அமைதிவாதத்திலிருந்து போர்க் கட்சி வரை: ஜேர்மனியின் பசுமைக் கட்சியினரின் அரசியல் பரிணாமம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமூக ஜனநாயகக் கட்சி, (SPD), சான்சிலர் வேட்பாளர் ஓலாஃப் ஷோல்ஸ், இரண்டாவது வலது, பசுமைக் கட்சித் தலைவர்களான அன்னலெனா பெயபொக், இடது மற்றும் ரோபேர்ட் ஹாபெக், இரண்டாவது இடது, மற்றும் வலதுபுறம், சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவர் கிறிஸ்டியான் லிண்ட்னர், ஒரு கூட்டுச் செய்திக்காக நவம்பர் 24, 2021 புதன்கிழமை (AP Photo/Markus Schreiber)

இரண்டு குற்றகரமான உலகப் போர்களுக்குப் பின்னர் ஜேர்மன் இராணுவவாதம் திரும்பிய வரலாறு பற்றி எப்போதாவது எழுதப்பட்டால், பசுமைவாதிகள் ஒரு முன்னணி பாத்திரத்தை வகிப்பர்.

1980 இல் கட்சி நிறுவப்பட்டபோது, அதன் வேலைத்திட்டம் அமைதிவாதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அணுசக்திக்கு எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. ஐரோப்பாவில் அணு-ஆயுதம் கொண்ட நடுத்தர தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு எதிரான வெகுஜன மக்களின் எதிர்ப்புக்கள், அவற்றின் ஆரம்ப வெற்றிக்கு காரணமாக இருந்தன.

இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அவர்கள் அமைதிவாதத்தை தூக்கியெறிந்தனர். 1998 இல் அவர்கள் முதன்முதலில் கூட்டாட்சி அரசாங்கத்தில் இணைந்தபோது, பசுமைவாதிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்கனவே ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் ஹிட்லரின் வேர்மாக்ட் இராணுவத்தின் பேரழிவிற்கு உட்பட்டிருந்த யூகோஸ்லாவியா மீது குண்டுவீச்சை ஒழுங்கமைத்ததன் மூலம் முதல் ஜேர்மன் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை ஏற்பாடு செய்தனர்.

அவர்களின் இரண்டாவது அரசாங்க பங்கேற்புடன், பசுமைவாதிகள் இறுதியாக ஜேர்மன் இராணுவவாதத்தின் முகமாக மாறிவிட்டனர். கட்சியின் முதல் செய்தித் தொடர்பாளர் பேட்ரா கெல்லி தனது தலைமுடியில் பூக்களுடன் புகைப்படம் எடுத்திருந்த நிலையில், இப்போது வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் இரும்பு கவச தொப்பி அணிந்து புகைப்படங்களில் காட்சியளிக்கின்றார்.

ரஷ்யா மற்றும் ஜனாதிபதி புட்டின் மீதான பெயபொக்கின் ஆவேசமான தாக்குதல்கள் அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள இராணுவவாத வட்டங்களின் பாராட்டைப் பெற்றன. மார்ச் 1 அன்று, அவர் ஐ.நா பொதுச் சபைக்கு 'நாங்கள் உக்ரேனை இராணுவ ரீதியாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்' என அறிவிப்பதற்காக குறிப்பாக நியூ யோர்க் நகரத்திற்கு பறந்தார்.

'ரஷ்யாவின் போர் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது,' என்று பெயபொக் விளக்கினார். 'நாங்கள் ஒரு முக்கிய தருணத்தை அடைந்துள்ளோம். நேற்றைய உறுதிப்பாடுகள் இனி பொருந்தாது. இன்று நாம் யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு புதிய யதார்த்தத்தை எதிர்கொள்கிறோம். இது ஜனாதிபதி புட்டின் எங்கள் மீது திணித்த ஒரு யதார்த்தமாகும்” என்றார்.

