ஜேர்மனி உக்ரேனுக்கு டாங்கிகளை வழங்கி ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஊடக அறிக்கைகளின்படி, ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. சுமார் 300 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் 'குறுகிய காலத்தில் உக்ரேனுக்கு வழங்கப்படலாம்' என Süddeutsche Zeitung செய்தித்தாளின் அறிக்கை கூறுகிறது. முந்தைய விநியோகங்களைப் போலல்லாமல், சமீபத்திய ஏற்றுமதியானது ஜேர்மன் இராணுவ கையிருப்பில் இருந்து இராணுவ உபகரணங்களைக் கொண்டிருக்காது, ஆனால் ஜேர்மன் தொழிற்துறையால் நேரடியாக வழங்கப்பட்ட ஆயுதங்கள் அடங்கும்.

சோவியத் தயாரிப்பிலிருந்த பின்லாந்தின் BMP-1 டாங்கிகள் [Credit: Balcer~commonswiki, CC BY-SA 3.0, http://creativecommons.org/licenses/by-sa/3.0/]

திட்டமிடப்பட்ட ஏற்றுமதி மிகப்பெரியது. Süddeutsche Zeitung இன் படி, அரசாங்கத்தின் ஆயுதங்களின் பட்டியலில் 'சுமார் 200 தயாரிப்புகள்' அடங்கும். இவற்றில் 2,650 Matador வகை டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 18 ஆளற்ற உளவு விமானங்களும் 'உடனடியாக வழங்கப்படலாம்'. ஏனையவற்றில் மோட்டார்கள், இயந்திர துப்பாக்கிகள், 3,000 இரவு பார்வை சாதனங்கள், பல ஆயிரம் பாதுகாப்பு உள்ளாடைகள் மற்றும் தலைக்கவசங்கள், எட்டு தரை கண்காணிப்பு ராடார் சாதனங்கள், வான்வெளி கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் 'பாதுகாக்கப்படாத மற்றும் பாதுகாக்கப்பட்ட வாகனங்கள், போக்குவரத்து பஸ்கள் முதல் சாலை கவசவாகனங்கள்' ஆகியவை அடங்கும்.

வெளிப்படையாக, சமூக ஜனநாயகக் கட்சியின் பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ரீன் லாம்ப்ரெக்ட் ஆயுத விநியோகத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். 'பாதுகாப்பு அமைச்சக ஆதாரங்களில்' இருந்து வரும் தகவல்கள், 'பட்டியலின்படி உக்ரேனுக்கான இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு' லாம்ப்ரெக்டுக்கு 'எந்த எதிர்ப்பும் இல்லை' என Süddeutsche Zeitung எழுதுகிறது.

ஜேர்மன் அரசாங்கம் இப்போது உக்ரேனுக்கு டாங்கிகளை வழங்குவதாக நேற்று Welt am Sonntag செய்தித்தாள் தெரிவித்தது. இதில் 58 பாதுகாப்பு டாங்கிகள் அடங்கும். அவை முதலில் முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் தேசிய மக்கள் இராணுவத்தின் இருப்புகளிலிருந்து வந்தவையும் மற்றும் இப்போது செக் குடியரசின் வசம் உள்ளன. 'PbV-501' வகையின் காலாட்படை டாங்கிகளுக்கு (BMP-1 என்றும் அழைக்கப்படுகிறது) பீரங்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆரம்ப பின்னடிப்பிற்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனுக்கான இராணுவ ஆதரவில் ஜேர்மனி பெருகிய முறையில் முன்னணியில் உள்ளது. உக்ரேனிய தரவுகளின்படி, கடந்த சில வாரங்களில், 500 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், 1,000 சுற்று தோட்டாக்கள், 500 ஸ்டிங்கர் (Stinger) விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 2,000 ஸ்ட்ரெலா (Strela) ஏவுகணைகள் கியேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. கியேவ் கோரும் கனரக போர் ஆயுதங்கள் இப்போது தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

அதே நேரத்தில், ஜேர்மனி கிழக்கு ஐரோப்பாவில் தனது இராணுவப் பிரசன்னத்தை திட்டமிட்டு விரிவுபடுத்துகிறது. சமீபத்திய வாரங்களில், ஜேர்மன் இராணுவத்தின் தலைமையிலான நேட்டோ போர்க் குழுவை வலுப்படுத்த 350 கூடுதல் ஜேர்மன் படையினர் கனரக இராணுவ உபகரணங்களுடன் லித்துவேனியாவிற்கு மாற்றப்பட்டனர். கூடுதலாக, விமானப்படை ருமேனியாவுக்கு ஆறு யூரோஃபைட்டர் (Eurofighter) போர் விமானங்களையும் 700 படையினரையும், ஸ்லோவாக்கியாவுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பான பட்ரியோட்டையும் (Patriot) அனுப்பியது. அங்கு ஜேர்மனி மற்றொரு போர்க்குழுவின் தலைமையையும் எடுத்துக் கொண்டது.

