முன்னோக்கு

போர் மேகங்களின் கீழ் ஒலிம்பிக்ஸ் தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுக்களில் போட்டியிட இரண்டாயிரத்து தொண்ணூறு விளையாட்டு போட்டியாளர்கள் உலகெங்கிலுமான பிரதேசங்களின் 91 நாடுகளில் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் கொடி மைதானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 4, 2022 (AP Photo/Jae C. Hong)

போட்டித்தன்மை மற்றும் நல்லிணக்கம் மூலமாக உணரப்படும் அசாதாரண விளையாட்டு சாகசங்களை ஒலிம்பிக்ஸ் கொண்டாடுவதாலும், ஒலிம்பிக்ஸ் மீதான உலகளாவிய ஆர்வமும் உலகெங்கிலுமான பார்வையாளர்களை அது ஈர்த்து வைத்துள்ளது. பனிப் பாதைகளில் மின்னல் வேகத்தில் சறுக்கிச் செல்லும் அழகு மூச்சடைக்க வைக்கிறது. ஒருதலைப்பட்சமாக பார்த்தாலும், “வடிவிலும் நகர்விலும் ஆச்சரியமூட்டும் வகையில், [மனிதகுலத்தின்] எல்லையற்ற திறமைகளை' விவரிக்கும் Hamlet இன்வரிகளின் உண்மையை ஒருவர் உணர்கிறார்.

உலகெங்கிலும் மனிதர்களால் பகிர்ந்து கொள்ளப்படும் போட்டித்தன்மையை, கடுமையான தேசிய-அரசு எதிர்விரோதிகளின் பின்னால் துண்டாடி, விளையாட்டுக்களுக்கான இந்த மனிதகுல கருப்பொருளை தேசியவாதம் எப்போதுமே சீரழித்து விடுகிறது. ஏகாதிபத்திய போரும் வல்லரசுக்கான எதிர்விரோதமும் ஒலிம்பிக்ஸை விகாரமாக்குகின்றன, வேறு விதங்களில் அவை விளையாட்டு போட்டிகளை ஓர் அரசியல் வடிவமாக மாற்றுகின்றன. விளம்பரம், ஏற்பிசைவு ஒப்பந்தங்கள் மூலமாக பெரும் இலாபம் ஈட்டிய பின்னரும், இன்னும் அதைத் தேடி பாய்ச்சப்படும் அசாதாரணமான தொகைகள் தடகளப் போட்டிகளில் இருந்து மனிதகுலத்தை, சிலவேளைகளில் வாழ்க்கையையே கூட, ஓரங்கட்டி விடுகின்றன.

இந்த சீரழிவு, இப்போது உள்ளதை அப்படியே கூறுவதானால், நிச்சயம், வித்தியாசமானது. சீனாவில் இந்த 2022 குளிர்கால ஒலிம்பிக்ஸ், உலகளாவிய மோதல் முனையில் நிற்க வைக்கப்பட்டு நோயால் அலைக்கழிக்கப்பட்ட ஓர் உலகில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக்ஸ் குமிழியின் பாதுகாப்பான எல்லைக்கு வெளியே நிலவுவதைப் போலவே, இவற்றுக்குள் யதார்த்தமின்மையின் காற்று நிரம்பி உள்ளது, உக்ரேன் விவகாரத்தில் வாஷிங்டன் ரஷ்யாவுடன் போரை நியாயப்படுத்தவும் மற்றும் சீனாவின் பூஜ்ஜிய கோவிட் பொது சுகாதார நடவடிக்கைகளை எதேச்சதிகாரமானது, பாசிசவாதம் என்று தாக்குவதற்கும் அது பொய் பிரச்சாரங்களைப் பரப்பி கொண்டிருக்கிறது.

