நவ-நாஜிக்களுக்கும் கூலிப்படையினருக்கும் உக்ரேன் ஒரு சர்வதேச அணிதிரளும் புள்ளியாக மாறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம் முழுவதிலுமிருந்து வரும் நவ-நாஜிக்கள் மற்றும் கூலிப்படையினருக்கு உக்ரேன் ஒரு அணிதிரளும் புள்ளியாக மாறி வருகிறது. உண்மையான போர் நிலைமைகளின் கீழ் சண்டையிடவும், கொல்லவும் மற்றும் அனுபவத்தைப் பெறவும் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதன் விளைவாக கட்டுக்கடங்காத கொள்ளைச் செயல்களும் போரும் தீவிரமடைந்து நீடிக்கின்றன. மேலும், இத்தகைய சக்திகளை அணிதிரட்டுவது, இந்த கூலிப்படைகள் உருவாகும் நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஆபத்தாகும்.

முதலாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலிய தொழிலாளர்களை பயமுறுத்திய முசோலினியின் பாசிச அதிரடி துருப்புக்கள், சோசலிஸ்டுகளான ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெக்ட் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் வால்டர் ரத்தினவ் மற்றும் மத்தியாஸ் எர்ஸ்பேர்கர் ஆகியோரைக் கொன்ற ஜேர்மன் Freikorps மற்றும் ஹிட்லரின் அதிரடி துருப்புக்கள் போன்றவற்றிற்கு போர்முனைகளில் இருந்த மூர்க்கத்தன்மையாக்கப்பட்ட நபர்களே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

மரியுபோலில் உள்ள அசோவ் படைப்பிரிவின் கவச வாகனங்கள். (Image: Wanderer 777 / CC BY-SA 4.0 / Wikimedia)

தீவிரமயமாக்கப்பட்ட நவ-நாஜிகளுக்கான புனித யாத்திரை இடமாக உக்ரேன் மாறிமை தற்போதைய போரின் தொடக்கத்துடன் மட்டும் ஆரம்பமாகவில்லை. 2014இல் ஜனாதிபதி யானுகோவிச்சை தூக்கியெறிவதில் முக்கியப் பங்கு வகித்த தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள், பின்னர் டொன்பாஸில் போரைத் தொடர்ந்தனர். உலகெங்கிலும் உள்ள தீவிரமப்படுத்தப்பட்ட நவ-நாஜி குழுக்களுடன் உறவுகளைப் பேணி, சர்வதேச அளவில் மிகச் சிறப்பான வலையமைப்பை கொண்டிருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளம்அறிவித்ததன்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டைம்ஸ் இதழ் “கடந்த ஆறு ஆண்டுகளில் 17,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கிளர்ச்சியாளர்கள் உக்ரேனுக்கு சென்றிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டது. குறிப்பாக, சுயமாக தன்னை ஒரு நவ-நாஜி மற்றும் யூத-விரோதமானவர் ஒப்புக்கொண்ட ஆண்ட்ரி பிலெட்ஸ்கி (Andriy Biletsky) ஆல் நிறுவப்பட்ட அசோவ் படைப்பிரிவு தீவிர வலதுசாரிப் படைகளுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படைப்பிரிவு 2014 இலையுதிர்காலத்தில் உக்ரேனிய தேசிய காவல் படையுடன் இணைக்கப்பட்டதுடன் மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ அங்கத்துவ நாடுகளால் வழங்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் அதற்கு கிடைத்தது.

தற்போதைய போரின் தொடக்கத்தில் இருந்து, கூலிப்படையை ஆட்சேர்ப்பு செய்வது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையாகியுள்ளது. பெப்ரவரி இறுதியில், ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி ஒரு 'சர்வதேச படையணி' உருவாக்கத்தை அறிவித்தார். 'உங்களுக்கு போர் அனுபவம் இருந்தால், நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஐரோப்பாவை பாதுகாக்கலாம்' என்று அவர் அறிவித்தார்.

