அமெரிக்க வாகனத் தொழிலாளியும் நீண்டகால ட்ரொட்ஸ்கிசவாதியுமான ஜிம் லோரன்ஸ் 83 ஆவது வயதில் காலமானார்: சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தோழர் ஜிம் லோரன்ஸ் மாதக்கணக்காக நோயுற்றிருந்த பின்னர் ஜனவரி 25 ஆம் தேதி ஓஹியோவில் உள்ள டேட்டனில் காலமானார். அவருக்கு 83 வயதாகின்றது. அவருக்கு 59 வயதான மனைவி லோயிஸ், மகன் டேவிட், மகள் டான்சா, நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு பூட்டக்குழந்தைகள் உள்ளனர்.

ஜிம் தனது வயதுவந்த வாழ்க்கையின் பெரும்பகுதியை சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக அர்ப்பணித்தார். அவரைச் சந்தித்த அனைவரும் கொள்கைகள் மீதான அவரது அர்ப்பணிப்பு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஆர்வம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறனில் அவருக்கு இருந்த அபார நம்பிக்கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டனர்.

1997 இல் அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதி ஜிம் லோரன்ஸ் (WSWS Media)

1970 களின் முற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்துடன் அவர் இணைந்துகொண்டார். மேலும் தொழிற்துறை தொழிலாளர்களின் ஒரு முக்கிய பிரிவினரிடையே இயக்கத்திற்கான ஆதரவு அடித்தளத்தை வளர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்த காலகட்டத்தில் பெற்ற அனுபவங்கள் அமெரிக்க மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடுத்தடுத்த அரசியல் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

பெரும் மந்தநிலையின் கடைசி ஆண்டுகளில் ஓஹியோவின் டேட்டனில் பிறந்த ஏழு குழந்தைகளில் ஜிம் ஒருவராவர். அவரது தந்தை டேட்டனில் உள்ள நகரின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த குறிப்பாக ஜெனரல் மோட்டார்ஸ் உட்பட வாகன நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை தயாரிக்கும் ஒரு வார்ப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

1974 இல் ஜிம் லோரன்ஸ் உடன் புல்லட்டின் இதழுக்காக நேர்காணல்

ஜிம் தனது தந்தை தன்னை ஒரு சோசலிஸ்ட்டாகக் கருதுவதாகவும், தனது தொழிற்சாலையில் ஸ்ராலினிச ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய மின்சார தொழிலாளர் சங்கத்தில் உள்ளூர் தொழிற்சங்க பதவியை வகித்ததாகவும் கூறினார். ஜிம் தனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அல்லது ஆதரவாளராக இருக்கலாம் என்று நினைத்தார். இருப்பினும் அவரது தந்தை அதைப் பற்றி அவருடன் பேசவில்லை. தனது தந்தையிடமிருந்து, முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடு இருக்கிறது என்ற விளக்கத்தை பெற்றதாக ஜிம் கூறினார்.

ஜிம் கருத்துப்படி, UAW தொழிற்சங்கத்தினை அங்கீகரிக்குமாறு கோரிய 1941 வேலைநிறுத்தத்தின் போது ஃபோர்டில் கருங்காலிகளால் அவரது மாமாக்கள் இருவர் பணியமர்த்தப்பட்டனர். இருப்பினும், அவரது மாமாக்கள் தாம் அவர்களால் பயன்படுத்தப்படுவதை விரைவாக உணர்நதுகொண்டு ஏனைய கறுப்பினத் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலைநிறுத்தக்காரர்களுடன் இணைந்து, தொழிற்சங்கத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

