இங்கிலாந்து கோவிட் நினைவுச் சுவரின் ஆண்டுவிழா: தொற்றுநோய் இன்னும் பெருகி வருகிறது, குற்றவாளிகள் இன்னும் வெளியில் உள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 28 இன்றைய தினம், இலண்டனில் உள்ள தேசிய கோவிட் நினைவுச் சுவரின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாகும். இது தொற்றுநோய்க்கான பிரபலமான எதிர்வினையின் சில உண்மையான வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இது தேவையற்ற உயிர் இழப்புக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மிகப்பெரிய அளவிலான துக்கத்தை ஒருங்கிணைக்கிறது.

தேம்ஸ் நதியின் குறுக்கே, பாராளுமன்றத்தை நோக்கி அமைந்துள்ள இந்த 500 மீட்டர் சுவரில் முதல் சிவப்பு இதயம் வரையப்பட்டதிலிருந்து நினைவிடமாக தொடங்கியது. இது Justice UK என்ற அமைப்பின் கோவிட்-19 ஆல் பிரிந்த குடும்பங்களின் (Covid-19 Bereaved Families) பிரச்சாரக் குழுவின் திட்டமாகும்.

மே 2021 இல் அமைக்கப்பட்ட 500 மீட்டர் நீளமுள்ள தேசிய கோவிட் நினைவுச் சுவரை மக்கள் பார்க்கிறார்கள் (WSWS Media)

பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு மௌன ஊர்வலம் நடைபெறும், பின்னர் சுவரை நிரந்தர நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாலை 4.30 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். இது 100,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களைக் கொண்டுள்ளது. பின்னர் இரவு 8 மணிக்கு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறும்.

வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியின் மையத்தில் உள்ள இந்த நினைவுச் சுவரை அழிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ள இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த மே மாதம், பிரதமர் போரிஸ் ஜோன்சன், செயின்ட் பால்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான நினைவுச் சின்னத்தை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்: “பாராளுமன்றத்திற்கு எதிரே உள்ள நினைவுச் சுவரைப் பார்வையிட்டபோது, இந்த அரங்கில் உள்ள பலரைப் போலவே நானும் மிகவும் நெகிழ்ந்தேன், மேலும் செயின்ட் பால்ஸ் தேவாலயத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான திட்டத்தை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன், அது நமது தலைநகரின் மையத்தில் நமது மன பிரதிபலிப்புக்கான ஒரு பொருத்தமான இடத்தை வழங்கும்.”

ஜோன்சனும் மற்றும் பலரும், இந்த நினைவுச் சுவரை, அவர்கள் செய்த மற்றும் இப்போது செய்துகொண்டிருக்கும் குற்றங்கள், மற்றும் தனது அரசாங்கத்தின் மீது மக்கள் காட்டும் பெரும் விரோதப் போக்கு ஆகியவற்றுக்கான சான்றாகக் கருதி பயப்படுகிறார்கள் மற்றும் வெறுக்கிறார்கள்.

வரையப்பட்ட ஒவ்வொரு இதயப் படமும் தொற்றுநோயால் இழந்த 188,000 உயிர்களில் ஒன்றைக் குறிக்கிறது. இந்த திகைக்க வைக்கும் பெரும் இறப்பு எண்ணிக்கை அரசாங்கக் கொள்கையின் நேரடி விளைவாகும், அதாவது, “இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்” என்ற ஜோன்சனின் இழிவான வெளிப்பாட்டின் மொத்த விளைவாகும். இந்த அறிக்கை பகிரங்கமாகி ஒரு நாள் கழித்து, ஜோன்சன் இரவில் பதட்டத்துடன் நினைவிடத்திற்குச் சென்றார், யாருடைய அன்புக்குரியவர்களை அவரது அரசாங்கம் கொலை செய்ததோ அந்த மக்களின் எதிர்ப்பை சந்திக்காமலேயே தான் பார்வையிட்டதாக அவர் கூற முடியும்.

ஒரு கொடிய மற்றும் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள புதிய வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பரவலாக வெடித்துப் பரவ அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ்கள் மீது கோபமான பொதுமக்களால் கட்டாயப்படுத்தப்பட்ட பூட்டுதல்களாலும், தேசிய சுகாதார சேவையின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தில் ஒரு கிளர்ச்சியைத் தடுக்கவும், அதன் பரவல் சிறிது காலத்திற்கு மட்டுமே தடைப்பட்டது.

பொருளாதாரத்தின் ஒவ்வொரு மறுதிறப்பின் போதும், அரசாங்கம் அதன் “வைரஸூடன் வாழக் கற்றுக்கொள்ளும்” கொள்கையை வலியுறுத்துவதில் மும்முரமாக இருந்தது.

