ரோஜர் வாட்டர்ஸ் இனை தவிர பிங்க் ஃபுளோய்ட் போர்-சார்பு பிரச்சாரத்தால் அடித்துச்செல்ல்லப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ராக் இசைக்குழு பிங்க் ஃபுளோய்ட்டின் மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களான டேவிட் கில்மோர், நிக் மேசன் மற்றும் உக்ரேனிய பாடகரும் BoomBox இசைக் குழுவின் உறுப்பினருமான அன்டிரே கிளேவ்நியுக்கின் (Andriy Khlyvnyuk) உட்பட மற்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, 'ஹே, ஹே, கிளர்ந்தெழு!” (“Hey, Hey, Rise Up!”) என்ற புதிய பாடலை வெளியிட்டனர்.

உத்தியோகபூர்வ பிங்க் ஃபுளோய்ட் இணைய தளத்தில் ஒரு அறிக்கையின்படி, இது 1994 க்குப் பின்னர் இசைக் குழுவின் முதல் புதிய தனிப்பாடலாகும். இது மார்ச் 30 அன்று பதிவுசெய்யப்பட்டு மற்றும் 'உக்ரேன் மக்களுக்கு ஆதரவாக' வெளியிடப்பட்டு மற்றும் மனிதாபிமான தொண்டுகளுக்காக நிதி திரட்டப்பட்டது என்று அறிக்கை விளக்குகிறது. எவ்வாறாயினும், கியேவின் சோஃபிஸ்காயா சதுக்கத்தில் துணை-இராணுவ உடையணிந்த மற்றும் துப்பாக்கி தாங்கி “புற்தரையில் சிகப்பு பனிப்பந்து” (“The Red Viburnum in the Meadow”) என்ற தேசபக்தி உக்ரேனிய பாடலைப் பாடிய கிளேவ்நியுக்கின் இன்ஸ்டாகிராம் பதிவின் குரல்களை இப்பதிவு இணைக்கிறது.

இதற்கிடையில், மறுபுறம், ஆரம்பகால பிங்க் ஃபுளோய்ட் உறுப்பினர் ரோஜர் வாட்டர்ஸ் (1965-1985) அமெரிக்க-நேட்டோ நடவடிக்கை குறித்து மிகவும் விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தினார். பிற்போக்குத்தனமான ரஷ்யப் படையெடுப்பை எதிர்க்கும் அதே வேளையில், வாட்டர்ஸ் சமீபத்தில் 'உக்ரேனில் ஒரு நீண்ட இழுபறி கிளர்ச்சி, வாஷிங்டனில் உள்ள கும்பல் பருந்துகளுக்கு நன்றாக இருக்கும். அது பற்றியே அவர்கள் கனவு காண்கின்றனர்' என்று கருத்து தெரிவித்தார். வாட்டர்ஸின் கருத்துகளுக்கு நாங்கள் பின்னர் கவனம் செலுத்துவோம்.

ரோஜர் வாட்டர்ஸ், 2011 (Photo credit–Kadellar)

பிங்க் ஃபுளோய்ட்டின் எஞ்சியிருக்கும் புதிய பாடல், வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்திற்கும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க ஆதரவுடைய நேட்டோ ஆத்திரமூட்டலுக்கும் ஆதரவான சரமாரியான போர்-ஆதரவு பிரச்சாரங்களுக்குப் பின்னால் பல பிரபலமான இசைக்கலைஞர்கள் எந்த அளவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. குறைந்தபட்சம் 1980 களின் முற்பகுதி வரை, பிங்க் ஃபுளோய்ட்டை கருத்தில் கொண்டு பார்க்கையில் பொதுவாக போர் எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு கருப்பொருள்கள் மற்றும் செய்திகளுடன் தொடர்பைக் காணமுடியும். இந்த புதிய பதிவில் பல தொந்தரவான அம்சங்கள் உள்ளன.