உலகெங்கிலுமான தடகள வீரர்கள் பாரிய மரணப் பிடியிலுள்ள நாடுகளில் இருந்து இப்புவியில் நடைமுறையளவில் இந்த வைரஸ் அகற்றப்பட்டுள்ள ஒரு நாட்டுக்குப் புறப்படுகின்றனர். உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, இரண்டாண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 900,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், அதேவேளையில் அதை விட நான்கு மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் இறப்பு எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி, அமெரிக்காவை அதன் மையத்தில் கொண்டுள்ள உலகளாவிய முதலாளித்துவம், மனித உயிர்களைக் காப்பாற்ற அவசியமான நடவடிக்கைகளை எடுக்க விருப்பமின்றி உள்ளது. ஒரு வைரஸிற்கு மில்லியன் கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள் ஆனால் இதன் பரவலை முற்றிலும் தடுத்திருந்திருக்கலாம். அடிப்படையிலேயே இந்த பெருந்தொற்று சமூக உறவுகளையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தி அடைந்து வரும் போராட்டங்களையும் நிலைகுலைய செய்துள்ளது, தொழிலாள வர்க்கத்தின் உயிர் பணயத்தில் உள்ளது, ஆளும் உயரடுக்கு புரட்சியின் பேராபத்தை உணர்கிறது.

முதலாளித்துவ நெருக்கடி, இலாபத்திற்கான நம்பகமான ஆதாரவளங்களைப் பாதுகாக்கவும் மற்றும் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்குமான தேவை, வாஷிங்டனின் போர்-பைத்தியக்காரத்தனத்தை உந்துகிறது. கடந்த மாதம், அமெரிக்கா, நேட்டோ முன்னிலையில் இருக்க, உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டுவதை நோக்கி திருப்பி விடப்பட்ட மிகப் பெரியளவில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் பொய்கள் குவிக்கப்பட்டன, இந்த போர் வெடித்தால் அது தவிர்க்கவியலாமல் எல்லைகளைக் கடந்து விரிந்து ஓர் உலகளாவிய மோதலாக பற்றி எரியும். மூச்சுவிடும் அவகாசம் கூட இல்லாமல், வாஷிங்டன் சீனா மீது முடிவின்றி தொடர்ச்சியாக அவதூறுகளை அருவருப்பாக வாந்தியெடுக்கிறது, ஒவ்வொன்றும் அதற்கு முந்தைய ஒன்றை விட அதிக பைத்தியக்காரத்தனமாக உள்ளது. சீனா 'பாசிசமாக', “இனப்படுகொலை ஆட்சியாக', அதன் மக்கள் மீது ஒடுக்குமுறை திணிப்பதாக, செல்லப் பிராணிகள் மற்றும் வளர்ப்பு நாய்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஒலிம்பிக்ஸைச் சுற்றி பணயம் வைக்கப்பட்டுள்ள புவிசார் அரசியல் அபாயங்கள் அதன் தொடக்க நாள் விழாக்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் வெளிப்பட்டன. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து முகங்கொடுக்கும் பரஸ்பர அச்சுறுத்தலை எதிர்ப்பதற்காக ஒருவரையொருவர் சந்தித்தனர்.

அவர்கள் ஒரு நீண்ட கூட்டறிக்கை வெளியிட்டார்கள், “ரஷ்யாவும் சீனாவும் அவற்றின் பொதுவான பக்கவாட்டு பிரதேசங்களில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டுக்கு குழிபறிக்க முயலும் வெளிப்புற சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்கும்,” என்றது அறிவித்தது. “எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இறையாண்மை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியிலிருந்து சக்திகள் தலையீடு செய்வதை எதிர்க்க, [மற்றும்] நிறப் புரட்சிகளை எதிர்க்க' அவர்களின் கூட்டு நோக்கத்தை வெளியிட்டனர். இத்தகைய பிரகடனங்கள் குறிப்பாக வாஷிங்டன் மற்றும் நேட்டோவின் போர் சூழ்ச்சிகளை இலக்கு வைக்கின்றன.

அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது, நாங்கள் 'நேட்டோவைக் கூடுதலாக விரிவாக்குவதை எதிர்க்கிறோம், அந்த வட அட்லாண்டிக் கூட்டணி அதன் சித்தாந்தமயப்படுத்திய பனிப்போர் அணுகுமுறைகளைக் கைவிட அழைப்பு விடுக்கிறோம்,” என்றது. புட்டின் ஒரே-சீனா கோட்பாட்டுக்கு ரஷ்யாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார், தாய்வான் சீனாவிலிருந்து அன்னியப்படுத்த முடியா பாகம் என்று அறிவித்ததுடன், தாய்வான் சுதந்திரத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மிக முக்கியமாக புட்டின் மற்றும் ஜி, 117.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சீனாவுக்கு விற்கும் ஓர் உடன்படிக்கையை நிறைவேற்றினர்.