தனது இளமைப் பருவத்தில், 1948 இல் UE தலைமையிலான Univis Lens வேலைநிறுத்தம் உட்பட, டேட்டனில் போர்க்குணமிக்க தொழில்துறை போராட்டங்களின் காட்சிகளை ஜிம் கண்டார். இது கருங்காலிகளுடனான ஒரு பாரிய மோதலாக வளர்ந்தது. ஓஹியோ ஆளுனர் தோமஸ் ஹெர்பர்ட் இறுதியில் மறியல்களை உடைக்கும் முயற்சியில், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் ஆதரவுடன் தேசிய பாதுகாவலர் துருப்புக்களை அனுப்பினார். தெருவில் படையினர் வெளிப்பட்டமை வெகுஜன மக்களின் சீற்றத்தைத் தூண்டியதுடன், இறுதியில் பாதுகாவலர் பிரிவுகளை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1957 இல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்னர், ஜிம் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார். அவர் விலக்கப்பட்டபோது, அவரது தந்தை பணிபுரிந்த வார்ப்பு ஆலையில் அவருக்கு வேலை கிடைத்தது. அந்த நேரத்தில் வெள்ளை நிற தொழிலாளர்கள் பெரும்பான்மையாக இருந்த ஆலையில் ஒரு பகுதியில் 'ஒருங்கிணைக்க' உள்ளூர் தொழிற்சங்கம் அவரை எவ்வாறு அனுப்பியது என்பதை ஜிம் கூறினார். சில தொழிலாளர்களின் இனப் பிற்போக்குத்தனம் காரணமாக ஆரம்பத்தில் தனக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் தன்னுடன் நட்பு கொண்ட ஒரு வெள்ளைநிறத் தொழிலாளி மற்றவர்களை அதனை நிறுத்தக்கூறியதாக தெரிவித்தார். வர்க்க ஒற்றுமையால் இனப் பிளவுகளை முறியடிக்க முடியும் என்பதைக் காட்ட இந்த அனுபவம் உதவியது என்றார்.

1966 ஆம் ஆண்டில், டேட்டனில் உள்ள General Motors Delco Moraine brakeஆலையில் ஜிம் வேலைக்குச் சென்றார். 1970 இல் 58 நாட்கள் நீடித்த GM க்கு எதிரான நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் அவர் பங்கேற்றார். இது ஐக்கிய கார் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்த கடைசி ஒப்பந்தமாகும்.

டேட்டனில் உள்ள டெல்கோ மொரைனில் TUALP க்கு வாக்களிக்குமாறு புல்லட்டின் அறிவிக்கின்றது

இது வியட்நாம் போர் மற்றும் சமூகஉரிமைகள் இயக்கத்தின் அனுபவத்தால் பெரும்திரளான மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள் தீவிரமயமாக்கப்பட்ட காலகட்டமாகவும் மற்றும் மகத்தான வர்க்கப் போர்களின் காலகட்டமாகவும் அது இருந்தது.

1972ல் சோசலிச சமத்துவக் கட்சியின் (யுஎஸ்) முன்னோடியான அமைப்பான வேர்க்கர்ஸ் லீக்கை ஜிம் சந்தித்தார். வேர்க்கர்ஸ் லீக்கின் ஆதரவாளர்கள் கட்சியின் செய்தித்தாளான புல்லட்டின் நகல்களை விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

1972 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வேட்பாளராக இருந்த அலபாமா பிரிவினைவாதியும் இனவாதியுமான ஜோர்ஜ் வாலஸின் நிலைப்பாட்டை விளக்கிய வேர்க்கஸ் லீக் இன் துண்டுப்பிரசுரமான உண்மையில் எதற்காக வாலஸ் நிற்கின்றார் என்ற டேவிட் நோர்த்தின் நகலைப் பெற்றதாக அவர் விவரித்தார். ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி இயல்பினை அப்பிரசுரத்தில் வெளிப்படுத்தியமை ஜிம்மைக் கவர்ந்தது. மேலும் அவர் தனது முதல் வேர்க்கர்ஸ் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.

