அலெக்ஸி யாரோட்ஸ்கியின் ஆரம்பகால சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்ராலினிச பெரும் பயங்கரவாதம் பற்றிய நினைவுக் குறிப்புகளின்

பகுதி 2: "கோல்டன் கோலிமா"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

[பகுதி-1]

யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகளின் இரண்டாவது தொகுதி, 'கோல்டன் கோலிமா' (சோலோட்டாயா கோலிமா), வடக்கு சைபீரியாவில் உள்ள கோலிமா ஆற்றுப்பகுதியில் அவரது அனுபவங்களை உள்ளடக்கியது. இது, அனைத்து ஸ்ராலினிச கட்டாய உழைப்பு முகாம்களிலும் மோசமானதாக இருந்தது. (தொகுதி I, 1930 வரை அவரது வாழ்க்கையை உள்ளடக்கியது, இங்கே அழுத்தவும்) கோலிமா ஆற்றங்கரையில் டஜன் கணக்கான சிறை முகாம்கள் அமைக்கப்பட்டன. கைதிகள் பெரும்பாலும் உறைபனி வெப்பநிலையில், போதிய ஆடை அல்லது ஊட்டச்சத்து இல்லாமல் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்ததுடன் மரங்களை வெட்டினார். கைதிகள் ஆயிரக்கணக்கானோர் காணாமல்போனார்கள்.

'Zolotaya Kolyma' புத்தக முன்னட்டை Book cover of 'Zolotaya Kolyma' [Photo by Publishing house Nestor-Istoriia] [Photo: Publishing house Nestor-Istoriia]

போக்குவரத்து அமைச்சகத்தின் (NKPS) இளம் பொறியாளராக இருந்தபோது, யாரோட்ஸ்கி 1935 இல் இந்த அமைச்சகத்தில் பொறியாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பலியாகினார். யாரோட்ஸ்கியால் அவரின் உழைப்பு மற்றும் திறமைக்காக பாராட்டப்பட்ட அமைச்சரகத்தின் தலைவரான ககானோவிச், அவரது தொழிலாளர்களுக்கு எதிராக நகைப்புக்குரிய வழக்கு ஒன்றை முன்னெடுக்கும் பொறுப்பில் இருந்தார். ஸ்ராலின் பெரும் பயங்கரத்தைத் தொடங்குவதற்கான சாக்குப்போக்காக அமைந்த டிசம்பர் 1, 1934 இல் கீரோவ் படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் இது வந்தது.

யாரோட்ஸ்கியின் கைதுக்கான அடிப்படையானது அந்த நேரத்தில் நிலவிய நிலைமை பற்றிய உணர்வைத் தருகிறது. ஏனைய பொறியாளர்களுடன் சேர்ந்து, யாரோட்ஸ்கி சோவியத் இரயில் பாதையின் பழுதுபார்க்கும் பணிகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு கட்டுரையை எழுதினார். இரயில் பாதையின் மூலதனம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் பழுதுபார்ப்புகளில் முதலீடு செய்வது அவசரமான விஷயமாகிவிட்டது என்றும் அவர்கள் கணக்கிட்டனர். குறிப்பாக, அதிகப்படியாக பயன்படுத்துவதால் இரயில்கள் சேதமடைவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்தக் கட்டுரையின் அடிப்படையில் டஜன் கணக்கான உயர் தகுதி வாய்ந்த பொறியியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் பல தசாப்தங்களாக முகாம்களில் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள்.

அடுத்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், மேம்பட்ட பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான சோவியத் ஒன்றியத்தின் முயற்சிகளுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த NKPS, செம்படைக்குப் பின்னர், பெரும் பயங்கரத்தின் போது அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட தனித்தொரு சோவிய நிறுவனமாக மாறியது.

