முன்னோக்கு

ஓமிக்ரோன் BA.2 துணை வகையின் பரவலைத் தடுக்க சீனா முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிகளவில் பரவக்கூடிய மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையே மீறும் ஓமிக்ரோன் BA.2 துணை வகை பரவியதால், கடந்த வாரம் சீனாவில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் அதிகபட்ச மட்டங்களை எட்டியுள்ளன, ஏறக்குறைய ஒவ்வொரு அரசாங்கமும் இந்த பெருந்தொற்றைத் தடுக்க மறுத்ததன் விளைவாகவே இந்த துணை வகை பரிணமித்துள்ளது. கோவிட்-19 நோய்தொற்றுக்களைத் தொடர்ந்து பூஜ்ஜியத்தில் வைப்பதை இலக்கு வைத்த 'ஆற்றல்மிக்க பூஜ்ய' (dynamic zero) கொள்கைக்கு மக்களிடையே கிடைத்துள்ள ஆதரவின் பின்புலத்தில், சீன அரசாங்கம் இந்த வெடிப்பைத் தணிக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் பரந்த ஆதாரவளங்களைத் திரட்டி வருகிறது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் திங்கட்கிழமை 5,154 புதிய கோவிட்-19 நோயாளிகளை அறிவித்தது, அவர்களில் 1,647 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. மார்ச் 1 முதல் 14 வரை, 15,000 க்கும் அதிகமானவர்கள் உள்நாட்டிலேயே நோய்களைப் பரப்பியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது 28 மாகாண மட்டத்திலான பிராந்தியங்களைப் பாதித்துள்ளது. பல மாகாணங்களில் இந்த மார்ச் மாத தொடக்கத்தில் நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு தொடங்கியது. இது வடகிழக்கில் உள்ள ஜிலின் மாகாணத்தை மையமாகக் கொண்டுள்ளது, தற்போதைய வெடிப்பில் மொத்த நோயாளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இங்கிருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளன.

மார்ச் 6 இல், 526 புதிய நோயாளிகள் பதிவானார்கள், நிலைமையைக் 'கடுமையானதாக' கருதிய அதிகாரிகள், குடியிருப்போரை எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தினர். திங்கட்கிழமை, ஜிலின் பகுதியில் 4,067 புதிய நோயாளிகள் பதிவானது, நிலைமை 'கடுமையாக மற்றும் சிக்கலாக' இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்த அதேவேளையில், முடிந்தால் ஒரு வாரத்திற்குள் பரவலை நிறுத்த உறுதியளித்தனர்.

Map showing the location of every known case in China (left) and locations in downtown Beijing recently visited by infected people (right) (Credit: Baidu Maps app)

பாரிய பரிசோதனை, நோயாளியின் தொடர்புகளைத் தடமறிதல், பாதிக்கப்பட்ட எல்லா நோயாளிகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்தொற்று ஏற்பட்டிருந்த நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை ஒதுக்கி வைத்தல் உள்ளடங்கலாக ஏறக்குறைய கையிலிருக்கும் ஒவ்வொரு பொது சுகாதார நடவடிக்கையையும் சீனா பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டின் மக்கள்தொகையில் 88 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துள்ளனர், இது உலகில் ஆறாவது அதிகபட்ச விகிதமாகும், அரசாங்கத்திடம் ஏராளமான மோனோக்ளோனல் நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான மருந்துகள் உள்ளன.

சீனாவின் வூஹானில் கோவிட்-19 இன் முதல் வெடிப்புக்கு விடையிறுத்து ஜனவரி 2020 இல் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, இந்த மாதம் வெடிப்பு ஏற்பட்டு ஒரு சில நாட்களுக்குள் சாங்சுன் மற்றும் ஜிலினில் மொத்தம் 22,880 படுக்கைகள் கொண்ட ஐந்து தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டன. இந்த வார இறுதிக்குள் 6,000 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக, ஐந்து மாகாணங்கள், தன்னாட்சிப் பகுதிகள் மற்றும் நகராட்சிகள் மருத்துவக் குழுக்களையும் ஆதாரவளங்களையும் ஜிலினுக்கு அனுப்பியுள்ளன.