நாட்டின் பிராந்திய பாதுகாப்பு என்ற பெயரில், உக்ரேனிய இராணுவத்தில் தீவிர வலதுசாரிப் படைகளுக்கு பெருமளவில் செல்லும் ஆயுதங்களை வழங்குதல் மற்றும் துருப்புக்களை அனுப்புதல் உக்ரேனில் போரை அதிகப்படுத்துகிறது. இவை ரஷ்யாவிற்கு எதிரான மறைமுக போர் நடவடிக்கைகளாகும். இவை அணுவாயுதத்துடன் கூடிய நாட்டுடனான நேரடி இராணுவ மோதலின் அபாயத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த வாரம் மத்திய நாடாளுமன்றத்தில் (Bundestag) போர் வரவு-செலவுத் திட்டம் குறித்த தனது உரையில், ஆயுத விநியோகம் மீதான ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக லாம்ப்ரெக்ட் எச்சரித்தார். 'எப்போது, எங்கு வழங்கப்படும் என்பது பற்றிய பொது விவாதங்களைத் தவிர்க்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். இல்லையெனில், இந்த வினியோகங்களை மேற்கொள்பவர்கள் இலக்குகளாக மாறுவார்கள். 'இந்த போக்குவரத்துகள் ரஷ்ய தாக்குதல்களின் இலக்குகளாக மாறலாம்” என்றார்.

அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களில் காதடைக்கும் பிரச்சாரத்திற்கு மத்தியில், உக்ரேன் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பினாமிப் போர் என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது. ரஷ்ய எல்லையில் இராணுவக் கூட்டணியின் திட்டமிட்ட முன்னேற்றத்துடன், ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேன் மீதான கிரெம்ளினின் பிற்போக்குத்தனமான தாக்குதலை உண்மையில் தூண்டின. குறிப்பாக பேர்லின் இப்போது போரை மறுஆயுதமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கான நீண்டகால விருப்பத்திற்குரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கிறது.

'இந்த புதிய சகாப்தத்தின் மூலம், நாம் அரசு மற்றும் கூட்டணியைப் பாதுகாக்க தேவையான வழிமுறைகளுடன் ஜேர்மன் இராணுவத்தை தயார்ப்படுத்துவது இப்போது இறுதியாக சாத்தியமாகும்' என்று லாம்ப்ரெக்ட் Redaktionsnetzwerk Deutschland உடனான ஒரு நேர்காணலில் உற்சாகப்படுத்தினார். 'படையினர்களை ஆயுதமயப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.' ஜேர்மன் இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதற்கான உன்னிப்பாக திட்டமிடப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட ஒரு பிரச்சார சொல்லான 'புதிய சகாப்தம்', 'ஜேர்மன் இராணுவத்தை அது இருக்கவேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலம், அதாவது சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லப்படுவதன் மூலம்' உணரப்பட முடியும் என்றார்.

லாம்ப்ரெக்ட் ஆளும் வர்க்கத்தின் தொலைநோக்கான போர் மற்றும் பெரும் அதிகாரத் திட்டங்களைப் பற்றிய உட்பார்வையை கொடுத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை, 'விரைந்து எதிர்த்தாக்குதல் படைக்கான திட்டம் உள்ளது மற்றும் ஜேர்மனி அதில் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது,' என்று அவர் கூறினார். அதனால்தான், '2025 முதல் 1,500 துருப்புக்களுடன் இந்த படையின் மையத்தை வழங்குவோம் என்று அவர் முன்வந்தார்.' இது 'நேட்டோவின் கிழக்கு பகுதியை நிரந்தரமாக வலுப்படுத்துவதையும், இந்த நேரத்தில் மட்டும் அதைப் பாதுகாப்பதாக இருக்காது' என்றார்.

திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியமானதாக 'ஜேர்மன் இராணுவ சிறப்பு நிதியை' பாராளுமன்றத்தில் விரைவாக ஏற்றுக்கொண்டது. கடந்த வாரம், பாதுகாப்பு மந்திரி ஏற்கனவே ஜேர்மன் ஆயுதப்படைகளின் உயர் தளபதி ஏபகார்ட் ஷோர்ண் (Eberhard Zorn) மற்றும் அதிபர் ஓலாவ் ஷோல்ஸ் ஆகியோரிடம் திட்டமிடப்பட்ட 10 பில்லியன் யூரோக்களை பயன்படுத்துவது பற்றி பேசியிருந்தார். 'படையினர்களுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில் தளபாடங்களை மிக விரைவாக வாங்குவது' அவருக்கு மிகவும் முக்கியமானது. பின்னர், நிச்சயமாக, 'டொர்னாடோ (போர் விமானம்) விமானங்களுக்கு அடுத்த தலைமுறை விமானங்கள் அல்லது ஆயுதமேந்திய ஆளற்ற ட்ரோன்கள் போன்ற பல முக்கியமான பெரிய திட்டங்கள் உள்ளன' என்றார்.

டஜன் கணக்கான அணு ஆயுதங்கள் தாங்கிய F-35 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை வாங்குவதற்கான முடிவை தொடர்ந்து கடந்த வார இறுதியில் தேசிய ஏவுகணை பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. மேலும் வாங்கும் திட்டங்களும் இப்போது அறிவிக்கப்படும். 'அறிவிக்கப்பட்ட ஆதாரங்களின்படி,' ஜேர்மன் இராணுவம் மேலும் 350 'பூமா' டாங்கிகளை வாங்குவதால் 'அதனது துப்பாக்கி டாங்கிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும்' என Handelsblatt எழுதுகிறது. கூடுதலாக, 'மேலும் Boxer வகை சக்கர கவசவாகனங்களும், தளவாட விநியோக வாகனங்களும் வாங்கப்படும்.' 'கடற்படைக்கு மேலும் ஐந்து K130 கொர்வெட் சிறிய போர்க்கப்பல்கள் மற்றும் ஒன்று முதல் இரண்டு கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைக்கும் என்பது உறுதியாகக் கருதப்படுகிறது' என அறிக்கை தெரிவித்தது.

இது வெறும் ஆரம்பம் தான். ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய ஜேர்மன் மறுசீரமைப்பு திட்டத்தை ஷோல்ஸ் அறிவித்த நான்கு வாரங்களுக்கு பின்னர், முந்தைய திட்டங்கள் போதுமானதாக இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆயுதங்களின் தேவையை மட்டும் நீங்கள் பார்த்தால், 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதியின் அளவு விரைவில் முடிவடைந்துவிடும்' என Handelsblatt கருத்து தெரிவிக்கிறது. '30 நாட்கள் போர் திறன்' என்ற நேட்டோ இலக்கை அடைய, அரசாங்கம் 'குறைந்தது 20 பில்லியனை தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளுக்காக மட்டும் செலவிட வேண்டும்.'

ஜேர்மன் ஆயுதத் தொழில்துறை அதன் இரத்தம் தோய்ந்த கைகளை தேய்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன், போர் இயந்திரத்திற்கான உபகரணங்களைத் தயாரிக்க தயாராகிறது. Handelsblatt இன் படி, பாதுகாப்பு அமைச்சகம் மிகப்பெரிய ஜேர்மன் ஆயுத நிறுவனங்களின் மேலாளர்களை 'அவசர கூட்டத்திற்கு' அழைத்தது. 'தற்போதுள்ள இராணுவ தளவாடங்களை மேம்படுத்தி, புதிய பொருட்களை விரைவில் வாங்க வேண்டும்' என அமைச்சகத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தித்தாளின் படி, Rheinmetall குழுமம் மட்டுமே 42 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களின் பட்டியலை மத்திய அரசுக்கு வழங்கியது. வெடிமருந்துகள் தவிர, வானூர்திகள், சங்கிலி கவசவாகனம் மற்றும் சக்கர கவசவாகனம் ஆகியவையும் இதில் அடங்கும். 'பல ஆலைகளில் நாங்கள் ஒற்றை பணிமுறையில் வேலை செய்கிறோம்; நாங்கள் 24 மணி நேரமும் வேலை செய்யலாம்,” என்று Rheinmetall தலைமை நிர்வாகி ஆர்மின் பப்பேர்கள் கூறினார். இதனால் டாங்கி வெடிமருந்துகளின் உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 40,000 முதல் 240,000 துண்டுகளாக அதிகரிக்க முடியும்.