யாரோட்ஸ்கி நவம்பர் 10, 1935 இல் கைது செய்யப்பட்டார் மற்றும் மாஸ்கோவில் உள்ள புட்டிர்கி சிறையில் ஒரு 'எதிர்-புரட்சியாளராக' அடைக்கப்பட்டார். அது ஏற்கனவே கீரோவின் படுகொலைக்குப் பின்னர் மொத்தமாக கைது செய்யப்பட்ட முன்னாள் மற்றும் தீவிர எதிர்ப்பாளர்களால் நிரப்பப்பட்டிருந்தது. ஏப்ரல் 1936 இல், யாரோட்ஸ்கி சைபீரியாவில் உள்ள கோலிமாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1934 இல் கோலிமாவில் தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் [Photo: Courtesy of the Central Russian Film and Photo Archive]

இங்கே, அவரும் ஆயிரக்கணக்கான கைதிகளும் பிராந்தியத்தின் தங்க இருப்புகளை தோண்டுவதற்கு அனுப்பப்பட்டனர். அவர் பசியின் கொடூரமான அனுபவங்களை அனுபவித்தார். கடுமையான காலநிலை நிலைமைகளின் கீழ் கடுமையான உழைப்பு, மற்றும் அதிகாரத்துவத்தால் நடைமுறையில் முகாம்களை நடத்த அனுமதித்த உண்மையான குற்றவாளிகள், கொலைகாரர்கள் மற்றும் கற்பழிப்பாளர்களால் அரசியல் கைதிகள் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டு மற்றும் தரந்தாழ்த்தலுக்கு உள்ளானார்கள். பழைய போல்ஷிவிக்குகள் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான சோசலிச அடித்தளத்திலான எதிர்ப்பாளர்களான இடது எதிர்ப்பாளர்களை இலக்கு வைக்கப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் மரணதண்டனையின் பல்வேறு நிலைகளை அவர் விவரிக்கிறார்.

அவர் கோலிமாவிற்கு வந்தவுடன், ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பைக் கண்டார்.

ஜூன் முதல் நாட்களில் [1936] ஐயாயிரம் கைதிகள் மற்றொரு கப்பலில் கோலிமாவுக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த குழு [etap] நான்கு நெடுவரிசைகளில் முகாமிலிருந்து வெளியே வந்து, அவர்கள் கப்பலில் ஏற வேண்டிய Zolotoi rog வளைகுடாவ நோக்கி நகர்ந்தனர். நெடுவரிசை நகர மையத்தைக் கடந்தபோது லெனினிஸ்டுகளின் ஒரு பெரிய குழுவான சுமார் 200 பேர், வர்ஷவியங்காவை [ஒரு புகழ்பெற்ற போலந்து-ரஷ்ய புரட்சிகரப் பாடல்] பாடத் தொடங்கினர்.

காவலர்கள் வானத்தில் சுட்டு, அவர்களை நெடுவரிசையில் உட்கார வைத்தனர். ஆனால் உட்கார்ந்திருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து பின்வருமாறு பாடினர், 'எதிரிகளின் சூறாவளி எங்கள் தலைக்கு மேல் பறக்கிறது, இருண்ட படைகள் எங்களை ஒடுக்குகின்றன...', பின்னர், 'தலைவிதியை தீர்மானிக்கும் போராட்டத்தில் நீங்கள் பலியாகிவிட்டீர்கள்’ என்றனர். இந்த மாபெரும் புரட்சிகரப் பாடலின் வரிகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்; தற்போதைய தருணத்திற்கு அவை மிகவும் பொருத்தமாக இருந்தன: ‘அதற்காக உங்களால் முடிந்த அனைத்தையும் அந்த போராட்டத்திற்கு கொடுத்துள்ளீர்கள்… ‘நீங்கள் நடந்தீர்கள், தளைகள் சத்தமிட்டன’. கோலிமாவுக்கு அனுப்பப்பட்டவர்கள் புரட்சியாளர்கள் என்பதையும், இவர்கள்தான் புரட்சி செய்தவர்கள், மக்களுக்காகவும் நியாயமான காரணத்திற்காகவும் இறக்க பயப்படாதவர்கள் என்பதை மக்களுக்கு காட்ட விரும்பினர். (பக். 153-154)

இந்த பெரும் பயங்கரத்தில் உள்ளடங்கியிருந்தது, முழு பாரம்பரியத்தையும் புரட்சிக் கட்சியையும் அழித்து மௌனமாக்கியது என்பதை யாரோட்ஸ்கி நன்கு அறிந்திருந்தார்:

லெனினிசக் கட்சி சக சிந்தனையாளர்களின் ஒரு கூட்டாகும். ஸ்ராலினிச கட்சி தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாகும். இந்த நேரத்தில், முழு கட்சி, சோவியத், இராணுவ மற்றும் பொருளாதார அமைப்பை மற்றைய மக்களால் மாற்றுவது அவசியமாகிவிட்டது. கட்சி மாநாடுகளில் சிந்தித்து, கலந்துரையாடி, கருத்துகளை வெளிப்படுத்தி, தங்கள் கருத்துக்களை பாதுகாக்க பழகியவர்கள், தேவை இல்லை என்பது மட்டுமல்ல, கேடு விளைவிப்பவர்களாகவும், அழிக்கப்பட வேண்டியவர்களாகவும் ஆக்கப்பட்டனர். (பக்கம் 357)

1937-ம் ஆண்டு பயங்கரத்தின் உச்சகட்டமாகும். கைது செய்யப்பட்டவர்களுக்கு அப்பாற்பட்டு, முறையான நடைமுறையின்றி விசாரணை செய்யப்பட்டு, மாஸ்கோ மற்றும் பிற நகரங்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களைத் தாண்டி, இந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டான 1938 இலும் பல பழைய போல்ஷிவிக்குகள் அல்லது இடது எதிர்ப்பாளர்களான அரசியல் கைதிகள் முகாம்களில் பாரிய அளவில் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டவர்களும் இப்போது பயங்கரவாதத்தின் ஒரு சிறப்பு இலக்காக மாறியுள்ளனர். 1920 களின் முற்பகுதியில் சோவியத் ஒன்றியத்திற்கு தப்பிச் சென்ற ஒரு போலந்து யூதரான யாவ்னோ என்ற விமானியுடன் (அவர் சுருக்கமாக 1937/1938 இல் சிறைக்கு அனுப்பப்பட்டார், பின்னர் மீண்டும் கோலிமாவுக்குத் திரும்பினார்) அவர் தனது அறையைப் பகிர்ந்து கொண்டதை யாரோட்ஸ்கி நினைவு கூர்ந்தார். அவர் செம்படையில் விமானியாகப் பயிற்சி பெற்றவர்.

அவர் ஒரு விட்டோடியாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புங்கள்… என ஒரு உத்தரவு இருந்தது. அவர்கள் வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளையும், சோவியத் ஒன்றியம் அனைத்து தொழிலாளர்களுக்கும் தாய்நாடு என்று நம்பி 1930 களின் முற்பகுதியில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையிலிருந்து தப்பி வந்த வேலையில்லாதவர்களையும் அழைத்துச் சென்றனர். இவையனைத்தும் சர்வதேசியவாதம் மற்றும் அனைத்து மக்களின் சகோதரத்துவம் என்ற பதாகையின் கீழ் லெனின் உருவாக்கிய கட்சியின் பெயரால் செய்யப்பட்டது. ஸ்ராலினால் முடிந்திருந்தால், ஜோன் ரீட்டை ஒரு கட்சியிலிருந்து விட்டோடியவராகக் கூட கைது செய்திருப்பார். போருக்கு முன்னர் போலந்து மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழிவைப் பற்றி நீங்கள் பார்த்தால், இது பாசிஸ்டுகளால் அல்ல, ஆனால் ஸ்ராலினால் சாதிக்கப்பட்டது. இப்போது செய்வதை விட அக்டோபர் புரட்சியின் கருத்துக்களை இழிவுபடுத்த இன்னும் அதிகமாக செய்ய முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. (பக்கம் 271)

எவ்வாறாயினும், யாரோட்ஸ்கியை மிகவும் துன்பத்திற்குள்ளாக்கியது, அவர் தனது இளமை பருவத்தில் மிகவும் பாராட்டிய பழைய போல்ஷிவிக்குகளின் தலைவிதியாகும். அவரது நினைவுக் குறிப்புகளின் முடிவில், அவர் ஒரு கேள்வியை எழுப்புகிறார்:

இந்த மக்கள் ஏன் இவ்வளவு பரிதாபகரமாக மரணம் அடைந்தார்கள், இதற்கு எதிராக ஏன் யாரும் போராட்டங்களை பற்றி கேள்விப்படவில்லை மற்றும் அவர்கள் எடுத்த மிக தீவிரமான நடவடிக்கையாக இருந்த உண்ணாவிரதங்கள் பற்றி யாரும் ஏன் அறிந்திருக்கவில்லை? … மிகப் பெரும்பான்மையானோர், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் கட்சி உறுப்பினர்கள், பாசிச முகாம்களில் இருந்திருந்தால் உடனடியாக ஒரு தலைமறைவான எதிர்ப்பு இயக்கத்தை ஏற்பாடு செய்திருப்பார்கள், அவர்கள் இறந்திருந்தால், அவர்கள் புரட்சியாளர்களாக இறந்திருப்பார்கள். இப்படியொரு பரிதாபகரமான மரணத்தை எப்படி விளக்க முடியும்?