வரும் வாரங்களில் அந்நாடெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தென்கிழக்கு பெருநகரமான ஷென்செனில், 17.6 மில்லியன் வசிப்பாளர்களில் ஒவ்வொருவரும் இந்த வாரம் மூன்று முறை பரிசோதிக்கப்படுவார்கள். ஜிலினில், வீட்டிலேயே பரிசோதிக்கும் 12 மில்லியன் விரைவு ஆன்டிஜென் கருவிகள் அங்கே குடியிருப்போருக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன, இவர்கள் அனைவருக்கும் பல்வேறு PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

அறிகுறி உள்ள ஒவ்வொரு கோவிட்-19 நோயாளியும் மருத்துவமனை சிகிச்சை பெறுவார், அதேவேளையில் அறிகுறி இல்லாமல் இருக்கும் நோய்தொற்றாளர்கள் பாதுகாப்பான தனிமை மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள். நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு வழக்கமான PCR சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், கூடுதலாக ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே தினமும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனைகளும் அவர்களே செய்து கொள்வார்கள்.

People line up for COVID tests on March 14, 2022, in Beijing. (AP Photo/Ng Han Guan)

மிக முக்கியமாக, ஜிலின் மாகாணத்தில் உள்ள அனைவரும், அத்துடன் ஷென்சென், லாங்ஃபாங், டோங்குவான், ஷாங்காய், சியானின் பெருநகரங்கள் மற்றும் பிற சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் உட்பட, நோய்த்தொற்றுகள் அதிகமாக உள்ள ஒவ்வொரு நகரத்திலும் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சமூக அடைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஒரு மதிப்பீட்டின்படி 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் கடுமையான உத்தரவுகளின் கீழ் உள்ளனர், சுமார் 40 மில்லியன் பேர் பகுதியான சமூக அடைப்பின் கீழ் உள்ளனர்.

இந்த சமூக அடைப்புகள், பெருநிறுவன ஊடகங்களால் கண்டிக்கப்படுகின்றன, ஏனென்றால் இவை இலாப உற்பத்தியை இடைநிறுத்துவதுடன், வைரஸ் பரவுவதை முடிந்தவரை விரைவாக தடுக்க அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மற்றும் பள்ளிகளை தற்காலிகமாக மூடச் செய்கின்றன. ஜிலினில் மற்றும் பிற நகரங்களில், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், தண்ணீர், எரிவாயு நிலையங்கள், சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள் உள்ளடங்கலாக அத்தியாவசிய வேலையிடங்கள் மட்டுமே திருந்திருக்கின்றன.

பெரும்பாலான சீன மக்கள் கோவிட்-19 பரவுவதைத் தடுக்கத் தேவையான இந்த பொது சுகாதார நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஜனவரி-மார்ச் 2020 இன் ஆரம்ப சமூக அடைப்புகளின் சூழ்நிலை புதிதாக இருந்ததால் மிகவும் குழப்பமாக இருந்தது, ஆனால் வூஹானின் சமூக அடைப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அண்மித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த செயல்முறை மிகவும் நெறிப்படுத்தப்பட்டு இருப்பதால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சீனாவின் வடமேற்கில் உள்ள லான்ஜோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு முன்னறிவிப்பு முன்மாதிரி, இந்த எல்லா நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்பட்டால், ஒரு மதிப்பீட்டின்படி 35,000 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் தொடக்கத்தில் இந்த வெடிப்பு முழுமையாக கட்டப்படுத்தப்படும் என்று கணிக்கிறது. இதுவரை, இந்த சமீபத்திய வெடிப்பில் யாரும் இறக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவுக்கு வெளியே இந்த பெருந்தொற்றால் இறந்தவர்களாக கருதப்படும் அதிகப்படியான இறப்புகள் சுமார் 20 மில்லியன் என்ற ஒரு மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால், 2020 மே 16 இல் இருந்து சீனா வெறும் இரண்டே இரண்டு உயிரிழப்புகளையே பதிவு செய்துள்ளது.