விளைவுகள் திகைக்க வைக்கின்றன. அதேபோல் பயங்கரமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் முக்கால் மில்லியன் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 31 நிலவரப்படி, 1.5 மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 685,000 பேர் ஒரு வருடத்திற்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களை நினைவு கூர்கையில், பொறுப்பானவர்கள் மீதான ஒரு குற்றச்சாட்டாக நினைவுச் சுவர் உள்ளது.
இது கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் இது கவனத்தை ஈர்க்கிறது, அதை மறைக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது.

வைரஸின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நோய்தொற்றுக்களின் அறிக்கைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, முக்கிய கண்காணிப்பு ஆய்வுகளுக்கான நிதியும் குறைக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் அனைவருக்குமான இலவச பரிசோதனைகளும் செய்யப்பட மாட்டாது.

ஆனால், இந்த அனைத்து முயற்சிகளையும் வைத்துப் பார்க்கையில், ‘கோவிட்டுடன் வாழ்வது’ என்ற யதார்த்தம் எப்போதும் தெளிவாக்கப்பட்டு வருகிறது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான வாராந்திர அலுவலகத்தின் (ONS) கணக்கெடுப்பின்படி, மார்ச் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது முந்தைய வாரத்தில் இருந்து ஒரு மில்லியன் அதிகரித்துள்ளது. மேலும், 16 பேருக்கு ஒருவர் வீதம் நோய்தொற்றுக்கு ஆளாகும் இங்கிலாந்தின் நோய்தொற்று விகிதம் அதன் வரலாற்று உச்சபட்ச விகிதமான 15 பேருக்கு ஒருவர் என்பதற்கு நெருக்கமாக இருப்பதுடன், ஸ்காட்லாந்தின் விகிதமான 11 பேருக்கு ஒருவர் என்பதை விட இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது.

தடுப்பூசி திட்டம் இந்த எண்ணிக்கைகளை பொருத்தமற்றதாக ஆக்கியுள்ளது என்று அரசாங்கம் கூறுவது பொய்யாகும். தடுப்பூசி என்பது வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாகும். ஆனாலும் தடுப்பூசி-மட்டுமே மூலோபாயத்தால் அது குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது, இது இரண்டு வகையிலும் அதாவது, தொடர்ந்து பரவவும் மற்றும் பிறழ்வு காணவும் அனுமதிக்கிறது.

இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் நோயெதிர்ப்பு ஆய்வு பேராசிரியர் டேனி ஆல்ட்மேன், “ஒவ்வொரு புதிய கோவிட் நோய்தொற்று அலையையும் சமாளிக்க இங்கிலாந்து ஏன் பூஸ்டர் தடுப்பூசியை நம்பக்கூடாது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை நேற்று வெளியிட்டார். அதில் அவர், “தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களில் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பையும், நடுநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்பிகளையும் (antibodies) விரைவாகத் தூண்டுகின்றன, என்றாலும் இந்த அளவுகள் ஒவ்வொரு வரிசைமுறை அளவிலும் சில மாதங்களுக்குள் குறைந்துவிடும்…” என்று குறிப்பிடுகிறார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளின் புதிய சான்றுகள், கோவிட்டின் வெவ்வேறு மாறுபாடுகளை அல்லது வெவ்வேறு தடுப்பூசி வகைகளை எதிர்கொள்வதானது, பிற்கால தடுப்பூசிகளின் செயல்திறனை வியக்கத்தக்க வழிகளில் மாற்றலாம், இதன் ஒரு விளைவு நோயெதிர்ப்பு குறைபாடு என்று அழைக்கப்பட்டது என்பதை பரிந்துரைக்கின்றன. இது, எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக முன்கணிக்கக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கலாம் என்ற சாத்தியத்தை எழுப்புகிறது.”

ஜனவரி 31 நிலவரப்படி, இங்கிலாந்தில் மொத்தம் பதிவான 14.8 மில்லியன் நோய்தொற்றுக்களில் கிட்டத்தட்ட 600,000 மறு-நோய்தொற்றுக்களாகும். பலர் மூன்று முறை வெவ்வேறு வகை மாறுபாடுகளால் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

மேலும், தொற்றுநோய் ‘முடிந்துவிட்டது’ என அறிவிப்பதான அரசாங்கத்தின் இடைவிடாத பிரச்சாரம் தடுப்பூசி வழங்கலை நாசப்படுத்துகிறது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள 560,000 கடுமையான நோயெதிர்ப்பு-சக்தி குறைந்த மக்களில் பாதிக்கும் குறைவானவர்கள் நான்காவது தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர், இது செப்டம்பர் முதல் வழங்கப்படுகிறது.