உண்மையில், பசுமைவாதிகள் பல ஆண்டுகளாக உக்ரேன் மோதலை வேண்டுமென்றே தூண்டி வருகின்றனர். ஏற்கனவே 2004 இல், கட்சியுடன் இணைந்த ஹைன்ரிச் போல் அறக்கட்டளை (Heinrich Böll Foundation) ஆரஞ்சு புரட்சி என்று அழைக்கப்படுவதை ஆதரித்தது. அப்போதிருந்து, அது உக்ரேனில் உள்ள நேட்டோ ஆதரவாளர்களை ஊக்குவித்து நிதியளித்து வந்துள்ளது. 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்து, மேற்கத்திய சார்பு ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்து, இன்றைய போருக்கு அடித்தளம் அமைத்த வலதுசாரி சதியில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

ஜேர்மனியின் கூட்டாட்சி பாராளுமன்றத்தின் பசுமை பிரதிநிதியான மரியலூஇஸே பெக், கியேவில் நடந்த போராட்டங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்று, அதைப் பற்றி ஒரு நாட்குறிப்பு எழுதினார். ஹைன்ரிச் போல் அறக்கட்டளையின் தலைவரான அவரது கணவர் ரால்ஃப் ஃபுக்ஸ், ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தது, கூட்டாட்சி அரசாங்கத்தைத் தாக்கினார். அரசாங்கம் அதை ஆக்ரோஷமாக எதிர்ப்பதற்குப் பதிலாக 'ரஷ்ய தலைமைக்கு உதவியற்ற முறையீடுகளை' செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தில் ஸ்வோபோடா மற்றும் ரைட் செக்டர் போன்ற பாசிச சக்திகள் ஆற்றிய தீர்க்கமான பாத்திரம் பசுமைவாதிகளால் வேண்டுமென்றே குறைத்துக் காட்டப்பட்டது.

இன்று, பெயபொக் மோதலுக்கான ஒரு இராஜதந்திர தீர்வை நாசப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார் — உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பின்னர் இருந்து மட்டுமல்ல. டிசம்பர் 8 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து, பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கான ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளையும் அவர் திட்டவட்டமாக நிராகரித்தார் மற்றும் 'கடுமையான நடவடிக்கைகளை' எடுப்பதாக அச்சுறுத்தினார்.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் Süddeutsche Zeitung க்கு அளித்த பேட்டியில், ஜேர்மன் இராணுவத்திற்கான ஒரு பாரிய மறுஆயுதத் திட்டத்திற்கும், உலகளாவிய அரசியலில் ஐரோப்பாவிற்கு ஒரு பெரிய இராணுவப் பங்கிற்கும் ஆதரவாக பெயபொக் பேசினார். மேற்குலகம், சீனா, ரஷ்யா அல்லது துருக்கி போன்ற நாடுகளுக்கு களத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றால், ஐரோப்பா மீண்டும் உலகில் அதன் 'சமாதானப் பாத்திரத்தை' இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பெயபொக் அந்த நேரத்தில் கூறினார்.

அதிக இராணுவ செலவு மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் பேசினார். சில பகுதிகளில் நீங்கள் 'துப்பாக்கிகள் சுடக்கூடியதாக இருக்கும் மற்றும் இரவு பார்வை சாதனங்கள் செயல்படக்கைடியதாக இருக்க அதிக முதலீடு செய்ய வேண்டும்' என்று அவர் கூறினார். அரசாங்கத்தில் பசுமைகட்சி பங்கேற்றுக் கொண்டால், வலுவான ஐரோப்பிய இராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரான்சுடன் பேசுவதாக உறுதியளித்தார். 'இது சுலபமான பணியாக இருக்காது: ஆனால் நாங்கள் அதைத் தவிர்க்க முடியாது.'

அரசாங்கத்தில் இணைவதற்கு முன்பு துணை-சான்சிலராகவும் பொருளாதார அமைச்சராகவும் பெயபொக் உடன் இணைந்து கட்சியை வழிநடத்திய ரோபேர்ட் ஹாபெக், உக்ரேனுக்கு ஜேர்மன் ஆயுத விநியோகம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குழாய்வழி இடைநிறுத்தம் ஆகியவற்றிற்காக நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

உக்ரேனில் நடந்த போர், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு வரவேற்கத்தக்க போலிக்காரணமாக அமைந்தது. ஒரு வாரத்திற்குள் ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் முன்னெடுப்பை அறிவித்தது. ஜேர்மனியை மீண்டும் ஐரோப்பாவின் முன்னணி இராணுவ சக்தியாக மாற்ற பாதுகாப்புச் செலவு இந்த ஆண்டு மூன்று மடங்காக உயர்த்தப்படும்.

