PSOE-Podemos அடக்குமுறையிலிருந்து ஸ்பானிய ஓட்டுனர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை பாதுகாப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டு வாரங்களாக, ஸ்பெயினின் வணிகப் பொருட்களின் சாலைப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான தளத்தின் (Platform) 75,000 லாரி ஓட்டுனர்கள், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய-உக்ரேன் போருக்கு மத்தியில் நேட்டோ சக்திகள் ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கையில், அவர்கள் நிலையான எரிபொருள் விலைகளைக் கோருகின்றனர். வேலைநிறுத்தம் ஏற்கனவே ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, தொழிற்சாலைகள், தொழில்துறை பண்ணைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கான விநியோகத்தை துண்டித்து, ஸ்பெயின் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவை ஏற்படுத்தியுள்ளது.

24 மார்ச் 2022 வியாழன் அன்று மாட்ரிட், ஸ்பெயினின் புறநகர்ப் பகுதிகளில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து லாரிகள் கூடுகின்றன (AP Photo/Manu Fernandez)

இந்த வேலைநிறுத்த போராட்டம், ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் (Podemos) அரசாங்கம் மற்றும் பணவீக்கத்தை துரிதப்படுத்தும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலில் அதன் பங்கேற்பு ஆகியவற்றுடன் அரசியல் மோதலாக வளர்ச்சியடைகிறது. பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் 'செலவைக் கொண்டிருக்கும் மற்றும் தியாகங்கள் தேவைப்படும் ... அது தர்க்கரீதியாக குடும்பங்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று ஒப்புக்கொண்டார்.

ஒருபுறம் சாத்தியமான எரிபொருள் மானியங்களை உயர்த்தும் அதே வேளையில், சான்சேஸ் Platform உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து, மிருகத்தனமான ஒடுக்குமுறையைத் தொடங்குகிறார். PSOE மற்றும் Podemos 23,000 போலீஸை நிலைநிறுத்தியுள்ளது, இது ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலைநிறுத்தத்திற்கு எதிரான மிகப்பெரிய குவிப்பு ஆகும்.

பலத்த ஆயுதம் ஏந்திய போலீஸ் வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் தொழிற்சாலை ஆலைகளுக்கு விநியோகம் செய்ய கருங்காலி ஓட்டுனர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றன, மறுபக்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வேலைநிறுத்தம் செய்பவர்களை தாக்குகின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுனர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு அபராதம் விதித்து, 60க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

PSOE-Podemos அடக்குமுறைக்கு எதிராக லாரி ஓட்டுனர்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். இந்த வேலைநிறுத்தம், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தின் பாகமாகும்.

  • மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி பணவீக்கம் 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ள துருக்கியில், வேலைநிறுத்தங்களின் அலை வெடித்துள்ளது. வாகனத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உலோகத் தொழிலாளர்கள், இரும்புச் சுரங்கத் தொழிலாளர்கள், கடித விநியோகஸ்தர்கள், கப்பல் உடைக்கும் தொழிலாளர்கள், நகரசபை தொழிலாளர்கள் மற்றும் மருத்துவர்கள், கோவிட்-19 இலிருந்து அதிக ஊதியம் மற்றும் பணியிடப் பாதுகாப்பைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • கனடா மற்றும் அமெரிக்காவில், COVID-19 தொற்றுநோய் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதால், விதிக்கப்பட்ட தன்னிச்சையான பணி அட்டவணைகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனேடிய பசிபிக் (CP) இரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், அதே நேரத்தில் அமெரிக்க BNSF தொழிலாளர்கள் அமெரிக்க நீதிபதியின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான தடையை எதிர்கொள்கின்றனர். 30,000 அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்காக பைடெனின் வெள்ளை மாளிகை ஐக்கிய எஃகு தொழிலாளர்கள் சங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • இந்தியாவில், 70,000 மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (MSRTC) பேருந்து நிறுவனத் தொழிலாளர்கள் அரசாங்கத் தடை உத்தரவுகளையும் பாரிய கைது அச்சுறுத்தல்களையும் மீறி 20 வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். MSRTC 14,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்துள்ளது, ஏனெனில் அவர்கள் கௌராவமான ஊதியம், சமூக பாதுகாப்பு, மற்றும் கோவிட்-19 காரணமாக இறந்த 700 க்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளைக் கோரியும் போராடுகின்றனர்.
  • ஸ்பெயின் உட்பட ஐரோப்பா முழுவதும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் பெருகி வருகின்றன. எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி மற்றும் பிரான்சின் லாரிகள் வேலைநிறுத்தங்கள் அல்லது நெடுஞ்சாலைகளில் மெதுவான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன. பிரித்தானியாவில் P&O கப்பல், ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தையும், கருங்காலி தொழிலாளர்களையும் பயன்படுத்தி அதன் 800 பேர் கொண்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து எதிர்ப்புகள் பெருகி வருகின்றன. பிரெஞ்சு வெகுஜன போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், ஸ்பெயினில், கட்டலோனியாவில் 60,000 ஆசிரியர்கள் கல்வியில் அதிக முதலீடு செய்யக் கோரி மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயின் லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளது: வெளிநாட்டில் போரை நடத்த, முதலாளித்துவ வர்க்கம் உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்கப் போரை நடத்துகிறது. பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை ஆண்டுக்கு 10 பில்லியன் முதல் 25 பில்லியன் யூரோக்கள் வரை உயர்த்த சான்சேஸ் உறுதியளிக்கிறார், ஆனால் PSOE மற்றும் Podemos ஆகியவை சமூகத்தின் பொருளாதார உயிர்நாடியைக் கொண்டு செல்லும் லாரி ஓட்டுனர்களுக்கு உதவ மறுக்கின்றன. மாறாக, PSOE அமைச்சர்கள் மற்றும் Podemos உடன் இணைந்த ஸ்ராலினிச தொழிற்சங்க தலைமையால் காவல்துறையுடன் இணைந்து வழிநடத்தப்பட்ட.ஒரு வெறித்தனமான லாரி ஓட்டுனர் எதிர்ப்பு ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்,

