ரஷ்யாவிற்கு எதிரான பொடேமோஸின் போர் உந்துதலுக்கு ஸ்பானிய மோரேனய்ட் தொழிலாளர் புரட்சிகர போக்கு மூடுதிரை வழங்குகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் மீதான ரஷ்யாவுடனான இராணுவ மோதலில் நேட்டோ பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்துவது, ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) மற்றும் அமெரிக்காவின இடது குரல் (Left Voice) ஆகியவற்றின் ஸ்பானிய பிரிவான, தொழிலாளர் புரட்சிகர போக்கு (CRT- Corriente Revolucionaria de Trabajadores y Trabajadoras) என்ற மொரேனோவாத குழுவை அம்பலப்படுத்துகிறது. அசோவ் படைப்பிரிவு போன்ற உக்ரேனிய தீவிர வலதுசாரி தேசியவாத ஆயுதக்குழுக்களை நேட்டோ ஆயுதமயமாக்குவது ரஷ்யாவுடன் நேரடிப் போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலில் முழுமையாக இணைந்திருக்கும் ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி (PSOE)-பொடேமோஸ் (Podemos) அரசாங்கத்திற்குப் பின்னால் போர்-எதிர்ப்பு உணர்வைத் திருப்ப தொழிலாளர் புரட்சிகர போக்கு செயல்படுகிறது.

La Izquierda Diario இணைய தளத்தில் தொழிலாளர் புரட்சிகர போக்கின் (CRT) தலைவர் சாண்டியாகோ லூப் எழுதிய கட்டுரை, “போருக்கு மத்தியில் ஐபீரிய இடதுகள்: ஏகாதிபத்திய போர்வெறிக்கும் இராஜதந்திர மாயைகளுக்கும் அடிபணிதலுக்கு இடையில்” என்ற தலைப்பில், பொடேமோஸ் (Podemos) திடீரென இடது பக்கம் மாறி, போர் எதிர்ப்புக் கொள்கையை செயல்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

பொடேமோஸின் போர்-ஆதரவு மற்றும் சிக்கனக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் முன் அதை அம்பலப்படுத்துகின்றன என்று கவலை கொண்ட அவர், அதன் 'ஏகாதிபத்திய போர்வெறி மீதான அதன் கண்டனங்கள் அரைகுறை எதிர்ப்புகள் மற்றும் சில பகிரங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்லவில்லை என அதனை பாதுகாப்பதற்கான பணியை எடுத்துக்கொள்கின்றார். 'கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தில் இன்னுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதற்காக' பொடேமோஸ் ஒரு குற்றவாளி என தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முடிவு செய்வதை தான் விரும்பவில்லை என்று லூப் விளக்குகிறார். ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு பொடேமோஸிடம் மன்றாடி, லூப் அதற்கு பின்வருமாறு அறிவுறுத்துகிறார்.

நிறைவேற்று அதிகாரத்தை கைவிடுதல், 'போர்க் கட்சி' [அதாவது, PSOE] அரசாங்கத்திற்கான அதன் பாராளுமன்ற ஆதரவைத் திரும்பப் பெறுதல், கிழக்கு ஐரோப்பாவிலும், வெளிநாடுகளில் உள்ள மற்ற ஏகாதிபத்திய நடவடிக்கைகளையும் திரும்ப பெறக் கோரல், மேலும் நேட்டோவுக்கான அனைத்து உறுதிமொழிகளையும் முறித்துக் கொள்ளுதல். ஸ்பானிய பிரதேசத்தில் உள்ள நேட்டோவின் தளங்களை மூடுவதில் தொடங்கி மற்றும் பொருளாதாரத் தடைகளை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.

லூப்பின் முன்மொழிவு இழிந்ததும் பிற்போக்குத்தனமானதுமாகும். பொடேமோஸ் ஒரு வசதியான நடுத்தர வர்க்கத்தின் கட்சியாகவும் ஸ்பானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாகவும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பொடேமோஸ் ஒரு 'இடது ஜனரஞ்சக' மற்றும் 'முற்போக்கு' கட்சி என்ற தனது அரசியல் மூடிமறைத்தலை தொழிலாளர் புரட்சிகர போக்கு (CRT) தொடரவும், நேட்டோ போர் உந்துதலுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொடேமோஸைத் தொடர்ந்து ஆதரிக்குமாறு அழைப்பு விடுக்கவும் அரசாங்கத்தை விட்டு அதை வெளியேறுமாறு லூப் கெஞ்சுகிறார்.