கைது பற்றிய பயம், நேற்றைய நண்பர்களின் பகிரங்க கண்டனம், விசாரணையின் போது அடித்தல், தனக்கு எதிராகவும் தோழர்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமான மற்றும் பொய் சாட்சியங்கள் போன்றவற்றுடன் தொடங்கிய பாதையின் இறுதிப் புள்ளி அது. சோவியத் வாழ்க்கையின் மறுபக்கத்திற்கு பயங்கரமான எல்லையைத் தாண்டி, நான் இன்னும் என் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்பதைக் காட்ட, தவறான புரிதலின் காரணமாக நான் சிறையில் அடைக்கப்பட்டேன், கடைசி அழுகை மற்றும் கடைசி துடிப்பு வரை இதுதான் அவர்களின் அணுகுமுறை.

விதிவிலக்குகளும் அங்கு இருந்தன. வரலாற்றின் போக்கைப் புரிந்துகொண்டு, தலை நிமிர்ந்து தங்கள் முடிவைச் சந்திக்கும் மக்கள் இருந்தனர், ஆனால் அவர்களால் கூட கோட்டைத் தாண்டி, அவர்கள் இன்னும் தங்களுடையது என்று கருதும் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சிக்கு செல்ல முடியவில்லை. (பக். 315-317)

யாரோட்ஸ்கியின் அவதானிப்பு மிகவும் சிந்தனைக்குரியதாக இருந்தாலும், அது ஒரு உண்மையான விளக்கத்திற்கு குறைவாகவே இருக்கின்றது.

அதிகாரத்துவத்தின் பயங்கரத்திற்கு எதிராக எந்த ஒரு தாக்கம்மிக்க எதிர்ப்பும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லாவற்றிற்கும் மேலாக, உலகப் புரட்சியின் வளர்ச்சியுடன் பிணைந்திருந்தது. உலகப் புரட்சியின் இந்த தாமதம், ரஷ்யாவின் பிரதான விவசாயப் பொருளாதாரத்தின் பின்தங்கிய வளர்ச்சியுடன் இணைந்து, புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், அதிகாரத்துவத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. 1917 புரட்சியின் அடித்தளத்திற்கு நேரெதிராக நின்ற 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற வேலைத்திட்டம், அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அடித்தளத்தை வழங்கியது.

1920கள் மற்றும் 1930களில் ஜேர்மனி, இங்கிலாந்து, சீனா மற்றும் பின்னர் ஸ்பெயினில் ஏற்பட்ட புரட்சியின் தோல்விகள், கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிச தலைமையின் சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத கொள்கைகளால் கணிசமான அளவில் உருவாக்கப்பட்டவையாகும்.

1930களின் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தினது மட்டுமன்றி சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் மனச்சோர்வும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி சோவியத் வெகுஜனங்களின் நனவின் மீது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று ட்ரொட்ஸ்கி அந்த நேரத்தில் குறிப்பிட்டார். ஜேர்மனியிலோ அல்லது வேறொரு நாட்டிலோ புரட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு, அதன் தனிமைப்படுத்தல் மற்றும் சுற்றிவளைப்பு உணர்வை உடைத்திருக்கும், மேலும் அது சோவியத் தொழிலாள வர்க்கத்தை அதனால் வெறுக்கப்பட்ட சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தத் தூண்டியிருக்கும்.

பிரிங்கிப்போவில் உள்ள அவரது மேசையில் லியோன் ட்ரொட்ஸ்கி

உண்மையில், முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் தற்காலிக வெற்றியால் சாத்தியமானது என்றாலும், பெரும் பயங்கரம், இறுதியில் சோவியத் அதிகாரத்துவத்தின் ஆழமான பலவீனத்தினத்தில் வேரூன்றியிருந்தது. சோவியத் தொழிலாள வர்க்கம், புரட்சியின் சாத்தியமான விரிவாக்கம் மற்றும் 1917 இன் புரட்சிகர மரபுகள் ஆகியவற்றால் அதிகாரத்துவம் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாக கண்டுகொண்டது.

