முன்னோக்கு

உலகளாவிய உணவுப்பொருள் நெருக்கடி சர்வதேச வர்க்க போராட்டத்திற்கு எரியூட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் அமெரிக்கா-நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர், உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் வெடிஉலைக்கு எரிப்பூட்டுகிறது. வெறும் ஒரு சில வாரங்களுக்குள், ரஷ்யாவுக்கு எதிரான போரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகளும் உலகின் உற்பத்தி சக்திகளை ஆழமாக நிலைகுலையச் செய்துள்ளன, இவை ஏற்கனவே நலிந்து போயுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, பணவீக்கப் போக்குகளைப் பலப்படுத்தி, உலகளவில் உணவு மற்றும் எரிவாயு உற்பத்தியை முடக்கி வருகின்றன.

மார்ச் 22, 2022 அன்று இலங்கையின் கண்டியில் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நிற்கும் மக்கள் [கடன்: WSWS Media]

இந்த போர் தொடங்குவதற்கு முன்னரே மோசமடைந்து கொண்டிருந்த ஒரு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி இப்போது எங்கெங்கிலும் பரவி வருவதுடன், பில்லியன் கணக்கான மக்களை வறுமை மற்றும் பட்டினியின் உச்சநிலைக்கு கொண்டு வந்துள்ளது.

அதிர்ச்சியானது, நடவடிக்கைக்கு வழி விட தொடங்கி உள்ளது. குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் கோவிட்-19 பெருந்தொற்று வெடிப்பதற்கு முன்னர் இருந்தே உலகெங்கிலும் மிகப் பெரிய சமூக போராட்ட அலையாக வெடித்து வருகின்றன.

போருக்கான வரைபடங்களை வரைவதில் பல ஆண்டுகள் செலவிட்டுள்ள, ஏகாதிபத்திய அரசியல்வாதிகளும் புவிசார் மூலோபாயவாதிகளும், அவர்களின் எல்லா விதத்திலும் கவனமான திட்டமிட்டிருந்தாலும், அவர்களின் இரத்தக்களரியான திட்டங்களைப் பாரிய சமூக எச்சரிக்கை வரம்புகளைக் கடந்தே இயக்கத்திற்குக் கொண்டு வந்திருப்பதைக் கண்டறிந்து வருகிறார்கள்.

இனம் மற்றும் மதப் பின்னணியின் அர்த்தத்தில் பன்முகத்தன்மை கொண்டுள்ள இந்த போராட்டங்கள், சர்வதேச அளவில் இருப்பதுடன், முன்னெப்போதையும் விட மிகப் பெரிய, மிகவும் நகர்புறமயமாகி உள்ள மற்றும் முன்னெப்போதையும் விட ஒன்றோடொன்று அதிகமாக இணைந்துள்ள தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. மிகவும் முன்னேறிய நாடுகளிலும் அதே போல குறைவாக அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும், இந்த போராட்டங்கள் ஒரே கோரிக்கையைச் சுற்றி சுழல்கின்றன: அதாவது, வாழ்க்கை செலவுகளைச் சகித்துக் கொள்ள முடியவில்லை, நிலைமைகள் மாற்றப்பட வேண்டும், அவை இப்போதே மாற வேண்டும் என்பதாகும்.

உலகப் போர் முனைவை நிறுத்தவும் மற்றும் அணுஆயுத பேரழிவைத் தடுக்கவும் ஆற்றல் கொண்ட சமூக சக்தி இதுவே ஆகும். இந்த உலகளாவிய இயக்கம் ஒவ்வொரு மணி நேரத்திலும் விரிவடைந்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு, ஜனாதிபதி கோட்டபய இராஜபக்ஷ பதவி விலகக் கோரி, கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள அவரின் தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்லும் சாலையை முடக்கி ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மருந்து, உணவு, பால் மற்றும் எரிவாயு பெற பெருந்திரளான மக்கள் திண்டாடி வரும் நிலையில், இந்த வலதுசாரி அரசாங்கம் ஈவிரக்கமின்றி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது.