ஏகாதிபத்திய சார்பு, தொழிலாளர் விரோதக் கட்சியான பொடேமோஸின் தன்மையை அவர் பொய்மைப்படுத்துகின்றார். பொடேமோஸ், லூப் கூறுவது போல் ஸ்பானிய ஏகாதிபத்தியத்திற்கு 'அடிபணிந்த' ஒரு கட்சியுமல்ல, அது திடீரென்று ஏகாதிபத்தியத்தின் கட்டளையிலிருந்து விடுபட்டுக்கொள்ளவும் முடியாது. உண்மையில், பொடேமோஸ் இரண்டாம் நிலையிலுள்ள ஏகாதிபத்திய கட்சியாகும். அது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே முழுமையான போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் நேட்டோ கொள்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

பொடேமோஸின் பாத்திரத்தை லூப் பொய்மைப்படுத்துகிறார். ஏனெனில் அதன் பாத்திரத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, அரசியல் பிற்போக்குத்தனத்தினை உற்சாகப்படுத்தும் CRT இன் பங்கை அம்பலப்படுத்தும். 2014 இல் பொடேமோஸ் நிறுவப்பட்டதில் இருந்து, CRT மற்றும் அதேவகையான குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் முழுப்பிரிவினரும் பொடேமோஸை ஊக்குவிப்பதன் மூலம் ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் தொழிலாளர்களை கட்டிப்போட முற்பட்டதுடன் மற்றும் அது திடீரென இடது பக்கம் திரும்புமா என ஊகித்து வருகின்றன. பொடேமோஸை பற்றிய வெற்று ஊகங்களுடன் CRT ஐ சுற்றிவருகையில், PSOE-Podemos அரசாங்கம் பின்வருபவற்றை செயல்படுத்தியது:

  • இது ரஷ்யாவிற்கு எதிராக கிழக்கு ஐரோப்பாவில் சுமார் 800 ஸ்பானிய துருப்புக்களை நிறுத்தியது. இதில் 130 விமானப் படையினர் மற்றும் நான்கு யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் பல்கேரியாவிலிருந்து ரஷ்ய கடற்கரைக்கு அருகில் உள்ள கருங்கடலுக்குள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.
  • நேட்டோ கடற்படை குழுக்களுடன் கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலின் நீர்நிலைகளில் ரோந்து செல்ல மூன்று போர்க்கப்பல்களை அனுப்பியது.
  • ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரின் ஒரு பகுதியாக, உக்ரேனிய இராணுவத்திற்கு அது தாக்குதல் இராணுவ தளபாடங்களை அனுப்பியது. இதில் 1,370 Instalaza C90 வகை கிரெனேட் எறிகணைகள், ரஷ்ய டாங்கிகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 700,000 துப்பாக்கிகள் மற்றும் உக்ரேனிய இராணுவம் மற்றும் அதன் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுகளுக்கு எண்ணமுடியாதளவு இயந்திர துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவை அடங்கும். இதில் நவ-நாஜி அசோவ் படைப்பிரிவும் உள்ளடங்கும். இது ஏற்கனவே டெலிகிராமில் மாட்ரிட்டின் ஆயுத விநியோகத்துடன் தம்மை காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது.
  • ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதற்கு விதிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோவின் முடக்கப்பட்ட தடைகளை அது ஆதரித்தது.
  • ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக போலிக் குற்றச்சாட்டின் பேரில் போலந்து அரசாங்கத்தால் ஸ்பானிஷ் பத்திரிகையாளர் பாப்லோ கொன்சாலஸ் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் அது பங்குகொண்டது.
  • ஸ்பெயினின் வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ செலவீன அதிகரிப்பான, பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை 10 பில்லியன் டாலரில் இருந்து 25 பில்லியன் டாலர் வரை உயர்த்துவதாக உறுதியளித்தது.

வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போர் உள்நாட்டில் வர்க்கப் போருடன் கைகோர்த்து வருகிறது. PSOE-Podemos அரசாங்கம் மூன்று வார நாடு தழுவிய கனரகவாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்திற்கு எதிராக 23,000 பொலிஸாரை ஈடுபடுத்தியது. இது ஒரு வேலைநிறுத்தத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட முன்னொருபோதுமில்லாத பாரிய ஒடுக்கும் நடவடிக்கையாகும்.

பொடேமோஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, போருக்கான ஆதரவை கைவிடும் என்ற அவரது முன்னோக்கு கூட யதார்த்தமானது என்று தான் நம்பவில்லை என்று லூப்பே ஒப்புக்கொண்டார். அவர், 'போரும், அதில் ஸ்பெயினின் பங்கேற்பும் புதிய பாய்ச்சலை எடுக்காத வரை, இதுபோன்ற ஒன்றை நாம் காண வாய்ப்பில்லை' எனக் குறிப்பிடுகிறார். அதாவது, அணு ஆயுதம் ஏந்திய நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வெளிப்படையான போர் வெடிப்பதில் சார்ந்து செயல்படுத்துவதற்கான மிகக்குறைந்த வாய்ப்புகள் இருக்கும் ஒரு முன்னோக்காகும்.

Podemos அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், அது 'ஸ்பானிய அரசின் ஆளும் தன்மைக்கும் மற்றும் அதனால் போர்வெறி உந்துதலுக்கும், ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு அடியாக இருக்கும்' என்று லூப் கூறுகிறார்.

இது ஒரு பொய். பொடேமோஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், அது போரை எதிர்ப்பதற்காக அல்ல மாறாக ஏகாதிபத்திய போருக்கு எதிரான போர்-எதிர்ப்பு எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களை கழுத்தை நெரிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சியாகவே இருக்கும். அரசாங்கத்தில் பொடேமோஸின் வரலாறு, அது வங்கிகள் மற்றும் பெருவணிகத்தின் ஒரு கருவி என்பதைக் காட்டுகிறது. இது டிரில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்பு, சமூக சிக்கன நடவடிக்கை, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது பொலிஸ் அடக்குமுறைகளை செயல்படுத்தியதுடன் மற்றும் ஸ்பெயின் இராணுவம் மற்றும் தொழில்துறைக்கு பில்லியன்களை வழங்கியது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, அது தொடர்ந்து உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளித்து, இது The Lancet தெரிவித்துள்ளபடி தொற்றுநோய்களின் போது நாட்டில் 162,000 க்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்தது.

CRT, ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவஎதிர்ப்பு போக்கை ஊக்குவிக்கிறது

CRT இனால் பொடேமோஸ் ஊக்குவிக்கப்படுவது ஒரு தவறான மதிப்பீட்டினால் அல்ல. ஆனால் ஆர்ஜென்டினாவில் உள்ள மொரேனோவாத சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளான CRT போன்றவற்றின் குட்டி முதலாளித்துவ அரசியலை பிரதிபலிக்கிறது. அதாவது இரண்டுமே தொழிலாள வர்க்கத்தில் அரசியல்ரீதியாக சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரோதமானவர்கள், முதலாளித்துவ-சார்புக் கட்சிகளுடன் உள்நாட்டுக் கூட்டணிகளை விரும்புகின்றனர். அவற்றின் வர்க்க நோக்குநிலை, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் (ICFI), ஸ்பானிய முதலாளித்துவஎதிர்ப்பு இயக்கத்தின் (Anticapitalistas movement) பப்லோவாத அரசியல் மூதாதையர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுக்கான மொரேனோவாதிகளின் கொள்கையற்ற அணுகுமுறையில் நனவான வெளிப்பாட்டைக் காண்கிறது.