போக்குவரத்து அமைச்சர் Raquel Sánchez வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள Platform ஐ சந்திக்க மறுத்துவிட்டார். அவர் வேலைநிறுத்தத்தை 'பெரிய பொறுப்பின்மை' என்றும், மேடை 'தீவிர வலதுசாரி மற்றும் ஜனநாயக விரோத குழுக்களால் ஊக்குவிக்கப்பட்ட சிறுபான்மை குழு' என்றும் கண்டனம் செய்தார். பாசிச வோக்ஸ் கட்சியுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வலியுறுத்தும் Platform இன் அறிக்கையை அவர் புறக்கணித்தார், போலீஸ் வேலைநிறுத்தம் செய்பவர்களை தாக்கும் போது கூட வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அது பாசாங்குத்தனமான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டது.

PSOE-Podemos அரசாங்கம், ரஷ்யாவை அச்சுறுத்துவதற்காக கிழக்கு ஐரோப்பாவிற்கு துருப்புக்களை அனுப்பும் அதேவேளையில், லாரி ஓட்டுனர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கருவிகள் என வெட்கமின்றி கண்டனம் செய்கிறது. நிதி மந்திரி மரியா மான்டெரோ லாரி ஓட்டுனர்களை 'புட்டினின் விளையாட்டை விளையாடியதாக' தாக்கியுள்ளார், அதே நேரத்தில் இராஜாங்க மந்திரி பெலிக்ஸ் பொலானோஸ் அவர்களை 'ஸ்திரமின்மையின் கூட்டாளி, அதைத்தான் புட்டின் விரும்புகிறார்' என்றார்.

பொடெமோஸின் தொழிற்சங்க கைக்கூலிகளால் சமமான இழிவான பாத்திரம் வகிக்கப்படுகிறது. Podemos உடன் இணைக்கப்பட்ட தொழிலாளர் கமிஷன் (CCOO) தொழிற்சங்கம், வேலைநிறுத்தம் செய்யும் லாரி ஓட்டுனர்களை 'வன்முறைக் குழுக்கள்' எனக் கண்டித்து, சமூக-ஜனநாயகத் தொழிலாளர் பொதுச் சங்கத்துடன் (UGT) ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. வேலைநிறுத்தம் ஒரு வணிக நிறுத்தம் என்றும், தொழிலாளர் சட்டத்தால் பாதுகாக்கப்படவில்லை என்றும் கூறி, சிறு வணிகங்களைச் சேர்த்ததற்காக அது வஞ்சகத்தனமாக Platform ஐ தாக்கியது.

வேலைநிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான Extremaduraவில் உள்ள CCOO பொதுச் செயலாளரான Encarna Chacón, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பிரான்சின் 'மஞ்சள் சீருடை' எதிர்ப்புகளுடன் ஒப்பிட்டு, லாரி ஓட்டுனர்களைக் கண்டித்தார். பிரான்ஸ் 'மஞ்சள் சீருடைகளுடன்' இருந்தது போல ஸ்பெயினில் நாம் இருக்க முடியாது. இதை விரும்பும் யாராவது இருந்தால், அது அவர்கள் தவறு என்று நாங்கள் நம்புகிறோம்,' என அவர் கூறினார்: 'இந்த தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்தங்களை ஒருபோதும் பாதுகாத்ததில்லை, நாங்கள் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை.'

வேலைநிறுத்தம் செய்பவர்கள் புட்டினின் கருவிகள் அல்ல, ஆனால் PSOE, Podemos மற்றும் தொழிற்சங்கங்கள் தான் வங்கிகள் மற்றும் நேட்டோவின் கருவிகளாகும். ரஷ்யாவிற்கு எதிரான பொறுப்பற்ற நேட்டோ அச்சுறுத்தல்கள் பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. கருத்துக் கணிப்புகள் 68 சதவிகித ஸ்பானியர்கள் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஈடுபடுவதை ஆதரிக்கவில்லை என்று கண்டறிந்துள்ளது, அதே நேரத்தில் 86 சதவிகிதத்தினர் விலைகளில் போரின் தாக்கம் குறித்து 'மிகவும்' அல்லது 'அதிமிகவும்' “அதிகமாக” அல்லது “மிக அதிகமாக” பயப்படுகிறார்கள்.

விலைவாசி உயர்வுக்கு எதிராக, தொழிலாளர்கள் அவற்றின் விளைவுகளை மட்டுமல்ல, அவற்றின் காரணங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். இறுதிப் பகுப்பாய்வில், பணவீக்கம் என்பது, முதலாளித்துவ அமைப்பில் உள்ளார்ந்த நிதிய பிரபுத்துவத்திற்கு செல்வத்தை இடைவிடாமல் மறுபகிர்வு செய்வதன் விளைவாகும். மில்லியன் கணக்கான மக்கள் இறக்க அனுமதிக்கப்பட்ட போதும், தொற்றுநோய்களின் போது செல்வந்தர்கள் மற்றும் செல்வந்தர்களின் இலாபங்களை உயர்த்துவதற்காக டிரில்லியன் கணக்கான டாலர்கள், பவுண்டுகள் மற்றும் யூரோக்கள் அச்சிடப்பட்டு பங்குச் சந்தைகளில் செலுத்தப்பட்டன. இப்போது பணவீக்கம் அதிகரித்து வருகிறது, ரஷ்யாவுடன் பொறுப்பற்ற முறையில் போரை அச்சுறுத்தும் நேட்டோ, அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் தானியங்களை உலகச் சந்தைகளில் இருந்து வெட்டுவதற்கு வேலை செய்கிறது, இதனால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மற்றும் சுயதொழில் செய்யும் மக்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தங்களைக் காண்கிறார்கள், அது முடிவில்லாத தொற்றுநோய், குறைந்த ஊதியங்கள், சமூக சிக்கனம் மற்றும் போர் ஆகியவற்றை தவிர வேறு எதுவும் வழங்க முடியாது.

வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க மாட்டோம் என்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உறுதிமொழிகளிலிருந்தும், சமூக ஊடகங்களில் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட 'மஞ்சள் சீருடை' போன்ற இயக்கங்கள் மீதான அதன் தாக்குதல்களிலிருந்தும் அனைத்துத் தொழில்களிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். வேலைநிறுத்த நடவடிக்கைகளின் கட்டுப்பாடு ஸ்ராலினிச CCOO போன்ற குட்டி முதலாளித்துவ அதிகாரத்துவங்களின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் பொடேமோஸ் போன்ற போலி-இடது கட்சிகளின் அவதூறுகள் மற்றும் வேலைநிறுத்த உடைப்புகளை முறியடிக்க, தொழிலாளர்களுக்கு வர்க்கப் போராட்டத்தை நடத்த புதிய அமைப்புக்கள், சாமானிய தொழிலாளர்களின் பணியிட குழுக்கள் தேவை. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் ஐக்கியப்பட்டு, தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் போருக்கான உந்துதலுக்கும் தொழிலாள வர்க்கத்தை ஏழ்மைப்படுத்துதலுக்கும் எதிரான ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை நடத்த முடியும். அத்தகைய முன்னோக்கை ஆதரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) தொடர்பு கொண்டு ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்கும் போராட்டத்தில் இணைய வேண்டும்.

Loading