அப்போதிருந்து, உக்ரேனிய அரசாங்கம் சமூக ஊடகங்கள் மற்றும் விஷேடமான வலைத் தளங்கள் வழியாக இராணுவ பயிற்சி மற்றும் போர் அனுபவத்துடன் தன்னார்வலர்களை தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. இது 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தில்' எவ்வாறு இணைவது என்பது பற்றிய விரிவான வழிமுறைகளை வழங்குவதுடன் மற்றும் உக்ரேனிய தூதரகங்களை அதற்காக தொடர்புகொள்ளுமாறு குறிக்கிறது. இத்தூதரகங்கள் அவ்வாறு வருபவர்களின் அனுபவத்தையும் பொருத்தமானவர்களா என்பதை தெளிவுபடுத்துவதுடன் மற்றும் பயணத்திற்கும் உதவும்.

சர்வதேச படையணிக்கான உத்தியோகபூர்வ உக்ரேனிய வீடியோ விளம்பரம் (screenshot)

இந்த அழைப்பு யாரை நோக்கமாகக் கொண்டது என்பதை உத்தியோகபூர்வ விளம்பர ஒளிப்பதிவு தெளிவாக்குகிறது. வலதுசாரி தலைமை வழிபாடு மற்றும் மோசமான ரஷ்ய எதிர்ப்பு ஆகியவற்றின் கலவையுடன், இது கீழ்மட்டமான உணர்வுகளுக்கு அழைப்புவிடுகின்றது.

'சுதந்திர உலகின் அனைத்து வீரர்களுக்கும் இது ஒரு பகிரங்க அழைப்பு' என்ற வார்த்தைகளுடன் ஒளிப்பதிவு தொடங்குகிறது. பின்னர், போர்க் காட்சிகள் மற்றும் கனரக போர் உபகரணங்களின் படங்களுடன், அது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது: 'அவர் 'அதிரடிப்போரை' திட்டமிட்டார், ஆனால் அதற்கு பதிலாக 'அதிரடி பதிலடியை' பெற்றார். அப்போது தங்களை 'ரஷ்ய இராணுவம்' என்று அழைக்கும் அவரது ஏராளமான முட்டாள்கள் ஸ்டிங்கர்கள், ஜவலின்கள், பைரக்டார்ஸ் ஆயுதம் ஏந்தியவர்களையும் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சமரசமற்ற விருப்பத்துடனுமுள்ள உக்ரேனியர்களைச் சந்தித்தார்”.

ஆட்சேர்ப்பு இப்போது உத்தியோகபூர்வ அரசு வழிமுறைகளில் நடைபெறுகிறது என்றாலும், வலதுசாரி தீவிரவாதிகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றனர். தன்னார்வத் தொண்டு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய Die Zeit பத்திரிகை தகவலாளரின் படி “அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சர்வதேச படையணிக்கும் தீவிர வலதுசாரி தன்னார்வப் படைப்பிரிவுக்கும் இடையில் எல்லைகள் இருப்பதாகத் தெரிவில்லை” என்றார்.

எடுத்துக்காட்டாக, ஆட்சேர்ப்பு செய்பவரின் கூற்றுப்படி, கியேவில் உள்ள அசோவ் தலைமையகம் தீவிர வலதுசாரி படைப்பிரிவுக்கு மட்டுமல்ல, உக்ரேனிய இராணுவத்தின் சர்வதேச படையணியில் சேர விரும்பும் தன்னார்வலர்களுக்கும் 'ஒன்றுகூடும் மற்றும் பயிற்சிக்கான உத்தியோகபூர்வ இடம்' ஆகும்.

ஸ்வாஸ்திகா கொடியுடன் புகைப்படம் எடுத்த அசோவ் படைப்பிரிவின் அரசியல் பிரிவின் மிகவும் பிரபலமான முன்னணி நபரான ஓலேனா செமியாங்கா, Die Zeit இடம், தான் இப்போது ஜனாதிபதி செலென்ஸ்கியின் ஆளும் கட்சியின் அங்கத்தவரின் உதவியாளராக இருப்பதாகவும், சர்வதேச படையணியைக் கட்டியெழுப்புவதற்கு அவருக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

'உக்ரேனின் உத்தியோகபூர்வ சர்வதேச படையணிக்கு வெளிநாட்டு கிளர்ச்சியாளர்களையும் அணிதிரட்டும் ஒரு வலதுசாரி தீவிரவாதியிடம் அது உண்மையாக இருக்க முடியுமா?' என்று Die Zeit கேட்டது. வெளிப்படையாக, பதில் ஆம் என்பதாகும்.