அமெரிக்கா இராஜாங்கரீதியாக ஒலிம்பிக்ஸைப் புறக்கணித்து வருகிறது. வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் தொடர்பு செயலர் ஜென் பிசாக்கி கூறுகையில் இந்த புறக்கணிப்பு 'ஜின்ஜியாங்கில் தொடர்ந்து நடந்து வரும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைக்கு' விடையிறுப்பாக செய்யப்படுவதாக அறிவித்தார். வீகர் மக்களின் இனப்படுகொலையில் சீனா ஈடுபட்டுள்ளது என்ற வாதம் ஒட்டுமொத்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யாகும். கோயபல்ஸ் மற்றும் ஹிட்லரின் கையேட்டைக் கொண்டு வாஷிங்டன் விளையாடுகிறது, அது 'பெரும் பொய்' நுட்பத்தைப் பயன்படுத்தி, அதுபோன்ற மிதமிஞ்சிய அளவில் பொய்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது, இதை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

பைடென் நிர்வாகம் மற்ற அரசாங்கங்களையும் ஈடுபடுத்தி உலகளவில் உத்தியோகப்பூர்வமாக புறக்கணிப்புகள் செய்யும் ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட முயன்றது. ஒரு சிறிய எண்ணிக்கையில் நெருக்கமான அமெரிக்க கூட்டாளிகள் அதைப் பின்பற்றினர், ஆனால் அந்த முயற்சிகள் பெரும் வீண்விரயமாகவே இருந்தன. எப்போதும் கலந்து கொள்ளும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் பரிவாரம் தொடக்க விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது தான் இறுதி விளைவாக இருந்தது.

இது போர்-நாடுபவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஓர் ஒலிம்பிக்ஸ் ஆக உள்ளது. வழமையாக அமைதிவாதிகள் தான் போர் தொடுக்கும் ஒரு நாட்டுக்கு போக மாட்டார்கள், ஆனால் இப்போதோ இது தலைகீழாக நடக்கிறது.

வாஷிங்டன் மற்றும் அதற்கு சலாம் போடும் பெருநிறுவன ஊடகங்கள் உமிழும் பொய் பிதற்றல்களுக்கு ஒரு புறநிலையான தர்க்கம் உள்ளது. ஒவ்வொன்றும் முன்பு என்ன வந்ததோ அதை உள்ளடக்கி இருக்க வேண்டும். உலகெங்கிலுமான பிரதான பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் மற்றும் தலையங்க பக்கங்கள் போர் பிரச்சாரத்தின் உத்வேகத்தில் ஊறியுள்ளன.

திங்கட்கிழமை வாஷிங்டன் போஸ்டில் வெளியான பொது-தலையங்கம், சீனா ஒரு 'பாசிச அரசு' என்று வாதிட்டது. “இனப்படுகொலை ஒலிம்பிக்ஸ்' என்று Fox News பேசுகிறது. அமெரிக்கா மற்றும் சீன குடியுரிமை கொண்ட ஓர் இளம் பெண் சீனாவுக்காக போட்டியிட தேர்ந்தெடுத்ததைச் சீனக் கரங்களின் உணவு ஊசிக்கரண்டிகளால் ஒரு 'பனிச்சறுக்கு வீரர்' திருடப்பட்டு இருப்பதாக Economist பத்திரிகை சித்தரித்தது. சீனாவைப் பகிரங்கமாக பேரினவாதம் மற்றும் பாசிசம் என்று இலக்கு வைப்பது பெரும் விளைவுகளைக் கொண்டுள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில் ஆசிய-விரோத வெறுப்பு குற்றங்கள் 339 சதவீதம் அதிகரித்தன.

அதன் ஆத்திரமூட்டும் பிதற்றல்கள் தொடக்க நாள் விழாவைப் புறக்கணிப்பதற்கு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் என்று வாஷிங்டன் நம்பியிருந்தது, ஆனால் கிட்டத்தட்ட அவ்வாறு நடக்கவில்லை. அமெரிக்க குழுக்களில் எண்பது சதவீதம் கலந்து கொண்டனர், கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானவர்கள் தொலைதூர இடங்களில் அல்லது கோவிட் ஆல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். இத்தகைய ஆத்திரமூட்டல்களின் மானக்கேடான தோல்வியை மூடிமறைக்க முற்படும் வகையில், சபாநாயகர் நான்சி பெலோசி வியாழக்கிழமை அறிவிக்கையில் பெய்ஜிங் தொடக்க விழா கொண்டாட்டங்களை ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் எதிர்ப்பதை அவர் 'விரும்பவில்லை' என்றார், பின்னர் “ஈவிரக்கமற்ற சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் அபாயத்திற்கு” இது மதிப்புடையது அல்ல என்றார்.

வாஷிங்டனின் ஒவ்வொரு பொய்யும் யதார்த்தத்திலிருந்து தலைகீழாக உள்ளது. கோவிட் பரவலைத் தடுக்க அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள் எடுத்துள்ள உலகின் ஒரு நாட்டை அவர்கள் 'மனித உரிமை மீறல்கள்' செய்ததாக குற்றஞ்சாட்டுகிறார்கள், அதேவேளையில் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்கர்கள் இந்த வைரஸால் இறந்திருக்கிறார்கள். தகவல்களை வெளியிட மறுப்பதாக அவர்கள் சீனாவைக் கண்டிக்கிறார்கள், ஆனால் அதேவேளையில் அவர்கள் அமெரிக்காவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் மொத்த இறப்பு எண்ணிக்கையை வழங்குவதை நிறுத்த நகர்ந்து வருகிறார்கள்.

வாஷிங்டன் வீகர் இனமக்கள் மீது அதன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது, பின்னர் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அது நிறுத்த வேண்டுமென கோருகிறது. வாஷிங்டனின் கட்டளைகளைப் பெய்ஜிங் பின்பற்றினால், எத்தனை வீகர் இனமக்கள் இறப்பார்கள்? சீனா உண்மையிலேயே இனப்படுகொலையை நடத்த விரும்பி இருந்தால், பைடென் நிர்வாகத்தின் உள்நாட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை விட, வேறு எந்த பயனுள்ள வழிவகையைக் கண்டிருக்க முடியும்.

சீனா ஆழ்ந்த முரண்பாடுகளால் சிதைக்கப்பட்ட ஒரு நாடாகும். அதன் அசாதாரண பொருளாதார வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தை அளவுக்கதிமாக சுரண்டுவதால் உந்தப்படுகிறது, அதன் வளர்ச்சியின் அஸ்திவாரங்கள் தியானென்மன் சதுக்கத்தில் தொழிலாளர்களை இரத்தச்சேற்றில் படுகொலை செய்ததில் தங்கி உள்ளது. சீனா மீது வாஷிங்டனிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கண்டனங்கள் பொய் மூட்டை என்றாலும், சீனா, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் மலர்ந்தோங்கிய தோட்டம் இல்லை.

1949 புரட்சி முன்நிறுத்திய அடிப்படை பிரச்சினைகளால் சீனா பீடிக்கப்பட்டுள்ளது, அந்த புரட்சி தொடக்கத்தில் இருந்தே அதன் ஸ்ராலினிச தலைமையின் தேசியவாத கொள்கைகளால் சிதைந்திருந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்க புரட்சி இல்லாமல் சீனப் பெருமக்களால் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைச் சுதந்திரப்படுத்திக் கொள்ள முடியாது. இந்த பெருந்தொற்றின் ஈவிரக்கமற்ற புறநிலை தர்க்கம், தேசிய அடித்தளத்தில் கோவிட் ஐ அகற்ற முடியாது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. வெடிப்புகள் மீண்டும் மீண்டும் ஏற்படும், அவற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தேவைப்படும்.