பயங்கரத்தில் குறிவைக்கப்பட்டவர்களில் யாரோட்ஸ்கியும் ஏன் இருந்தார் என்பதையும் இது விளக்குகிறது. ஒரு முன்னணி போல்ஷிவிக், ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், யாரோட்ஸ்கி புரட்சியின் அனுபவத்தை கடந்து வந்த ஒரு தலைமுறையின் பாகமாக இருந்தார். போல்ஷிவிசம் மற்றும் மார்க்சிசத்தின் மரபுகள் இந்த பிரிவினரின் மீது ஆழமான முத்திரையை பதித்திருந்தது.

பயங்கரத்தின் முதன்மை இலக்கு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச-சோசலிச முன்னணிப் படையாகும். மிகக் குறைவான விதிவிலக்குகளுடன் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரோகோவின் இதைப் பொருத்தமாக 'ஒரு அரசியல் இனப்படுகொலை' என அழைத்தார். ஆனால் இந்த அரசியல் எதிர்ப்புரட்சி மற்றும் அழிப்பு செயல்முறையானது, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் மற்றும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான சோசலிஸ்டுகள் கொலை செய்யப்பட வேண்டும் என்பது மட்டும் அல்ல. 1917 புரட்சி மற்றும் ட்ரொட்ஸ்கியின் இடது எதிர்ப்பை தோற்றுவித்த புரட்சிகர கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு சாட்சியாக இருந்த அனைவரும் கொல்லப்பட்டு மௌனமாக்கப்பட்டனர். வார்லம் ஷலாமோவ் (Varlam Shalamov) கூறியது போல், 'ரஷ்ய வரலாற்றின் தவறான பகுதி' எனக் கூறப்பட்டதை நினைவில் வைத்திருந்த அனைவரையும் பயங்கரம் குறிவைத்தது.

1917 புரட்சிக்கு எதிரான இந்த மூர்க்கமான ஸ்ராலினிச எதிர்வினை இருந்தபோதிலும், சோவியத் தொழிலாள வர்க்கம் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் இடது எதிர்ப்பின் போராட்டம் மற்றும் அக்டோபர் புரட்சியின் தாக்கம் சிதைந்த வடிவத்திலும், சரியாகவும் புரிந்து கொள்ளப்படாமலும் இருந்ததற்கு யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகள் ஒரு சக்திவாய்ந்த நிரூபணம் ஆகும். மற்றும் ஆழமான இந்த மகத்தான போராட்டங்களின் வரலாற்று உணர்வு, கடுமையாக சேதமடைந்திருந்தாலும், ஸ்ராலினிசத்தால் முற்றாக அழிக்கப்பட முடியவில்லை. சோவியத் ஒன்றியத்தின் இறுதி இரண்டு தசாப்தங்களில் யாரோட்ஸ்கி தனது நினைவுக் குறிப்புகளை எழுத வந்த சூழ்நிலைமையால் இது தெளிவாகக் எடுத்துக்காட்டப்படுகிறது.

1940களின் பிற்பகுதியில், கோலிமாவில் இடது எதிர்ப்பின் முன்னணி இலக்கிய விமர்சகரான அலெக்சாண்டர் வோரோன்ஸ்கியுடன் தொடர்புடைய நபர்களை யாரோட்ஸ்கி சந்தித்தார். கோலிமாவைப் பற்றிய ரஷ்யாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இப்போது பரவலாக அங்கீகரிக்கப்படும் வார்லம் ஷலாமோவ் இதில் அடங்குவர். 1926-27 இல், ஷலமோவ், கட்சி உறுப்பினராக இல்லாவிட்டாலும், இடது எதிர்ப்பின் ஆதரவாளராக இருந்தார். மேலும் எதிர்ப்பாளர்களின் துண்டுப் பிரசுரங்களை வழங்கியதற்காக கைது செய்யப்பட்டார். ஷலமோவின் இலக்கியக் கருத்துக்கள் வோரோன்ஸ்கியால் வலுவாக ஆதிக்கத்திற்குட்பட்டவையாக இருந்தன. பின்னர் அவர் தனது கோலிமாவின் கதைகளை (Tales of Kolyma) “‘ஸ்ராலினிசத்தின் முகத்தில் ஒரு அறை' என விவரித்தார்.

