முன்னோக்கு

ஸ்ராலினிச எதிர்புரட்சியின் ஒரு நினைவாண்டு: சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு 30 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பர் 26, 1991 இல், மிக்கைல் கோர்பச்சேவ் தலைமையிலான ஸ்ராலினிச ஆட்சி சோவியத் ஒன்றியத்தை உத்தியோகபூர்வமாக கலைத்தது. சோவியத் ஒன்றியத்தின் முடிவும் மற்றும் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டமையும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் எந்த புரட்சியின் மரபியத்தை உரிமை கொண்டாடியதோ அந்த புரட்சியின் 70 ஆண்டுகால காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக இருந்தன.

சோவியத் தலைவர் மிக்கையில் கோர்பச்சேவ், வலமிருந்து இரண்டாவது, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், இடமிருந்து இரண்டாவது, தொடர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் ஹோஃப்டிக்கு வெளியே கைகுலுக்குகின்றனர். அக்டோபர் 11, 1986, Reykjavik, Iceland. மற்ற ஆண்கள் அடையாளம் தெரியவில்லை. (AP Photo/Ron Edmonds) [AP Photo/Ron Edmonds]

இந்த சம்பவத்தின் இந்த 30 ஆம் நினைவாண்டில் பிரதான ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை பிரசுரங்களில் ஓர் ஒத்த பல்லவியைக் கேட்க முடிகிறது, அவை அனைத்தும் 'இது வரவிருப்பது யாருக்கும் தெரியாது,” என்று ஒரே குறிப்பை ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கின்றன. இலண்டன் பொருளாதார பள்ளியின் பேராசிரியர் Vladislav M. Zubok, பொறிவு: சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்ற சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட அவர் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “ஹிட்லரின் இராணுவங்களின் மிகப்பெரும் தாக்குதலில் தப்பிப் பிழைத்த சோவியத் ஒன்றியம், அதன் உள்நெருக்கடிகள் மற்றும் மோதல்களால் தனக்குள்ளேயே தோற்றுப் போகும் என்று, மிகவும் புத்திசாலி பார்வையாளர்கள் உட்பட, யாராலும் கணிக்க முடியவில்லை.'

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு முன் எதிர்நோக்கப்படவில்லை என்ற வாதங்கள், சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஆண்டுகளைப் பற்றிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுப்பாய்வைக் குறித்து எதையும் குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்கின்றன. 1985இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக கோர்பச்சேவ் பதவியேற்றதைத் தொடர்ந்து, முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை சோவியத்தியலில் (Sovietology) மேலோங்கி இருந்த 'கோர்பிமேனியா'(Gorbymania) மீதான உற்சாக பரவச நிலையில் அது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கோர்பச்சேவின் வெளிப்படைத்தன்மை கொள்கை (கிளாஸ்னோஸ்ட் - glasnost) மற்றும் மறுசீரமைப்பு (பெரஸ்த்ரோய்கா - perestroika) கொள்கைகள் முதலாளித்துவ மீட்டமைப்பின் மூலம் உலக சந்தையுடன் சோவியத் பொருளாதாரத்தை மறுஒருங்கிணைப்பு செய்வதற்கான ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முனைவை வெளிப்படுத்தியது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்தது.

உலக சோசலிச வலைத்தளம் இன்று ICFI இன் வரலாற்று ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளின் ஒரு பரந்த தொகுப்பைப் பிரசுரித்து வருகிறது, இவை கோர்பச்சேவின் கொள்கைகளின் உள்தர்க்கத்தை மிகக் கவனமாக ஆராய்ந்திருந்ததுடன், ஸ்ராலினிசத்தின் உடனடிப் பாதை அந்த தொழிலாளர் அரசினை கலைப்பதாக இருக்கும் என்பதை எச்சரித்திருந்தன.