சீனப் பெருநிலத்தில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை தீவிரமாக பின்பற்றப்படுவது சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாக பகுதியின் ஒரு நகரமான ஹாங்காங் உள்ளூர் அரசாங்ககத்தின் நாசகரமான விடையிறுப்பால் பாதிக்கப்படுகிறது, இந்நகரம் பெப்ரவரி மத்தியில் BA.2 மிகப் பெரியளவில் நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளை அதிகரித்த பின்னரும் சமூக அடைப்புகளை நடைமுறைப்படுத்த மறுத்துள்ளது. அன்றாட இறப்பு விகிதங்கள் உயர்ந்துள்ளன, பெரும்பாலான பகுதிகளில் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் குறைவாக இருப்பதால் உலகில் மிக அதிகமாக மில்லியன் பேரில் 37.68 பேர் என்ற இடத்தில் இப்போது அது நிற்கிறது. சீனாவின் முதியவர்களில் நிறைய பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும், 80 வயதானவர்களில் சுமார் பாதிக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி எடுக்காமல் உள்ளனர்.

மீண்டுமொருமுறை சீனா வைரஸை வெற்றிகரமாக அகற்றுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், ஆனால் BA.2 துணை மாறுபாட்டின் தனித்துவமான ஆபத்தான பண்புகள் இருந்தாலும் இது நடந்தேறும் என்பதை இந்த விரைவான மற்றும் விரிவான விடையிறுப்பு சுட்டிக்காட்டுகிறது. இது வெற்றி அடைந்தால், சீனாவின் எல்லைக்களுக்கு அப்பால் பாரியளவில் நோய் பரவலும் இறப்புகளும் தவிர்க்க முடியாததாக இருப்பதை இது மீண்டும் நிரூபிக்கும்.

சீனா மீண்டும் மீண்டும் வைரஸை அகற்ற வேண்டி இருக்கும் என்பதோடு, வெளிநாட்டிலிருந்து கோவிட்-19 மீண்டும் அறிமுகமாவதற்கான நிரந்த அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறது என்ற உண்மையே, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில், இந்த பெருந்தொற்றுக்கான விடையிறுப்பின் குற்றகரமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

சீனாவில் முன்னோடியாக உருவாக்கப்பட்ட மற்றும் 2020 இல் பல ஆசிய-பசிபிக் நாடுகளால் பின்பற்றப்பட்டதுமான இந்த வைரஸை அகற்றும் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த மறுப்பதன் மூலம், முதலாளித்துவ உயரடுக்குகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இன்னும் அதிகமாக பரவக்கூடிய மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையே மீறும் ஆல்ஃபாவில் இருந்து ஓமிக்ரோன் மற்றும் இன்னும் என்னவெல்லாம் வரவிருக்கிறதோ அத்தகைய உருமாறிய SARS-CoV-2 வகைகள் உருவாவதற்குப் பொறுப்பாகின்றன. தடுப்பூசி தேசியவாதத்தை அவை ஊக்குவிப்பதும் அறிவுசார் சொத்துரிமைகளை நிலைநிறுத்துவதும் வருவாய் குறைந்த நாடுகளின் 86 சதவீத மக்களை முற்றிலும் தடுப்பூசி போடாதவர்களாக விட்டு வைத்துள்ளன.

நவம்பர் பிற்பகுதியில் ஓமிக்ரோன் எழுச்சி தொடங்கியதிலிருந்து, சீனாவுக்கு வெளியே கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடும் இந்த பெருந்தொற்றுக்குச் சரணடைந்து, இந்த வைரஸ் பரவுவதை மெதுவாக்குவதற்கான எல்லா தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்கியுள்ளன. பரிசோதனை, தடமறிதல், தரவு சேகரிப்பு மற்றும் விபரங்களை வெளியிடல், தனிமைப்படுத்தும் வழிகாட்டி நெறிமுறைகள், மற்றும் மிக அடிப்படையான முகக்கவச நெறிமுறை என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 இப்போது 'அவ்வபோதைய பருவகால தொற்றுநோய்' என்று பொய்யாகக் கூறி, ஆளும் உயரடுக்கினர் முடிவின்றி வெகுஜன நோய்த்தொற்று, நீண்ட கால பலவீனம் மற்றும் மரணம் போன்ற ஒரு கொடுமையான 'புதிய வழமையை' அமுலாக்கி வருகிறார்கள்.

