இலங்கை: ரம்புக்கனை பொலிஸ் படுகொலை தமிழ் தேசிய கூட்டமைப்பை அம்பலப்படுத்துகிறது

ஏப்ரல் 19 அன்று, முன்னைய விலையில் எரிபொருளைக் கோரி ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இலங்கை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்சன் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்தக் குற்றம், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்தை மட்டுமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கையும் அம்பலப்படுத்துகிறது.

கடந்த மாதத்தின் பெரும்பகுதியில், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிவாயு விலைகளுக்கு எதிராகவும், இராஜபக்ஷ கும்பலை வெளியேற்றுவதற்காகவும் நாடுதழுவிய எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதும் நடக்காதது போன்று அமைதியாக இருந்தது.

பின்னர், ஏப்ரல் 11 அன்று, ஜனாதிபதியின் சகோதரர், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, எதிர்ப்பாளர்களை வீட்டிற்குச் செல்லுமாறும் கோரியதுடன், இல்லையெனில் இலங்கை 'எங்கள் வரலாற்றில் மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்கு நழுவிவிடும்' என்றார். 1980களில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களையும், தமிழ் அப்பாவி பொதுமக்கள் உட்பட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளையும் இவரின் ஆட்சி செய்த படுகொலைகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், இது தெளிவான கொலை அச்சுறுத்தல் எச்சரிக்கையாகும்.

மஹிந்த இராஜபக்ஷ M. A. சுமந்திரனை கட்டித்தழுவுகிறார் (photo: Social Media)

இரண்டு நாட்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் M. A. சுமந்திரன் இறுதியாக இராஜபக்ஷ கும்பலுடடனும் முழு இலங்கை அரசியல் ஆளும்தட்டினருடனும் திரைக்குப் பின்னால் நெருக்கமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதைப்பற்றி அறிவிப்பதற்காக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தனது கட்சியின் மௌனத்தை உடைத்தார்.

2009 இல் உள்நாட்டுப் போரின் முடிவில் இராஜபக்ஷ கும்பலால் தமிழ் பொதுமக்கள் பாரியளவில் படுகொலை செய்யப்பட்ட போதிலும், வன்முறை அச்சுறுத்தல் பற்றி சுமந்திரன் எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, போராட்டங்களை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து இராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதாக அவர் பின்வருமாறு விளக்கினார்.

“பல கட்சிகள் என்னோடு பேசுகிறார்கள். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா என்னோடு பேசினார், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா [பண்டாரநாயக்க குமாரதுங்க] அம்மையார் என்னோடு காலையில் பேசினார். மற்ற மற்ற தலைவர்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் நிலைமையில் ஒரு ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கான முயற்சி சம்பந்தமாக நடக்கின்ற பல பேச்சுவார்த்தைகளிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். தற்போதைய பிரதமர் மகிந்த இராஜபக்ஷவுக்கு நேற்று நான் கொடுத்த ஆலோசனை, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கமே கொண்டுவந்தால், நாங்கள் முன்னேற முடியும் என்று தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தை அவருக்கு சொல்லியிருந்தேன்.”

சுமந்திரன், இராஜபக்ஷ அணியுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தியதாக பெருமை கூறி ஆறு நாட்களுக்குப் பின்னர், இராஜபக்ஷவின் பொலிசார் ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சமிந்த லக்க்ஷனின் மனைவி, சீருடை அணிந்த அரசாங்கக் கொலையாளிகளை, அச்சமின்றி சிலோன் மிரருக்கு அடையாளம் காட்டி, “எனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கடைசி மரணமாக இருக்கப்போவதில்லை, இன்னும் பலர் சுடப்படுவார்கள். அவர்கள் சீருடை அணிந்த, நட்சத்திரம் குத்தியுள்ள கொலைகாரர்கள்” எனத் தெரிவித்தார்.

வேண்டுமென்றே செய்யப்பட்ட பொலிஸ் படுகொலையின் தன்மை மற்றும் அது அரசு எந்திரத்தின் உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது என்பது பற்றி எந்தவிதமான ஐயுறவும் இருக்கமுடியாது. துப்பாக்கிச் சூடு தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணையில் அனுராதா இராஜபக்ஷ சாட்சியமளிக்கையில், இரண்டு நட்சத்திரங்கள் மற்றும் அரச சின்னத்துடன் சீருடையில் இருந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர், 'உயரத்தே சுடாதே, கொல்வதற்கு சுடு' என உத்தரவிட்டார் என்றார். ஆனால் கொலைக்கு உத்தரவிட்ட அதிகாரி இன்னும் பகிரங்கமாக அடையாளம் காணப்படாததுடன், கைது செய்யப்படவுமில்லை அல்லது குற்றம் சாட்டப்படவுமில்லை.

