முன்னோக்கு

நேட்டோ-ரஷ்யா மோதல் அணுஆயுதப் போரை அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை நேட்டோ முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. கேமராக்கள் மற்றும் தொலைபேசிகள் தடைசெய்யப்பட்டிருந்தன என்பது மட்டுமல்ல, உதவியாளர்களும் கூட அனுமதிக்கப்படாத, முற்றிலும் இரகசியமாக, மேற்கத்திய சக்திகளின் தலைவர்கள் கூட யோசிக்க முடியாத ஒன்றைக் குறித்து, அதாவது, அணு ஆயுதமேந்திய நாடுகளுக்கு இடையே ஒரு முழு அளவிலான போரைக் குறித்து, திட்டமிடுவதற்காக ஒன்று கூடியிருந்தனர்.

ஒரு இராணுவத் தொழிலாளி அணு ஆயுதங்களை ஏவுவதற்கான குறியீடுகளைக் கொண்ட 'கால்பந்து' என்றும் அழைக்கப்படும் 'ஜனாதிபதியின் எமர்ஜென்சி கிட்' எடுத்துச் செல்கிறார்; புதன்கிழமை, மார்ச் 23, 2022 வாஷிங்டனில். (AP புகைப்படம்/பேட்ரிக் செமான்ஸ்கி)

மார்ச் 23, 2022 புதன்கிழமை, வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளியில் ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு பின்னால் Marine One இல் ஏறுவதற்கு முன், அணுசக்தி ஏவுகணைக் குறியீடுகளைக் கொண்ட “கால்பந்து” என்றும் அழைக்கப்படும் “ஜனாதிபதியின் அவசர சாட்செல்” ஒரு இராணுவ உதவியாளர் எடுத்துச் செல்கிறார். வாஷிங்டன். (AP புகைப்படம்/பேட்ரிக் செமான்ஸ்கி) (AP Photo/Patrick Semansky)

அணு ஆயுதப் போர் என்பது அமெரிக்க ஊடகங்களின் நாளாந்த வார்த்தைகளின் பாகமாக மாறிவிட்டது. 'உக்ரேன் போர் எப்படி அணுஆயுதத்திற்குச் செல்லக்கூடும்,” என்ற புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், பொலிட்டிகோ இதழ் குறிப்பிட்டது, 'பனிப்போர் காலத்திற்குப் பின்னர் ஜனாதிபதியின் இராஜாங்க நெருக்கடி மீது அணுஆயுத போர் ஒருபோதும் இந்தளவுக்குப் பேராபத்தாக இருந்ததில்லை.” 'போர்க்களத்தில் காளான் மேகங்கள் தோன்றும்' ஆபத்து குறித்து செவ்வாயன்று எச்சரித்த, ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி Izumi Nakamitsu ஐ பொலிட்டிகோ இதழ் மேற்கோளிட்டது.

கடந்த வாரம், முன்னாள் செனட்டர் சாம் நுன் நிறுவிய அணுஆயுத அச்சுறுத்தல் அமைப்பு, உக்ரேன் நெருக்கடியால் தூண்டப்படக்கூடிய 'ஓர் உலகளாவிய, பேரழிவுகரமான அணுஆயுத போருக்கான வெறும் ஒரேயொரு சாத்தியமான பாதையை விவரிக்கும் ஓர் அனுமான சூழலை' விவரித்தது. ஒரு ரஷ்ய ஏவுகணை குழு கவனக்குறைவாக ஓர் அமெரிக்க உளவுபார்ப்பு விமானத்தைச் சுட்டு வீழ்த்தினால், அதற்கு அடுத்தடுத்து ஏற்படக்கூடிய தொடர்ச்சியான தீவிர நடவடிக்கைகள் ரஷ்யா மீது அமெரிக்க ஜனாதிபதி ஓர் அணுஆயுத தாக்குதலை நடத்த இட்டுச் செல்கிறது, அதைத் தொடர்ந்து ரஷ்யா ஒரு பதிலடி தாக்குதல் நடத்தும்:

அடுத்த ஒரு மணி நேரத்தில், அதேயளவுக்கு கூட்டுப்படை நாடுகளிலும் 82 மில்லியன் அமெரிக்கர்கள் கொல்லப்படுகிறார்கள். பெரும்பாலானவர்கள் உடனடியாக இறந்துவிடுவார்கள், அதேவேளையில் இன்னும் பலர் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் நச்சார்ந்த கதிர்வீச்சால் இறக்க நேரிடும். உயிர் பிழைப்பவர்களுக்கும் அவர்களின் மிஞ்சிய வாழ்நாள் முழுவதும் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும், மேலும் அவர்களின் குழந்தைகள் மரபணு குறைபாடுகளுடன் பிறக்க நேரிடலாம்.

