டேவிட் நோர்த் ரஷ்ய தோழருக்கு எழுதிய கடிதம்: "புட்டினின் படையெடுப்பு ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இடைவிடாத அழுத்தத்திற்கான ஒரு அவநம்பிக்கையான பிரதிபலிப்பு"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டேவிட் நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர்.

***

2 April 2022
அன்புள்ள தோழர்,

போர் தொடர்கையில், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான விரிவடையும் போராட்டத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே உக்ரேனின் தலைவிதி அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அதிகரித்தளவில் தெளிவாகிறது. பைடென் நிர்வாகம் போரைத் தூண்டி, கடைசி நிமிடம் வரை அவர் ரஷ்ய அரசின் 'தேசியப் பாதுகாப்பிற்கு' நியாயமான சலுகைகளை அளிக்க தனது 'மேற்கத்திய பங்காளிகளை' வற்புறுத்த முடியும் என்று நம்பிய புட்டினை இராணுவரீதியாகவும் மற்றும் அரசியல்ரீதியாகவும் நன்கு தயாரிக்கப்படாத ஒரு போருக்குள் தள்ளியது.

நேட்டோ எந்த அளவிற்கு உக்ரேனின் இராணுவத்திற்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்துள்ளது என்பதை புட்டினும் அவரது இராணுவத் தளபதியும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். ஆனால் அவர்களது உளவுத்துறை சேவைகளின் இந்தத் தோல்வியானது, ஏகாதிபத்திய அமைப்பு பற்றிய பெருமளவில் யதார்த்தமற்ற, கிட்டத்தட்ட குழந்தைத்தனமான, அப்பாவியான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்தில் வேரூன்றி உள்ளது. மார்க்சிசத்துடனான அனைத்து தொடர்பையும் நிராகரித்த அதே வேளையில், கிரெம்ளின் அதன் மேற்கத்திய கூட்டாளிகளுடன் 'சமாதான சகவாழ்வு' என்பதின் சாத்தியத்தில் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது. புட்டின், படையெடுப்பிற்கு உத்தரவிடுவதற்கு சற்று முன்பு, ரஷ்யா மேற்கு நாடுகளால் 'ஏமாற்றப்பட்டுவிட்டது' என்று பரிதாபமாக குற்றம்சாட்டினார்.

மேலும், மேற்கு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறிய பின்னர் ரஷ்யாவிடம் தெளிவான மூலோபாயத் திட்டம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. புட்டின் என்ன சாதிக்க முயற்சிக்கிறார்? இந்த இராணுவ நடவடிக்கை, குறைந்தபட்சம் அதன் ஆரம்பக் கட்டங்களில் ஒரு பேரழிவாகும். இது எதிர்பாராத சிரமங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்காலிக ஒரு தொடர் எதிர்வினைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. போரின் தொடக்க வாரங்களில் ஏழு தளபதிகளின் இழப்பு, திறமையின்மையின் திகைப்பூட்டும் அளவிற்கு சான்றாகும். ரஷ்ய பேரரசிலிருந்து தனது உத்வேகத்தைப் பெற்ற புட்டின், ஒரு போர்த் தலைவர் என்றவகையில் நிக்கோலஸ் II ஐ விட மிகவும் திறமையானவர் அல்ல.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களும் ஊடகங்களும் ரஷ்ய மிருகத்தனத்தை கண்டிக்கின்றன. உக்ரேனிய மக்கள் மீது போரின் பேரழிவுகரமான தாக்கத்தை எதிர்ப்பது ஒருபுறம் இருக்க, அதனை குறைத்துக்காட்ட நாங்கள் சிறிதும் விரும்பவில்லை. ஆனால் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ கண்டனங்கள் பாசாங்குத்தனத்துடன் முன்வைக்கப்படுகின்றன. அதாவது 1991இல், அதைவிட மோசமாக 2003இல் பாக்தாத்திற்கு எதிராக அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்ட பாரிய குண்டுவீச்சுடனான 'அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தலுடன்' ரஷ்ய படையெடுப்பு தொடங்கவில்லை. பென்டகன் உக்ரேனுக்கு எதிரான போரைத் தொடங்கியிருந்தால், போரின் முதல் நாளிலேயே கியேவ் மற்றும் பிற முக்கிய உக்ரேனிய நகரங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அழிக்கப்பட்டிருக்கும்.