ஜோர்ஜியன் மற்றும் செச்சென் படைப்பிரிவு

ஜோர்ஜியன் மற்றும் செச்சென் போர்களின் துருப்புகளிடமிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஜோர்ஜியன் படையணி மற்றும் ஜோக்கார் டுடாயேவ் படைப்பிரிவு, சர்வதேச படைப்பிரிவிற்கான மைய புள்ளியாகவும் செயல்படுகின்றன. இரண்டும் 2014 இல் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டதாகும். ஏனெனில் கியேவில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை தொடர்ந்து உக்ரேனிய இராணுவம் பெருமளவில் நிலைகுலைந்திருந்தது.

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி யானுகோவிச்சால் இடைநிறுத்தப்பட்ட கட்டாய இராணுவ சேவையை புதிய அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போதிலும், பெரும்பாலான படையினர்கள் பிரிந்த பகுதிகளில் உள்ள சக குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பவில்லை. நூறாயிரக்கணக்கானோர் தலைமறைவாகச் செல்வதன் மூலமோ அல்லது அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்வதன் மூலமோ கட்டாய இராணுவ சேவையை தவிர்த்தனர். அவர்களை பிடிக்க அரசு திட்டமிட்டு சோதனை நடத்தியது. பெப்ரவரி 2016 இல், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் 26,800 இராணுவ பணி நிராகரிப்பு வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்தது.

இந்தச் சூழ்நிலையில், தங்கள் மிருகத்தனத்திற்குப் பேர்போன கடுமையான ரஷ்ய-எதிர்ப்பு ஜோர்ஜியன் மற்றும் செச்சென் படையணிகள், கிழக்கு உக்ரேனில் போரைத் தொடர்ந்து நடத்துவதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தனர். 2015 ஆம் ஆண்டு மின்ஸ்க் ஒப்பந்தம், போர்நிறுத்தம் மற்றும் கிழக்கு உக்ரேனுக்கான தன்னாட்சி ஏற்பாட்டை வழங்கியபோது அதனை கியேவ் அரசாங்கம் தனக்கு அவகாசத்தை எடுத்ததுக்கொள்வதற்காக அதில் கையெழுத்திட்டது.

முன்னாள் ஜோர்ஜிய அதிகாரி மமுக்கா மாமுலாஷ்விலி இன் தலைமையிலான ஜோர்ஜிய படையணி, போர்புரிவதில் கடினமான நிபுணர்களை மட்டுமே பணியமர்த்துவதுவதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஜோர்ஜியர்களைத் தவிர, அதன் அணிகளில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான கூலிப்படையினர் மற்றும் செச்சினியா மற்றும் ஜோர்ஜியாவில் ரஷ்யாவிற்கு எதிராக போராட சுயமாக முன்வந்த உக்ரேனியர்களும் உள்ளனர். பெப்ரவரி 13 அன்று கனேடிய செய்தித்தாள் Globe and Mail இல் வெளிவந்த ஒரு அறிக்கை, இந்த கூலிப்படையினரின் குணம் மற்றும் நெறிமுறைகளின் விபரத்தை வழங்குகிறது.

'உக்ரேனிய அதிதீவிர தேசியவாதியான ஈகோர் மஸூர், தனது 18 வயதில் இருந்து முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சுற்றி போர்களில் ஈடுபட்டு வருகிறார்' என்று செய்தித்தாள் தெரிவிக்கிறது. 1992 இல், அவர் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவுக்குச் சென்றார், அங்கு அவர் தீவிர வலதுசாரி உக்ரேனிய மக்கள் சுய பாதுகாப்பு (UNSO) இல் சேர்ந்தார். UNSO உறுப்பினராக, அவர் அப்காசியாவிலும் முதல் செச்சென் போரிலும் ரஷ்யாவிற்கு எதிராக போராடினார். மேலும் 2004 மற்றும் 2014 இல் உக்ரேனில் மேற்கத்திய சார்பு ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார். பின்னர் அவர் மரியுபோலில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரேனிய இராணுவத்தின் அணியில் இருந்து போராடினார். இப்போது, 48 வயதான அவர் ஒரு இருப்பு (reserve) பிரிவில் சேர்ந்து, மீண்டும் போருக்குச் செல்லக் காத்திருக்கிறார்.