1920களில் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய மற்றும் 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற மார்க்சிச-விரோதக் கோட்பாட்டை முன்வைத்த சலுகைபடைத்த மற்றும் தேசியவாத அதிகாரத்துவத்தின் அரசியல் வாகனமான ஸ்ராலினிசத்தின் பங்கை விளக்கக்கூடிய ஒரே அரசியல் போக்கு வேர்க்கர்ஸ் லீக் மட்டுமே என்று ஜிம் பின்னர் கூறினார். 1930 களில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் அரசியல் இனப்படுகொலை அலையை நடத்தி நூறாயிரக்கணக்கான சோசலிஸ்டுகளைக் கொன்றது. எல்லாவற்றிற்கும் மேலாக லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்களைக் குறிவைத்து, ஆகஸ்ட் 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையுடன் இது அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

'அக்டோபர் புரட்சியின் தலைவர்களைக் கொன்றவர்கள் ஸ்ராலினிஸ்டுகள் என்பதை நான் கண்டுபிடித்தேன்' என்று ஜிம் விளக்கினார். 'எந்தவொரு முதலாளித்துவவாதியும் செய்ய முடியாத அளவுக்கு சோசலிசத்தை இழிவுபடுத்த அவர்கள் அதிகம் செய்தார்கள்.' அவர் தனது அரசியல் வழிகாட்டியாக பணியாற்றிய நீண்டகால வேர்க்கர்ஸ் லீக் உறுப்பினரான லூ ரென்ஃப்ரோவுக்கு விஷேட மரியாதை செலுத்தினார்.

1996 GM Dayton brake ஆலை வேலைநிறுத்தம் (வலதுபக்கத்தில் தொன்மைமிகு ட்ரொட்ஸ்கிசவாதி பிரெட் மாஷேலிஸ்)

தொழிலாள வர்க்கத்தை குழப்புவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் பெண்ணிலைவாதம் மற்றும் கறுப்பு தேசியவாதம் உட்பட பல்வேறு அடையாள அரசியலை ஊக்குவித்த சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய பப்லோவாத துரோகிகளின் பங்கு குறித்து ஜிம்மிற்கு வேர்க்கர்ஸ் லீக் தெளிவுபடுத்தியது. ஆரம்பத்தில், அவர் அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவாத அரசியலுக்கு ஒரு நிலையான விரோதத்தை வளர்த்துக் கொண்டார். ஜிம் மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கின் மற்ற ஆதரவாளர்கள் டெல்கோ மொரைன் ஆலையில் தொழிற் கட்சிக்கான தொழிற்சங்கக் கூட்டணியின் (TUALP) ஒரு பிரிவை நிறுவினர். இது UAW இன் ஒத்துழைப்புவாதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் பரந்த ஆதரவைப் பெற்றது.

அந்த நேரத்தில், அமெரிக்காவில் உள்ள தொழிற்சங்கங்கள் இன்னும் மில்லியன் கணக்கான அரசியல்ரீதியாக சுறுசுறுப்பான மற்றும் மேம்பட்ட தொழிலாளர்களின் விசுவாசத்தைக் கொண்டிருந்தன மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துக் கொண்டிருந்தன. தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க இயக்கத்தை ஒரு அரசியல் மற்றும் சோசலிச முன்னோக்குடன் ஊக்குவிப்பதற்கான வழிமுறையாக தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற்கட்சிக்கான கோரிக்கையை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் மற்றும் ஜனநாயகக் கட்சியுடனான அதன் அரசியல் கூட்டணிக்கும் எதிராக வேர்க்கர்ஸ் லீக் முன்வைத்தது.

அந்த காலகட்டத்தில் UAW இன் மாநாடுகள் அப்போதும் கூட இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டாலும், கணிசமான சிக்கலான விடயங்கள் பற்றிய விவாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அரங்கை வழங்கியது. UAW அரசியலமைப்பு உருவாக்க மாநாட்டின் போது டெட்ராய்டில் உள்ள கோபோ ஹாலில் வேர்க்கர்ஸ் லீக் ஒரு பெரிய மார்க்சிச இலக்கிய மேசையைக் கொண்டிருக்க கூடியதாக இருந்தது. இது பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஈர்த்தது. புல்லட்டின் நிருபர்கள் மாநாட்டு மண்டபத்தில் பிரதிநிதிகள் மத்தியில் பரப்பி, கட்சியின் கொள்கைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். 1977ல் நியூயோர்க் நகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழு உறுப்பினரான டொம் ஹெனெஹனின் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கையொப்பங்களைக் சேகரிப்பதற்கு கூட வேர்க்கர்ஸ் லீக்கால் முடிந்தது.