இந்த வைரஸை அகற்றுவதற்காக சீனாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள விஞ்ஞானப்பூர்வ பொது சுகாதார நடவடிக்கைகள் மீது கட்டமைக்கப்பட்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த கொள்கை மூலமாக மட்டுமே இந்த பெருந்தொற்றையும் பாரிய இறப்பின் அதன் ஆளுமையையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும். பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் வெற்றியும் தோல்வியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கியுள்ளது.

சீனா அதன் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே மொத்தமாக வாஷிங்டன் பிரச்சாரத்தின் தீராத வேட்கையாகும். இந்த கொள்கை நீடிப்பதானது, ஒவ்வொரு நாளும் உலகளாவிய பாரிய இறப்புக்கு இங்கே மாற்றீடு இருப்பதை உலகின் தொழிலாள வர்க்கத்திற்கு எடுத்துக் காட்டுகிறது. இந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் இந்த மாற்றீட்டை உலகின் கவனத்திற்கு மத்தியில் கொண்டு வந்துள்ளது.

பெய்ஜிங்கில் தொடக்க நாள் கொண்டாட நிகழ்ச்சிகள் தொடங்கிய போது, “சீனாவில் பூஜ்ஜிய-கோவிட்' என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரை வெளியிட்டது, அக்கட்டுரை பின்வரும் அசாதாரண கருத்தை வழங்கியது: “அமெரிக்கா வழங்கும் அதேயளவுக்குத் தனிநபர் உரிமைகளை வழங்கும் ஒரு நாட்டில், சீனாவின் மூலோபாயம் நிச்சயமாக சாத்தியமில்லை,” என்றது குறிப்பிட்டது.

இந்த அறிவிப்பில் இருந்து தவிர்க்கவியலாமல் வரும் தீர்மானம் என்ன என்றால், அமெரிக்க ஆளும் வர்க்கம் புரிந்து வைத்துள்ள விதத்தில், “தனிநபர் உரிமைகள்' உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் காப்பாற்றுவதற்கும் எதிரானது — மேலும் நிச்சயமாக இவற்றை விட தனிநபர் உரிமைகளே மிகவும் முக்கியமாக முன்நிறுத்தப்பட வேண்டும் என்றாகிறது. ஆனால் அரசாங்கம் பயனுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த மறுத்ததால் இறந்துள்ள ஒரு மில்லியன் அமெரிக்கர்களின் 'தனிநபர் உரிமைகள்' என்ன ஆனது? இறந்தவருக்கு மிச்சம் உள்ள ஒரே 'உரிமை' புதைக்கப்படுவதற்கான உரிமை மட்டுந்தான்.

இரத்தினச் சுருக்கமாக கூறுவதானால், “தனிநபர் உரிமைகள்' என்று டைம்ஸ் பேசும் போது, அது உழைப்பைச் சுரண்ட, இலாபங்களை அறுவடை செய்ய, பாரியளவில் தனிநபர் செல்வ வளங்களைத் திரட்டுவதற்கான முதலாளித்துவவாதிகளின் உரிமைக் குறித்து மட்டுமே அக்கறை கொள்கிறது. உயிர் வாழ்வதற்கான உரிமையை விட 'தனிநபர் உரிமைகள்' பற்றிய கருத்துரு மேலோங்கி இருப்பதால் தான், பூஜ்ஜிய-கோவிட் கொள்கை —அதாவது வைரஸ் பரவலைத் தடுத்து, கோவிட்-19 ஐ அகற்றி முழுவதுமாக ஒழிக்கும் கொள்கை— 'தெளிவாக,” டைம்ஸ் அப்பட்டமாக ஒப்புக் கொள்வதைப் போல—சாத்தியமில்லாமல் உள்ளது.

இது அமெரிக்க சமூகத்தின் தற்போதைய முன்னுரிமைகளைக் குறித்து —நிதி மூலதனத்தினது அதிகாரப்பூர்வ குரலின்— ஒரு நாசகரமான அம்பலப்படுத்தலாகும். பூஜ்ஜிய-கோவிட் கொள்கை மீதான அதன் தாக்குதலில், நியூ யோர்க் டைம்ஸ் அதனை அறியாமலேயே சோசலிச புரட்சிக்கான ஒரு சக்தி வாய்ந்த வாதத்தை முன்வைத்துள்ளது.

Loading