கொடூரமான அவசரகால நிலையை எதிர்த்திடு! ஜனாதிபதி சர்வாதிகாரம் வேண்டாம்! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அவசரகால பிரகடனத்தை கண்டிப்பதுடன் அதை உடனடியாக நிறுத்தக் கோருகிறது.

தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும், வானளாவிய பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் நீண்டகால பற்றாக்குறையினால் உருவாக்கப்பட்ட சமூக அவலத்திற்கு எதிராக, ஜனாதிபதியின் இராஜினாமாவைக் கோரி உழைக்கும் மக்கள் ஒரு மாத காலமாக முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்குமான தயாரிப்பே அவசரகால நிலை பிரகடனம் ஆகும்.

6 மே 2022 அன்று பொது வேலைநிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொழும்பில் பாராளுமன்ற வீதியில் அணிதிரண்டிருந்தனர் (Photo: WSWS media)

ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில் நடந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களின் போது, இந்த கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அதன் மகத்தான சமூக சக்தியை வெளிப்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை, சுயதொழில் செய்பவர்கள், கிராமப்புற ஏழைகள், மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களும் ஒன்று சேர்ந்து, பொது வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தாலில் இணைந்துகொண்டு, முழு தீவின் பொருளாதாரத்தையும் முடக்கினர்.

வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தாலும், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியுமாக முழு அரசியல் ஸ்தாபனத்தையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்களும் பீதியடைந்துள்ளன.

ஏற்கனவே தன்வசம் உள்ள பரந்தளவான சர்வாதிகார நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் விரிவுபடுத்தும் வழிமுறையாக, அவசரகால நிலையை உடனடியாக அமுல்படுத்துவதன் மூலமே, கடந்த வெள்ளியன்று நடந்த வேலைநிறுத்தத்திற்கு இராஜபக்ஷ பிரதிபலித்தார். அவசரகாலச் சட்டத்தின் கீழ், அவரால் பிடி ஆணை இன்றி ஆட்களைக் கது செய்ய இராணுவத்தையும் பொலிஸையும் அனுப்ப முடியும், அத்துடன் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் கூட்டங்களைத் தடை செய்யவும், ஊரடங்குச் சட்டம் மற்றும் ஊடகத் தணிக்கையை விதிக்கவும், அரசியல் கட்சிகளைத் தடை செய்யவும் முடியும்.

பாதுகாப்புப் படையினரின் அனைத்து விடுமுறைகளையும் இரத்து செய்து இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான முதல் நடவடிக்கையை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளார். 26 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாதப் போரின் போது கட்டமைக்கப்பட்ட இராணுவம், தெற்காசியாவிலேயே எண்ணிக்கையில் பெரியதும் கனதியாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதும் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், இராஜபக்ஷ சிவில் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் உயர் இராணுவ அதிகாரிகளை இணைத்துள்ளார்.

'சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளை' பேணுவதற்காக தான் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக இராஜபக்ஷ கூறுவது ஒரு அப்பட்டமான பொய்யாகும். அவரது ஆட்சியும் முதலாளித்துவ வர்க்கமும் ஏற்கனவே 'சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை' முற்றிலும் சீர்குலைத்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு சகிக்க முடியாத நிலைமைகளை உருவாக்கியுள்ளது.

இராஜபக்ஷ ஆட்சி இராணுவத்தை அணிதிரட்டும்போது, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை கலைக்கின்றன. கடந்த வெள்ளியன்று நடந்த வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தால் 'எதிர்பாராத வெற்றி' என்று கூறிக்கொண்ட தொழிற்சங்கங்கள், உண்மையில் அதனால் தெளிவாக அதிர்ச்சியடைந்துள்ளன. அரசாங்கத்துடனான மோதலுக்கு அஞ்சி, தொழிற்சங்கங்கள் அடுத்த புதன்கிழமை தொடங்கவிருந்த காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தை கைவிட்டதுடன், அதற்கு பதிலாக தினசரி மதிய உணவு நேர தொழிலாளர் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்யாவிட்டால் மே 17 அன்று தேசிய பாராளுமன்றத்திற்கு பேரணியாக சென்று தீர்வைக் கோரவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் தீர்வானது, அவர்கள் ஏற்கனவே கூறியது போல், பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகிய முதலாளித்துவ எதிர்க் கட்சிகளைக் கொண்டு ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாகும், பின்னர் முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதாகும்.