நிச்சயமாக, இது புட்டினின் படையெடுப்பை நியாயப்படுத்தாது. இப்படையெடுப்பு ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ செலுத்தும் இடைவிடாத மற்றும் தீவிரமான அழுத்தத்திற்கு அவநம்பிக்கையான மற்றும் அடிப்படையில் பிற்போக்குத்தனமான பதிலாகும். அரசியல்ரீதியாக பலவீனமான ரஷ்ய முதலாளித்துவம், அதன் ஆட்சிக்கு இன்னும் கணிசமான அடித்தளம் இல்லாமல் இந்த அழுத்தத்தை, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் இந்த மூலோபாயம், முதலாளித்துவ தேசிய-அரசு புவிசார் அரசியலின் வழக்கமான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், மூலோபாயரீதியாக பயனற்றது, தந்திரோபாயரீதியாக பேரழிவுகரமானது மற்றும் அரசியல்ரீதியாக திவாலானது. புட்டின் படையெடுப்பைத் தொடங்கிய உரையில் அரசியல்ரீதியாக திவாலான அம்சம் மிகத் தெளிவாக அம்பலமானது.

பொதுவாக, 'ஆயுதத்திற்கான அழைப்பு' என்பது மக்கள் கடந்து வந்த மிகப் பெரிய வரலாற்று அனுபவங்களைத் தூண்டுகிறது. ஆனால் மறுசீரமைப்புவாத ரஷ்ய முதலாளித்துவத்தால் இதை செய்ய முடியாது. இருபதாம் நூற்றாண்டின் 'ரஷ்ய' வரலாற்றை அது தட்டியெழுப்ப முடியாது. ஏனெனில் அந்த வரலாறு அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் அனுபவத்தில் பொதிந்துள்ளது. புட்டின் அந்த வரலாற்றை நிராகரிக்கிறார், அதனால் அவரது 'போர் பேச்சு' 1917 க்கு முன்னைய காலத்திற்கு செல்கின்றது. அவர் லெனினையும் போல்ஷிவிக்குகளையும் நிராகரித்து மற்றும் ஜார் மற்றும் பெரும் ரஷ்ய பேரினவாத கொடுமைக்காரரான டிஜெர்ஷிமோர்டாவிற்கு (Dzerzhimorda) அழைப்புவிட்டார். இந்த பிற்போக்குத்தனமான முறையீடு, உலகிற்கு அழைப்புவிடுவது ஒருபுறம் இருக்க ரஷ்யாவில் உள்ள மக்களைக் கூட ஊக்குவிக்க முடியாது.

