முன்னோக்கு

ரஷ்ய இசைக்குழுநடத்துனர் வலேரி கெர்கீயேவுக்கு எதிரான பிரச்சாரம்: போருக்கான சேவையில் நடுத்தர வர்க்க வெறித்தனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்தும் மற்றும் மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் பல மாதங்களாக முடிவில்லாத போர்-ஆதரவு பிரச்சாரத்திற்குப் பின்னர், இப்போது அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் ஒரு பேரினவாத ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரம் நடந்து வருகிறது. அதன் இலக்காக ரஷ்ய இசைக்கலைஞர்கள், இசைக்குழுநடத்துனர்கள் மற்றும் பாடகர்கள் இருக்கின்றனர்.

வியாழன் பிற்பகுதியில், நியூ யோர்க் நகரின் Carnegie Hall நிர்வாகம், பிரபல ரஷ்ய இசைக்குழுநடத்துனர் வலேரி கெர்கீயேவ், நன்கு அறியப்பட்ட கச்சேரி அரங்கில் வியன்னா பில்ஹார்மோனிக்கை (Vienna Philharmonic) இனி வெள்ளிக்கிழமை நடத்தமாட்டார் என்று அறிவித்தது. சேர்ஜி ராச்மானினோஃப்பின் பியானோ கச்சேரி எண்.2 நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நன்கு அறியப்பட்ட பியானோ கலைஞர் டெனிஸ் மாட்சுவேவின் நிகழ்ச்சியையும் நிர்வாகம் இரத்து செய்தது.

68வயதான கெர்கீயேவ், இன்று உலக பாரம்பரிய இசையில் மிகவும் திறமையான மற்றும் மரியாதைக்குரிய நபர்களில் ஒருவராக உள்ளார். இத்துறையில் ரஷ்ய மற்றும் முன்னாள் சோவியத் கலைஞர்கள் சிறந்து விளங்கினர். அவரது சர்வதேச நிகழ்ச்சிகள் பனிப்போரின் போது 1985 இல் பிரிட்டனில் ஒரு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அந்த நேரத்தில் றேகன் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்துடன் தீவிரமான பதட்டங்களைத் தூண்டியது. கால் நூற்றாண்டுக்கு முன்பு, கெர்கீயேவ் நியூயோர்க்கின் மெட்ரோபொலிட்டன் ஓப்பராவின் முதன்மை விருந்தினர் இசைக்குழுநடத்துனராக நியமிக்கப்பட்டார்.

இந்த புதன், மே 1, 2013 புகைப்படத்தில், வலேரி கெர்கீயேவ், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் ரஷ்யாவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதற்கு முன்னதாக புதிய மரின்ஸ்கி கலையகத்தில் முன்னாள் படையினர் மற்றும் மூத்த ஊழியர்களுக்காக 'முன் அறிமுக' நிகழ்ச்சியைப் பார்வையிடுகிறார். (AP Photo/Dmitry Lovetsky, File)

நிகழ்ச்சியில் இருந்து கெர்கீயேவ் நீக்கப்பட்டதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட சிறிது காலத்திலேயே 1990களில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் கெர்கீயேவ் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அவர் அளித்த ஆதரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது தெளிவாக மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது Carnegie Hall முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டமை நிர்வாகத்தை அழுத்தத்திற்குள்ளாக்கியது. சிஐஏ பிரச்சாரத்திற்கான பிரதான கூடங்களில் ஒன்றான நியூ யோர்க் டைம்ஸ், கெர்கீயேவை ஒரு இசைக்கலைஞர் அல்ல, மாறாக ரஷ்ய மிருதுவான-சக்தி அரசியலின் முகவர், 'ரஷ்ய அரசுடன் ஆழமான உறவுகளைப் பேணுதல் மூலமாக பிரபல்யமான சர்வதேச தொழில்முறை வாழ்க்கையை கட்டியெழுப்பிய கலாச்சார தூதர்' என்று முத்திரை குத்தியது.