பிங்க் ஃபுளோய்ட் பதிவின் தலைப்பு 1914 இல் உக்ரேனிய இசையமைப்பாளர் ஸ்டீபன் சார்னெட்ஸ்கி எழுதிய பாடலின் கடைசி வரியிலிருந்து எடுக்கப்பட்டது. பிங்க் ஃபுளோய்ட் அறிவிப்பில் உள்ள விளக்கம், 'முதலாம் உலகப் போரின் போது எழுதப்பட்ட ஒரு கிளர்ச்சியூட்டும் உக்ரேனிய எதிர்ப்புப் பாடல்' என்று குறிப்பிடுகிறது. இது உக்ரேன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக உலகம் முழுவதுமான ஆர்ப்பாட்டங்களில் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில், இந்தப் பாடல் பல்வேறு உக்ரேனிய துணை இராணுவ அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட முதலாம் உலகப் போரின்போது ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய இராணுவத்தின் உக்ரேனியப் பிரிவான உக்ரேனிய Sich Riflemen படைப்பிரிவிற்கு மதிப்பளிக்கும் விதத்தில் எழுதப்பட்டது. இந்தப் பாடலை 'எதிர்ப்பு' என்று குறிப்பிடுவது, அது ஒரு போர்-எதிர்ப்பு எதிர்ப்பாக இயற்றப்பட்டது என்ற உட்குறிப்பு, வெறுமனே நேர்மையற்றது. 'புற்தரையில் சிகப்பு பனிப்பந்து' என்பது ஒரு தேசபக்தி போர் அணிவகுப்பு பாடல். அதன் பாடல் வரிகளில், 'மேலும், எங்கள் புகழ்பெற்ற உக்ரேன், நாங்கள், ஏய்-ஏய், உற்சாகப்படுத்துவோம்-மகிழ்ச்சியடைவோம்!', மேலும், 'முன்னோக்கிச் செல்கிறோம், எங்கள் சக தன்னார்வலர்கள், இரத்தக்களரி சண்டையில், / எங்கள் சகோதரர் உக்ரேனியர்களை விரோத சங்கிலிகளிலிருந்து விடுவிப்பதற்காக. / நாங்கள், எங்கள் சகோதரர் உக்ரேனியர்கள், நாங்கள் பின்னர் விடுவிப்போம், / மேலும் எங்கள் புகழ்பெற்ற உக்ரேனை உற்சாகப்படுத்துவோம், ஹே-ஏய்!', எனக் கூறப்படுகின்றது.

நேட்டோ ஆதரவுடைய உக்ரேனிய இராணுவவாதத்திற்கு தனது சொந்த இணக்கத்தை விளக்கிய டேவிட் கில்மோர், 'நாங்கள் உக்ரேனுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறோம், அந்த வகையில், ஒரு வல்லரசு சுதந்திர ஜனநாயகமாக மாறிய உக்ரேனின் மீது படையெடுப்பது முற்றிலும் தவறு என்று உலகின் பெரும்பாலானோர் நினைப்பதைக் காட்ட விரும்புகிறோம். 'ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன்னும் பின்னும் உக்ரேனில் ஏகாதிபத்தியம் போரைத் தூண்டியதையும் கில்மோர் புறக்கணித்தார். BBC இடம் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக 'மேற்கின் சக்தியற்ற தன்மையை' தான் 'வெறுக்கத்தக்கதாக' கண்டதாகக் கூறி, அந்நாட்டிற்கு எதிராக தொடர்ந்த பொருளாதார தடைகளை அவர் ஆதரித்ததாக கூறினார்.

பின்னர் 76 வயதான கில்மோர் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். 'அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ரஷ்யாவின் சாதாரண மக்கள் என்பது ஒரு அவமானம்-ஆனால் இவ்வாறுதான் பொருளாதாரத் தடைகள் செயல்படுகின்றது. இது அந்த நாட்டில் ஒரு அதிருப்தியை உருவாக்க உதவுகிறது. இது ஒரு கட்டத்தில், ஒருவித ஆட்சி மாற்றத்தை உருவாக்கும்” என்றார்.

மற்றைய இசைக்குழு உறுப்பினரான 78 வயதான நிக் மேசன், உக்ரேனில் நடந்த போர் தொடர்பாக அல்லது பாடல் பதிவு குறித்து எந்த பொது அறிக்கையும் வெளியிடவில்லை.