1953 இல், மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான சக்திகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் ட்ரொட்ஸ்கிசத்துடனும் முறித்துக் கொண்டு, ட்ரொட்ஸ்கிச இயக்கம் அரசியல் ரீதியாக ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டன. CRT இணைந்திருக்கும் ஆர்ஜென்டினாவில் இவ்வாறான போக்கின் நிறுவனர் நஹுவேல் மொரேனோ ஆவார். அவர் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஆதரித்தார். எவ்வாறாயினும், அவர் பப்லோவாதிகளுடன் கொள்கையற்ற மறுஇணைப்புக்கு முயன்று, 1963இல் பப்லோவாதிகளின் இலத்தீன் அமெரிக்க பணியகத்தின் தலைவரானார். அப்போதிருந்து, மொரேனாவாதிகள் ஸ்ராலினிசத்துடனும் பப்லோவாதத்துடனுமான கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதற்கு விரோதமாக இருந்துள்ளனர்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நேட்டோவின் ஏகாதிபத்தியப் போர்களை ஆதரித்து, 2014ல் பொடேமோஸை ஒரு கட்சியாகக் நிறுவ உதவிய ஸ்பானிய பப்லோவாத முதலாளித்துவஎதிர்ப்பு (Anticapitalistas) இயக்கத்தை லூப் பின்னர் ஊக்குவிக்கிறார். பொடேமோஸ் பட்டியலால் 2020 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் [EMP] மிகேல் ஊர்பன் போரில் 'கொள்கை ரீதியான' நிலைப்பாட்டை எடுத்ததற்காக லூப் போற்றுகிறார். லூப் எழுதுகிறார், 'ஊர்பன் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட உக்ரேன் மீதான தீர்மானத்திற்கு எதிரான ஒரே ஒரு கொள்கைரீதியான வாக்களித்தவர். அவர் ஐரோப்பாவின் இராணுவமயமாக்கல் மற்றும் நேட்டோவின் முன்னெடுப்பை வெளிப்படுத்தி மற்றும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்ப அழைப்பு விடுத்தார்' என்று விளக்கினார்.

எவ்வாறாயினும், 'ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடர்பாக, இந்த முதலாளித்துவஎதிர்ப்பு (Anticapitalistas) கட்சியினர் அதன் சகோதர அமைப்புகளான USEC [ஐக்கிய செயலகம், பப்லோவாத இயக்கம்] இன் நிலைப்பாட்டை இறுதிவரை பாதுகாக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஒத்துக்கொள்கின்றார். இது இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதை அல்லது அதற்கு எதிராக அவர்கள் தங்கள் சொந்த நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்கின்றார்கள் என்பதை பற்றிய ஒரு வெட்கக்கேடான அறிக்கையாகும். அதன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஊர்பன், ‘ஏவுகணைகளை அனுப்புவதை விட, பொருளாதாரத் தடைகளும், அழுத்தமும் போரை முடிவுக்கு கொண்டுவர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கருதுகிறார்.

உண்மையில், அது ஒரு பகுதியாக இருக்கும் சர்வதேச பப்லோவாத இயக்கத்தைப் போலவே முதலாளித்துவஎதிர்ப்பு கட்சியினரும் இராணுவவாத மற்றும் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது. 2011 இல் எண்ணெய் வளம் மிக்க லிபியாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை முதலாளித்துவஎதிர்ப்பாளர்கள் ஆதரித்தனர். 'இடதுசாரிகளின் சில பிரிவுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பை' கண்டித்து, 'ஜனநாயகம், சமூக நீதி மற்றும் பெண்களின் நிலைமை மேம்பாடு' என்ற பெயரில், 'முதலாளித்துவஎதிர்பாளர்களின் இரண்டு தலைவர்களான எஸ்தர் விவாஸ் மற்றும் ஜோசப் மரியா அன்டெண்டாஸ் ஆகியோர் லிபிய ஆட்சியின் சர்வதேசரீதியான பொருளாதார அரசியல் தனிமைப்படுத்தலுக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆயுதங்களை வழங்க ஆதரவளித்தனர்.

லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்த ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவும் துல்லியமாக இந்த மூலோபாயத்தை கையாண்டன. இது 30,000 க்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தி, நாட்டை இடித்தளித்து, மேலும் லிபியாவிற்கு அடிமை சந்தைகள் திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்கியது. இந்த நாடு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று மற்றும் 100,000 க்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்த நேட்டோ ஆதரித்த போட்டி இஸ்லாமியப் பிரிவுகளுக்கு இடையிலான உள்நாட்டுப் போரில் இன்னும் சிக்கித் தவிக்கிறது. ஸ்பெயினின் சார்பாக அந்தப் போரை வழிநடத்தியவர் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி ஜூலியோ ரோட்ரிகஸ் பெர்னாண்டஸ் ஆவார். அவர் ஓய்வு பெற்ற பின்னர் 2015 இல் பொடேமோஸில் சேர்ந்தார் மற்றும் தற்போது இரண்டாவது துணைப் பிரதமரான யோலண்டா டியாஸ் இன் தலைமை அதிகாரியாவார்.

ரோட்ரிகஸ் நியமிக்கப்பட்டது 'பொடேமோஸுக்குள் பொருந்தக்கூடிய பன்முகத்தன்மைக்கு' ஒரு எடுத்துக்காட்டு என முதலாளித்துவஎதிர்ப்பாளர்கள் நியாயப்படுத்தினர். 'பொடேமோஸைப் பற்றி நிறைய கருத்துக்களை இடுபவர்களுக்கு எதிராக' அது ரோட்ரிகஸைப் பாதுகாத்தது. லிபியப் போரின் இறுதி மாதங்களில் தொடங்கப்பட்ட சிரியாவில் நேட்டோ ஆதரவுடன் நடந்த போரை அது ஆதரித்தது.

உக்ரேனில், 2014 பெப்ரவரியில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் நவ-பாசிசப் பிரிவுகளால் நடத்தப்பட்ட அமெரிக்க-நேட்டோ ஆதரவு சதியை முதலாளித்துவஎதிர்ப்பாளர்கள் ஆதரித்தனர். ஆட்சிக் கவிழ்ப்பில் பாசிஸ்டுகள் ஆற்றிய தீர்க்கமான பங்கை ஒப்புக்கொண்டு, பாசிச எதிர்ப்புக்களில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கும் பப்லோவாத அறிக்கையை மீண்டும் வெளியிட்டது: “முக்கியமான ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சக்திகள் இப்போதைக்கு வலது மற்றும் தீவிர வலதுசாரிகளாக இருந்தாலும், அந்த இயக்கத்திற்குள் இடதுசாரி எதிர்ப்பைக் கட்டமைக்க முயற்சிக்கும் அரசியல் மற்றும் சமூக சக்திகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் இயக்கத்திற்கு வெளியே இருக்க மறுத்துவிட்டதுடன் மற்றும் முழு இயக்கத்தையும் அதன் தீவிர வலது கூறுகளுடன் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்”.

முதலாளித்துவஎதிர்ப்பாளர்களும் அதன் சர்வதேச துணை அமைப்புகளும் இப்போது சிஐஏ இன் பிரச்சாரத்தில் இருந்து பிரித்தறிய முடியாத வகையில் ரஷ்ய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிடுகின்றன. இது அணு ஆயுத சக்திகளுக்கு இடையே போருக்கு வழிவகுக்கும் போர் வெறியைத் தூண்டுகிறது.

பொடேமோஸுடன் போர் எதிர்ப்பு போராட்டங்களை கட்டமைக்க லூப்பின் மோசடியான அழைப்பு

பொடேமோஸ் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபடுவது பற்றிய பிற்போக்குத்தனமான கற்பனைகளுடன் தனது கட்டுரையைத் தொடங்கிய அவர், பொடேமோஸிற்கும் மற்றும் முதலாம் உலகப் போரின் போது 1915 சிம்மர்வால்ட் மாநாட்டை ஏற்பாடு செய்த மார்க்சிச புரட்சியாளர்கள் மற்றும் போர்-எதிர்ப்பு சோசலிஸ்டுகளுக்கு இடையேயான நகைச்சுவையான ஒப்பீடுகளுடன் முடிக்கிறார். பொடேமோஸும் முதலாளித்துவஎதிர்ப்பாளர்களும் ஏகாதிபத்தியத்தை நிராகரித்து மற்றும் சிம்மர்வால்ட் மாநாட்டைப் பின்பற்றலாம் என பின்வருமாறு எழுதுகின்றார்:

'போருக்கு எதிரான போர்' என்ற முழக்கம், 1915 ஆம் ஆண்டு போருக்கு எதிரான பெண்களின் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் முதல் உலகப் போருக்கு எதிராக சிம்மர்வால்ட்டின் புரட்சிகரப் பிரிவால் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது. இது நமது அரசுகள் நம்மை இட்டுச்செல்லும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான பாதைக்காக போராடும் மற்றொரு இடதுசாரிகள் எழுவதற்கான ஒரு ஊக்கமளிக்கும் கொடியாக செயல்படும்.

CRT, சிம்மர்வால்டின் சக்திகளை, முதலாளித்துவஎதிர்ப்பாளர்கள் மற்றும் பொடேமோஸ் உடன் ஒப்பிடுவது ஒரு அரசியல் மற்றும் வரலாற்று மோசடியாகும். விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி, கிரிகோரி சினோவியேவ் மற்றும் கிறிஸ்டியான் ரகோவ்ஸ்கி போன்ற மார்க்சிஸ்டுகளை உள்ளடக்கிய சிம்மர்வால்ட் மாநாடு, ஒரு சக்திவாய்ந்த சர்வதேச போர் எதிர்ப்பு மாநாடாகும். முதலாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் வெடித்த ஐரோப்பாவில் தொடர்ச்சியான புரட்சிகர எழுச்சிகளுக்கு தொழிலாள வர்க்கம் ஆயுதபாணியாவதை அது தயார்படுத்தியது. ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்த லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் போல்ஷிவிக்குகள் தலைமையிலான 1917 அக்டோபர் புரட்சி இந்தப் போராட்டங்களில் மிகவும் முக்கியமானது.

மேலும் சில வேறுபாடுகள் என்ன? சிம்மர்வால்ட் மாநாடு ஏகாதிபத்திய போரை எதிர்த்தது. பொடேமோஸும் மற்றும் முதலாளித்துவஎதிர்ப்பாளர்களும் போருக்கு ஆதரவானவர்கள். சிம்மர்வால்டில் கலந்துகொண்டவர்கள் ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களால் துன்புறுத்தப்பட்ட இடதுசாரி போர் எதிர்ப்பாளர்கள். பொடேமோஸ் மற்றும் முதலாளித்துவஎதிர்ப்பாளர்களின் உறுப்பினர்கள் முதலாளித்துவ அரசாங்கத்தின் அங்கத்தவர்கள். லெனினும் ட்ரொட்ஸ்கியும் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மார்க்சிச புரட்சியாளர்கள், பொடேமோஸ் மற்றும் முதலாளித்துவஎதிர்ப்பாளர்கள் எதிர்ப்புரட்சியின் கருவிகளாவர்.

பொடேமோஸ் மற்றும் அதனை சுற்றியுள்ளவர்களை ஒரு புதிய இடதுசாரி மூடுதிரையின் கீழ் ஊக்குவிக்கும் தொழிலாளர் புரட்சிகர போக்கின் (CRT) முயற்சி, அது பொடேமோஸின் ஒரு மறைமுகமான பிரிவு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க இந்தப் போக்குகளுக்கு எதிராக ஒரு வெளிப்படையான போராட்டம் தேவைப்படுகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடது கட்சிகளுக்கு எதிராகவும் சுயாதீனமாகவும், தொழிலாள வர்க்கத்தில் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு அழைப்பு விடுக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த முன்னோக்கு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை, பொடேமோஸ், தொழிலாளர் புரட்சிகர போக்கு மற்றும் முதலாளித்துவஎதிர்ப்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நடுத்தர வர்க்கப் போக்குகளிலிருந்து பிரிக்கிறது.

Loading