வேலுப்பிள்ளை சரவணப்பெருமாள் (1948-2005)

நீண்டகால இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்ட் காலமானார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேலுப்பிள்ளை சரவணப்பெருமாள்

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினரான வேலுப்பிள்ளை சரவணப்பெருமாள் 2005 ஏப்பிரல் 14 அன்று அதிகாலையில் சுவாசப்பை கோளாறால் உயிரிழந்தார். அவர் தனது தோழர்களாலும் நண்பர்களாலும் பாப்பா என அன்புடன் அழைக்கப்பட்டார். 56 வயதில் அவரது அகாலமரணம் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். அவர் தனது மனைவி சரஸ்வதி மற்றும் 15 வயது மகன் பரணீதரன் உடனும் வாழ்ந்து வந்தார்.

ஏப்பிரல் 15 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இடம்பெற்ற சரவணப்பெருமாளின் ஈமச்சடங்கிற்கு சுமார் ஆயிரம் பேர் சமூகமளித்திருந்தமையானது அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட புகழுக்கு சான்றாகும். போரால் அழிவுக்குள்ளான நாட்டின் வடமாகாணத்தின் காரைநகர், ஊர்காவற்துறை, நெல்லியடி, வட்டுக்கோட்டை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்தும் அதேபோல் கொழும்பில் இருந்தும் சக ஊழியர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், குடும்பத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் குறுகிய காலத்தில் வருகைதந்திருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு அருகில் குருநகரில் அமைந்துள்ள அவரது வேலைத் தளமான அரசுக்கு சொந்தமான சீநோர் கூட்டுத்தாபனத்தில் இருந்து சுமார் 80 தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஈமச்சடங்கில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் எஸ். சந்திரசேகரம், சரவணப்பெருமாளின் வாழ்க்கை மற்றும் அரசியல் வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். 'அவர் கடினமான அரசியல் பிரச்சினைகளுக்கு குறுக்கு வழிகளை தேட முயற்சிக்கவில்லை. சரவணப்பெருமாள் தன்னை விஞ்ஞான சோசலிசத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருந்ததோடு ஒரு நீண்ட போராட்டத்திற்காக தயாராகியிருந்தார். அவர் தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தவும் அவர்களுக்கு சோசலிச அரசியலை வழங்கவும் விரும்பினார்,' என சந்திரசேகரன் தெரிவித்தார்.

சரவணப்பெருமாள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியுமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (RCL) 1975ல் இணைந்தார். அவர் எப்பொழுதும் தனது உறுதியான நம்பிக்கையை கைவிட்டிருக்காததோடு தனிப்பட்ட சூழ்நிலைகளால் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் ஆஸ்துமா, மார்புச் சளி போன்ற நோய்களால் ஏற்பட்ட பாதிப்புகள் இருந்த போதிலும் அடுத்து வந்த மூன்று தசாப்தங்கள் பூராவும் சர்வதேச சோசலிசத்தின் அடிப்படைகளுக்காக உறுதியாகப் போராடினார். வட இலங்கையின் பல தமிழர்களை போல் அவரும் நாட்டின் நீண்ட உள்நாட்டு போரின் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

சரவணப்பெருமாள் 1948 செப்டெம்பர் 7ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைநகரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் ஒப்பீட்டளவில் போதிய செல்வ வளமுள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். சரவணப்பெருமாள் மிகவும் சிறுவயதிலேயே தாயாரை இழந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியில் பயின்ற அவர் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்தில் சித்தியடைந்தார். ஒரு தொழிலை பெற்றுக்கொள்ளும் முயற்சியாக அவர் மெட்ரிகுலேஷன் வரவு-செலவு கணக்குமுறையை கடிதம் மூலம் கற்றதுடன் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார நிபுணராகவும் பயிற்சி பெற்றார்.

1970 களில் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அரசியல் கொந்தளிப்பு அதிகரித்து வந்த காலகட்டத்தில் சரவணப்பெருமாள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்குள் (RCL) ஈர்க்கப்பட்டார். லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) அதன் ஸ்தாபக ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளை கைவிட்டு 1964 இல் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர எடுத்த தீர்மானம் அப்போதைய அரசியல் சூழலில் செல்வாக்கு செலுத்தியிருந்தது.

தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை LSSP நிராகரித்தமையானது இனவாத அரசியலை அடிப்படையாக கொண்ட மத்தியதர வர்க்க தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சிக்கு நேரடியாக வழிவகுத்தது. தெற்கில் கிராமப்புற இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கெரில்லாவாதம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் பக்கம் திரும்பினர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோடிகள் உட்பட பலவிதமான தமிழ் பிரிவினைவாத அமைப்புக்களுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.

1970-1977 இரண்டாவது பண்டாரநாயக்க கூட்டரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பிரிவினைவாத உணர்வுக்கு மேலும் ஊக்கமளித்தன. அரசாங்க அமைச்சர் என்ற வகையில், சிங்களத்தை உத்தியோகபூர்வ அரசு மொழியாகவும் பெளத்தத்தை அரசு மதமாகவும் ஸ்தாபித்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு LSSP தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா பொறுப்பாளியாகும். தமிழ் இளைஞர்கள் விசேடமாக கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளில் வேரூன்றியிருந்த பாகுபாடுகளுக்கு எதிராக பிரதிபலித்தனர்.

இனவாத எழுச்சியின் அழுத்தங்கள் இருந்தபோதிலும், சரவணப்பெருமாள் தொழிலாளர்களை பிரிப்பதைவிட அவர்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட வர்க்க அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டார். LSSP பற்றிய எளிமையான தீவிரவாத கண்டனங்களை நிராகரித்த அவர், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்குள் ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களில் தூரதிருஷ்டி மிக்க ஒருவராக விளங்கினார். 1968ல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், LSSP இன் காட்டிக்கொடுப்பு, மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாதப் போக்கிற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு) போராட்டத்தை LSSP நிராகரித்ததை அடுத்து, தொடர்ந்த சீரழிவின் விளைவே என்பதை நன்குணர்ந்திருந்தது.

சரவணப்பெருமாள் 1970களின் முற்பகுதியில் ஒரு வானொலி திருத்தும் கடையில் வேலை செய்தார். அப்போது RCL இன் தமிழ் மொழி பத்திரிகையான தொழிலாளர் பாதையின் வாசகரான அவர் இறுதியாக 1975ல் கட்சியின் அங்கத்தவரானார். RCL இல் சேர்ந்தது ஏன் என அவரைக் கேட்டால், தமிழ் இனவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஒரு விஞ்ஞான மாணவன் என்ற வகையில் மார்க்சிச தத்துவமான இயங்கியல் சடவாதம் ஆகிய இரண்டு விடயங்களால் விசேடமாக ஈர்க்கப்பட்டதாக அவர் விளக்குவார்:

வானொலி திருத்தும் வேலைக்கு மேலதிகமாக அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரந்தனில் தனது குடும்பத்துக்கு சொந்தமான வயல் நிலத்திலும் சரவணபெருமாள் உழைத்தார். அவர் RCL இல் இணைய எடுத்த முடிவை அவரது பெற்றோர்கள் ஆரம்பத்தில் எதிர்த்த போதிலும், பின்னர் அவர்கள் கட்சியின் வேலைத் திட்டத்தை பாராட்டியதோடு தமது மகனின் பங்களிப்பிற்கும் மதிப்பளித்தனர். பரந்தனில் அவர் வேலை செய்துகொண்டிருந்த போது அங்கு ஒரு உள்ளூர் கட்சிக் கிளை ஒன்றையும் கட்டியெழுப்பினார்.

சரவணப்பெருமாள் 1977ல் காரைநகரில் உள்ள சீநோர் தொழிற்சாலையில் மின்சார நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். மீன்பிடி வலைகளையும் பைபர்கிளாஸ் தோணிகளையும் உற்பத்தி செய்த இந்த தொழிற்சாலை வட இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க வேலைத் தளமாக இருந்தது. RCL உம் அதன் தொழிலாளர் பாதை பத்திரிகையும் சீநோர் தொழிலாளர்கள் மத்தியில் பிரசித்திபெற்றிருந்தன. அவர்கள் சரவணப்பெருமாளையும் RCL அங்கத்தவர்களையும் தொழில் மற்றும் நிலைமைகளை பாதுகாக்கும் தலைமைத்துவமாக கண்டனர்.