கிட்டார் கலைஞரும் பாடகருமான கில்மோர் மற்றும் தாளவாத்திய கலைஞர் மேசன் ஆகியோர் பிங்க் ஃபுளோய்ட்டின் வரிசையின் மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களாவர். இக்குழு 1970களின் மிகவும் பிரபலமான சில இசைத்தட்டுக்களைப் பதிவுசெய்தது. இதில் Dark Side of the Moon (1973), Wish You Were Here (1975), Animals (1977) மற்றும் The Wall (1979) அடங்கும். Keyboard கலைஞர் ரிச்சர்ட் ரைட் 2008 இல் 65 வயதில் இறந்தார் மற்றும் கிட்டார் கலைஞர் ரோஜர் வாட்டர்ஸ் 1980 களின் நடுப்பகுதியில் மற்ற உறுப்பினர்களுடனான அவர்களின் படைப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் இசைக்குழுவை விட்டு வெளியேறினார்.

குறிப்பிடத்தக்க வகையில், வாட்டர்ஸ் இசையின் பெரும்பகுதியை எழுதியதுடன் மற்றும் பிங்க் ஃபுளோய்ட்டின் மிகவும் வெற்றிகரமான இசைத்தட்டுக்களுக்கான அனைத்து கருத்துக் கூறுகள் மற்றும் பாடல் வரிகளுக்கும் பொறுப்பாக இருந்தார். மற்றவர்கள், குறிப்பாக கில்மோர், இசை அமைப்புகளுக்கும் குரல் மற்றும் இசைக் கருவிகளுக்கும் பங்களித்தாலும், வாட்டர்ஸ் இசைக் குழுவிற்குள் முதன்மையான படைப்பாற்றல் சக்தியாக இருந்தார். நவீன வாழ்க்கையைப் பற்றிய அவரது சமூக மற்றும் அரசியல் விமர்சனங்கள்தான் உலகெங்கிலும் உள்ள பாடல்களை கேட்பவர்களிடம் சக்திவாய்ந்ததாக எதிரொலித்தது.

வாட்டர்ஸை உள்ளடக்கிய கடைசி பிங்க் ஃபுளோய்ட்டின் இசைப்பதிவான The Final Cut 1983 இல் வெளியிடப்பட்டது. மேலும் இது 1980களில் மால்வினாஸ் பிரிட்டிஷ் போர் மற்றும் லெபனானில் அமெரிக்க பிரசன்னம் போன்ற ஏகாதிபத்திய போர்களுக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையேயான சமாந்திரங்களை எடுத்துக்காட்டி ஒரு கடுமையான போர் எதிர்ப்புச் செய்தியைக் கொண்டிருந்தது.

கில்மோர்/மேசன் உள்ளடங்கிய பிங்க் ஃபுளோய்ட்டினால் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பெருநிறுவன சார்பு ஊடகங்களின் போர்-சார்பு பிரச்சார இயந்திரம், கியேவுக்கு ஆயுதங்களை வழங்குவது மற்றும் மாஸ்கோவின் மீதான பொருளாதார தடையை அனுமதிப்பது உக்ரேனில் போரை நிறுத்தும் மற்றும் சமாதானத்தைக் கொண்டுவரும் என்ற தவறான கருத்தைப் பரப்புவதற்கு இசைக் குழுவின் பெயரைப் பயன்படுத்தியது.

எடுத்துக்காட்டாக, கார்டியனில் உள்ள தலைப்பு, “‘இது ஒரு பைத்தியக்காரத்தனமான, அநியாயமான தாக்குதல்’: உக்ரேனுக்கு ஆதரவாக பிங்க் ஃபுளோய்ட் மீண்டும் உருவெடுத்துள்ளது” மற்றும் Esquire இன் தலைப்பு, “பிங்க் ஃபுளோய்ட்டின் புதிய எதிர்ப்புப் பாடலைக் கேளுங்கள்” என்று கூறுகிறது. பெரும்பாலான அறிக்கைகள் போர் பற்றிய கில்மோரின் கருத்துகளை மட்டுமே உள்ளடக்கியிருந்தாலும், ஆக்கிரமிப்புக்கு முன்னர் வாட்டர்ஸ் RT News க்கு அளித்த அறிக்கையின் மீது கார்டியன் கவனம் செலுத்துகிறது. அங்கு அவர் ரஷ்யப் படையெடுப்பு பற்றிய கருத்து 'அபத்தமானது' என்று கூறினார்.