டீசல் தீர்ந்து விட்டது, பணத் தட்டுப்பாடு உள்ளது, நீண்ட நேர மின்சார வெட்டுக்கள் நாட்டை இருட்டாக்கி உள்ளது. 31 வயதான பாடசாலை ஆசிரியர் ஒருவர் மட்டக்களப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் க்குக் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை நான் எரிவாயுக்காக அதிகாலை 4 மணியில் இருந்து வரிசையில் நின்றேன். பால் பவுடர் தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசிக்கும் பருப்புக்கும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. மெழுகுவர்த்திகள் இல்லை, பல மருந்துகள் கிடைப்பதில்லை. எனக்கு சம்பளம் கிடைக்கிறது, ஆனால் பணத்தைச் சாப்பிட முடியுமா?” என்றார்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் இதே போன்ற நகர்வுகள் ஏற்பட்டு வருகின்றன, அங்கே உக்ரைனும் ரஷ்யாவும் தான் கோதுமை மற்றும் சமையல் எண்ணெய்யில் பெரும்பான்மையை வழங்குகின்றன, மேலும் அங்கே இஸ்லாமிய விடுமுறையான நோன்பு விருந்து ரம்ழான் தொடங்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை அறிவிக்கையில், உணவுப் பற்றாக்குறையால் அப்பிராந்தியம் எங்கிலும் சமூக நிலைமைகள் 'உடையும் புள்ளியில்' உள்ளன என்று அறிவித்தது. நியூ யோர்க் டைம்ஸ் வியாழக்கிழமை குறிப்பிடுகையில், தட்டுப்பாடும் விலை உயர்வும் 'ஒன்றுமில்லாத நாடுகளில் குடும்ப மற்றும் அரசாங்க வரவு செலவை ஒரே மாதிரியாக நசுக்குகின்றன, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அரபு வசந்த போராட்டங்களுக்குப் பின்னர் பார்த்திராத அந்த வகையான வெகுஜன மக்கள் கிளர்ச்சி ஏற்படும் சாத்தியக்கூறை அதிகரித்து வருகின்றன, இவை அதிகரித்து வரும் விலை உயர்வின் பாகத்தில் வேரூன்றி உள்ளது,” என்று குறிப்பிட்டது.

எகிப்தில், 'உணவுப் பொருட்களின் விலைகளைப் பற்றி சாதாரண மக்கள் வெளிப்படுத்தும் காணொளிகள், 'பசிப் புரட்சி' என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகங்களில் பரவி உள்ளதாக' டைம்ஸ் பதற்றத்துடன் குறிப்பிட்டது.

அமெரிக்க ஆதரவுடைய அல்-சிசி சர்வாதிகாரம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதற்கும் ரொட்டிக்கான விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயிப்பதற்கும் இராணுவத்தைப் பயன்படுத்துகிறது. தேசத்திற்கு உரையாற்றிய அல்-சிசி, ரம்ழான் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களின் நுகர்வை 'சிக்கனமாக பயன்படுத்த' வலியுறுத்தினார்.

முதலில் தொழிலாளர்களால் அரபு வசந்தம் தூண்டிவிடப்பட்ட துனிசியாவில், வியாழக்கிழமை Middle East Eye குறிப்பிடுகையில், 'வேலைநிறுத்தங்கள் கடந்த வாரம் தீவிரமடைந்ததாக' எழுதியது, இதன் விளைவாக, 'மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க துணைச் செயலர் எஸ்ரா ஜியா அந்நாட்டுக்கு விஜயம் செய்தார்,' என்று குறிப்பிட்டது.

ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈராக், உணவு மற்றும் மாவுக்கான கடுமையான பற்றாக்குறையில் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் அந்நாடு எங்கிலும் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட உணவுப் பொருளுக்கான கலகங்கள் நடந்தன.

மஹ்ரெப்பின் தெற்கிலும் போராட்டங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்றன, ஆபிரிக்க நாடுகளில் தொழிலாள வர்க்கம் அளவிலும் மற்றும் சமூக பலத்திலும் பெருத்துள்ளது, அங்கே பல இளைஞர்கள் அவர்களின் உள்ளங்கையில் இணையத்தை வைத்திருப்பது முதுகெலும்பாக விளங்குகிறது. சராசரியாக துணை-சஹாரா ஆபிரிக்கர் ஒருவர் அவர் குடும்ப வருமானத்தில் 65 சதவீதத்தை உணவுக்காகவே செலவிடுகிறார். புதன்கிழமை, ஆபிரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவர் உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றி கூறினார்: 'இதை நாம் மிக விரைவாக நிர்வகிக்கவில்லை என்றால், இது கண்டத்தையே சீர்குலைத்து விடும்.'