Varlam Shalamov in 1937 1937 இல் வார்லம் ஷலமோவ் [Photo: NKVD]

யாரோட்ஸ்கி, வோரோன்ஸ்கியின் மகள் கலினா வோரோன்ஸ்காயா மற்றும் அவரது கணவர் இவான் இசாயேவ் ஆகியோரையும் கோலிமாவில் சந்தித்தார். அவர்கள் அனைவரும் வரும் தசாப்தங்களில் நண்பர்களாக இருந்தார்கள், கடிதப் பரிமாற்றத்தைப் பேணினார்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி தங்கள் நினைவுக் குறிப்புகளை எழுதினார்கள்.

இலக்கிய அறிஞர் நினா மாலிகினா யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகள் பற்றிய தனது அறிமுகத்தில் குறிப்பிடுவது போல, 1970 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் கலினா வோரோன்ஸ்காயாவால் வெளியிடப்பட்ட வோரோன்ஸ்கியின் அரை கற்பனை சுயசரிதையான Za zhivoi i mertvoi vodoi அவை அனைத்திற்கும் குறிப்பிடத்தக்க முன்மாதிரியாக இருந்தது. 1920 களில் எழுதப்பட்ட இந்த நூல், அந்த நேரத்தில் இளம் இடது எதிர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியது மற்றும் போல்ஷிவிக் கட்சியின் வரலாற்றை மட்டுமல்ல, முன்னர் ஜாரிசத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட சதி வேலைகளின் முறைகளையும் ஸ்ராலினிசத்தின் கீழான புரட்சிகர போக்குகளுக்கும் தேவையான விடயமாக்கியது.

Aleksandr Voronsky in 19291929 இல் அலெக்சாண்டர் வோரோன்ஸ்கி

யாரோட்ஸ்கி, 1967 முதல் 1970 வரை பிரெஷ்நேவ் ஆட்சி ஸ்ராலினுக்கு மறுவாழ்வு அளித்த நேரத்தில் தனது நினைவுக் குறிப்புகளை எழுதினார். 1968 இல் செக்கோஸ்லோவாக்கியாவில் பிராக் இலையுதிர்கால எழுச்சியை நசுக்கிய பின்னரும் மற்றும் வார்சோ ஒப்பந்த படையெடுப்பிற்கு பின்னரும் இந்த காலகட்டத்தில் 'அதிருப்தியாளர்கள்' என்று அறியப்பட்ட புத்திஜீவிகளின் குறிப்பிடத்தக்க பிரிவுகள், இந்த காலகட்டத்தில் தீவிரமாக வலது பக்கம் நகர்ந்தன. அவர்களில் பலர் தற்போது சோசலிசத்திலிருந்தும் மற்றும் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்திலிருந்தும் தம்மை முற்றாக விலக்கிக்கொண்டுவிட்டனர்.

சோவியத் ஒன்றியத்தின் அதிருப்தி இயக்கத்தில் அறிவுசார் நீரோட்டங்களின் கருத்துகளின் மீது பெருகிய முறையில் கம்யூனிச-எதிர்ப்பு பிரிவுகள் ஆதிக்கம் செலுத்தினாலும், யரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகள் உண்மையான இடதுசாரிப் போக்குகள் தொடர்ந்தும் இருந்ததற்கான ஒரு மேலதிக சாட்சியமாகும். ஆனால் அவை தலைமறைவாக இருக்க உந்தப்பட்டு மிகப் பெரிய மூர்க்கத்தனத்துடன் அதிகாரத்துவத்தால் ஒடுக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அல்லது அதற்குப் பின்னரும் அவர்களால் பெரும்பாலும் தங்கள் படைப்புகள் மற்றும் நினைவுக் குறிப்புகளை வெளியிட முடியவில்லை.