இந்த 'புதிய வெளியுறவுக் கொள்கை சகாப்தத்திற்கான' திட்டங்கள் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தன. கூட்டணி அரசுப் பேச்சுவார்த்தைகளுக்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் நிபுணர்களால் அவை தயாரிக்கப்பட்டன. எனினும், பொதுமக்கள் எதிர்ப்பை தூண்டும் அச்சம் காரணமாக அவை வெளியிடப்படவில்லை.

உக்ரேனில் நடக்கும் போர் நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட மறுஆயுதத் திட்டங்களை நியாயப்படுத்த உதவுகிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் உறுதிப்படுத்தியுள்ளார். 'ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிந்தைய ஒரு வாரத்தில், ஒரு புவிசார் அரசியல் ஐரோப்பாவின் தாமதமான பிறப்பையும் நாங்கள் கண்டோம்,' என அவர் பல மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் எழுதினார். 'பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பொதுவான குறிக்கோளுடன், உலக அரங்கில் நமது அரசியல் இலக்குகளைத் தொடரும் திறனைக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தை மிகவும் வலுவானதாகவும், அதிக பாதுகாப்பு உணர்வுள்ளதாகவும் மாற்றுவது எப்படி என்று நாங்கள் விவாதித்து வருகிறோம். கடந்த தசாப்தத்தை விட கடந்த வாரத்தில், இந்தப் பாதையில் நாம் அதிக முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்”.

பசுமைக் கட்சியின் தேர்தல் வேலைத்திட்டத்தின் மையமாக இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட இப்போது ஹாபெக்கால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியை ரஷ்ய எரிசக்தி விநியோகத்திலிருந்து சுயாதீனமாக்குவதற்காக, நிலக்கரி மற்றும் அணுமின் நிலையங்கள் நீண்ட நேரம் செயல்பட அனுமதிப்பது பற்றி அவர் பேசினார். 'உக்ரேனில் நடந்த போரின் நிலைமைகள் காரணமாக, அவர்களின் உயர்மட்டத் தலைவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெறுமனே கவனத்திலெடுக்காது விட்டுள்ளனர்' என்று Frankfurter Allgemeine Zeitung திருப்தியுடன் கூறியது.

சமூக ஜனநாயகவாதிகள் (SPD), பசுமைவாதிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகளால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விளக்கு கூட்டணி அரசாங்கம், மிகக் குறுகிய காலத்தில் அதன் சொந்த கூட்டணி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதில் FAZ மகிழ்ச்சி அடைகிறது. “மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. காலாவதியாகிவிட்டது, காலாவதியாகிவிட்டது, மாற்றப்பட்டது, கேள்விக்குரியது, பொருத்தமற்றது என்பவை கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பொருந்தக்கூடிய முக்கிய வார்த்தைகளாகிவிட்டன' என்று செய்தித்தாள் குறிப்பிட்டது. 'ஒரு புதிய பாதுகாப்புக் கொள்கை, ஒரு திருத்தப்பட்ட வெளியுறவுக் கொள்கை, ஒரு திருத்தப்பட்ட எரிசக்திக் கொள்கை மற்றும் பொதுவாக: தெளிவான தலைமை' ஆகிய CDU வில் உள்ள மேர்க்கெலின் வலதுசாரி விமர்சகர்கள் அவசரமாக கோரிய அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

ஹாபெக், போரின் தொடக்கத்திற்குப் பின்னர், அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதல் ஜேர்மன் அரசாங்க அமைச்சரானபோது அவர் அமெரிக்காவிலும் கொண்டாடப்பட்டார். 'எரிவாயு குழாயின் முடிவு, இராணுவ உதவிக்கான முழுமையான திருப்பம் மற்றும் பாதுகாப்பு செலவினங்களில் அறிவிக்கப்பட்ட அதிகரிப்பு ஆகியவை, ஜேர்மனியை ஒரு சிக்கலான குழந்தை என்பதிலிருந்து ஒரே இரவில் அமெரிக்க அரசாங்கத்தின் விருப்பமான பங்காளியாக மாற்றியுள்ளன' என்று Redaktionsnetzwerk Deutschland அறிவித்தது. 'மாற்றங்கள் என்பது நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள் அசாதாரணமான அளவிற்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்றே அர்த்தப்படுகின்றது' என்று ஹாபெக் கூறினார்.

