முன்னோக்கு

ரஷ்யாவுடனான நேட்டோவின் பினாமி போரின் முக்கிய விரிவாக்கத்தை வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் போர் வெடித்து ஒரு மாதத்திற்குப் பின்னர், ரஷ்யாவிற்கு எதிரான மோதலின் ஒரு பெரிய விரிவாக்கத்தில் நேட்டோ சக்திகளை அணிதிரட்டுவதற்கான முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் இந்த வாரம் கண்டம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார்.

பிப்ரவரி 11, 2022 வெள்ளிக்கிழமை, கிழக்கு ருமேனியாவின் கருங்கடல் துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவிற்கு அருகிலுள்ள மிஹைல் கோகல்னிசியானு விமான தளத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் மற்றும் ருமேனிய ஜனாதிபதி கிளாஸ் அயோஹானிஸ் ஆகியோரின் வருகையின் போது அமெரிக்க படையினர் வரிசையில் நிற்கின்றனர்(AP Photo/Andreea Alexandru)

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் கூட்டங்கள் உட்பட, 'ரஷ்யா மீது கடுமையான மற்றும் முன்னோடியில்லாத செலவுகளை சுமத்துவதற்கான சர்வதேச முயற்சிகளை' உறுதிப்படுத்த முயல்கிறது என்று வெள்ளை மாளிகை கூறியது.

பைடெனின் பயணத்திற்கு முன்னதாக, நேட்டோ இராணுவ அதிகாரிகள் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்படுவதை பரந்த அளவில் விரிவுபடுத்துவது, கண்டத்தை ஒரு போர்க் காலகட்டத்தில் வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஐரோப்பாவில் அமெரிக்க துருப்புக்களின் அளவு இருமடங்காக்கப்படவும் உள்ளது.

இந்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத் தொடர்கள் போர்க்குழுக்களின் கூட்டமாகும். வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி:

  • திங்களன்று, பைடென் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ், இத்தாலிய பிரதம மந்திரி மரியோ டிராகி மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஆகியோருடன் 'ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான உக்ரேனியர்களுக்கு பாதுகாப்பு உதவி வழங்குவது பற்றி' விவாதித்தார். அதே நாளில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு கூடுதலாக 500 மில்லியன் யூரோ ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்தது.
  • அன்று மாலை, பைடென் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் 'உக்ரேனுடனான ரஷ்யாவின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற போருக்கு அமெரிக்காவின் பதிலைப் பற்றி விவாதித்தார்'.
  • புதன்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய போதிலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனையும் உள்ளடக்கிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பைடென் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல்ஸ் நகருக்கு வருவார்.
  • வியாழன் அன்று, பைடென் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார். இது 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் நடந்து வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள்' மீது கவனம் செலுத்தும்.
  • வெள்ளிக்கிழமை, பைடென் போலந்தின் வார்சோவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ஜனாதிபதி ஆண்ட்ரே டுடாவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார். கடந்த வாரம், போலந்து பிரதம மந்திரி மாத்தியூஸ் மோராவிக்கி உக்ரேனுக்கு நேட்டோவின் 'அமைதி காக்கும் பணியை' பயன்படுத்துவது பற்றி முன்மொழிந்தார்.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்வதாக உக்ரேனில் இருந்து அறிக்கைகள் வந்தாலும், போருக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் அமெரிக்காவுக்கு எவ்வித ஆர்வம் இல்லை என்ற வெள்ளை மாளிகையின் தெளிவான சமிக்ஞைகள் இந்த தொடர் சந்திப்புகளுக்கு முன்னதாக இருந்தன.

வியாழன் அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கென் 'எனது பார்வையில், மோதலை தவிர்க்க இராஜதந்திரத்திற்கு வெளிப்படையாக இரு தரப்பும் நல்லெண்ணத்துடன் ஈடுபட வேண்டும்' என்றார். அவர் மேலும் கூறினார், 'நாம் காணும் ரஷ்யா எடுக்கும் நடவடிக்கைகள்... போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தீவிர இராஜதந்திர முயற்சிக்கும் முற்றிலும் முரணானவை.'

இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, பைடென் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனிப்பட்ட முறையில் பகைத்துக் கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகத் தோன்றியது. அவரை ஒரு 'குண்டர்', 'சர்வாதிகாரி' மற்றும் 'போர்க் குற்றவாளி' என்று குறிப்பிட்டார்.

1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், ஒரு போர் கட்டுப்பாட்டை மீறி, நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் மற்றும் அணுசக்தி பதட்டங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் நிலைமைகளின் கீழ், இந்த அறிக்கைகள் பதட்டங்களை அதிகரிக்க திட்டமிட்ட முயற்சியாகும். கிரெம்ளின் அவற்றை ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளும் அல்லது போரில் அமெரிக்க தலையீட்டை பெருமளவில் அதிகரிக்கும் நோக்கத்தின் அமெரிக்க பிரகடனமாக பார்க்கும்.

ரஷ்யா 'அவமானங்கள்' என்று அதனை அழைத்ததற்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், 'ரஷ்ய-அமெரிக்க உறவுகள் முறிவின் விளிம்பில் உள்ளன' என்று அறிவிக்க அமெரிக்க தூதர் ஜோன் சுல்லிவனை அழைத்ததாக அறிவித்தது. அரசுகளுக்கிடையிலான உறவுகளின் 'விரிசல்' பொதுவாக போர் நெருங்கி வருவதைக் குறிக்கிறது.

உண்மையில், அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளை போருக்கு அணிதிரட்டும் முயற்சியில் பைடெனின் சூறாவளி ஐரோப்பா சுற்றுப்பயணம் விரிவான இராணுவ விவாதங்களால் கவனமாக தயாரிக்கப்பட்டது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பின்வருமாறு அறிவித்தது: “அமெரிக்க பாதுகாப்பு செயலர் லொயிட் ஆஸ்டின் கடந்த வாரம் நேட்டோ தலைமையகத்தில் மற்ற கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து மேலும் படைகளை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தார். ஜனாதிபதி பைடென் இந்த வாரம் ஐரோப்பாவில் உள்ள மற்ற கூட்டணி அரசாங்கத் தலைவர்களை சந்திக்கும் போது விவாதிக்கப்படக்கூடிய திட்டங்களை வரைவதற்கு அனைத்து நேட்டோ உறுப்பினர்களிடமிருந்தும் இராணுவத் திட்டமிடுபவர்களை அவர்கள் வழிநடத்தினர்”.

நேட்டோவிற்கான முன்னாள் அமெரிக்க தூதரும் ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரலுமான டக்ளஸ் லூட், 'அமெரிக்காவின் பிரசன்னம் இரட்டிப்பாகும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்தார்.

போர் வெடித்ததில் இருந்து அமெரிக்கா 15,000 க்கும் மேற்பட்ட கூடுதல் துருப்புக்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது. மேலும் ஐரோப்பாவில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 100,000 ஐ எட்டியுள்ளது. பனிப்போர் முடிந்த பின்னர் இந்த எண்ணிக்கை முதன்முறையாக அதனை மீறியுள்ளது. லூட் குறிப்பிடுவது போல், ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றால், ரஷ்யாவின் எல்லைகளுக்கு மேலும் 100,000 அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்படுவதை இது குறிக்கும்.

ஜேர்னல்: “கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள், நேட்டோவின் கிழக்கு எல்லைகளுக்கு அருகில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள இலகுரக காலாட் படைகளுக்குப் பதிலாக, டாங்கிகள், பிற கவச வாகனங்கள், பீரங்கி மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொண்ட தரைப்படை பிரிவுகளுடன் அதிகரிக்கப்படும் என முன்னாள் அதிகாரிகள் தெரிவித்தனர்” என எழுதியது.