மார்ச் 1987 இல், சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? கோர்பச்சேவ் மற்றும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி என்பதில் ICFI பின்வருமாறு எழுதியது, “தொழில்நுட்ப பற்றாக்குறையும், தொழில்துறைக்கும் விவசாயத்திற்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளும் உலகச் சந்தையை அணுகுவதன் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும். சோவியத் ஒன்றியத்தை அந்த சந்தையுடன் ஒருங்கிணைப்பதற்கு இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. இதில் ஒன்று, கோர்பச்சேவ் முதலாளித்துவ மீட்டமைப்பை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறார், மற்றொன்று உலக சோசலிசப் புரட்சியாகும்.'

1987 ஆகஸ்டில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான வேர்க்கஸ் லீக்கின் தேசிய செயலாளராக டேவிட் நோர்த், ஸ்ராலினிச உளவுத்துறையின் ஒரு முகவரால் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 47 ஆம் நினைவாண்டு நிகழ்வில் உரையாற்றுகையில், முதலாளித்துவ சொத்துறவுகளை மீட்டெடுப்பதற்காக நகர்கையில், கோர்பச்சேவ் 'ஸ்ராலினிசத்தை மறுதலிப்பதைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அக்டோபர் புரட்சியின் சமூக வெற்றிகளை அதாவது, முன்பு அது தாக்குவதற்கு தைரியம் இருக்காத அரசு சொத்துடைமை மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஏகபோக உரிமையை செயலூக்கத்துடன் கைத்துறக்கவும் நிராகரிக்கவும் தயாரிப்பு செய்து வந்துள்ள அதிகாரத்துவத்தின் துர்நாற்றத்திலிருந்து இது தவிர்க்கவியலாது எழுகின்றார்,” என்றார். (ட்ரொட்ஸ்கிசம் எதிர் ஸ்ராலினிசம்)

1989 இல், பெரஸ்த்ரோய்கா எதிர் சோசலிசம்: ஸ்ராலினிசமும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்டமைப்பும் என்பதை நோர்த் பிரசுரித்தார், அது அந்தாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு மத்தியில் வேர்க்கஸ் லீக்கின் புல்லட்டின் பத்திரிகையில் வெளியான பல கட்டுரைகளை உள்ளடக்கி இருந்தது. கிளாஸ்த்நோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) ஐ 'கொண்டு வருவது' தொழிலாள வர்க்கத்திற்காக சோவியத் ஜனநாயகத்தை மீட்டமைப்பது அல்ல மாறாக 'அரசு தொழில்துறையின் மிகவும் செல்வசெழிப்பான பிரிவுகளுக்குள் உள்ள நிர்வாக உயரடுக்கில் இருந்து, தொழில்நுட்ப வல்லுனர்கள், புத்திஜீவிகள், பேராசைக் கொண்ட குட்டி முதலாளித்துவம் வரையில், இவர்களின் எண்ணிக்கைரீதியான அதிகரிப்பு மற்றும் செல்வசெழிப்பு ஸ்ராலினிச ஆட்சியின் பிரதான இலட்சியத்தில் ஒன்றாக இருந்த நிலையில், சோவியத் சமூகத்தின் மிகவும் தனிச்சலுகை கொண்ட மற்றும் அரசியல்ரீதியில் வெளிப்பட்ட அடுக்குகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கும்' முயற்சி என்பதை நோர்த் எடுத்துக்காட்டினார்.

“சுதந்திர சந்தை கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகம் மீதிருந்த ஏகபோகத்தை கலைப்பது, உற்பத்திச் சாதனங்களின் மீது தனி சொத்துரிமையைச் சட்டபூர்வமாக்குவது' ஆகியவற்றை பெரஸ்த்ரோய்கா உள்ளடக்கி இருந்தது என்றவர் தொடர்ந்தார். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாகத்தான், “ஸ்ரானிச தத்துவமான 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற எதிர்புரட்சிகர தர்க்கம், சோவியத் அரசு சொத்துக்களுக்குக் குழிபறித்து சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்வதில் அதன் இறுதி வெளிப்பாட்டைக் காண்கிறது,” என்று நோர்த் வாதிட்டார்.