கெர்கீயேவின் மற்ற சர்வதேச ஈடுபாடுகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. மேலும் அவரது சர்வதேச தொழில் வாழ்க்கையின் தொடர்ச்சி நவீனகால விசுவாசப் பிரமாணங்களுக்கு உட்பட்டதாக்கப்பட்டுள்ளது. மிலான் நகர La Scala ஓபரா ஹவுஸ், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கெர்கீயேவ் பகிரங்கமாக கண்டிக்கவில்லை என்றால், மார்ச் 5ம் தேதி நிகழ்ச்சியில் தோன்றுவதை கைவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது. முனிச்சின் நகர தலைவர் அத்தகைய அறிக்கையை வெளியிட அவருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் அல்லது முனிச் பில்ஹார்மோனிக்கின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவார் என்று அறிவித்துள்ளார். செப்டம்பரில் திட்டமிடப்பட்ட கெர்கீயேவ் விழாவை இரத்து செய்வது குறித்தும் ரோட்டர்டாம் நகரம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சாரத்தின் பின்னால் திகைப்பூட்டும் பாசாங்குத்தனம் உள்ளது. சேர்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் நடந்த போர்களை ஆதரித்ததற்காக அமெரிக்க இசைத்துறையில் எந்த ஒரு நபரும் இதுவரை எந்த பழிவாங்கலையும் சந்தித்ததில்லை என்பதை குறிப்பிடாமலே மேலும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. டைம்ஸ் பத்திரிகை மற்றும் ஜனநாயகக் கட்சியும் கூட, பாலஸ்தீனியர்கள் தம்நாட்டினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதற்காகவும், சிறிய காசா பகுதியில் தொடர்ச்சியான பாரிய அட்டூழியங்களுக்காகவும் எதிர்க்கும் இஸ்ரேலிய அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் மீதான புறக்கணிப்பை ரஷ்ய இசைக்கலைஞர்களைத் தடை செய்வதற்கான தங்கள் ஆதரவுடன் தொடர்புபடுத்திக் காட்ட முயற்சிக்கவில்லை.

கெர்கீயேவ் ஒரு ரஷ்ய பிரஜை என்பதற்காக அல்ல, மாறாக புட்டினுக்கு அவர் அளித்த ஆதரவின் காரணமாகவே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற கூற்று முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு அமெரிக்க இசைக்கலைஞரும், கலைஞரும் அல்லது விஞ்ஞானியும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ததால் அல்லது கலாச்சார அல்லது விஞ்ஞான விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவில் பணியாற்றியிருந்தால், அமெரிக்க அரசாங்கத்தின் பரந்த குற்றங்களின் காரணமாக அவர்களது தொழில்முறை வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமா? பராக் ஒபாமாவை பகிரங்கமாக ஆதரித்த ஒவ்வொரு ஹாலிவுட் பிரபல்யமும் ட்ரோன் தாக்குதல் இலக்குகளின் 'கொலை பட்டியல்களை' ஜனாதிபதியும் பிற அதிகாரிகளும் மேற்பார்வை செய்த அவரது 'பயங்கர செவ்வாய்' கூட்டங்களுக்கு பொறுப்பானவர்களா?

பல ரஷ்ய பாரம்பரிய கலைஞர்கள் இப்போது இதேபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இது புட்டினுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நபர்களுக்கு அப்பால், ரஷ்ய இசை மற்றும் பொதுவாக கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் வரை பிரச்சாரம் விரிவடைந்துள்ளது. யூரோவிஷன் பாடல் போட்டி ரஷ்யாவிலிருந்து இந்த ஆண்டு போட்டியாளர்களை ஏற்காது என்று அறிவித்துள்ளது. அந்த நாட்டில் பிறந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொள்வது 'போட்டிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. உக்ரேனில் போர் தொடங்குவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கும் முன்னராக இறந்த பியோர் சாக்கோவ்ஸ்கி மற்றும் பிற ரஷ்ய இசையமைப்பாளர்களின் படைப்புகளை பல்வேறு இசைக்குழுக்கள் அகற்றத் தொடங்கியுள்ளன.

இந்த அருவருப்பான காட்சி அமெரிக்க அரசாங்கம் பிரதான ஊடகங்களின் உதவியுடன் தூண்டிவரும் போர் வெறியின் விளைவாகும். இது டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஒரு காலத்தில் அமெரிக்க தாராளமயத்தின் தூண்களாக கருதப்பட்ட பிற ஊடகங்களால் தூண்டப்படுகிறது.

ரஷ்ய-எதிர்ப்பு வெறுப்பை ஊக்குவிக்கும் இந்தப் பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை. இவ் ஆதரவு பெரும்பாலும் சலுகை பெற்ற நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளை மையமாகக் கொண்டது. பெரும்பாலான அமெரிக்க மக்கள் ரஷ்யாவுடனான போரையோ அல்லது உக்ரேனில் குறிப்பிடத்தக்க அமெரிக்க ஈடுபாட்டையோ எதிர்ப்பதாக கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து காட்டுகின்றன. ஆனால் டைம்ஸின் வரிகளை வாசிப்பதனால் இதனை அறிந்துகொள்ள முடியாது. டைம்ஸில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூக நோய்களுக்கும் புட்டினைக் குற்றம் சாட்டும் ஆவேசமான அறிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வெட்கக்கேடானமுறையில், இதை எதிர்க்கும் ஒரு பெரிய கல்வியாளர், எழுத்தாளர் அல்லது அறிவுஜீவிகள் இல்லாதுள்ளது.

