் உடனடி இராணுவப் பயிற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக, லித்துவேனியா ஏற்கனவே பெலாரூஸ் எல்லையில் இரும்பு மற்றும் முட்கம்பி வேலியை அமைக்கத் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று, ஜேர்மனி Nord Stream 2 சான்றிதழை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது, இது ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகம் செய்ய பால்டிக் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய-ஜேர்மன் இயற்கை எரிவாயு குழாய்வழி ஆகும். மாஸ்கோ மற்றும் பேர்லின் இரண்டிற்கும் முக்கியமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து வழியை ஆன்லைனில் கொண்டு வரும் செயல்முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, காரணம் Gazprom அதன் ஐரோப்பிய செயல்பாடுகளை கையாள ஒரு ஜேர்மன் துணை நிறுவனத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்காவும் அத்துடன் உக்ரேன் மற்றும் போலந்து போன்ற நாடுகளும், நீண்ட காலமாக இந்த குழாய்வழித் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்துள்ளன, ஆனால் ஜேர்மனி அதை எப்படியும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

புதன்கிழமை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க தேசிய பாதுகாப்ப ஆலோசகராகப் பணியாற்றியவரும், மற்றும் ரொனால்ட் ரீகன் காலத்திலிருந்து ஒவ்வொரு குடியரசுக் கட்சி நிர்வாகத்திலும் இராஜதந்திர பதவிகளை வகித்தவருமான ஜோன் போல்டன், லுகாஷென்கோவை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார்.

“எனவே, எங்கள் மூலோபாயம், லுகாஷென்கோவை அதிகாரத்தில் இருந்து எப்படி வெளியேற்றுவது மற்றும் அவருக்காக ரிவியராவில் ஒரு நல்ல மாளிகையை அல்லது அதுபோன்ற ஏதாவது ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். [இது] நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும், ஏனென்றால் அவர் ரஷ்யாவை உள்ளே அழைத்தால், அவர்கள் வெளியேறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்று போல்டன் கூறினார்.

Loading