குறைந்தது 27 மில்லியன் சோவியத் குடிமக்களைக் கொன்ற சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பிற்கு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் மீண்டும் ரஷ்யாவிற்கு எதிரான போர்ப் பாதையில் உள்ளது. அதன் மையத்தில், அது இரண்டாம் உலகப் போரின் போது மேற்கொண்ட அதே இலக்குகளைத் தொடர்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய பூகோள மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதில் ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பாவை இராணுவமயமாக்குவதில் அக்கறை கொண்டுள்ளது. அந்த நாட்டின் பரந்த வளங்களை தடையின்றி அணுகுவதற்கு ரஷ்யாவை அடிபணிய வைப்பது இந்த நடைமுறையின் முதல் படியாகும்.

'ஐரோப்பாவைப் பொறுத்தவரை, அது இப்போது ஜேர்மன் இராணுவத்தின் கையில் உள்ளது,' என்று Die Welt இதழ் எழுதுகின்றது. மேலும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மன் ஆயுதப்படைகளின் தலைமையின் கீழ் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாராக வேண்டும் என்று ஒரு வெளிப்படையான வேண்டுகோள் விடுக்கிறது. 'ஜேர்மன் நட்பு நாடுகளின் மூலோபாய நோக்குநிலை மற்றும் குறிப்பாக பிற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகளில் கவசப்படை போர் பிரிவுகள் உள்ளடங்கிய தரைப்படைகளின் குறைப்பினால் ஜேர்மனியைத் தவிர வேறு எவரும் நேட்டோவின் கிழக்குப் பகுதியை பாதுகாக்க தேவையான ஆயுதப் படைகளை வழங்க முடியாது. இதனால் நட்பு நாடுகளின் கூட்டணி ரஷ்யாவுடன் ஒரு சாத்தியமான மோதலில் நின்றுபிடிக்கக்கூடியதாக இருக்கும்.

போருக்கான தயாரிப்புகள் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு உண்மையான போருடன் ஒன்றிணைந்து செல்கின்றது. 'நாங்கள் ஒரு அரை-போர்க் கட்சி, ஒரு அரை-பொருளாதாரப் போர்க் கட்சி' என்று பொதுத் தொலைக்காட்சியின் Tagesthemen நிகழ்ச்சியில் பொருளாதார விவகாரங்களுக்கான பசுமைக் கட்சியின் அமைச்சர் ரொபேர்ட் ஹாபெக் கூறினார். 'நாங்களும் ஒரு விலையை செலுத்துகிறோம் ... இதன் விளைவாக நாங்கள் ஏழைகளாக மாறுவோம்.' 'நாங்கள்' என்பதன் மூலம் ஹாபெக் குறிப்பிடுவது என்பது முதலாளித்துவ வர்க்கமோ அல்லது அவர் சார்ந்து பேசும் பணக்கார நடுத்தர வர்க்கத்தையோ குறிக்கவில்லை. மாறாக போருக்கான உந்துதலின் செலவுகளை தாங்க வேண்டிய தொழிலாள வர்க்கத்தை குறிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (SGP) இந்த வெறித்தனமான போர்த் திட்டங்களையும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்காக மக்கள் 'தியாகங்களை' செய்து வறுமையில் தள்ளப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையையும் கண்டிக்கிறது. உலகப் போரும் மற்றும் காட்டுமிராண்டித்தனமும் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் நாங்கள் தங்கியிருக்கின்றோம். சமூகத் தாக்குதல்கள் மற்றும் விலைவாசி உயர்வுகளால் தொழிலாள வர்க்கம் தவிர்க்க முடியாமல் கடுமையான வர்க்கப் போராட்டங்களுக்குள் தள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு சமத்துவமின்மை மற்றும் போருக்கான மூலகாரணமான முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பை இல்லாதொழிப்பதையும், ஒரு உலகளாவிய சோசலிச சமுதாயத்தை கட்டமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு தேவை.

Loading