யாரோட்ஸ்கி செப்டம்பர் 1956 இலேயே மறுபுனருத்தானம் செய்யப்பட்டார். ஆனால் பிப்ரவரி 1956 இல் தனது 'இரகசிய உரையில்' நிகிதா குருஷ்சேவின் ஸ்ராலினின் குற்றங்களின் மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்படுத்தல்களை மிகுந்த சந்தேகத்துடன் நோக்கினார். விரோதம் குறைந்த நிலையின் போது பல தொழிலாளர்கள் மற்றும் சோசலிச புத்திஜீவிகளைப் போலவே, யாரோட்ஸ்கியும் 'உண்மையான லெனினிடம் திரும்புவது' தேவை என்று உணர்ந்தார். ஆனால், 1938 இல் ட்ரொட்ஸ்கி நிறுவிய நான்காம் அகிலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த அவருக்கு அதை எப்படி நிறைவேற்றுவது என்று புரியவில்லை. டிசம்பர் 1961 முதல் ஷலாமோவுக்கு எழுதிய கடிதத்தில், அவர் பின்வருமாறு எழுதினார்

தனிநபர் வழிபாட்டு முறையானது, சாம்பலை மாற்றுவதுடனும், காகனோவிச் மற்றும் சிலரை அகற்றுவதுடனும் மட்டுப்படுத்தப்படும் என்று நான் நம்பவில்லை. அவர்கள் 'அரசும் புரட்சியும்' இல் விளாடிமிர் லெனின் அழைப்பு விடுத்தது போல் அரசை புனரமைப்பார்கள் என்றால், தனிநபர் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று நான் கூறுவேன். (மேற்கோள் பக். 38-39)

அவரது நினைவுக் குறிப்புகளின் முடிவில், அவர் குறிப்பிட்டார்,

இந்த விடயத்தில் குருஷ்சேவின் கொள்கைகளின் அனைத்து அம்சங்களும் [ஸ்ராலினிசத்தின் குற்றங்களின் வெளிப்பாடு], அரைவேக்காடாகவும், முரண்பாடாகவும் முடிவுகள் மற்றும் பொதுமைப்படுத்தல்கள் இல்லாமல் அரை உண்மைகளாகவும் இருந்தன. குருஷ்சேவ் தனது அறிக்கையை XX வது காங்கிரஸில் கூட வெளியிடவில்லை, அவர் ஸ்ராலினிசத்தின் சிலையைத் தகர்த்தார், ஆனால் உடனடியாக தனது சிலையை நிறுவினார். அவர் சமூகத்தின் அடித்தளத்தை மாற்ற எதுவும் செய்யவில்லை, மேலும் ஒரு ஜனநாயக நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத அரண்மனை சூழ்ச்சிக்கு பலியாகும் முன், மிக மேலோட்டமான சீர்திருத்தங்களுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார். (பக்கம் 359)

போருக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்தில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு இடதுசாரி எதிர்ப்பு இருந்தது என்பதற்கு இந்தக் கருத்துக்கள் ஒரு குறிப்பிடத்தக்க சாட்சியமாகும், இருப்பினும் அது வேலைத்திட்டம் மற்றும் அமைப்பு இல்லாமல் இருந்தது. உண்மையில், யாரோட்ஸ்கி மற்றும் அவரது தலைமுறையினரின் பெரும் துன்பியல், அக்டோபர் புரட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் ஸ்ராலினிசத்தின் மீதான அவர்களின் வெறுப்பு இருந்தபோதிலும், அவர்கள் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தனர்.

1967 இல் அலெக்ஸி யாரோட்ஸ்கி [Photo by Published in Zolotaya Kolyma] [Photo: Published in Zolotaya Kolyma]

இந்த வரலாற்றுக் குற்றம் ஸ்ராலினிசத்தின் விளைவு மட்டுமல்ல, பப்லோவாத திருத்தல்வாதத்தின் விளைவுமாகும். இது, நான்காம் அகிலத்திற்குள் வெளிப்பட்ட ஒரு போக்காகும். ஸ்ராலினிசத்தின் எதிர்-புரட்சிகர பாத்திரம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை நிராகரித்த பப்லோவாதிகள், குருஷேவ் உட்பட அதிகாரத்துவத்தின் 'இடது' பிரிவுகளின் மீது மாயைகளை ஊக்குவிக்கவும் அதனுள் ட்ரொட்ஸ்கிசத்தை கலைக்கவும் செயற்பட்டனர். இந்த நோக்குநிலை, நான்காம் அகிலத்திலிருந்து யாரோட்ஸ்கி உட்பட கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் உள்ள பல பேர்கள் அக்டோபர் புரட்சியை பாதுகாக்கவும் அதிகாரத்துவத்தை எதிர்த்துப் போராடவும் ஒரு சோசலிச அடிப்படையை தெளிவாகத் தேடிக்கொண்டிருந்த காரியாளர்களுடன் துண்டிப்பதற்கு உதவியளித்தது.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிஸ்டுகளின் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் மட்டுமே உடைக்கப்பட்டது. 1985-86ல் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) உடனான பிளவில் பப்லோவாதிகளை நான்காம் அகிலத்தில் இருந்து வெளியேற்றியதன் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் நேரடியாகத் தலையிட முடிந்தது. அதன் தலைவர்கள் சோவியத் ஒன்றியத்திற்குள் சென்று இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தினர். இந்த உறவுகளில் மிக முக்கியமானது, ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவை நிறுவுவதில் பல ஆண்டுகளாக தனிமையில் இயங்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் வாடிம் ரோகோவினுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அப்போராட்டத்தின் ஏழு தொகுதிகள் கொண்ட வரலாறாக எழுத முடிந்தது.