சூடானில் போரால் மோசமடைந்துள்ள பற்றாக்குறைக்கு எதிரான போராட்டங்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களின் பலமான வேலைநிறுத்தங்களுடன் ஒத்துப் போகின்றன. சுழன்று வரும் வாழ்க்கைச் செலவுகளை நிறுத்த முடியாமல் உள்ள இராணுவ அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தின் மீது கார்டூமில் நேற்று ஒரு வெகுஜன போராட்டம் நடந்தது, அங்கே 23 வயது போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அல் ஜசீரா வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியின்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசில், “கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் மிகச் சமீபத்தில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் மோசமடைந்து, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள், அதிகரித்த சமூக அமைதியின்மையின் அச்சங்களைத் தூண்டி உள்ளன,” இது சமூக கோபத்தை முன்கூட்டியே தடுப்பதற்காக மந்திரிசபையை மாற்றியமைக்க அரசாங்கத்தை நிர்பந்தித்துள்ளது.

கடந்த கோடையில் பெரிய கலவரங்கள் நடந்த, தென்னாபிரிக்காவில், இலாப நோக்கற்ற ஒரு பெரிய இளைஞர் அமைப்பின் தலைவர் கூறுகையில், 'எப்போது வேண்டுமானாலும் நம் முகத்தில் வெடிக்கக்கூடிய, நேரம் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வெடிகுண்டு,” என்று சமூக நிலைமையை விவரித்தார்.

இதே இயக்கம் உலகின் ஏகாதிபத்திய மையங்களிலும் வளர்ந்து வருகிறது. ஸ்பெயினில், வாரக் கணக்கில் நீண்டு வரும் ட்ரக் ஒட்டுனர்களின் வேலைநிறுத்தம் சர்வதேச கப்பல் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஆதரவை ஒன்றுதிரட்டி உள்ளது. PSOE-பொடேமோஸ் அரசாங்கம் வாடிக்கையாளர்கள் என்ன வாங்க வேண்டும் என்பதை மட்டுப்படுத்துமாறு மளிகைக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது, அதேவேளையில் பெரிய வணிக கூட்டமைப்புகளோ ஏற்படவிருக்கும் சமூக வெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றன.

ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில், டீசல் இப்போது பங்கிட்டு சிக்கனமாக வழங்கப்படுகிறது. கடந்த மாதம் அல்பேனியாவில் வாழ்க்கைச் செலவு மீது பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில், எழுச்சி அடைந்து வரும் வேலைநிறுத்த இயக்கம் அனைத்திற்கும் மேலாக பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் உந்தப்படுகிறது. மார்ச் மாதம் மின்னிசொடாவின் மினெயாபொலிஸில் ஆசிரியர்கள் நடத்திய இரண்டு வார கால வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் ஐயாயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் ரிச்மாண்டில் 600 எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ந்து வரும் வேலைநிறுத்தத்தில், தொழிலாளவர்கள் விவரிக்கையில், அவர்கள் சுத்திகரிக்கும் எரிவாயுவைக் கொண்டு அவர்கள் சொந்த கார்களுக்கே அவர்களால் எரிபொருள் நிரப்ப முடியவில்லை என்று கூறினர்.

உட்டாஹில் பதிமூன்றாயிரம் தாமிரச் சுரங்க தொழிலாளர்களும் கலிபோர்னியாவில் 50,000 மளிகைக் கடைத் தொழிலாளர்களும் வரவிருக்கும் நாட்களில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர், அதேவேளையில் மேற்கு கடற்கரையில் பத்தாயிரக் கணக்கான துறைமுகத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் சில வாரங்களில் காலாவதியாகிறது.

அமெரிக்கா மற்றும் கனடாவில், BNSF மற்றும் கனடிய பசிபிக் இரயில்வே தொழிலாளர்களின் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களை அரசாங்கம் தடை செய்துள்ளது அல்லது முடக்கி உள்ளது.

போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் முக்கிய ஏகாதிபத்திய நாடுகளில் அதிகரித்து வரும் விலைவாசிகள் வர்க்க போராட்டத்தைத் தீவிரப்படுத்தும். வியாழக்கிழமை அமெரிக்க வர்த்தகத் துறை தரவுகளின்படி, இந்த பணவீக்கமானது ஒவ்வொரு மாதமும் குடும்பங்களுக்குச் சராசரியாக 433 டாலரோ அல்லது அடுத்தாண்டில் 5,200 டாலரோ செலவு வைக்கும். நாட்டின் அரைவாசி அவசர சேமிப்புகளில் 500 டாலருக்கும் குறைவாக கொண்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் அவசர தேவைகளுக்காகப் போராட தள்ளப்படுவார்கள்.