தேசிய கோவிட் நினைவுச் சுவர் அருகே மக்கள் கூடுகிறார்கள். இந்தச் சுவர் இலண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனைக்கு அருகே உள்ளது. அதில் காணும் ஒவ்வொரு இதயப் படமும் பிரிட்டனில் கோவிட்-19 காரணமாக இறந்த 150,000 க்கும் மேற்பட்டவர்களில் ஒருவரைக் குறிக்கிறது. (Credit: WSWS Media)

ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சி, கோவிட் தொற்றின் பரவலை பொறுத்துக்கொள்ள முடியும் என்று கூறுவது பேரழிவுகரமானது என்பதை நிரூபிக்கிறது. அதிகரித்து வரும் நோய்தொற்றுக்களின் அலைகளால் உந்தப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது, அதாவது பெப்ரவரி 26 அன்று 10,554 ஆக இருந்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை அன்று 17,440 ஆக அதிகரித்துள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, கோவிட் நோயாளிகளின் வாராந்திர சேர்க்கை விகிதம் ஒரு வருடத்தில் மிக உயர்ந்த அளவில் உள்ளது. மார்ச் 24 வரையிலான இரண்டு வாரங்களில் கோவிட் நோய்க்காக முதன்மை சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெப்ரவரி 21 அன்று ஜோன்சன் தனது ‘கோவிட் உடன் வாழும்’ மூலோபாயத்தை அறிவித்ததிலிருந்து, ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் அண்ணளவாக 4,000 பேர் கொல்லப்பட்டனர், இது ஆண்டுக்கு தோராயமாக 40,000 பேருக்கு சமமாகும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நெடுங்கோவிட் புள்ளிவிபரங்கள் ஒரு மாதத்தில் 200,000 அளவிற்கு அதிரடியாக அதிகரித்துள்ளது, மேலும், மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள 35-49 வயதினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

தொற்றுநோயையும், அரசாங்கத்தின் பதிலிறுப்பையும் சர்வசாதாரணமாக மூடிமறைக்கமுடியாத நிலையில், அரசாங்கம் பொதுமக்களின் கோபத்தை தணிக்க, பொது விசாரணைகளில் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட ஒரு முறையைப் பயன்படுத்த முயல்கிறது. இதற்கு முன்னைய அனைத்தையும் போலவே இதுவும் ஒரு கவனமாக ஏற்பாடு செய்து கட்டுப்படுத்தும் விவகாரமாகும், அதாவது முடிந்தவரை தவறான கேள்விகளைக் கேட்பதில் நேரத்தை செலவழிக்க கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி லேடி ஹாலெட் ஜோன்சனால் நேரடியாக நியமிக்கப்பட்டார். அவரது விதிமுறைகள், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கின்றன.

இது எங்கு செல்கிறது என்பதை அறிய விரும்பும் எவரும், கிரென்ஃபெல் அடுக்குமாடி விசாரணையை (Grenfell Tower Inquiry) பார்க்க வேண்டும், ஒரே இரவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் இறந்தனர், இப்போது அது நடந்து ஐந்தாவது ஆண்டு ஆகியும், அது முடிவே இல்லாமல் தொடர்கிறது. அந்த நேரத்தில், அடுக்குமாடி கட்டிடத்தை திருத்தியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் தொடர்ந்தும் இலாபம் ஈட்டிக்கொண்டிருக்கின்றன, வழக்கு விசாரணைகளில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோன்சன் ஒரு ‘வெளிப்படையான மற்றும் நேர்மையான’ கோவிட் விசாரணைக்கு உறுதியளிக்க முடியும், ஏனென்றால் அவரது சொந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவார்.

தொழிற் கட்சி, நினைவுச் சுவர் மற்றும் அதை நிரந்தரமாக்குவதற்கான பிரச்சாரத்தின் ஆதரவாளராக காட்டிக் கொள்கிறது. இது கிளர்ச்சியூட்டும் சிடுமூஞ்சித்தனமாகும். ஜோன்சன் அரசாங்கம், ஒவ்வொரு அடியெடுப்பிலும் தொழிற் கட்சியால் ஆதரிக்கப்படாமல் இருந்திருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் குற்றங்களில் இருந்து விடுபட்டிருக்க முடியாது, அதாவது கட்சியும் தொழிற்சங்கங்களும், பொருளாதாரம் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பற்ற மறுதிறப்புக்கு கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தமை, வைரஸ் பரவலுக்கான முக்கிய திருப்பத்தை வழங்கின.

உலக சோசலிச வலைத் தளமானது, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞான வல்லுநர்களின் சாட்சியத்தின் மூலம் குற்றவியல் அரசாங்கங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட, கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணையை (Global Workers’ Inquest) நடத்துகிறது. இந்த விசாரணையின் மூலம், உலக சோசலிச வலைத் தளம் உலகளவில் ஒருங்கிணைந்து கோவிட்-19 ஐ ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட விஞ்ஞான கொள்கைக்கான ஆதரவை உருவாக்குகிறது. எனவே, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading