ரஷ்யாவுக்கு நெருக்கமான நீரிணையை மூடுமாறு துருக்கியை உக்ரேன் கோருவதாலும், சிரியா மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுவதாலும் போர் அபாயம் அதிகரித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனிய இராணுவத்திடம் இருந்து டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய 'மக்கள் குடியரசுகளை' பாதுகாக்க ரஷ்யா ஒரு 'சிறப்பு நடவடிக்கையை' தொடங்கியுள்ளது என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்ததை அடுத்து மத்திய கிழக்கிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் போர் வேகமாக பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி சேர்ஜி ஷோய்குவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், இஸ்ரேல் சிரிய நகரத்தின் மீது பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் 1:10 மணியளவில் இலக்குகளை தாக்கினர், மூன்று சிரிய அரசாங்கப் படையினரை கொன்றனர். சிரிய அரசுக்கு சொந்தமான SANA செய்தி நிறுவனம் “வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகளை எதிர்கொண்டு அவற்றில் பெரும்பாலானவற்றை வீழ்த்தியது. இந்த ஆக்கிரமிப்பு சில பொருள் சேதங்களை ஏற்படுத்தியதாக” கூறியது.

நவம்பர் 20, 2019 புதன்கிழமை, சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலால் காயமடைந்த ஒரு பெண்ணிற்கு துணை மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார். (SANA via AP)

வாஷிங்டன் மற்றும் பிற நேட்டோ சக்திகள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை 2011 இல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் சிரியா மீது நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. லெபனான் ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானியப் படைகளுக்கு சொந்தமானது என்று கூறும் நிலைகளையும், சிரிய அரசாங்க நிலைகளையும் டெல் அவிவ் குறிவைத்துள்ளது. நேட்டோ சக்திகள் மற்றும் அவற்றின் பிராந்திய நட்பு நாடுகளால் தூண்டப்பட்ட தசாப்த காலப் போரில், அசாத் அரசாங்கத்திற்கு ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரண்டும் இராணுவ ரீதியாக தீர்க்கமான ஆதரவை வழங்கியுள்ளன.

சிரியா மீதான முந்தைய அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து மாஸ்கோ பெரும்பாலும் மௌனமாக இருந்த நிலையில், பெப்ரவரி 9 தாக்குதல்களால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதும் மற்றும் ஐந்து பேர் காயமடைந்ததும் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து கடுமையான கண்டனத்தைத் தூண்டியது.

இந்த தாக்குதல்களை அது 'சட்டவிரோதமானது' என்று விவரித்தது: 'சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ரஷ்யா கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும் அவற்றை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கிறது' எனவும் குறிப்பிட்டது.

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி ஷோய்குவின் சிரியா விஜயத்தின் நோக்கம் 'ரஷ்யாவும் சிரியாவும் வலிமையானவை என்ற செய்தியை உலகம் முழுவதற்கும் தெரிவிப்பதற்கும், இரு நாடுகளும் உலகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நடத்தும் போர் ஒரேமாதிரியானது' என்று புதனன்று சிரிய வெளியுறவு மந்திரி பைசால் மிக்தாட் அறிவித்தார்'.

'உக்ரேனிலிருந்து லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் குடியரசுகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் முடிவுக்கு சிரியாவின் ஆதரவை' மிக்தாட் மீண்டும் உறுதிப்படுத்தினார். “பயங்கரவாதப் போரின் போது சிரியாவுக்கு எதிராக அது என்ன செய்ததோ அதையே இப்போது மேற்குலகம் ரஷ்யாவுக்கு எதிராகச் செய்கின்றது. அவர் தனது நாட்டில் உள்ள அமெரிக்க மற்றும் துருக்கிய இராணுவப் படைகளை 'ஆக்கிரமிப்பாளர்கள்' என்று கண்டனம் செய்தார்.

சிரியாவின் மற்றுமொரு முக்கிய நட்பு நாடான ஈரான், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டியதற்காக நேட்டோவை குற்றம்சாட்டி மற்றும் சமாதானமான தீர்வுக்கு அழைப்பு விடுத்தது. ஈரான் அமெரிக்கா தலைமையிலான போரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையிலும், அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் முடக்கப்படும் நிலையில், ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் நேற்று பின்வருமாறு கூறினார்: 'உக்ரேனிய நெருக்கடி நேட்டோ ஆத்திரமூட்டல்களில் வேரூன்றியுள்ளது. போரை மேற்கொள்வதை ஒரு தீர்வாக நாங்கள் பார்க்கவில்லை. … போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதும், அரசியல் மற்றும் ஜனநாயக தீர்வில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.'

எவ்வாறாயினும், யதார்த்தத்தில் மத்திய கிழக்கில் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. ஏனெனில் நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கு எந்த விட்டுக்கொடுப்பும் செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. ஜனவரி நடுப்பகுதியில் சிரியா மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவின் எல்லையில் வான்வெளியில் கூட்டு ரோந்து பணியை தொடங்கிய பின்னர், 15 ரஷ்ய போர்க்கப்பல்கள் கடந்த வாரம் சிரிய கடற்கரையில் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டன.

நேற்று, இஸ்ரேலின் Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாத லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளியில் ஒரு ஆளற்ற ட்ரோன் விமானம் கடந்து சென்றதை அடுத்து, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலிகளை இயக்கியது.

இந்த போர் ஆபத்து, 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதால் உருவான பேரழிவான விளைவுகளின் உச்சக்கட்டம் ஆகும். உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு அமெரிக்க-நேட்டோ சக்திகளுக்கு சாதகமாக இருப்பதுடன் மற்றும் உலகப் போரின் ஆபத்தை அதிகரிக்கிறது. எவ்வாறாயினும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பதட்டங்கள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் 30 ஆண்டுகால இடைவிடாத நேட்டோ ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் சாத்தியமான ரஷ்யாவிற்கு எதிரான அதன் பொறுப்பற்ற சுற்றிவளைப்பின் விளைவாகும்.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் மில்லியன் கணக்கான இறப்புகள் மற்றும் காயமடைவதற்கு காரணமான நேட்டோ ஏகாதிபத்திய போர்கள் ஒரு புதிய உலகப் போரின் அபாயத்தை இடைவிடாமல் தூண்டிவிட்டன. எனவே, இந்த மாதம், மத்திய கிழக்கு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மத்திய கட்டளை தலைமையகத்தின் பொறுப்பை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் எரிக் குரில்லா, ரஷ்ய-உக்ரேன் மோதல் சிரியாவிற்கும் பரவக்கூடும் என்று செனட் ஆயுத படைகள் குழுவிடம் கூறினார்.

மத்திய கிழக்கில் சீனாவின் அதிகரித்துவரும் வணிகச் செல்வாக்கும் வாஷிங்டனால் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது. 2020 இல் ஈரானுடன் 25 ஆண்டு வர்த்தக மற்றும் இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், பெய்ஜிங் சமீபத்தில் சிரியாவை சீனாவின் “ஒரே இணைப்பு ஒரே பாதை” என்ற உலகளாவிய தொழில்துறை உள்கட்டமைப்பு திட்டத்தில் சேர்த்துக்கொண்டது.

உக்ரேனுக்கும் சிரியாவுக்கும் வடக்கிலும் தெற்கிலும் துருக்கி அமைந்திருப்பதால் அம்மோதல்களின் மையத்தில் உள்ளது. அது சிரியாவில் நேட்டோ ஆதரவுடைய இஸ்லாமிய 'கிளர்ச்சி' போராளிகளுக்கு ஆயுதமளித்திருப்பதோடு, அமெரிக்க ஆதரவுடைய சிரிய குர்திஷ் தேசியவாத கிளர்ச்சியாளர்கள் அதன் எல்லையில் ஒரு அரசை நிறுவுவதைத் தடுக்க சிரியாவை மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளதால், துருக்கி சிரியப் போரில் இரத்தக்களரிமிக்க பாத்திரத்தை வகித்துள்ளது.

நேற்று, அதன் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒன்றிணைந்து, டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் மற்றும் உக்ரேனில் அதன் 'சிறப்பு நடவடிக்கையை' அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவை அங்காரா கண்டித்தது. உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை தனது அரசாங்கம் 'ஏற்றுக்கொள்ள முடியாதது' மற்றும் 'நிராகரிக்கிறது' என்ற துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகான்: 'சர்வதேச சட்டத்திற்கு முரணானது என நாங்கள் கருதும் இந்த நடவடிக்கை அமைதி, சமாதானம் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அடியாகும்' என்று குறிப்பிட்டார்.