இந்த உட்பார்வையின் சரியான தன்மை, வரலாற்று அபிவிருத்திகளில் இருந்து பிறந்த இவற்றின் விளக்கம், இது சோவியத் ஒன்றியத்தின் வர்க்கத் தன்மை மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்டு ICFI ஆல் விவரிக்கப்பட்ட ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பாத்திரம் பற்றிய விஞ்ஞானபூர்வ மார்க்சிச பகுப்பாய்வின் சக்தி வாய்ந்த நிரூபணமாக உள்ளது.

போல்ஷிவிக் கட்சி தலைமையில், பரந்தளவில் பாரிய விவசாயிகளின் ஆதரவுடன், ரஷ்ய தொழிலாள வர்க்கம், விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையின் கீழ், அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றி, உலகின் முதல் தொழிலாளர் அரசை ஸ்தாபித்தது. அது ஒரு இடைமருவு சமூக வடிவமாக இருந்தது, இன்னும் சோசலிச வடிவத்தில் இருக்கவில்லை என்றாலும் அது முதலாளித்துவ வடிவமாக இருக்கவில்லை.

மனித வரலாற்றிலேயே மிகவும் முற்போக்கான சம்பவமாக இருந்த அக்டோபர் புரட்சி, பெருந்திரளான சோவியத் மக்களின் நிலைமைகளில் பிரமாண்டமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது என்பது மட்டுமல்ல. முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமை உலகின் ஒவ்வொரு பாகத்திலும் தொழிலாள வர்க்க மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்குச் சக்தி வாய்ந்த உத்வேகத்தை அளித்தது. ஆனால் வரலாற்றுரீதியில் வேரூன்றியிருந்த ரஷ்யாவின் பின்தங்கிய நிலைமை மற்றும் ஒரு தசாப்தகால உலக போரால் ஏற்பட்டிருந்த பொருளாதார சீரழிவு, புரட்சிகர எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றிலிருந்து எழுந்த முரண்பாடுகளால் அது சூழப்பட்டிருந்தது. மிகவும் அடிப்படையாக, சோசலிசத்திற்கான வளர்ச்சியானது, சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளைக் கடந்து, புரட்சி, மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் முன்னேறிய மையங்களுக்குள் விரிவடைவதைச் சார்ந்திருந்தது.

ஆனால் 1920 களின் ஆரம்பத்தில் புரட்சிகளின் தோல்வியும் காட்டிக்கொடுப்புகளும், மிகவும் துயரகரமாக 1923 இல் ஜேர்மனியில் ஏற்பட்ட தோல்வி, சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படலை நீடித்ததுடன், அதன் முரண்பாடுகளை ஆழப்படுத்தியது. போதுமான உற்பத்தியின்மை சமத்துவமின்மைக்கு வழிவகுத்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் தன்மை குறித்த 1936 இல் ட்ரொட்ஸ்கியின் தலைச்சிறந்த நூலான காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியில், அவர் பின்வருமாறு எழுதினார்: “அரசு நேரடியாக ஆரம்பத்தில் இருந்தே இரட்டைத் தன்மையை கொண்டுள்ளது: அதாவது அதன் சோசலிசத் தன்மை, இது வரையில், உற்பத்திச் சாதனங்களின் சமூக சொத்துடைமையை பாதுகாக்கிறது; முதலாளித்துவத் தன்மை, இதுவரையில் அது வாழ்வாதார பண்டங்களின் வினியோகத்தை பொருட்களின் மதிப்பு மீதான முதலாளித்துவ அளவீட்டில் இருந்து நடத்துகிறது, எல்லா விளைவுகளும் அதிலிருந்து தொடங்குகின்றன,” என்று எழுதினார்.