இந்த சமூக அடுக்கு இந்த வகையான கையாளுதல்களால் மிகவும் தாக்கத்திற்கு உட்படக்கூடியதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, செல்வச் செழிப்பான குட்டி முதலாளித்துவம் ஒன்றன்பின் ஒன்றாக சூனிய வேட்டையாடும் பிரச்சாரத்தின் பிடியில் உள்ளது. இது குற்றச்சாட்டுகள் மற்றும் சூழ்ச்சிகளின் அடிப்படையில் எண்ணற்ற தொழில்வாழ்க்கையை அழித்துள்ளது. இதில் ஒப்பேரா பாடகர் பிளசீடோ டொமிங்கோ மற்றும் மெற்ரோபொலிற்றான் இயக்குனர் ஜேம்ஸ் லெவீன் மீதான #MeToo தாக்குதல்களும் அடங்கும்.

இந்த பிரச்சாரங்களில் உணர்ச்சிகளுக்கு அழைப்புவிடுவது, முறையான வழக்கு நடைமுறைகள் மீதான தாக்குதல்கள், வரலாற்றை இழிவுபடுத்துதல் மற்றும் பொய்யாக்குதல் மற்றும் இனம் மற்றும் இனக்குழு ஆதிக்கம் செலுத்தும் உலகக் கண்ணோட்டம் ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதுடன் அவை இந்த பிரிவினருக்குள் ஜனநாயக நனவை அதிர்ச்சியடையும் வகையில் முடங்கச்செய்ய வழிவகுத்தன. ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே உலக ஏகாதிபத்தியத்துடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொண்ட இந்த கண்ணோட்டம் தான் இந்த சமூக அடுக்கின் வர்க்க நலன்களையும் பிரதிபலிக்கிறது.

'பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்' மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏராளமான கண்மூடித்தனமான போர்கள், இவை அனைத்தும் பொய்கள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை, கடந்த முப்பது ஆண்டுகளாக வேறொரு பிரபஞ்சத்தில் வாழ்ந்தது போல் இந்த அடுக்குகளின் பிரதிநிதிகள் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

தற்போது ஆரம்ப நிலையில் உள்ள கெர்கீயேவ் மற்றும் பிற கலைஞர்கள் மீதான தாக்குதல் ஒரு குழப்பம்மிக்க வரலாற்று சமாந்திரங்களைக் கொண்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க வரலாற்றில் சில மோசமான அரசியல் குற்றங்கள் இந்த வகையான வெறித்தனமான இனவாத சூழலை உருவாக்குவதற்கு முன் நடந்தன. ஜேர்மன் குடியேற்றவாசிகள் மீதான கொடூரமான தாக்குதல்கள் முதலாம் உலகப் போரின் போது நிகழ்ந்தன. இதில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளியும் சோசலிசவாதியுமான ரொபேர்ட் ப்ரேஜர் ஏப்ரல் 1918 இல் இல்லினாய்ஸில் கொலின்ஸ்வில்லில் கொல்லப்பட்டார். இரண்டாம் உலகப் போர் ஜப்பானிய அமெரிக்கர்கள் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தால் இழிவான முறையில் பாரியளவில் சிறைப்பிடித்ததைக் கண்டது.

இந்த பேரினவாத பிரச்சாரங்கள், 1918 இல் யூஜின் டெப்ஸ் கைது மற்றும் 1941 இல் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமை உட்பட, போரை எதிர்த்த சோசலிசவாதிகள் மீது பரந்த அளவிலான தாக்குதலுக்கான நிலைமைகளை உருவாக்கியது.

ரஷ்யா அல்லது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பிறந்த 400,000 பேர் உட்பட தற்போது 2.4 மில்லியன் ரஷ்ய-அமெரிக்கர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். RT மற்றும் பிற ரஷ்ய ஊடகங்கள் மூலம் புட்டினால் ஒழுங்கமைக்கப்பட்டு இயக்கப்படும் எதிரி முகவர்களைப் போல அவர்கள் நடத்தப்பட வேண்டுமா? தமது தொழில்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு நிபந்தனையாக ரஷ்ய அரசாங்கத்தையும் அதன் நடவடிக்கைகளையும் பகிரங்கமாக கண்டிக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்களா? உண்மையில், வியாழன் அன்று ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸின் எரிக் ஸ்வால்வெல், கிரெம்ளினின் நடவடிக்கைகளுக்கு ஒரு கூட்டுத் தண்டனையாக ரஷ்ய சர்வதேச மாணவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்தார்.