போரின் அதிக முக்கியத்துவம் மற்றும் தாக்கங்கள் பொதுவாக அது அபிவிருத்தியடையும்போது வெளிப்படுகிறது. ரஷ்ய அரசாங்கத்தை முதல் சுடவைப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும், உக்ரேனில் நடக்கும் போர் மிகவும் பரந்த மோதலின் முதல் கட்டம் என்பது தெளிவாகிறது. உக்ரேன் மீதான அவநம்பிக்கையான மற்றும் பேரழிவுகரமான படையெடுப்பிற்கு ரஷ்ய அரசாங்கத்தை தூண்டிவிட்டு, அமெரிக்கா தனது உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக இப்போரைப் பயன்படுத்துகிறது. அத்துடன் ரஷ்யாவை மட்டுமல்ல, சீனாவையும் குறிவைத்து அமெரிக்கா 'பெரும் சக்தி மோதல்' என்று வரையறுத்த ஒரு போர் கூட்டணியை உருவாக்குகிறது.

வெள்ளியன்று, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பில், பைடென் சீனா ரஷ்யாவிற்கு ஏதேனும் பொருளாதாய ஆதரவை வழங்கினால், அது குறிப்பிடப்படாத 'விளைவுகளை' சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தினார். ஒரு நாள் முன்னதாக, சீனா மீது அமெரிக்கா 'செலவுகளைச் சுமத்தத் தயங்காது' என்று பிளிங்கென் அறிவித்தார்.

பைடென் ஐரோப்பாவிற்குப் புறப்படத் தயாராகையில், இந்த அச்சுறுத்தும் மொழி வெளிப்படையான இராணுவ அச்சுறுத்தலாக மாற்றப்பட்டது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல். ஜோன் சி. அக்விலினோ அசோசியேட்டட் பிரஸ்ஸில் ஒரு செய்தியாளர் மாநாட்டை சீனாவால் உரிமை கோரப்பட்ட பகுதியின் மீது இராணுவக் கண்காணிப்பு விமானத்தில் இருந்தபடி நடத்தினார். 'அச்சுறுத்தல் தோல்வியுற்றால், என் இரண்டாவது பணி போராடி வெற்றி பெறத் தயாராக இருக்க வேண்டும்' என்று அவர் அறிவித்தார்.

உலகப் போருக்கான தயாரிப்புகள் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் மேற்கொள்ளப்படுகின்றன. பைடென் அமெரிக்காவின் 'என்றென்றுக்குமான போர்களை' முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் 'இந்த இடைவிடாத போரின் காலகட்டத்தை முடிவிற்கு கொண்டுவருவதாகவும்' மற்றும் 'இடைவிடாத இராஜதந்திரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை' தொடங்கவிருப்பதாகவும் உறுதியளித்தார். மாறாக, 2001 இல் 'பயங்கரவாதத்தின் மீதான போர்' தொடங்கப்பட்டதற்கு பின்னர் பைடென் நிர்வாகம் மிகப்பெரிய இராணுவ விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் 2023 இராணுவ வரவு-செலவுத் திட்டம் மொத்தம் 800 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022 நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட $740 பில்லியனை விட $60 பில்லியன் அதிகமாகும். அமெரிக்க போர் எந்திரத்திற்கு இன்னும் விரைவாக நிதியளிப்பதற்கான அழைப்புகள் உள்ளன.

இராணுவ செலவினங்களின் இந்த பாரிய விரிவாக்கத்திற்கான செலவு தொழிலாள வர்க்கத்தால் செலுத்தப்படும். இது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தைத் தாக்கவும், தொழிலாள வர்க்க அரசியல் எதிர்ப்பைக் குற்றமாக்கவும் மற்றும் கோவிட்-19 இன் கொடிய எழுச்சியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் பயன்படுத்தப்படும்.

இந்த பொறுப்பற்ற இராணுவ விரிவாக்கம், இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீச்சிற்குப் பின்னர், அணு ஆயுதங்களின் முதல் பயன்பாட்டைத் தூண்டி, கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்குள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற வழி இல்லை. ஏகாதிபத்தியம், இராணுவவாதம், வரலாற்றுரீதியாக காலாவதியான தேசிய-அரசு அமைப்பு மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்பட்ட ஒரே ஒரு சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே பேரழிவை நிறுத்த முடியும்.

Loading