ஒரு மாநாட்டில், ஜிம் லாரன்ஸின் வருகை கணிசமான பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்கோ மொரைன் ஆலையில் அவரது செயல்பாடு பற்றி பல பிரதிநிதிகள் அறிந்திருந்தனர் மற்றும் அவருடன் பேச விரும்பினர். இதனால் அதனது உள்ளூர் தலைவர் எல்மோ பாரிஷ் பதட்டமடைந்தார். ஜிம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்பதை அறிய அவர் விரும்புவதாக கூறினார். அதற்கு ஜிம் மிக அமைதியாக தான் ஒரு நாள் விடுமுறை எடுத்துவந்து அங்கு நடப்பவற்றை அறிந்துகொள்ள வந்ததாக விளக்கினார்.

டெல்கோ தொழிலாளர்கள் மத்தியில் தேர்தல் பட்டியலில் இடம்பெற கையெழுத்து சேகரிக்கின்றார்

பிப்ரவரி 1973 இல் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற TUALP மாநாட்டில் ஏனைய 275 தொழிற்சங்கவாதிகளுடன் ஜிம் கலந்து கொண்டு, மேலும் விவாதத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

ஏப்ரல் 1974 இல் டெல்கோ மொரைன் இல் நடந்த உள்ளூர் தொழிற்சங்கத் தேர்தலில், TUALP வேட்பாளர்களான ஜிம் லோரன்ஸ் மற்றும் ஜோன் ஆஸ்டின் ஆகியோர் உள்ளூர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு 20 சதவீத வாக்குகளைப் பெற்றனர். TUALP ஆதரவாளர்கள் தொழிற்சாலை தொழிற்சங்க பதவிகளுக்கும் மற்றும் மற்ற ஐந்து நிர்வாக குழு பதவிகளுக்கும் போட்டியிட்டனர்.

TUALP இன் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு கட்டத்தில், UAW தலைவர் லியோனார்ட் வூட்கொக் உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டேட்டனுக்கு வந்தார். TUALP பிரிவுக்கு எதிராக வூட்கொக் 'பைத்தியக்காரனைப் போல் ஆவேசப்பட்டார்' என்று புல்லட்டின் எழுதியது. TUALP வேட்பாளர்கள் பெற்ற ஆதரவு, தொழிற்சங்கம் மற்றும் உள்ளூர் ஊடகங்களின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை உருவாக்கியது. Local 696 இன் தலைவர் பாரிஷ் ஆலைக்கு வெளியே புல்லட்டின் விற்பனையாளர்களை சுடுவதாகவும் மிரட்டினார்.

“வூட்கொக் உடனான சந்திப்பிற்காக தொழிற்சங்க மண்டபத்திற்கு வருமாறு எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் நாங்கள் தொழிலாளர்கள் குழுவுடன் செல்ல முடியாவிட்டால் நாங்கள் செல்ல மறுத்துவிட்டோம்' என்று ஜிம் நினைவு கூர்ந்தார். 'அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.' சோசலிசம் பற்றி குழப்பம் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் ஜிம் இனையும் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களையும் தொழிலாள வர்க்கத்திற்கான போராளிகளாக அங்கீகரித்தார்கள். UAW இனால் அவர்களை ஒருபோதும் பலிகடாவாக்கவோ அல்லது மௌனமாக்கவோ முடியவில்லை.