உக்ரேனிய அரசாங்கத்திற்கும் இந்த தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நன்றாக இயங்குகின்றது. ஏனெனில் பல அரசாங்க உறுப்பினர்கள் தங்கள் தீவிர வலதுசாரி கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 2014 முதல் அதன் தூதரகத்தின் மூலம் படையணியர்களின் ஆட்சேர்ப்பு இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஜேர்மனியில் உள்ள உக்ரேனிய தூதுவரான ஆண்ட்ரே மெல்னிக் நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவின் அபிமானி ஆவார். ஸ்டீபன் பண்டேராவின் அமைப்பான உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் போலந்து மக்களின் கொலைக்கு காரணமாக இருந்தது.

ஸ்டீபன் பண்டேராவைக் கொண்டாடும் உக்ரேனிய தூதர் ஆண்ட்ரே மெல்னிக் இன் ட்வீட்

ஜேர்மன் அரசாங்கத்தின் மீதான இராஜதந்திரமற்ற தாக்குதல்களுக்காக மெல்னிக் இழிபெயர் பெற்றவர். அவர் போதுமான அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கவில்லை என்று அதன்மீது குற்றம் சாட்டினார். வியாழன் அன்று, அவர் Die Welt பத்திரிகையிடம் உக்ரேனிய தேசத்தின் உயிர்வாழ்வு என்று வரும்போது, “நான் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேனோ என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ரஷ்யாவிடமிருந்து எரிவாயு மற்றும் எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவு 'உக்ரேனின் முதுகில் ஒரு கத்தியை வைப்பது' என்று அவர் கூறினார், சுதந்திரத்திற்கான போராட்டத்தில் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸிடம் உறுதி இல்லை என்று கூறினார்.

உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் மற்றும் ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய ஜேர்மன் மறுஆயுதமமாக்கலுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பொது பார்வையாளர் அரங்கில் இருந்து அவர் பார்த்தபோது, மெல்னிக் இன் முரட்டுத்தனமான நடத்தை மற்றும் தீவிர வலதுசாரிக் கருத்துக்கள் அவருடன் ஒன்றுகூடி நின்று கைதட்டி பாராட்டுவதிலிருந்து அவர்களை தடுக்கவில்லை.

நேட்டோவின் ஆதரவு

பல நாடுகளில் சட்டவிரோதமாக இருப்பினும் பெரும்பாலான நேட்டோ அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை உக்ரேனில் சண்டையிடுவதற்கு ஆதரவளிக்கின்றன அல்லது ஊக்குவிக்கின்றன.

பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், உக்ரேனில் போராட விரும்பும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களுக்கு தனது 'முழுமையான' ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.

லாத்விய நாடாளுமன்றம் அதன் குடிமக்களை போரில் பங்கேற்க ஒருமனதாக ஆதரித்தது.

தனிநபர்கள் போருக்குச் செல்வது சட்டவிரோதமானது அல்ல என்று டேனிஷ் அரசாங்கம் கூறியது.

உக்ரேனில் போரிடலாமா வேண்டாமா என்பதை ஒவ்வொரு குடிமகனும் தானே முடிவு செய்து கொள்ளலாம் என்று கனேடிய அரசு அறிவித்தது.

ஒரு கூட்டு அறிக்கையில், ஜேர்மன் உள்துறை, நீதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் உக்ரேனிய இராணுவத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்த ஜேர்மன் குடிமக்கள் சர்வதேச சட்டத்தை மீறாத வரை அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டியதில்லை என்று கூறியது. ஜேர்மன் அரசாங்கம் கொள்கைரீதியாக தனது குடிமக்கள் உக்ரேனுக்குச் சென்று போராடுவதைத் தடுக்க விரும்பவில்லை என்று அமைச்சகங்கள் தெரிவித்தன.