இதன் விளைவாக, ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகள் உட்பட ஐரோப்பா எங்கிலும் நோயாளிகள் அதிவேகமாக அதிகரித்து வருவதுடன், இங்கிலாந்தில் மருத்துவமனை அனுமதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில், BNO News திங்கட்கிழமை அறிவிக்கையில், உத்தியோகபூர்வ 52,694 புதிய நோயாளிகள் மற்றும் 1,478 புதிய இறப்புகளைப் அறிவித்தது, இது இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து சீனாவில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இறப்பில் மூன்றில் ஒரு பங்கு என்பதோடு சீனாவின் ஒட்டுமொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் சுமார் ஒரு பாதியாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) சாந்தமாக குறிப்பிடுகையில், வரிசையான எல்லா நோய்தொற்றுகளிலும் BA.2 இப்போது 23.1 சதவிகிதமாக உள்ளது, இது ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது. பெப்ரவரி 24 மற்றும் மார்ச் 10 க்கு இடையேயான கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை எடுத்துக்காட்டியதாவது, நோயாளிகளை அறிவிக்கும் நாடுகளில் 37 சதவீத நாடுகள் அவற்றின் கழிவுநீரில் RNA வைரஸ் 100 சதவீதம் அதிகரித்திருப்பதையோ அல்லது அதிகமாக இருப்பதையோ அனுபவித்து வருவதாக குறிப்பிட்டது.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் அடிப்படை மட்டுப்பாடு அதன் தேசிய தன்மையாகும். கோவிட்-19 உலகளவில் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கும் வரை, இன்னும் அதிகமாக பரவக்கூடிய, நோயெதிர்ப்பு சக்தியையே மீறும் வீரியம் கொண்ட புதிய மாறுபாடுகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சர்வதேச மூலோபாயம் இல்லாவிட்டால், பூஜ்ஜிய கோவிட் கொள்கை தொடர்ந்து பலவீனமடையும்.

மாபெரும் மார்க்சிச புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை மாற்றியமைத்து கூறினால், தேசிய எல்லைகளுக்குள் கோவிட்-19 ஐ ஒழிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவது தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, உலக அரங்கில் நிறைவடைகிறது.

ஆழமடைந்து வரும் இந்த பெருந்தொற்று நெருக்கடி, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் தூண்டப்பட்டு அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நெருக்கடியுடன் சேர்கிறது. பல தசாப்தங்களாக நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு புட்டின் ஆட்சியின் இந்த பெரும்பிரயத்தன விடையிறுப்பும் ரஷ்யா மற்றும் சீனாவைச் சுற்றி வளைப்பதன் மூலம் தனது மேலாதிக்கத்தைப் பேணுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைவும் ஏற்கனவே முறிந்து போன உலக ஒழுங்கை இன்னும் ஆழமாக சீர்குலைத்துள்ளன. போரும் மற்றும் இந்த பெருந்தொற்றும், இரண்டு நெருக்கடிகளுமே, பணவீக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் அதிகரிப்புக்கு எரியூட்டி வருகின்றன, அதையொட்டி இது சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டு வருகிறது.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்க்க சோசலிசப் புரட்சி மட்டுமே ஒரே முன்னோக்கிய பாதையாகும். மூன்றாம் உலகப் போருக்கான உந்துதலை நிறுத்தவும், உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றவும், சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், சர்வதேச தொழிலாள வர்க்கமானது தேசிய எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்து, ஒரு சக்தி வாய்ந்த உலகளாவிய போராட்டத்தை நடத்த வேண்டும்.

Loading