வாக்கெடுப்புக்கு முன் புல்லட்டினில் வெளியிடப்பட்ட டேவிட் நோர்த் உடனான நேர்காணலில், ஜிம் பின்வருமாறு விளக்கினார். “உள்ளூர் அதிகாரிகள் எப்பொழுதும் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்பதிலிருந்து எங்களைத் தடுக்க முயல்வதற்குக் காரணம், இந்தக் கோரிக்கைகள் UAW இன் தற்போதைய தலைமை எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதை அம்பலப்படுத்துவதற்கு உதவுவதாலாகும்.…”

அவர் தொடர்ந்தார், “தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றிய அதே நபர்களான காங்கிரஸுக்கு அதிகாரத்துவவாதிகள் பிரச்சாரம் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் இந்த அமைப்பு முறைக்கு எதிராக போராட விரும்பவில்லை. சீர்திருத்தங்கள் இல்லாதபோது, சீர்திருத்தங்களுக்காக போராட விரும்புகிறார்கள். இது தொழிலாளர்களை தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் பக்கம் திருப்பும் விளைவை ஏற்படுத்துகிறது. மேலும் இது தோல்விக்கு மட்டுமே வழிவகுக்கும். தொழிலாளர்கள் தாங்கள் ஒரு வர்க்க மோதலுக்குச் செல்கிறார்கள் என்பதை உணர்ந்து என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும். ... இந்த அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு முறிவு இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கட்சியை வைத்திருக்க வேண்டும்”.

1970 இல் GM வாகனத்தொழிலாளர்கள் போராட்டம் (Credit the Bulletin)

ஆளும் வர்க்கம் 1970களின் போர்க்குணமிக்க வர்க்கமோதல்களுக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் நீடித்த சரிவுக்கும் பதிலளிக்குமுகமான 1980களில் எதிர்ப்புரட்சித் தாக்குதலைத் தொடுத்தது. ஜனநாயக கட்சி கார்ட்டர் நிர்வாகத்தின் கீழ், 1979இல் வட்டி விகிதங்கள் அதிக மட்டத்திற்கு உந்தப்பட்டு, தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தொழில்துறையின் பரந்த பிரிவுகளை திவால் நிலைக்கு தள்ளியது. குடியரசுக் கட்சியின் ரீகன் நிர்வாகத்தின் கீழ் இத்தாக்குதல் தீவிரமடைந்தது. இது 1981 இல் PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை பணிநீக்கம் செய்து கறுப்புப் பட்டியலில் இட்டு தங்குதடையற்ற தொழிற்சங்க விரோத மனப்பாங்கிற்கான காலகட்டத்தை திறந்துவிட்டது.

தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களிடம் இந்த தாக்குதல்களுக்கு பதில் இருக்கவில்லை. PATCO வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தியது மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான பரவலான உணர்வை நசுக்க AFL-CIO இயங்கியது. இந்த தசாப்தத்தில் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த அதே நேரத்தில் பெருநிறுவன நிர்வாகத்தின் கருவிகளாக தங்களை நேரடியாக மாற்றிக்கொண்டன. தொழிலாளர்களின் நிலைமைகள் பின்னோக்கி தள்ளப்பட்டு, நூறாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டன.

இந்தக் காலகட்டம் முழுவதும், ஜிம் தனது ஆலையில் புல்லட்டினைப் பரப்பி, கட்சியின் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடினார். பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக, வேர்க்கர்ஸ் லீக் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்த அதன் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தையும் அவர் தீவிர ஆர்வத்துடன் பின்பற்றினார். 1985-86 பிளவில் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிரான போராட்டத்தை ஜிம் ஆதரித்தார். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஒரு மகத்தான தத்துவார்த்த மற்றும் அரசியல் அபிவிருத்திக்கான அடித்தளத்தை இட்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி உடனான பிளவுக்குப் பின்னர் வேர்க்கர்ஸ் லீக் 1980களின் அனுபவங்களின் அடிப்படையிலும், பூகோளமயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் தாக்கங்கள் பற்றிய தத்துவார்த்த ஆய்வுகளின் அடிப்படையிலும், அதிக சலுகை பெற்ற உயர் நடுத்தர வர்க்க நிர்வாகிகளின் அடுக்குகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உட்பட்டனர் என்ற முடிவுக்கு வந்தது. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்க திட்டமிட்டு, வேண்டுமென்றே செயற்பட்டதால், அவை இனி 'தொழிலாளர் அமைப்புகள்' என்று வரையறுக்கப்படுத்தப்பட முடியாது என்ற இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான ஒரு தொழிற் கட்சி அமைப்பதற்கான அதன் முந்தைய கோரிக்கையை வேர்க்கர்ஸ் லீக் திரும்பப் பெற்றது.