இந்த முதலாளித்துவ வினியோகத்தைக் கண்காணிக்கும் அதிகாரத்துவம் ஒரு தனிச்சலுகை கொண்ட சாதியாக உருவானது, சமூக சொத்துடைமை உடனான இவர்களின் உறவு முற்றிலும் ஒட்டுண்ணித்தனமானது. இந்த சமூக அடுக்கின் முன்னணி பிரதிநிதியாக ஜோசப் ஸ்ராலின் உருவானார். சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத் திட்டமிடலை அதன் தேசிய நலன்களாகக் கருதியதற்குப் பின்னால் இருந்த அதிகாரத்துவத்தின் சுமையின் கீழ் தொழிலாளர் அரசு உருக்குலைந்தது.

ஸ்ராலின் தனது கொள்கைகளை 'தனியொரு நாட்டில் சோசலிசத்தை' கட்டியெழுப்புவதாகக் கூறி மறைத்துக்கொண்டு, அதிகாரத்துவத்தின் நலன்களை தேசியவாதத்தின் சிலந்தி வலைகளினால் சுற்றுகின்றார். ஆனால் அவரது சர்வாதிகாரக் கொள்கைகள் அதிகாரத்துவம் தனக்கு ஊட்டிய சமூக உறவுகளுக்குள் இருந்த அபரிமிதமான ஆற்றலை இன்னும் அதிகமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.

இந்த நோக்கங்களுக்காக, ஸ்ராலினிசம் சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிகாரத்துவத்தின் வெளியுறவுக் கொள்கை எந்திரங்களாக மாற்றியது. அது, அதிகாரத்துவத்தின் இராஜாங்க உறவுகளை 'இரண்டு கட்ட புரட்சியின்' முதல் கட்டம் என்பதாக அலங்கரித்து, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவை முற்போக்கானதாக தழுவிக் கொள்ளுமாறு உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தி, நனவுபூர்வமாக எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்தை நிலைநிறுத்தியது.

1927 இல் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் படுகொலையும், மிகவும் பேரழிவுகரமாக, 1933 இல் ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தமையும், சோவியத் தொழிலாள வர்க்கத்தைப் பலவீனப்படுத்தியதுடன், அதிகாரத்துவத்தைப் பலப்படுத்தியது. சோவியத் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை, முன்பினும் அதிகளவுக்கு, அதிகாரத்துவத்தின் தேசிய நலன்கள் மீதான ஸ்ராலினின் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்துவ தனிச்சலுகையின் பாதுகாப்பு கிரெம்ளினை ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ ஆட்சிகளுடன் கூட்டணி அமைக்க கொண்டுச் சென்றது. 1930 களின் மத்தியில் சோவியத் ஆதரவிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகளுடன் 'மக்கள் முன்னணி' கூட்டணிகளை உருவாக்கியமையும் அதேபோல் 1939 இல் ஹிட்லருடன் ஸ்ராலின் கூட்டணிக்குள் நுழைந்தமையும் ஸ்ராலினிசத்தின் எதிர்புரட்சிகர தன்மையை நிரூபித்தது.

ட்ரொட்ஸ்கி அவரின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு, ஸ்ராலினிச தேசியவாதத்தை எதிர்த்து, 1923 இன் ஆரம்ப கட்டங்களில் இருந்து அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு எதிராக போராடினார். ட்ரொட்ஸ்கி 1933 இல், ஸ்ராலினின் கொள்கைகள் ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு உதவிய போது, அதிகாரத்துவத்தைச் சீர்திருத்த முடியாது, அது தூக்கியெறியப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதற்காகவே அவர் நான்காம் அகிலத்தை ஒழுங்கமைத்தார்.