“ரஷ்யா அதன் சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும்பட்சத்தில், அமெரிக்கா அதற்கான திட்டங்களை உருவாக்குகிறது,” என்ற தலைப்பில், நியூ யோர்க் டைம்ஸில் டேவிட் சாங்கர் நேற்று ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரை ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போரைத் திட்டமிடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வெள்ளை மாளிகைக்குள் உள்ள 'புலி அணி' (Tiger Team) என்று அழைக்கப்படும் ஒரு பிரிவைக் குறிப்பிட்டுக் காட்டியிருந்தது. சாங்கரின் தகவல்படி:

ரஷ்யா ஒரு 'சிறிய' தந்திரோபாய அணுகுண்டைப் பயன்படுத்தினால் — அது உக்ரேனுக்குள் இருந்தாலும் சரி, அல்லது நேட்டோ உறுப்பு நாடு அல்லாத ஒரு நாட்டின் மீது இருந்தாலும் சரி — அமெரிக்காவும் நேட்டோவும் போரில் இருந்து விலகி இருப்பதற்கான 'எல்லா கட்டுப்பாடுகளையும் உதறிவிடும்' என்பதை அர்த்தப்படுத்துவதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு தலையங்கத்தில் பிதற்றுகையில், போரை விட அமைதியை விரும்புவதாக பெயரிடாமல் சில அரசியல் பிரமுகர்களைக் குற்றஞ்சாட்டியது. அமெரிக்கா மொத்தத்தில் முன்நகர வேண்டும். 'அணுஆயுத அச்சுறுத்தல் இப்போது நேட்டோ ஆதரவை நிறுத்துவதற்கு இடம் கொடுத்தால், ரஷ்யர்கள் எதிர்காலத்தில் அதை நேட்டோவுக்கு எதிராக பயன்படுத்துவார்கள்' என்று ஜேர்னல் அறிவித்தது. தற்காப்புக்கான அடித்தளம் நம்பத் தகுதியானது, அதாவது இதன் அர்த்தம் உக்ரேனில் அணு ஆயுதங்களை அவர் சார்ந்திருப்பது அவசியமான விடையிறுப்புடன் எதிர்க்கொள்ளப்படும் என்பதை திரு. புட்டினுக்குப் புரிய வைப்பதாகும்.”

அணுஆயுதப் போரின் சாத்தியக்கூறுகள் பற்றி ஊடகங்கள் பேசுகின்ற அதேவேளையில், இராஜாங்க அணுகுமுறைகள், தீவிரத்தைக் குறைப்பது அல்லது சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒரேயொரு வார்த்தை கூட பேசப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, “வலியை அதிகரிப்பது' என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் பேச்சே, தாரக மந்திரமாக உள்ளது.

ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோவின் துருப்புப் பிரசன்னத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்துடன் புரூசெல்ஸ் நேட்டோ கூட்டம் நேற்று முடிவடைந்த நிலையில், பைடென் முதல்முறையாக உக்ரேனுக்குள் நேட்டோ துருப்புகளை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சாத்தியக்கூறு பற்றிய கருத்துக்களை எழுப்பினார்.

அந்த கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய பைடெனிடம், ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது 'நேட்டோவிடம் இருந்து இராணுவ விடையிறுப்பைத் தூண்டுமா' என்று கேட்கப்பட்டது.

பைடென் பின்வருமாறு பதிலளித்தார், 'நாங்கள் அந்த நேரத்தில் அந்த முடிவை எடுப்போம்.' வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனுக்குள் அமெரிக்க துருப்புக்களை அனுப்பி ரஷ்யப் படைகளைச் சுட்டுத்தள்ளுவது, சிரியாவில் செய்தது போல, இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரேனில் அமெரிக்கப் பினாமிகளால் குற்றச்சாட்டுக்கள் இட்டுக்கட்டப்பட்டு அதற்கு ஒரு விடையிறுப்பாக செய்யப்படும்.

நேட்டோவை இந்த மோதலில் நேரடியாக ஈடுபடுத்தும் நோக்கில் தொடர்ந்து பல நடவடிக்கைகளை விவாதிப்பதற்கும் செயல்படுத்துவதற்குமே அந்த உச்சிமாநாடு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தது. அந்த உச்சிமாநாட்டின் முடிவில் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், 'தீவிரம் இல்லாத' நடவடிக்கைகள் என்று அவர் எவற்றை அபத்தமாக கூறினாரோ அவற்றைக் குறித்து விவரித்தார்:

நேட்டோவின் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம், நேட்டோ விடையிறுப்பு படையின் கூறுபாடுகளை நிலைநிறுத்தியுள்ளோம், 40,000 துருப்புக்களையும் எங்கள் கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தி உள்ளோம், இத்துடன் கூட்டு நாடுகளின் தேசிய நிலைநிறுத்தல்கள் நேரடியாக நேட்டோ கட்டளையகத்தை ஆதரிக்கும் வான்வழி மற்றும் கடற்படை உடைமைகளும் குறிப்பிடத்தக்க அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவில் நான்கு கூடுதல் பன்னாட்டுப் போர்க் குழுக்களையும் நிறுவி வருகிறோம். எல்லா கூட்டு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பை உறுதிப்படுத்த எல்லா களங்களிலும் மற்றும் 360 பாகை அணுகுமுறையில் எல்லா நடவடிக்கைகளும் முடிவுகளும் எடுத்து வருகிறோம்.