1996 இல் டேட்டனில் அமெரிக்க காங்கிரசுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக ஜிம் நின்றார். UAW இன் முடிவில்லா துரோகங்கள் மற்றும் 'குறைந்த தீமை' என்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கும் திவாலான கொள்கையின் படிப்பினைகளை எடுத்துக் கொண்டு, கட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நேரடியாக தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தினார்.

1996 SEP தேர்தல் பிரச்சாத்தின்போது ஜிம் லோரன்ஸ் (WSWS Media)

அதே ஆண்டில், GM தொழிலாளர்கள் டேட்டனில் உள்ள இரண்டு டெல்கோ மொரைன் ஆலைகளில் 17 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்தனர். UAW ஆனது, ஆலையில் வேலைகளைப் பாதுகாப்பதாக GM இடமிருந்து போலியான வாக்குறுதிகளைப் பெற்றது. அப்பகுதியில் உள்ள மற்ற அனைத்து GM ஆலைகளுடன் சேர்ந்து இறுதியில் 20,000 வேலை இழப்புடன் இவ்வாலையும் மூடப்பட்டது. இன்று, டெல்கோ மொரைன், ஜிம் விளக்கியது போல், ஒரு 'கான்கிரீட் கட்டு' மட்டுமே.

2004 இல், சோசலிச சமத்துவக் கட்சி ஆனது உலக சோசலிச வலைத் தளத்தின் எழுத்தாளர் பில் வான் ஆக்கனுடன் இணைந்து அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக ஜிம்மை தேர்ந்தெடுத்தது. ஓஹியோவில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் இடம்பெறவைக்கும் முயற்சியில் ஜிம் ஈடுபட்டார். இதில் ஜனநாயகக் கட்சியின் மாநில அதிகாரிகளின் நேர்மையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் உண்மையான கையொப்பங்கள் அற்பமான தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.

2004 தேர்தல்கள் ஈராக்கில் விரிவடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் UAW மற்றும் பிற தொழிற்சங்கங்களால் மேற்பார்வையிடப்பட்ட அமெரிக்காவில் தொழிற்துறை வேலைகள் தொடர்ந்து சீரழிந்து செல்வதால் ஆதிக்கம் செலுத்தியது. 2004 இல் மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் ஒரு கூட்டத்தில் ஜிம் ஆற்றிய உரையில், தொழிற்சங்கங்களின் பங்கை விளக்கினார், 'UAW மற்றும் AFL-CIO ஆகியவை 1980 களில் உத்தியோகபூர்வமாக கூட்டுழைப்புவாதத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பெருநிறுவன முதலாளிகளின் நலன்களுக்கு அப்பாற்பட்டும் வேறுபட்டும் தொழிலாளர்களுக்கு எந்த நலன்களும் இல்லை என்றன. தொழிற்சங்க அதிகாரிகள் கிரைஸ்லர் போன்ற நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றனர். மேலும் எண்ணற்ற தொழிலாளர்-நிர்வாகக் கட்டமைப்புகள் இடம்பெற்றன. இதனால் 'போட்டித்தன்மையை' மேம்படுத்த நிறுவனங்கள் தொழிலாளர் அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி உற்பத்திவேகத்தை அதிகரிக்கவும் பல்வேறு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை புகுத்துவதற்கு பலதரப்பட்ட தொழிலாளர்-நிர்வாக கட்டமைப்புக்களை உருவாக்க அனுமதித்தன.