இது தொழிலாள வர்க்கத்திற்கு அல்ல, ஆளும் வர்க்கத்திற்கான தீர்வு ஆகும். அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளுமாக அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும், அவசர பிணை எடுப்பிற்கு ஈடாக சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான கட்டளைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளன. நிதியமைச்சர் அலி சப்ரி அறிவித்தது போல்: 'அது சிறப்பானதாகும் முன் ஆகவும் மோசமானதாக இருக்கும்... இன்னும் சில வருடங்கள் வலிமிகுந்ததாக இருக்கும்.'

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த வாரப் பொது வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கான தொழிற்சங்கங்களின் துரோக முடிவைக் கண்டிக்கிறது. இது, மூடிய கதவுகளுக்குப் பின்னால் எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சதியில் ஈடுபடுகின்ற அதே வேளை, ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கு இராணுவத்தை அணிதிரட்டுவதற்கான நேரத்தை மட்டுமே வழங்குகிறது. அவர் ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவியை வழங்க முன்வந்தார். பிரமாதாச அதை நிராகரித்த போதிலும், தனது கட்சி வெளியில் இருந்து இடைக்கால ஆட்சியை ஆதரிக்கும் என்று அறிவித்தார்.

தொழிற்சங்கங்களின் கைகளில் விடப்பட்டால், தொழிலாள வர்க்கம் காட்டிக்கொடுக்கப்படும். இதே தொழிற்சங்கங்கள்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுகாதாரப் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்தையும் விற்றுத்தள்ளின. சுகாதார தொழில் வல்லுனர்களின் கூட்டமைப்பு தலைவர்களான ரவி குமுதேஷ், சமன் ரத்னப்ரிய ஆகியோர், தங்கள் உறுப்பினர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுப்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காக அல்ல, மாறாக 'அவர்களது கோபத்தை நிர்வகிப்பதற்கே' அழைப்பு விடுத்ததாக வெளிப்படையாக அறிவிக்கின்றனர்.

இராஜபக்ஷவின் இராணுவ அடக்குமுறை அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கும் அதன் வர்க்க நலன்களுக்காக ஒரு அரசியல் வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கும், சுயாதீனமாக அதன் பலத்தை அணிதிரட்டுவதே தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அவசர பணியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களை உடனடியாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமா, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத்தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் நகரங்களிலும் அமைக்குமாறு வலியுறுத்துகிறது.

நாங்கள் ஏற்கனவே பெருதோட்ட மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் மத்தியில் செய்ததைப் போன்று, நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதில் உதவி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி தயாராக உள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அது மட்டும் போதாது.

* சோசலிச சமத்துவக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோருகிறது, அது இப்போது இராணுவ ஆதரவு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

*சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்யக் கோருகிறது. அவசர கால நிலையை அறிவிப்பதற்கும்; தொழிற்சங்க நடவடிக்கையை குற்றமாக்க பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை பிரகடனம் செய்யவும்; மற்றும் எதேச்சதிகாரமான கைதுகள் மற்றும் விசாரணையின்றி நீண்டகால காவலில் வைப்பதையும் அனுமதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கின்ற பொது பாதுகாப்புச் சட்டமும் இந்த அடக்குமுறைச் சட்டங்களில் அடங்கும்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு மத்தியில், ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்கள் மீது பாரிய புதிய சுமைகளை சுமத்துவதன் மூலம் அதன் இலாபங்களையும் செல்வத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சமூகத் தேவைகளுக்காகப் போராடுவதற்கு சோசலிச மற்றும் சர்வதேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் வேலைத்திட்டம் தேவை.

நடவடிக்கை குழுக்களின் அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்திற்கான அடிப்படையாக, பின்வரும் கோரிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது:

* மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்! வங்கிகள், பெருநிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் பிற முக்கிய பொருளாதார மையங்களை தேசியமயமாக்குங்கள்!

முதலாளித்துவ வர்க்கம் அதன் உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்களின் உரிமையைப் பயன்படுத்தி பிரமாண்டமான இலாபங்களைக் குவிக்கிறது. தொழிலாள வர்க்கம் அதன் அத்தியாவசியத் தேவைகளை பெறுவதற்கான ஒரே வழி, முதலாளிகளின் கைகளில் இருந்து அவற்றைக் கைப்பற்றுவதும், தற்போதைய துன்பங்களையும் துயரங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படும் வகையில் வளங்களின் இருப்பு பட்டியலை உருவாக்குவதுதான்.

* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகள் வேண்டாம்!

உலகளாவிய வங்கியாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என இராஜபக்ஷ அரசாங்கம் அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உழைக்கும் வர்க்கம் இந்தக் கடன்களைக் குவிக்கவில்லை, அதனால் அதை திருப்பிக் கொடுக்க கட்டாயப்படுத்தக் கூடாது. திருப்பிச் செலுத்தும் பணமானது, உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் உழைக்கும் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்..

* பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பெரும் செல்வத்தை கைப்பற்றுங்கள்!

உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின்படி, 2021 இல் இலங்கை சமூகத்தின் 10 வீதமான செல்வந்தர்கள் தீவின் மொத்த செல்வத்தில் பாரியளவான 63.8 வீதத்தை வைத்திருந்த அதேவேளை கீழ்மட்டத்தில் உள்ள 50 வீதமானவர்கள் வெறும் 4.3 வீதத்தையே பகிரந்துகொண்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் பரந்த செல்வம், சமூகத் தேவையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும்.

* ஏழை மற்றும் சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!

தங்களின் நசுக்குகின்ற பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து ஒரு வழியை காட்டுவதன் மூலம், தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கும், அதிக கடன், விலையுயர்ந்த உள்ளீடுகள் மற்றும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத விலைகளால் சுமையாக இருக்கும் சிறு வணிகங்களை நடத்துபவர்களுக்கும் ஒரு அணிதிரள்வுப் புள்ளியாக மாறும்.

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமையுடன் அனைவருக்கும் வேலை உத்தரவாதம்!

சர்வதேச நாணய நிதியத்தை ஏற்றுக்கொண்டால், வேலைகள் பாரியளவு வெட்டிச் சரிக்கப்படும். தொழிற்சங்கங்களின் கைகளில் விடப்பட்டால், பல ஆண்டுகளாக நடந்தது போலவே வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் பேரம் பேசி விற்றுத்ள்ளப்படும்.

* வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ற ஊதியம்!

பணவீக்கத்தின் விரைவான அதிகரிப்பு - ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய 30 சதவிகிதம் - ஏற்கனவே ஊதியங்களைத் விழுங்கி விட்டது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பற்றாக்குறை 46.6 சதவீதத்தை எட்டியது மற்றும் பல தொழிலாளர்களால் தங்கள் குடும்பங்களுக்கு போதுமான உணவுகளை வழங்க முடியவில்லை. கடந்த கால இழப்புகளை ஈடுசெய்ய உடனடியாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் மற்றும் வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப மாத அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

* இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவம் உள்ளிட்ட சமூகத் திட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்க வேண்டும், தேவைப்படுபவர்களுக்கு உயர்தர சேவைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்!

அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் பொதுக் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒதுக்கும் நிதியை வெட்டிக் குறைக்கும் அதே வேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளின் விரிவாக்கத்திற்கு பணத்தை வாரி இறைத்துள்ளன. அவை இப்போது வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்க தயாராகி வருகின்றன.

தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பானது, அரச அடக்குமுறையில் இருந்து தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கும், இராஜபக்ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்கும் மற்றும் அதி செல்வந்தர்களின் இலாபத்துக்கு அன்றி உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்க நடவடிக்கைக் குழுக்களை இணைக்க வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்தில் தங்கள் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் இணைந்தனர். இனவாத விரோதம் மற்றும் வெறுப்பு மூலம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் எதிர்க்கப்பட வேண்டும்.

இந்த அரசியல் போராட்டம் தவிர்க்க முடியாமல் எந்த வர்க்கம் ஆட்சி செய்யும் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒரு முதலாளித்துவ அரசாங்கம் - இராஜபக்ஷ ஆட்சியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு இடைக்கால அரசாங்கமாக இருந்தாலும் சரி, சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை திணிப்பதை நிறுத்தப் போவதில்லை, அத்துடன் எந்த எதிர்ப்பையும் முறியடிக்க இராணுவ அடக்குமுறையை கையில் எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று எச்சரிக்கிறோம்.

தீவு முழுவதும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதும் ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதும் கிராமப்புற மக்களின் ஆதரவை வென்று, சோசலிசக் கொள்கைகளுடன் சமூகத்தை மறுசீரமைப்பதற்கான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிபதற்கான அடித்தளத்தை உருவாக்கும்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தேசிய அளவில் தீர்வு கிடையாது. இது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் தீவிரமடைந்துள்ள, உலக முதலாளித்துவ நெருக்கடியின் வேகமாக ஆழமடைந்துவரும் கொந்தளிப்பின் ஒரு பகுதியாகும்.

உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இலங்கையில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு கூட்டுப் போராட்டத்திற்காக இந்தியாவிலும் தெற்காசியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தனது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்ப வேண்டும்.

நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம், இலங்கைத் தொழிலாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் இணைவதன் மூலம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் தங்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவது அவசியமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், எதிர்வரும் போராட்டங்களுக்குத் தேவையான வெகுஜனக் கட்சியாக அதைக் கட்டியெழுப்புமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க

Loading