அதற்குள், துரதிர்ஷ்டவசமாக, யாரோட்ஸ்கி இப்போது உயிருடன் இல்லை- 1983 இல் இறந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது சோவியத் ஒன்றியத்தில் அவருடைய நினைவுக் குறிப்புகள் வெளியிடப்படாது என்பதை நன்கு அறிந்திருந்தும், இது கம்யூனிச எதிப்பாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் என்று பயந்தும், மேற்கு நாடுகளில் அவற்றை வெளியிட மறுத்துவிட்டார். இருப்பினும், பல வருடங்கள் எடுத்தாலும், இறுதியில் அவை ரஷ்யாவில் தங்கள் வாசகர்களைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

அவர் நினைத்தது தவறாகவில்லை. பல தசாப்தங்களுக்கு பின்னர், அவரது நினைவுக் குறிப்புகள் ரஷ்யாவில் வெளியிடப்பட்டமை, ஸ்ராலினிசத்தின் பாரிய குற்றங்கள் இருந்தபோதிலும், முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பிற்கு வழிவகுத்து மற்றும் அதன் விளைவாக குழப்பம் ஏற்பட்டபோதிலும், 20 ஆம் நூற்றாண்டின் பாரிய வரலாற்றுக் கேள்விகள் பற்றி மக்கள் தொகையின் பரந்த அடுக்குகளுக்குள் குறிப்பிடத்தக்க மற்றும் தீவிரமான ஆர்வம் உள்ளது என்பதற்கான அடையாளமாகும்.

அலெக்சாண்டர் வோரோன்ஸ்கியின் பேத்தி டட்டியானா இசேவா. (c) WSWS media

வொரோன்ஸ்கியின் பேத்தி டாட்டியானா இசேவா அவரது கையெழுத்துப் பிரதிகளை மீட்டெடுக்க பல ஆண்டுகளாக உழைத்து, முதலில் அவற்றைத் தானே வெளியிட்டார். அதேபோல் நினா மாலிகினாவும் ரஷ்யாவில் தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்கள் செய்த சேவைக்காக பெரும் புகழுக்கு தகுதியானவர்கள். சர்வதேச அளவில். யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகளின் இரண்டாவது தொகுதியின் 2021 பதிப்பு அழகாகத் திருத்தப்பட்டு, மேலும் கவனமாக அடிக்குறிப்புகள் மற்றும் மலிகினாவின் அறிமுகம் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. இது படைப்பை அதன் பரந்த இலக்கிய மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தில் வைக்கிறது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பினாமிப் போர் மற்றும் ரஷ்ய மக்கள், ரஷ்ய வரலாறு மற்றும் ரஷ்ய கலாச்சாரம் பற்றிய இடைவிடாத, பிற்போக்குத்தனமான மற்றும் அறியாமைமிக்க நிலைமைகளின் கீழ், பரந்த சர்வதேச பார்வையாளர்களுக்காக யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகளை மொழிபெயர்ப்பது ஒரு மிகமுக்கிய கேள்வியாகும். 21 ஆம் நூற்றாண்டில் உலக சோசலிசப் புரட்சியை நிறைவு செய்யப் போராடும் புதிய தலைமுறை சோசலிஸ்டுகளை ரஷ்யாவில் உள்ள சோசலிச இயக்கம் மற்றும் புத்திஜீவிகளின் சிறந்த வரலாற்று மரபுகளுடன் மீண்டும் இணைப்பதில் அவை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும்.

Loading