வாழ்க்கை நிலைமைகளில் போர் ஏற்படுத்தும் தாக்கம் வரும் வாரங்களில் எல்லா நாடுகளிலும் வேகமாக தீவிரமடையப் போகிறது. சீனாவைத் தவிர எல்லா நாடுகளிலும் மூலோபாய உணவு கையிருப்புகள் பரிதாபகரமாக போதுமானதாக இல்லாதுள்ளது.

விஷயங்களை இன்னும் மோசமாக்கும் வகையில், உக்ரைனும் ரஷ்யாவும் முக்கிய உணவு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவும் பெலோருசியாவும் பெரும்பாலான உரங்கள் உற்பத்தியில் உலகில் முன்னணி வகிப்பவை ஆகும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடையிறுக்கும் வகையில் இவற்றை கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த இருப்பதாக புட்டின் அறிவித்துள்ளார். இது உலகளாவிய வேளாண்மை விளைச்சலைப் பாதியாக வெட்டும்.

இந்த பெருந்தொற்றும் உலகப் போர்அச்சுறுத்தலும் உடனடி பின்னணியாக இருப்பதால், வரலாற்றுரீதியான சமூக கணக்கீட்டு விகிதாச்சாரங்கள் விஞ்சிவிடக் கூடும். அரபு வசந்தம் மற்றும் 2018-19 இன் உலகளாவிய போராட்டங்களுக்குப் பின்னர், உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கிய கோவிட்-19 பெருந்தொற்றுக்கான ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு 20 மில்லியன் மக்கள் இறக்க வழி வகுத்தது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகும், இதற்கு அரசியல் தலைமை தேவைப்படுகிறது. முந்தைய காலக்கட்டம் போல அல்ல, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் கட்சிகள் மீது எந்த அரசியல் விசுவாசமும் வைக்க சர்வதேச தொழிலாள வர்க்கம் கடன்பட்டிருக்கவில்லை, தற்போதைய வறுமை மற்றும் சமத்துவமின்மை நிலைமைகளுக்கு அவை நேரடியாகப் பொறுப்பாவதாக பார்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், இந்த வளர்ந்து வரும் இயக்கத்திற்குத் தொழிற்சங்கங்களே ஒரு தடையாக உள்ளன, இவை தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தியும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் இருந்து அவர்களைத் தடுத்தும், ஆபத்துகள் எதுவாக இருந்தாலும் சரி, உழைக்கும் மக்கள் விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அவர்கள் அமெரிக்க-நேட்டோ போர் முனைவை ஆதரிக்க வேண்டும் என்று கோரியும், முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்குச் சேவையாற்றுகின்றன.

ஒரு காலத்தில் சோசலிசத்திற்கு ஆதரவளிப்பதாக வார்த்தையளவில் கதை அளந்த நடுத்தர வர்க்கப் போலி-இடது பிரதிநிதிகள், இப்போது நேட்டோவின் போர்களுக்கு உத்வேகமூட்டுபவர்களாகவும் மற்றும் தொழிற்சங்கங்களை ஆர்வத்துடன் பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர்.

உலகப் போர் ஆபத்துகள் மிகப் பெரியளவில் உள்ளன, ஆனால் இந்த புறநிலை இயக்கத்தை சோசலிசப் புரட்சிக்கான சுய-நனவுபூர்வ இயக்கமாக மாற்றுவதற்கான பாதை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் திறந்துள்ளது.

தன்னெழுச்சியான போராட்டங்கள், எவ்வளவு போர்க்குணமிக்கதாக இருந்தாலும், சமூக நிலைமைகளை மாற்ற போதுமானதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் சோசலிச சமத்துவக் கட்சி கட்டமைக்கப்பட வேண்டும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்கள் வளர்ந்து வரும் போராட்டங்களுக்குள் கொண்டு வரப்பட வேண்டும், அவ்விதத்தில் தான் அவை சுய-நனவுடன் சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு தன்மையைப் பெறும். இந்த அடிப்படையில், சோசலிசப் புரட்சியின் ஒரு தொழிலாள வர்க்க மூலோபாயம், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய அழிவு மூலோபாயத்தை விட மிக வேகமாக வளர்ச்சியடைய முடியும்.

Loading