குற்றவியல் சட்டத்தின் படி ஒரு வெளிநாட்டு சக்திக்கு ஆதரவாக ஒரு ஜேர்மன் குடிமகனை இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது மூன்று மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற இருந்தபோதிலும், இந்த நோக்கத்திற்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான வெறும் முயற்சி கூட தண்டனைக்குரியது.

இதற்கிடையில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான படைப்பிரிவினர்கள் உக்ரேனுக்கு புறப்பட்டனர். வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவின் கூற்றுப்படி, 52 நாடுகளில் இருந்து 20,0000 தன்னார்வலர்கள் மார்ச் 6 ஆம் தேதிக்குள் பதிவு செய்துள்ளனர். பலர் ஜோர்ஜியா மற்றும் பெலாரஸில் இருந்து வந்துள்ளனர். ஆனால் பலர் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனிய தூதரகத்தின்படி, அமெரிக்காவில் 3,000 தன்னார்வலர்கள் செலென்ஸ்கியின் அழைப்புக்கு பதிலளித்துள்ளனர்.

தன்னார்வலர்களைப் பற்றிய பல செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அவர்களில் பல வலதுசாரி தீவிரவாதிகள் உள்ளனர் என்பதை அது தெளிவுபடுத்துகிறது.

Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை, தன்னார்வலர்கள் மற்றும் இது தொடர்புடைய கலந்துரையாடல் குழுக்களிடம் விசாரித்து, மார்ச் 7 அன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:

“தன்னார்வலர்கள் மத்தியில் தீவிரவாதிகளை யாரும் எதிர்பார்த்தால் அது தவறில்லை. டெலிகிராமில், ஒரு நபர் எப்படி போராட முடியும் என்று கேட்டார். அவரது சுயவிவரப் படத்தில், 'விசுவாசம் மற்றும் மரியாதை' என்ற பழமொழி அடங்கும். அதன் பின்னணியில் 'கருப்பு சூரியன்' உள்ளது. இது நவ-நாஜிகளின் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஜேர்மனிய அடையாளமாகும்”.

மற்றொரு இடத்தில், கட்டுரை பின்வருமாறு கூறுகிறது: “டெலிகிராம் குழுக்களில், இந்த நடவடிக்கைகளின் அர்த்தம் என்ன என்பதை தெளிவுபடுத்துவது இல்லை. போரிடுபவர்கள் இறந்த ரஷ்யர்களின் முகங்களை தெளிவாகப் பதிவு செய்கிறார்கள். அவர்கள் இரத்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள், அவர்களின் வாய் பாதி திறந்திருக்கும்”.

BuzzFeedNews பின்வருமாறு எழுதுகிறது: “உக்ரேனுக்கு வந்திருக்கும் மேற்கத்திய வெளிநாட்டினர் ஒரு கலப்பு குழுவினர். இலட்சியவாதிகள், சாகசக்காரர்கள் உள்ளனர். மேலும் உக்ரேனில் சண்டையிடும் தீவிர வலதுசாரி துணை இராணுவக் குழுக்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளைப் எதிர்பார்த்த தீவிரவாதிகளும் உள்ளனர்”.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் அனுபவமுள்ள முன்னாள் படையினர் அங்கு செல்வதாக பிரிட்டிஷ் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனுக்குச் செல்லும் 'பலம்வாய்ந்த SAS முன்னாள் படையினர்களின் குழுவிற்கு', 'இன்னும் பெயரிடப்படாத ஒரு தனியார் இராணுவ நிறுவனம் மூலம் ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டினால் நிதியளிக்கப்பட்டது' என Mirror பத்திரிகைஅறிவிக்கிறது.

செய்தித்தாள் படி, 'அவர்களில் உயர் பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் படையினர்கள் மற்றும் விமான எதிர்ப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள் உள்ளனர்'. 'ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய 150க்கும் மேற்பட்ட முன்னாள் பராசூட் பிரிவினர் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனின் போர்முனைகளில் போரிட செல்ல உள்ளனர்' என டைம்ஸ் பத்திரிகை எழுதுகிறது.

Loading