ஓமிக்ரோன் BA.2 துணை மாறுபாடுகள் அதிகரிப்பதால் ஷாங்காய் மற்றும் ஷென்சென் நகரங்களை சீனா பூட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரோன் BA.2 கொரோனா வைரஸ் துணை மாறுபாட்டின் வெடிப்புகள் வார இறுதியில் சீனா முழுவதும் அதிகரித்தன. தேசிய சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, 31 மாகாணங்களில் சனிக்கிழமையன்று 1,938 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று எண்ணிக்கைகள் உள்ளன. பெரும்பாலான தொற்றுக்கள், 1,421, வடகிழக்கு மாகாணமான ஜிலீன் (Jilin) இல் கண்டறியப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தொற்றுக்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 3,400 க்கும் குறைவாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர், இதில் பரந்தளவிலான சோதனை, தொடர்பு தடமறிதல் மற்றும் பூட்டுதல் ஆகியவை அடங்கும். உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜிலீன் நகரத்தில் வசிப்பவர்கள் ஆறு சுற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 9 மில்லியன் மக்கள் வசிக்கும் மற்றும் சீனாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான அண்டை நகரமான சாங்சுன் பூட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 2020 க்குப் பின்னர் சீனாவில் மிகப்பெரிய வெடிப்பு வைரஸ் பரவலை அடுத்து ஜிலீன் நகரம் மற்றும் சாங்சூன் ஆகிய இரு நகரங்களின் நகரசபை தலைவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது உள்ளிட்ட பூட்டுதல்கள், 25 மில்லியன் மக்கள் வசிக்கும் மற்றும் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஷாங்காய் நகரிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன, அங்கு ஒரே நாளில் 64 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஹாங் காங் உடன் சீனாவின் எல்லையில் அமைந்துள்ள ஷென்சென் நகரில், 60 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் அதன் 18 மில்லியன் குடியிருப்பாளர்களும் பூட்டப்பட்டுள்ளனர்.

சீனாவின் “ஜீரோ கோவிட்” பொது சுகாதாரக் கொள்கையின் ஒரு பகுதியான இந்த பூட்டுதல்கள் மேற்கத்திய ஊடகங்களால் “கடுமையானது” (அசோசியேட்டட் பிரஸ்) என கண்டனம் செய்யப்பட்டுள்ளன. கார்டியன் போன்ற பிற பத்திரிகைகளால் இந்த முயற்சி 'சவாலானது' என குறிப்பிட்டு மிகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட கொள்கையைப் பின்பற்றுவதில், சீனாவில் டிசம்பர் 2019 முதல் 4,636 கொரோனா வைரஸ் இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன, மேலும் ஏப்ரல் 2020 முதல் நான்கு இறப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மார்ச் 13, 2022, ஞாயிற்றுக்கிழமை, பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து மூடப்பட்ட அலுவலக கட்டிடத்திற்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்கின்றனர். சீனாவின் வடகிழக்கில் வெடித்த புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதுடன் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பதிலளித்தனர் (AP Photo/Ng Han Guan)

முந்தைய பூட்டுதல்கள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 14 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தியான்ஜீன் மற்றும் 13 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சியான் ஆகிய இடங்களில் பரவிய ஓமிக்ரோன் மாறுபாடு இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலமாக வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டன. இந்த உண்மைகளை ஒப்புக்கொள்வதற்கு, பெய்ஜிங்கில் உள்ள ஸ்ராலினிச அரசாங்கத்துடன் அரசியல் உடன்பாடு கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை.

எவ்வாறாயினும், தற்போது இருக்கும் அபரிமிதமான பொது சுகாதார நடவடிக்கைகள் கூட BA.2 துணை மாறுபாட்டின் வீரியத்தின் காரணமாக தடுமாறிவிடும் என்ற கவலை சீனாவிற்குள் மக்கள் மற்றும் பொது அதிகாரிகள் மத்தியில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஷென்செனில் உள்ள பொது சுகாதார அதிகாரி லின் ஹான்செங் எச்சரித்தார், “தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சரியான நேரத்திலும், தீர்க்கமாகவும் வலுப்படுத்தப்படாவிட்டால், சமூகத்தில் பாரிய அளவிலான பரவல் ஏற்படுவது எளிது மற்றும் தொற்றுக்களின் அதிகரிப்பும் விரைவாகும்.'

ஹான்செங் நகர மக்களை 'முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக காற்றோட்டம், அடிக்கடி கிருமி நீக்கம் செய்தல், சமூக இடைவெளியை பேணுதல், நியூக்ளிக் அமில சோதனைக்கு தீவிரமாக ஒத்துழைத்தல் போன்ற தொற்றுநோய் பரவும் அபாயத்தைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.' என அழைப்பு விடுத்தார்.

சீனாவில் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை நீக்குவதற்கான ஆபத்து, ஹாங் காங்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், சிறப்பு நிர்வாகப் பகுதியில் மொத்தம் 13,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் மட்டுமே இருந்தன. ஓமிக்ரோன் மற்றும் BA.2 நகரத்தைத் தாக்கியதற்கு இணையாக கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன, இதனால் மொத்த தொற்றுக்கள் மூன்று மாதங்களுக்குள் 706,000 க்கும் அதிகமாக உயர்ந்தன. மொத்த இறப்புகள் 213 இலிருந்து 3,993 ஆக உயர்ந்துள்ளன, உலகில் தனிநபர் தினசரி இறப்பு விகிதத்தில் நகரம் உயர்ந்துள்ளது.

அத்தகைய அணுகுமுறை சீனா முழுவதும் எடுக்கப்பட்டால், சில வாரங்களுக்குள் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் இறந்துவிடுவார்கள்.

ஓமிக்ரோன் BA.2 துணை மாறுபாடு ஐரோப்பா முழுவதும் உயரத் தொடங்கியுள்ளது. ஓமிரோன் BA.1 துணை மாறுபாட்டின் எழுச்சியை அனுபவித்த சில வாரங்களுக்குப் பின்னர், ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவை தினசரி உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் கூர்மையான உயர்வைக் கண்டன. பிரான்சில் தற்போது 63,000 க்கும் மேற்பட்ட தினசரி புதிய தொற்றுக்கள் உள்ளன, நெதர்லாந்தில் கிட்டத்தட்ட 68,000 தினசரி புதிய தொற்றுக்கள் மற்றும் ஜேர்மனியில் குறைந்தது 186,000 தினசரி புதிய தொற்றுக்கள் உள்ளன.

ஐரோப்பாவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. BA.2 ஏற்கனவே கடுமையான நோய் பாதிக்கப்பட்டவர்களிடையே பிடிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் இறப்புகளின் மற்றொரு அலை தொடங்குவதற்கு சிறிது நேரம் ஆகுமென்பதைக் குறிக்கிறது. ஐரோப்பா முழுவதும் தினசரி இறப்புகள் தற்போது ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 ஆக உள்ளன.

டென்மார்க் போன்ற BA.2 அலை உச்சத்தை எட்டிய நாடுகளில், சோதனை நேர்மறை விகிதங்கள் மற்றும் இறப்புகள் இன்னும் அதிகரித்து வருகின்றன, இது வைரஸின் உண்மையான பரவலை அறிந்து கொள்வதற்கு அவர்களின் கண்காணிப்பு அமைப்பு போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

சீனாவிலும் ஐரோப்பாவிலும் தொற்றுநோய்களின் பரிணாம வளர்ச்சியில் உள்ள அப்பட்டமான வேறுபாடு, ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்கள் தொற்றுநோய்க்கு முழுமையாக சரணடைந்ததன் விளைவாகும். நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் பிரிட்டனில் மார்ச் 2-ம் தேதி முடிவடைந்தது. மார்ச் 20-ம் தேதிக்குள் அனைத்து முகக்கவச உத்தரவுகளையும் முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரான்சில், கோவிட்-19 பாதிப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற ஒரு எதிர்மறை சோதனை போதுமானது. ஸ்பெயினில், சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் அரசாங்கம், ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்பட்ட போதிலும், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இத்தகைய கொள்கைகளே, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஐரோப்பாவில் 1.7 மில்லியன் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புகளுக்கு நேரடியாகப் பொறுப்பாகும். லான்செட்டில் வெளியிடப்பட்ட அதிகப்படியான இறப்புகள் பற்றிய சமீபத்திய ஆய்வில், ஐரோப்பாவில் தொற்றுநோயால் ஏற்படும் உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை 3.2 மில்லியனுக்கு அருகில் இருக்கலாம் என்று காட்டுகிறது. கண்டம் முழுவதும் எத்தனை மில்லியன் அல்லது பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் நீண்ட கால கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தொடர்ந்து பாதிக்கப்பட்டுகின்றனர் அல்லது இதில் வாழ்நாள் முழுவதும் இதயம், நுரையீரல் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவை அடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஐரோப்பாவில் BA.2 இன் விரைவான பரவலானது அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும், அங்கு 81 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுக்கள் மற்றும் கிட்டத்தட்ட 1 மில்லியன் உத்தியோகபூர்வ இறப்புகள் உள்ளன. டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஓமிக்ரோன் இன் முதல் அலை பெருமளவு குறைந்துவிட்ட நிலையில், BA.2 தொற்றுக்கள் இப்போது அதிகரித்து வருவதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

தொற்றுநோயின் அடுத்த எழுச்சி மிக அருகே உள்ளது என்பதை அறிந்திருந்தும், பைடென் நிர்வாகம் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியபோது மட்டுமே முகக்கவசத்தை பரிந்துரைக்கின்றன. இது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்பு தொற்றுநோய் வாரக்கணக்கில் பரவ அனுமதிக்கும். மையப்படுத்தப்பட்ட இறப்பு அறிக்கை போன்ற முக்கியமான தரவுகள் முடிவடைந்து விட்டன.

நவம்பர் நடுப்பகுதி மற்றும் முதல் ஓமிக்ரோன் அலை தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200,000 பேர் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். பைடென் மற்றும் அவரது ஆலோசகர்களின் கொள்கைகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு மேலும் கூடுதலான மரண அலைக்கு வழி அமைக்கின்றன.

Loading