கெர்கீயேவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும், முதலாம் உலகப்போரில் Boston Symphony Orchestra இன் ஜேர்மனியில் பிறந்த இயக்குனரான கார்ல் முக் மீதான தாக்குதலுக்கும் இடையே ஒரு குழப்பமான ஒற்றுமை உள்ளது. அமெரிக்க கொடியின் கீழ் கச்சேரிகளை நிகழ்த்த அவர் 'மறுத்துவிட்டார்' எனக் கூறப்பட்ட பத்திரிகை பிரச்சாரத்திற்குப் பிறகு, முக் தனது பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு, இரவில் கைது செய்யப்பட்டு 'வெளிநாட்டு எதிரி' என்று 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு பதிலாக, முக் இசையின் உலகளாவிய தன்மையை சுட்டிக்காட்டி, தேசியவாதத்திற்கு அதன் கீழ்ப்படிதலை நிராகரித்து, “கலை என்பது தனியே ஒரு விஷயம், எந்த ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது குழுவுடன் தொடர்புடையது அல்ல. எனவே, எங்களைப் போன்ற ஒரு அமைப்பு தேசபக்தியை வெளிப்படுத்துவது மிகப்பெரிய தவறும், கலை ரசனை மற்றும் கொள்கைகளை மீறுவதாகும். Symphony Orchestra ஒரு இராணுவ இசைக்குழு அல்லது நடனக்கூட இசைக்குழு (ballroom orchestra) என்று பொதுமக்கள் நினைக்கிறார்களா?' என்றார்.

ரஷ்ய இசைக்கலைஞர்களுக்கு எதிரான பிரச்சாரம் பொது நனவை விஷமாக்குவதையும், சிறந்த இசை எப்போதுமே ஊக்குவிக்கும் உணர்திறன் மற்றும் மனித ஒற்றுமையை மக்களிடம் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான இசைக்கலைஞர்களின் பரிமாற்றம் பதட்டங்களைத் தணிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. மேலும் இரு நாடுகளின் கலாச்சார சாதனைகளுக்கு பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தி, ரஷ்ய-எதிர்ப்பு வெறுப்பின் மிகவும் அதீதமான வடிவங்கள் தீவிர வலதுசாரிப்பக்கம் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தியது. இந்த வரலாற்றில் அமெரிக்காவிற்கான சிறந்த சோவியத் இசைக்கலைஞர்களின் சுற்றுப்பயணங்களும் அமெரிக்க ஜாஸ் இசைக்கலைஞர்களின் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுப்பயணங்களும் அடங்கும். 1958 ஆம் ஆண்டில், டெக்சாஸில் பிறந்த வான் கிளிபேர்ன் மாஸ்கோவில் நடந்த சர்வதேச சாக்கோவ்ஸ்கி போட்டியில் வென்றபோது சோவியத் பொதுமக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

தொழிலாள வர்க்கத்திற்குள், ஒரு வித்தியாசமான அணுகுமுறை நிலவுகிறது. பல தசாப்தங்களாக அமெரிக்க படையெடுப்புகள் மற்றும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்க தொழிலாள வர்க்க இளைஞர்கள் உள்ளனர். வாஷிங்டனின் 'தேசிய இறையாண்மை' மற்றும் 'மனித உரிமைகள்' ஆகியவற்றிற்காகப் போராடுவதாகக் கூறுவது பற்றி அவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய சொல்லாடல்களுக்குப் பின்னால் ஆளும் உயரடுக்கின் நலன்கள் உள்ளன என்பதை தொழிலாளர்கள் கசப்பான அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டனர். எப்பொழுதும் போலவே, உலகத் தொழிலாளர்களே இதற்கு விலை கொடுக்கப்படுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

எவ்வாறாயினும், இந்த மறைந்திருக்கும் இந்த எதிர்ப்பு பரவலான, ஒழுங்கமைக்கப்படாத மற்றும் அரசியல் ரீதியாக வெளிப்படுத்தபடாது இருப்பது மிகப்பெரிய ஆபத்தாகும். மூன்றாம் உலகப் போரை நோக்கிய உந்துதல் நிறுத்தப்பட வேண்டுமானால், அதைத் தடுக்க தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச, சர்வதேசவாதத்தின் அடிப்படையில் அணிதிரள வேண்டும்.

Loading