பசுமைவாதிகள் அமைதிவாதத்திலிருந்து இராணுவவாதத்திற்கு மாறுவதை அகநிலை நோக்கங்கள் அல்லது 'அதிகாரம் கெடுக்கின்றது' போன்ற சலிப்பான சொற்றொடர்களால் விளக்க முடியாது. இது கட்சியின் சமூக மற்றும் அரசியல் மரபணுவில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

1968 மாணவர் போராட்டங்களில் பங்கேற்ற, ஏற்கனவே இருக்கும் சமூக ஒழுங்குடன் சமாதானம் செய்தவர்களை, 1980களில் பசுமைக் கட்சியில் ஒன்று திரட்டினர். அணுசக்தி எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு குடிமக்களின் முன்முயற்சியாளர்கள் அவர்களுடன் இணைந்தனர். 'இந்த வெவ்வேறு போக்குகளிடம் இருந்த குறைந்தபட்ச பொதுவான அம்சம் அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நிராகரிப்பதாகும்' என்று கட்சி நிறுவப்பட்ட முப்பதாவது ஆண்டு விழாவில் நாங்கள் எழுதினோம்.

'தொழிலாள வர்க்கம் ஒரு அக்கறையற்ற வெகுஜனமாக உள்ளது, பின்தங்கிய கருத்துக்களுக்கு எளிதில் ஆட்படக்கூடியது மற்றும் நுகர்வோர் அமைப்பில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற தப்பெண்ணத்தை அவர்கள் 68 இயக்கத்திலிருந்து கொண்டு வந்தனர்.'

சமூக ரீதியாக, பசுமைவாதிகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் படித்த அடுக்குகளை சார்ந்திருக்கின்றனர், சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பின்னர் பங்குச் சந்தை மற்றும் நிலபுல வணிக ஏற்றம் ஆகியவற்றில் முன்னோடியில்லாத வகையில் செல்வச் செறிவூட்டலை அனுபவித்தனர், அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் தேக்கமடைந்து வீழ்ச்சியடைந்தன. பசுமைக் கட்சியினர் பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் (72 சதவீதம்) மற்றும் உயர்நிலைப் பள்ளித் தகுதி (4 சதவீதம்) மட்டுமே உள்ள உறுப்பினர்கள் மிகக் குறைந்த விகிதத்தில் உள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இந்த விகிதம் 41 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாகவும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியில் (CDU) 43 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும் உள்ளது.

ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா ஃபிஷ்ஷர் தலைமையிலான SPD/பசுமைக் கூட்டணி அரசாங்கத்தின் போது, பசுமைக் கட்சியினர் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மன் இராணுவத்தின் முதல் வெளிநாட்டு இராணுவ ஈடுபாட்டை ஆதரித்தது மட்டுமல்லாமல், ஹார்ட்ஸ் சட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் 2010 உடன், கூட்டாட்சி குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து மிக விரிவான சமூக வெட்டுக்களுக்கும் ஆதரவளித்தனர். அவர்கள் இப்போது CDU உடன் கூட்டணி அமைத்து பல கூட்டாட்சி மாநிலங்களில் ஆட்சி செய்கின்றனர்.

இந்த சமூக பின்புலம் கொண்டவர்களின் போர் வெறி ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காகும். உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல், 'உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போரினால் எழுப்பப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகள்' பற்றிய விமர்சன ஆய்வு, நடுத்தர வர்க்கத்தின் இந்த மனநிறைவான பிரிவுகளால் அனுமதிக்கப்படமாட்டாது. ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளையடிக்கும் நலன்களுக்கு இணங்காத மற்றும் உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் நோக்கத்தை கொண்ட, உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பிற்கு எதிரான கொள்கை ரீதியான இடதுசாரி எதிர்ப்பை, அவர்கள் திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர்.

Loading