ரம்புக்கனை படுகொலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பற்றிய மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என்ன தெரியும்? இராஜபக்ஷவுடன் சுமந்திரன் தனிப்பட்ட முறையில் ஸ்திரத்தன்மையை கொண்டுவருவது பற்றி பேசியபோது, இராஜபக்ஷவின் கொலைகார வன்முறை அச்சுறுத்தல் பற்றி விவாதித்தாரா? சுமந்திரன் இராஜபக்ஷவுடன் பொலிஸ் கொலைகளுக்கான திட்டங்களைப் பற்றி விவாதித்தாரா? அல்லது 2009 தமிழ் மக்கள் மீதான படுகொலைக்காக இராஜபக்ஷ கும்பலின் மீதான பாரிய வெறுப்பைக் கருத்தில் கொண்டு, இராஜபக்ஷவுடனான தனது கள்ளத்தனமான திட்டங்களை விரிவாக விவாதிக்கவில்லை என மறைத்துவிடலாம், அதனால் தனக்குத் தெரியாது என்று கூறிவிடலாம் எனக் கணக்கிட்டாரா?

பொலிஸாரின் கொலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இழிந்த ட்வீட் மூலம்: “துரதிர்ஷ்டவசமான மரணங்களை விளைவித்த ரம்புக்கனையில் நேற்று பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை நாங்கள் தடையின்றி கண்டிக்கிறோம். உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என அறிவித்தது.

இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முன்மொழிந்தால், முழு அதிகாரங்களையும் தன் கையில் கொண்டிருக்கும், எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறையை மேற்பார்வையிடும் இராஜபக்ஷ உட்பட முழுக் கும்பலையும் ஏன் வெளியேற்றக்கூடாது?

இராஜபக்ஷவுடனும் கொழும்பில் உள்ள முழு ஆளும் ஸ்தாபகத்துடனும் பின்கதவு பேச்சுக்களில் ஈடுபடும் அதேவேளையில், லக்ஷனின் கொலையால் உருவாகியுள்ள வெகுஜன கோபத்தில் இருந்து இராஜபக்ஷ அரசாங்கத்தை அரசியல் ரீதியாக பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. அது ஒருபுறம் இழிந்த முறையில் தமிழ் மக்களின் நண்பனாக காட்டிக் கொள்ளும் அதே வேளையில், மறுபுறம் இலங்கையில் முதலாளித்துவ ஒற்றையாட்சி அரசின் மையத்தில் இருக்கும் இராஜபக்ஷ கும்பலையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையையும் பாதுகாக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை எதிர்ப்பதாகக் கூறுவது முற்றுமுழுதான அரசியல் மோசடியாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, இன மத மொழி கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அரசியல் அணிதிரள்வின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க அழைப்பு விடுத்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையும், ஒற்றையாட்சி அரசாங்கத்தின் குற்றத்தன்மையும் ஏதோ ஒரு சட்டத்தில் உள்ள குறைபாட்டினாலோ அல்லது தனிநபரின் தவறான கையாளலாலோ ஏற்படவில்லை. மாறாக இந்த சமூக அமைப்புமுறையில் இருந்து ஊற்றெடுக்கிறது மற்றும் ஒரு அடிப்படையான, புரட்சிகர மாற்றத்தால் மட்டுமே அதை தூக்கியெறியப்பட முடியும் என்பதற்கு, கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் கூடுதல் சான்றுகளை அளிக்கிறது.

எரிபொருள் போக்குவரத்தைப் பாதுகாக்கும் பணியை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் இராஜபக்ஷ ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரி ஏற்கனவே 2009 உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சில்வாவின் பங்கு மிகவும் இழிவானது, வாஷிங்டனுக்கு கூட சில்வா மீது பயணத் தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆட்சியின் மோசமான அலட்சியத்திற்கு எதிரான போராட்டங்களை அடக்குவதில் அவர் இழிந்த பங்கு வகித்தார்.

தமிழ் முதலாளித்துவ மற்றும் உயர் நடுத்தர வர்க்க குறுகிய அடுக்குகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தொழிலாளர்களின் அத்தியாவசிய பொருட்களான உணவு, எரிசக்தி போன்றவற்றை மலிவு விலையில் கோரும் வெகுஜனங்களின் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை கண்டு அஞ்சிநடுங்குகிறது. இலங்கையின் 1983-2009 உள்நாட்டுப் போரின் முடிவு மற்றும் விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், மீண்டும் அவர்கள் கொழும்பு அரசியல் ஸ்தாபகத்திற்குள் செயல்படத் தொடங்கியதில் இருந்து, தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முன்னரை விட இன்னும் நெருக்கமாக நம்பியுள்ளனர்.