ஸ்டொல்டென்பேர்க் பின்வருமாறு கூறி நிறைவு செய்தார்:

மிகவும் ஆபத்தான மூலோபாய யதார்த்தத்திற்காக நேட்டோவின் மாற்றங்களை நாங்கள் இப்போது வேகப்படுத்துவோம். … பல தசாப்தங்களில் இல்லாத வகையில் யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலின் வெளிச்சத்தில், நாங்கள் எங்களின் நீண்ட கால தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நிலைப்பாட்டை கணிசமாக வலுப்படுத்துவோம், மேற்கொண்டு நம்பகமான தடுப்பு மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க அவசியமான தகைமைகள் மற்றும் படைகளை முழு அளவில் தயாராக வைத்திருக்க கூடுதலாக அபிவிருத்திகளை மேற்கொள்வோம்.

இவை தான் மேற்கொள்ளப்பட்டு வரும் 'தீவிரத்தை அதிகரிக்காத' நடவடிக்கைகள் என்றால், தீவிரத்தை அதிகரிப்பது எப்படி இருக்கும்?

யதார்த்தத்தில், நேட்டோ ரஷ்யாவின் எல்லையில் முழுமையாக ஆயுதமேந்திய போர்ப் படையாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, நேட்டோ அதன் 'கிழக்குப் பக்கவாட்டில்' நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை கோடிட்டுக் காட்டும் போர் வரைபடத்தை ட்வீட் செய்தது, நேட்டோ கட்டளையின் கீழ் உள்ள 40,000 பேர் மற்றும் அமெரிக்க கட்டளையின் கீழ் உள்ள 100,000 பேர் உட்பட நூறாயிரக்கணக்கான துருப்புக்களையும், இத்துடன் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருக்கும் 13 போர் விமானங்கள் மற்றும் 140 கப்பல்களையும் அது சுட்டிக் காட்டியது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அணு ஆயுதங்கள் மூலம் நடத்தப்படும் உலகப் போருக்கான தயாரிப்புகள், பெருநிறுவன ஊடகங்களில் இடைவிடாத பிரச்சார அலையுடன் சேர்ந்து வருகின்றன.

போருக்கான ஆதரவைத் தயாரிக்கும் முயற்சியில், “ரஷ்யா மீது பைடென் போதியளவுக்குக் கடுமையாக இல்லை என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகிறார்கள், ஒரு புதிய கருத்துக்கணிப்பு கண்டறிகிறது,” என்ற ஒரு கட்டுரையை நியூ யோர்க் டைம்ஸ் நேற்று பிரசுரித்தது, அது அமெரிக்காவில் பொதுமக்கள் கருத்தின் நிலையை வரையறுக்க முயல்வதாக தெரிகிறது.

நேட்டோவில் இணைவதற்கான உக்ரேனின் உரிமையைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான அமெரிக்க குடிமக்கள் அணு ஆயுதப் போரில் சாம்பலாக வேண்டுமா என்று அமெரிக்க மக்களிடம் நேர்மையாகக் கேட்டால் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நியூ யோர்க் டைம்ஸ் உண்மையில் நினைக்கிறதா? அமெரிக்க கொள்கையின் பின்னால் உள்ள உள்நோக்கங்களும் தாக்கங்களும் இரண்டுமே முறையாக மூடி மறைக்கப்படுகின்றன.

செல்வந்த உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தில் வலதுசாரி, போர்-ஆதரவு வெறியைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஊடக பிரச்சார நடவடிக்கையுமே கூட, இராணுவ விரிவாக்கத்திற்கு உந்துதலாக உள்ளது.

தீர்க்க முடியாத உள் நெருக்கடிகளால் உந்தப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள், மொத்த உலகையும் மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்குக் கொண்டு வரும், முற்றிலும் பொறுப்பற்ற தன்மையுடன் சென்று கொண்டிருக்கின்றன.

நேட்டோவின் இடைவிடாத விரிவாக்க அச்சுறுத்தலின் கீழ், விளாடிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கம், அதன் பங்கிற்கு, ஏகாதிபத்தியத்துடன் ஒருவித இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் உக்ரேனில் தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்காவும் நேட்டோவும் எந்த அளவுக்குப் போருக்கு தயாராக இருந்தன என்பதை தெளிவாகக் குறைமதிப்பீடு செய்திருந்த அது, அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைக் கொண்டு அதன் ஆரம்ப பின்னடைவுகளைச் சரிக்கட்ட முயற்சித்து வருகிறது.

அணுஆயுதப் போருக்கான பைத்தியக்காரத்தனமான முனைவு நிறுத்தப்பட வேண்டும்! இந்த மிகவும் ஆபத்தான சூழ்நிலையில், தொழிலாள வர்க்கம், அதன் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளின் மூலம், சமத்துவமின்மை, சுரண்டல், குற்றகரமான பெருந்தொற்று கொள்கைக்கு எதிரான, மற்றும் இவை அனைத்திற்கும் அடியிலுள்ள முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் போர் எதிர்ப்பு போராட்டத்தை இணைத்து, சுயாதீனமாக தலையிடுவது அவசரமாகும்.

Loading