1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட போது எழுதப்பட்ட முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்(இடைமருவு வேலைத்திட்டம்) என்பதில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு வாதிட்டார், “இவ்விதத்தில் சோவியத் ஒன்றியம் பயங்கர முரண்பாடுகளை உள்ளடக்கி உள்ளது. ஆனாலும் அது இன்னமும் ஓர் உருக்குலைந்த தொழிலாளர் அரசாகத்தான் இருக்கிறது. சமூக ஆய்வு முடிவு அவ்வாறாக உள்ளது. அரசியல் ஆய்வு முடிவோ வேறுவித தன்மையைக் கொண்டுள்ளது: அதாவது, இந்த தொழிலாளர் அரசில் முன்பினும் அதிகமாக உலக முதலாளித்துவத்தின் அங்கமாக ஆகிவரும் அதிகாரத்துவமோ, இந்த புதிய சொத்துடைமை வடிவங்களைத் தூக்கியெறிந்து, இந்நாட்டை மீண்டும் முதலாளித்துவத்தில் மூழ்கடிக்கும்; அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கி சோசலிசத்திற்குப் பாதையைத் திறந்து விடும்.”

சோசலிச சொத்துறவுகள் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் பாதுகாப்பில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தைத் தூக்கியெறிய சோவியத் தொழிலாள வர்க்கத்தை ஓர் அரசியல் புரட்சிக்கு அழைப்பு விடுத்த, ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கு அக்டோபர் புரட்சி வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக இருந்தது. பொய்கள், களையெடுப்புகள், கண்துடைப்பு விசாரணைகள் மற்றும் பாரிய படுகொலைகளைக் கொண்டு ஸ்ராலின் இதற்கு விடையிறுத்தார்.

சோவியத் வரலாற்றாளர் வாடிம் ரோகோவின், அவரின் ஏழு தொகுதி தொடர் ஆவணமான அங்கே ஒரு மாற்றீடு இருந்ததா? என்பதில், ஸ்ராலின் ட்ரொட்ஸ்கிசத்தை ஒடுக்க நிலைநிறுத்திய ஒடுக்குமுறை இயங்குமுறைகளைப் பெரும் பிரயத்தனத்துடன் ஆவணப்படுத்தினார். ஸ்ராலின் திட்டமிட்டு புரட்சியாளர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும், நூறு ஆயிரக் கணக்கானவர்களைத் தூக்கிலிட்டார். இதை ரோகோவின் 'அரசியல் இனப்படுகொலை' என்று குறிப்பிட்டிருந்தார். மெக்சிகோவின் கொயொகானில் நாடு கடத்தப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி ஆகஸ்ட் 20, 1940 இல் ஸ்ராலினிச முகவர் ரமோன் மெர்காடரால் படுகொலை செய்யப்பட்டதில் இந்த இரத்தந்தோய்ந்த படுகொலை அலை உச்சத்தை எட்டியது.

சோவியத் ஒன்றியத்தின் கலாச்சார மற்றும் புத்திஜீவித வாழ்வு, அதன் அரசியல் சூழல் மற்றும் உத்வேக பலத்தின் மீது தொடுக்கப்பட்ட இத்தகைய குற்றங்களின் தாக்கம் கணக்கிட முடியாதளவில் பேரழிவுகரமாக இருந்தது. ஐந்து நிமிட நேர விசாரணை, பின்னந்தலைக்குக் குறி வைக்கப்பட்ட தோட்டா, நெருங்கிய உறவினர்களைச் சட்டரீதியாக இன்னல்படுத்தல் என இந்த படுகொலையின் மூர்க்கத்தனம் அதனுடன் ஒரு பாசிச குணாம்சத்தைக் கொண்டிருந்தது. அதேநேரத்தில் புரட்சியின் விதையை நிர்மூலமாக்கவும் மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் கலாச்சாரத்தை அவர்களின் சொந்த இழிவான மட்டத்திற்கு தரங்குறைக்கவும் அதிகாரத்துவம் முயற்சி செய்தது.