எர்டோகனின் கொள்கையில் ஒரு பாரிய முரண்பாடு உள்ளது. அங்காரா நேட்டோவின் உக்ரேன் கொள்கை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அதன் விரைவான போர் உந்துதலை ஆதரிக்கிறது. முக்கியமான Bayraktar TB2 ஆயுதமேந்திய ட்ரோன்களை கியேவிற்கு அது வழங்குகிறது. இது 2020 இல் உக்ரேனுடன் இராணுவக் கூட்டணியில் கையெழுத்திட்டது. பெப்ரவரி தொடக்கத்தில் எர்டோகனின் கியேவ் விஜயத்தின் போது ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் Bayraktar ட்ரோன்களை கூட்டாக தயாரிப்பதற்கான துருக்கிய-உக்ரேனிய இராணுவ ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இருப்பினும், அங்காரா மாஸ்கோவுடன் முக்கியமான இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் கொண்டுள்ளது. அமெரிக்க எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அது கிரெம்ளினில் இருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியது. இது ரஷ்யாவிலிருந்து அதன் இயற்கை எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை நேரடி குழாய்கள் மூலம் பெறுகின்றது. தெற்கு துருக்கிய நகரமான மெர்சினில் அக்குயு அணுமின் நிலையத்தை ரஷ்யா கட்டி வருகிறது. துருக்கியும் தனது 60 சதவீதத்திற்கும் அதிகமான கோதுமையை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவை பற்றிக் குறிப்பிட்டு, எர்டோகன் புதன்கிழமை, 'நாங்கள் இரண்டையும் விட்டுவிட முடியாது. நாங்கள் ரஷ்யாவுடன் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளோம். உக்ரேனுடனும் நாங்கள் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

மாஸ்கோவுடன் அங்காராவின் உறவுகள் எதுவாக இருந்தாலும், அங்காரா ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் உந்துதலின் ஒரு பகுதியாக மோதலில் கியேவை ஆதரித்துள்ளது.

நேற்று, உக்ரேன் தூதர் வசீல் போட்னர் (Vasyl Bodnar) பின்வருமாறு கூறினார்: 'இந்த மோதலில் துருக்கி நடுநிலையாக இருக்கக்கூடாது.' ரஷ்ய கப்பல்களுக்கான துருக்கிய ஜலசந்தியை மூடுமாறு அவர் அங்காராவிடம் கேட்டார். 1936 Montreux உடன்பாடு துருக்கிக்கு போஸ்போரஸ் (Bosporus) மற்றும் டார்டனெல்லஸ் (Dardanelles) ஜலசந்திக்கான கட்டுப்பாட்டை வழங்குவதுடன் மற்றும் மத்தியதரைக் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையில் கப்பல்கள் செல்வதை ஒழுங்குபடுத்துகிறது.

ரஷ்யாவுடன் போரைத் தொடர, இந்த ஆண்டு உக்ரேனை 'மாட்ரிட் உச்சிமாநாட்டின் போது நேட்டோவில் உறுப்பினராக்க துருக்கி உதவ வேண்டும்' என்றும் போட்னர் ஆத்திரமூட்டும் வகையில் கோரினார். உக்ரேன் நேட்டோவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உக்ரேன் வெற்றிபெறும், இந்தப் போரில் ரஷ்யா தோற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

இந்த நிகழ்வுகள் ஒரு தீவிர எச்சரிக்கையாகும். துருக்கி ரஷ்ய கப்பல்களுக்கான நீரிணையை மூடினால் அல்லது சிரியாவில் அல்லது கருங்கடலில் ரஷ்ய படைகளுடன் மோதினால் ஒரு மோதல் வெடிக்கலாம். மேலும், நேட்டோவின் பிரிவு 5 இன் படி, 'ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'தரப்பினர்களுக்கு' எதிரான ஆயுதமேந்திய தாக்குதல் அவர்கள் அனைத்திற்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்' என்பதால் நேட்டோ கூட்டணிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு முழுமையான போருக்கு இது வழிவகுக்கும்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பாரிய தொற்று ஏற்படுத்துவதற்கான நேட்டோ சக்திகளின் கொள்கை, மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்து, முழு உலகத்தையும் அச்சுறுத்தும் ஒரு போரைத் தூண்டும் அதே வேளையில், போருக்கு பாரிய மக்கள் எதிர்ப்பு உள்ளது. நேற்று துருக்கியில் 'போர் வேண்டாம்' மற்றும் 'போரை நிறுத்து' என்ற ஹேஷ்டேக்குகளுடன் இலட்சக்கணக்கான ட்வீட்கள் அனுப்பப்பட்டன.

உலகப் போரின் தற்போதைய ஆபத்தில் இருந்து வெளிவரும் ஒரே வழி, போருக்கு எதிராக நிலவும் ஆழ்ந்த எதிர்ப்பை அணிதிரட்டி சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதுதான்.

Loading