2015 இல், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 'நல்லாட்சி அரசாங்கத்தை' ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக சந்திரிகா குமாரதுங்கவுடன் அமெரிக்கா தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அவர்கள் கலந்துகொண்டனர். மேலும், 2019 இல் சிறிசேன அரசாங்கம் நெருக்கடியில் சரிந்துகொண்டிருந்த வேளையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த இஸ்லாமிய குண்டுவெடிப்புகளை மீண்டும் ஆட்சிக்கு வர இராஜபக்ஷ கும்பலுக்கு அவர்கள் உதவினார்கள்.

வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் பலமுறை எச்சரித்தும் குண்டுவெடிப்புக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உண்மையை விட்டுவிட்டு, தமிழ் தேசியவாதிகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் சிங்கள இனவாதிகளுடன் போட்டியிட்டனர். வலதுசாரி சிங்களக் கும்பல்கள் முஸ்லீம்களின் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் உடல்ரீதியாகத் தாக்கி சூறையாடிய அதேவேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி ஜனாதிபதி பதவிக்கும் பொலிஸ்-இராணுவ அமைப்புக்கும் ஆதரவளித்தது.

தாக்குதல்கள் நடந்த உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் ட்வீட் செய்ததாவது: 'இந்த தீவிரவாதிகள் இந்த நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லாமல் இருக்க நாம் ஒன்றுபட்டு பலமாக இருப்போம்' மற்றும் 'இவற்றை தயாரித்தவர் யார் என்பதை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். குற்றங்களைச் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்”என்றார்.

2019 மே தின உரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினர் மாவை சேனாதிராஜா, “மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். முன்பு நாங்கள் அவர்களின் பிரசன்னத்தை அகற்ற விரும்பினோம், ஆனால் இப்போது அவர்கள் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்னர் அரசியல் ஸ்தாபகத்தின் 'அனைத்து கட்சி கூட்டத்தில்' பங்கேற்று அவசரகால நிலைக்கு தனது ஆதரவை தெரிவித்தது. தீவின் உழைக்கும் மக்களின் பெருகிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 'நல்லாட்சி அரசாங்கம்' நெருக்கடியில் உள்ள நிலையில், 'பாதுகாப்பு' பிரச்சினை இராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பொதுமக்களின் கவனத்தை சிதறடிப்பதற்கும் ஒரு அடித்தளமாக செயல்பட்டது.

இன்று, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் பட்டினி மற்றும் ஏழ்மைக்கு முகம்கொடுக்கும் வேளையில் கூட, தங்களுடைய தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் சலுகைகளை காப்பாற்ற ஆசைப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளுடன் நெருக்கடியை தீர்க்க அழைப்பு விடுக்கிறது. இதன் அர்த்தம் பொதுத்துறை வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் பாரிய வெட்டுக்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கல், சமூகநலத் திட்டங்களை குறைத்தல், மற்றும் பொது கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஆழமான வெட்டுக்கள் என்பனவே. இவ்வாறிருந்தும் சுமந்திரன் தான் தனிப்பட்ட முறையில் இராஜபக்ஷவிடம் “சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேசுங்கள்” எனக்கூறியதாக பெருமையடித்துள்ளார்.

வங்கிகள் மற்றும் IMF இன் கோரிக்கைகளை நிராகரிப்பதில், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்துப் பின்னணிககளையும் கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஒன்றுபடுகின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் சகித்துக்கொள்ள முடியாதுள்ளது, நிலைமைகள் மாற்றப்பட வேண்டும், இராஜபக்ஷ ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும், திருடப்பட்ட பணம் தொழிலாள வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

சமூக ரீதியாக உருவாக்கப்பட்ட செல்வம், பொருளாதாரத்தின் மீதான தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டினால் மேற்பார்வையிடப்பட வேண்டும், இது தொழிலாளர் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும்.

அத்தகைய புரட்சிகரப் போராட்டத்திற்கு தொழிலாளர், இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து வகையான தமிழ் தேசியவாத குழுக்களை நிராகரிப்பதும், சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்துள்ள சோசலிச சர்வதேசிய கொள்கைகளுக்கு திரும்புவதும் அவசியப்படுகிறது.

Loading