ஸ்ராலின் 1953 இல் இறந்தார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர், நிகிதா குருஷ்சேவ் ஸ்ராலினின் மிகைமிஞ்சிய நடவடிக்கைகள் சிலவற்றையும் மற்றும் தனிநபர் வழிபாட்டு முறையையும் கண்டித்து, சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) 20 ஆம் மாநாட்டில் ஓர் 'இரகசிய உரை' வழங்கினார். மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து முறித்துக் கொண்ட ஒரு சந்தர்ப்பவாத போக்கு இத்தகைய அபிவிருத்திகளைப் பாராட்டியதுடன், ஸ்ராலினிசத்தை ஒரு முற்போக்கான திசையில் செலுத்த அழுத்தமளிக்க முடியும் என்று வாதிட்டது. ஸ்ரானிசமயமற்றதாக்குவது ட்ரொட்ஸ்கிசத்தை அவசியமற்றதாக ஆக்கும். நிரந்தர புரட்சி முன்னோக்கையும் உலக தொழிலாள வர்க்கத்தை நோக்கிய எந்தவொரு நோக்குநிலையையும் கைவிட்ட அவர்கள், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினை இல்லாதொழிப்பதற்கு ஆதரவாகவும் மற்றும் அதை 'இடதை நோக்கி' அழுத்தமளிக்க முடியும் என்பதற்கு ஆதரவாகவும் இருந்தனர்.

யதார்த்தமோ மீண்டும் மீண்டும் பப்லோவாதம் விதைத்த பிரமைகளைத் தகர்த்தது. அவர் இரகசிய உரை நிகழ்த்தி சில மாதங்களுக்கு உள்ளேயே, குருஷ்சேவ் ஹங்கேரிய புரட்சியை நசுக்க டாங்கியை அனுப்பினார்.

இத்தகைய பப்லோவாத காட்டிக்கொடுப்புகளை எதிர்த்தும், ஸ்ராலினிசத்தின் இயல்பினை பற்றிய உள்பார்வைகளைக் கூர்மைப்படுத்தியும், நிரந்தர புரட்சியின் கோட்பாட்டுரீதியான பாதுகாப்பின் அடிப்படையில், 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைமையில் இருந்த பப்லோவாத போக்குகளுக்கு எதிராக 1980 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடுத்த போராட்டத்தின் மூலம், அது இன்னும் கூடுதலாக நிரந்தரப் புரட்சி பற்றிய அதன் புரிதலை ஆழப்படுத்தியது.

இதன் விளைவாக பிரெஷ்னேவ் (Brezhnev), அன்ட்ரோபோவ் (Andropov), கோர்பச்சேவ் மற்றும் அவர்களின் வகையறாக்கள் என ஸ்ராலினின் கவசத்தைத் தரித்த கைக்கூலிகளுக்கு அக்டோபர் 1917 இன் நினைவே இல்லாமல் போனது. அவர்கள் அந்த எந்திரத்தின் முத்திரையைத் தாங்கி இருந்தார்கள். அதன் நேர்மையற்ற தன்மை மற்றும் கேடுகெட்ட தன்மையால் அடையாளப்படுத்தப்பட்டு, மேலும் ஸ்ராலினிசத்தால் அரசியல்ரீதியாக சிதைக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கினார்கள். தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் நோக்குநிலைப் பிறழச் செய்யாமல் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்டமைக்கப்பைச் செய்திருக்க முடியாது, தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் சொந்த வரலாறு, அனைத்திற்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிசம் குறித்த அறிவு திட்டமிட்டு முறையாக அழிக்கப்பட்டது.

நவம்பர் 1989 இல், மாஸ்கோ வரலாற்று ஆவணப் பயிலகத்தில் உரையாற்றிய டேவிட் நோர்த், கோர்பச்சேவின் கொள்கைகள் 'முதலாளித்துவ மீட்டமைப்பு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலாச்சார மற்றும் சமூக மட்டத்தில் அதிர்ச்சிகரமான வீழ்ச்சியை' அர்த்தப்படுத்துவதாக எச்சரித்தார். சோவியத் தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால், கோர்பச்சேவின் இந்த அரசியல் கருவிகள் சர்வதேச முதலாளித்துவ சூறையாடலுக்கு தொழிலாளர்களை உட்படுத்துவதன் மூலமாக சொத்துக்களைச் சேர்க்க, அக்டோபர் புரட்சியின் வெற்றிக்களை இல்லாதொழித்தன. சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட விளைவு ஒரு பேரழிவாகும். சராசரி ஆயுள்காலம் உட்பட சமூக உயிர்வாழ்வின் ஒவ்வொரு அளவீடும் சின்னாபின்னமாக்கப்பட்டன.

முதலாளித்துவத்தின் மீட்டமைப்பும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நடத்தப்பட்ட இறுதி காட்டிக்கொடுப்புகளாகும். ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு அவசர எச்சரிக்கையும் இந்த குற்றங்களை உறுதிப்படுத்தின.

டிசம்பர் 26 இல் செங்கொடி இறக்கப்பட்டு அதன் இடத்தில் ஜாரிச ரஷ்ய முத்திரை உயர்த்தப்பட்ட போது, மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் பெரும்பாலான கல்வித்துறையினரைப் பிடித்திருந்த கோர்பிமேனியா முதலாளித்துவ வெற்றி ஆர்ப்பரிப்புக்கு வழி விட்டது. முதலாளித்துவ மீட்டமைப்பை முன்கணிக்க முடியாமல், இப்போது அது ஏற்பட்டவுடன், அவர்கள் அதற்கான ஆழ்ந்த காரணங்களை அலட்சியப்படுத்தினார்கள். மேற்கத்திய முதலாளித்துவ சக்திகள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை முதலாளித்துவ ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக கொண்டாடின.

ரஷ்ய புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பை எதிர்த்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுப்பாய்வின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோவியத் ஒன்றியத்தின் முடிவு ஓர் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சி காலக்கட்டத்தைக் கொண்டு வராது என்பதைப் புரிந்து கொண்டது. ரஷ்ய புரட்சியை மேலுயர்த்திய உலக முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளும் நீடித்திருந்தன என்பது மட்டுமல்ல, மாறாக அவை இன்னும் அதிகமாக வெடிப்பார்ந்து மேலெழ இருந்தன. 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட மத்திய பிரச்சினைகள் 21 ஆம் நூற்றாண்டில் தீர்க்க வேண்டியவையாக இருந்தன.

இந்த முன்னோக்கின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் 1995 இன் தொடக்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சிகளை அமைத்தன. 1998 இல், ICFI உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடங்கியது, இன்று அது கேள்விக்கிடமின்றி சர்வதேச சோசலிசத்தின் உத்தியோகபூர்வ குரலாக உள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்கள், முடிவில்லா போராலும், வரலாற்றில் முன்பில்லாத மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவு மற்றும் பாசிசத்தின் வளர்ச்சியாலும் குணாம்சப்பட்டுள்ளன. கடந்த இரண்டாண்டுகளாக, ஒரு நாசகரமான பெருந்தொற்று, முதலாளித்துவத் தன்னலக் குழுக்களின் குற்றகரமான கொள்கைகளால், மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது, அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கோபம் மற்றும் எதிர்ப்புணர்வு அதிகரிப்பதற்கு எரியூட்டி வருகிறது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு முன்னரும், அதன் போதும், அதற்குப் பின்னரும் ICFI விவரித்த முன்னோக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ட்ரொட்ஸ்கிச மற்றும் மார்க்சிச இயக்கத்தின் ஒட்டுமொத்த மரபியத்தில் வேரூன்றியுள்ள இந்த முன்னோக்கு தான், முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டி மற்றும் ரஷ்ய புரட்சியில் உள்பொதிந்த வேலைத்திட்டத்தை உலகளவில் கைவரப்பெறும் ஓர் அரசியல் தலைமையாக தொழிலாள வர்க்கத்தைக் கட்டமைப்பதற்கு அவசியமான அடித்தளமாகும்.

Loading