'நிர்வாகத்துடன் கைகோர்த்து, UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் மிகவும் நச்சுத்தன்மையுள்ள தேசிய பேரினவாதம் மற்றும் இனவெறியை ஊக்குவித்தன. அமெரிக்க தொழிலாளர்களை தங்கள் எதிரி பெருவணிகம் அல்ல, ஆனால் ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள் அமெரிக்க வேலைகளை 'திருடுவதாக' கூறுகின்றனர் என்று நம்ப வைக்கும் நோக்கத்தில் செயற்பட்டன.

“பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவிப்பது எதை உருவாக்கியது? நான் முதன்முதலில் UAW இல் சேர்ந்தபோது, தொழிற்சங்கத்தில் அடிப்படைத் தொழிலில் 2.25 மில்லியன் தொழிலாளர்கள் இருந்தனர். இன்று அது 638,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா முழுவதும், தனியார்துறை ஊழியர்களில் வெறும் 8.2 சதவீதம் பேர் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததை விட 60 சதவீதம் குறைந்து 2.2 மில்லியன் தொழிற்சாலை தொழிலாளர்கள் அங்கத்தவராக உள்ளனர்.

2005இல், ஜிம் மற்ற சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து இந்தியானா, கோகோமோவில் நடந்த வாகனத் தொழிலாளர்கள் கூட்டத்தில், உதிரிபாகங்கள் தயாரிக்கும் டெல்பியில் வேலைகள் பெருமளவில் அழிக்கப்படுவதை எதிர்த்தார். தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சுயாதீன அமைப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் தலைமையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அவரது பிற்காலங்களில், உடல்நலக் குறைவு ஜிம்மை சோசலிச சமத்துவக் கட்சியில் தீவிரமாகப் பங்கேற்பதைத் தடுத்தது. ஆனால் அவர் தொடர்ந்து உலக சோசலிச வலைத் தளத்தை வாசித்து அரசியல் நிகழ்வுகளை நெருக்கமாகப் பின்பற்றினார். 2018 இல் ஒரு ஒளிப்பதிவு நேர்காணலில் அவர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்:

“முதலாளிகளின் கொள்கைகள் நம்மை ஒரு போரிலிருந்து இன்னொரு போருக்கு இட்டுச் சென்று மனித இனத்தின் அழிவை நோக்கிச் செல்கின்றன. இவை அனைத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒப்புதலுடன் எல்லா இடங்களிலும் உள்ளன. ... தொழிற்சங்கங்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தின் கருவிகளாகவே இருந்து வருகின்றன. உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. 1970களில் கூட, தொழிற்சங்க அதிகாரத்துவம் எதில் ஈடுபட்டால், அது காட்டிக் கொடுக்கப்படும் என்பதை மிகவும் புத்திசாலித்தனமான தொழிலாளர்கள் புரிந்து கொண்டனர்.

'ஊதிய அடிமைத்தனம் மற்றும் போர் அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான ஒரே வழி முதலாளித்துவத்தை இல்லாதொழிப்பதுதான். தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமே அதற்கான சக்தி உள்ளது.

“தொழிலாள வர்க்கம் அதன் சக்தி பற்றி நனவு கொண்டிருக்க வேண்டும்; அது முதலாளித்துவ வர்க்கத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அதற்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். நான்காம் அகிலம் கடந்த 80 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடி வருகிறது. நான்காம் அகிலம் மட்டுமே அதைச் செய்துள்ளது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் நான்காம் அகிலத்தில் சேருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுவே மனித இனத்திற்கு முன்னோக்கி செல்லும் ஒரே வழியாகும்”.

அவரது இறுதி நாட்கள் வரை, தோழர் ஜிம் ஒரு உறுதியான சோசலிசவாதியாகவும், தொழிலாள வர்க்கத்திற்கான போராளியாகவும் இருந்தார். அவரை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் இழந்துள்ளோம்.

Loading