இந்த கட்டத்தில், போர் இராணுவரீதியாக எவ்வாறு செல்லும் என்பதை முன்னறிவிப்பது எளிதானதல்ல. எவ்வாறாயினும், இந்தப் போர் உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது என்பதை முன்னறிவிக்க முடியும். போராட்டத்தின் உலகளாவிய பரிமாணங்கள் பெருகிய முறையில் வெளிப்படும். ஏகாதிபத்திய சக்திகளுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவிற்கு இந்தப் போரின் நோக்கம் உலகினை ஒரு புதிய பங்கீட்டிற்கு உள்ளாக்குவதாகும். இந்த மறுபங்கீட்டின் முக்கிய இலக்குகள் ரஷ்யா மற்றும் சீனா ஆகும். 1) அதன் உலகளாவிய நலன்களுக்குத் தடையாக இருக்கும் ரஷ்யாவின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், 2) ரஷ்யாவின் மகத்தான மூலோபாய வளங்களின் மீது நேரடிக் கட்டுப்பாட்டைப் பெறவும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்றுவதற்கு ரஷ்யாவை அதன் தற்போதைய வடிவத்தில் இருந்து உடைக்க வேண்டும். இந்தப் போராட்டம் வெளிவருகையில், அமெரிக்கா சீனாவைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற நோக்கங்களைக் கடைப்பிடித்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு முக்கிய இலக்குகளாக ஒரு சமூகப் புரட்சியைக் கடந்து வந்த நாடுகள் என்பது தற்செயலாக இருக்க முடியாது. இரு நாடுகளும் முதலாளித்துவத்தை மீட்டெடுத்திருந்தாலும், ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளின் எஞ்சியிருக்கும் வரலாற்று மரபு அதன் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் மொத்த அமெரிக்க தலையீடு மற்றும் கட்டுப்பாட்டில் இருந்து ஒரு மட்டுப்படுத்தப்பட்ட 'சுதந்திரத்தை' கொண்டிருப்பதாகும். துரதிர்ஷ்டவசமாக, ரஷ்யாவை பொறுத்தவரை, இந்த சுதந்திரம் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை வைத்திருப்பதன் மூலம் பெரும்பாலும் எதிர்மறையான வழியில் வெளிப்படுகிறது. ஆனால் இந்த ஆயுதக் களஞ்சியம் நீண்ட காலத்திற்கு, ரஷ்யா எதிர்கொள்ளும் தனது இருப்பிற்கான போராட்டத்திற்கான ஒரு சாத்தியமான மூலோபாயத்தை வழங்காது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்க்கிறது. இந்த கொள்கைரீதியான நிலைப்பாடு அமெரிக்கா மோதலை தூண்டியது என்ற மறுக்க முடியாத உண்மையை அங்கீகரிப்பதன் மூலம் முரண்படவில்லை. இருப்பினும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் மூலோபாயத்தை ரஷ்யாவில் முதலாளித்துவ ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் நடைமுறைரீதியான தேசியத்தை அடித்தளமாக கொண்ட கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்ய வெகுஜனங்களின் பாதுகாப்பை முதலாளித்துவ தேசிய-அரசு புவிசார் அரசியலின் அடிப்படையில் மேற்கொள்ள முடியாது. மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக சோசலிசப் புரட்சியின் பாட்டாளி வர்க்க மூலோபாயத்தின் மறுபிறப்பு தேவைப்படுகிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கம் பேரழிவிற்கு வழிவகுத்த முதலாளித்துவ மறுசீரமைப்பின் முழு குற்றவியல் நிறுவனத்தையும் நிராகரிக்க வேண்டும். மேலும் அதனது மாபெரும் புரட்சிகர லெனினிச-ட்ரொட்ஸ்கிச பாரம்பரியத்துடன் அதன் அரசியல், சமூக மற்றும் புத்திஜீவித இணைப்பை மீண்டும் நிறுவ வேண்டும்.

இந்த பாரம்பரியத்தின் சாராம்சம் புரட்சிகர சர்வதேசியவாத்திற்கான அதன் அர்ப்பணிப்பாகும். உக்ரேன் போர் உலகளாவிய பரிமாணங்களின் ஒரு சுழல்காற்றை உருவாக்கியுள்ளது. முதலாளித்துவ அமைப்பின் ஏற்கனவே மிகவும் பெருகியுள்ள நெருக்கடியை தீவிரப்படுத்தும் போரினால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீர்குலைவுகள் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. விலைவாசி உயர்வு மற்றும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் சீர்குலைவு ஆகியவை ஏற்கனவே உலகம் முழுவதும் வெகுஜன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்துள்ளன. இலங்கையில், கோபமடைந்த தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட முயன்றனர். உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை எதிர்கொள்ளும் பணி, புரட்சிகரப் போராட்டத்தின் இந்த புதிய கட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான முன்னோக்கு மற்றும் தலைமைத்துவத்தை வழங்குவதாகும்.

சிறந்த சகோதர வாழ்த்துக்களுடன்,

டேவிட் நோர்த்

Loading