புட்டின் ஆட்சியின் படையெடுப்பை வாட்டர்ஸ் பின்னர் கண்டித்ததாக கார்டியன் கூறுகிறது. ஆனால் செய்தியாளர் அலெக்சிஸ் பெட்ரிடிஸ் அத்தகைய ஒரு பார்வை முற்றிலும் நியாயமற்றது என்பதுபோல் 'ரஷ்யாவை பேய்த்தனமாக சித்தரிக்கும் பிரச்சாரம்' பற்றிய அவரது கண்டனத்தை கேலி செய்கிறார்.

புதிய பாடலுக்காக பிங்க் ஃபுளோய்ட்டை பாராட்டிய ஊடக அறிக்கைகள் எதுவும், கடந்த ஏழு வாரங்களாக உக்ரேனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து வாட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கைகளை பற்றிய எந்த விவரத்தையும் தெரிவிக்க கவலைப்படவில்லை. மார்ச் 9 அன்று அலினா மிட்ரோஃபனோவா என்ற 19 வயதான பிங்க் ஃபுளோய்ட் ரசிகருடன் வாட்டர்ஸ் எழுதிய கடிதப் பரிமாற்றத்தில், “படுகொலையை நிறுத்த தேவையான இராஜதந்திரத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக மேற்கத்திய அரசாங்கங்கள் உக்ரேனில் ஆயுதங்களை இறைத்து உங்கள் அழகான நாட்டை அழிக்கும் தீயை எரியூட்டுவதற்கு நான் வருந்துகிறேன்”.

வாட்டர்ஸ் தொடர்ந்தார். 'எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக பல உலகத் தலைவர்கள் குண்டர்களாக உள்ளனர் மற்றும் அரசியல் குண்டர்கள் மீதான எனது வெறுப்பு கடந்த வாரம் புட்டினிடம் இருந்து தொடங்கவில்லை. 2003 இல் ஈராக்கை ஆக்கிரமித்தபோது புஷ் மற்றும் பிளேயர் என்ற குண்டர்களால் நான் வெறுப்படைந்தேன். 1967 இல் இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான குண்டர் அரசாங்கத்தின் மீதும், அதன் பின்னர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிறவெறி ஆக்கிரமிப்பாலும் நான் வெறுப்படைந்தேன். லிபியா மற்றும் சேர்பியா ஆகிய இரு நாடுகளிலும் நேட்டோவின் சட்டவிரோத குண்டுவெடிப்புக்கு, குண்டர்கள் ஒபாமா மற்றும் கிளிண்டன் உத்தரவிட்டதால் நான் வெறுப்படைந்தேன். 2011ல் ஆட்சி மாற்றத்துக்காக வெளியிலிருந்து தலையிட்டு சிரியாவை மொத்தமாக அழித்ததில் நான் வெறுப்படைகிறேன். 1982 இல் லெபனான் மீதான படையெடுப்பால் நான் வெறுப்படைந்தேன். அந்த நாட்டின் தெற்கில் உள்ள சப்ரா மற்றும் ஷட்டிலா அகதிகள் முகாம்களில் பாலஸ்தீனிய அகதிகளைக் கொன்றதில் குண்டர்கள் ஷிமோன் பெரெஸ் கிறிஸ்தவ பலாங்கியவாத ஆயுதக்குழுக்களுடன் ஒத்துழைத்தார்”.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், அணு ஆயுதங்களுடனான உலகப் போராக விரிவடைய அச்சுறுத்தும் உக்ரேனில் அதன் பினாமிப் போருடன் பிங்க் ஃபுளோய்ட்டின் கில்மோர், வெட்கக்கேடான மற்றும் விமர்சனமற்ற முறையில் இணைந்ததை விடவும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் சதி பற்றிய அரசியல்ரீதியாக அபிவிருத்தியடைந்த விளக்கத்தை வாட்டர்ஸ் வழங்குகின்றார்.

Loading