அதே ஆண்டில் அரசியல் நிலைமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) ஸ்தாபிக்கப்பட்டு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனித் தமிழ் அரசுக்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அதன் பிரிவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளாக மாறியவர்கள் உட்பட பல இளஞர் குழுக்கள் செயற்பட்டன.

சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழ் இனவாதம் ஆகிய இரண்டுக்கும் எதிராகப் போராடும் இரட்டை அரசியல் பணியை RCL கொண்டிருந்தது. 1977 பூராவும் சரவணப்பெருமாளும் ஏனைய RCL அங்கத்தவர்களும் TULF இன் முன்நோக்கிற்கு எதிராக பல பிரச்சாரங்களை ஒழுங்குசெய்தனர். சோசலிச முன்நோக்கில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்புவிடுப்பதன் அடிப்படையில் வட்டுக்கோட்டை தொகுதியில் ஒரு வேட்பாளரை கட்சி நிறுத்தியது. பல சந்தர்ப்பங்களில் TULF குண்டர்களின் அடிதடித் தாக்குதல்களில் இருந்து சரவணபெருமாள் மயிரிழையில் தப்பினார்.

தெற்கில் RCL ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) பிற்போக்குக் கொள்கைகளுக்கு எதிராக போராடியது. பண்டாரநாயக்கா அரசாங்கத்தை தோல்வியடைய செய்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, உலகில் திறந்த பொருளாதார மறுசீரமைப்பு கொள்கைகளை தீவிரமாக ஊக்குவித்த முதலாவது தலைவர்களில் ஒருவராவார். வளர்ச்சிகண்டுவந்த விரோதம் மற்றும் அதிருப்தியை திசைதிருப்ப வேண்டுமென்றே தமிழர்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிட்டார். இது 1983ல் உள்நாட்டு போரின் வெடிப்புக்கு நேரடியாக வழிவகுத்தது.

அவரது பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு மத்தியில் 1978 ஜூனில் சரவணபெருமாள் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி சரஸ்வதி கட்சி அங்கத்தவராகாத போதிலும் சரவணபெருமாளுக்கும் மற்றும் RCL க்கும் மிகவும் ஆதரவானவராக இருந்தார். 'இது நேர்மையான மனிதர்களின் கட்சி. அது நடக்கப் போகிறது என்ன என்பதையிட்டு தெளிவான ஆய்வை வழங்குகிறது,' என அவர் அடுத்தவர்களுக்கு விளக்குவார். அவர்களுடைய வீடு எப்பொழுதும் கட்சி அங்கத்தவர்களுக்காக திறந்திருக்கும்.

உள்நாட்டுப் போர்

சரவணப்பெருமாள் மற்றும் சரஸ்வதியின் அனுபவங்கள், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் உள்ள பல தமிழ் மக்களின் அனுபவங்களாகும். அவர்கள் இலங்கை ஆயுதப் படைகளால் 'எதிரிகளாக' கருதப்பட்டனர். விடுதலைப் புலிகளின் அரசியல் முன்நோக்கை RCL எதிர்த்த அதே சமயம், தமிழர் விரோத பாகுபாட்டைப் பாதுகாப்பதற்கான ஒரு இனவாதப் போராக இந்தப் போரைக் கண்டனம் செய்தது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றுமாறு கட்சி கோரியது. RCL உறுப்பினர்கள் இதன் விளைவாக விடுதலைப் புலிகளிடமிருந்தும் இராணுவத்திடமிருந்தும் அச்சுறுத்தல்களையும் தொந்தரவுகளையும் எதிர்கொண்டனர்.

1987 ஜூலையில், போருக்கு அரசியல் தீர்வுகாணுவதன் பேரில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த உடன்பாடு, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய 'அமைதிகாக்கும்' படை நுழைவதற்கு உதவியது. இந்த உடன்படிக்கையை ஆரம்பம் முதலே தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து எதிர்த்த ஒரே கட்சி RCL மட்டுமேயாகும். இந்த ஒப்பந்தம் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டத்தை நசுக்குவதை இலக்காகக் கொண்டது என RCL எச்சரித்தது.

விடுதலைப் புலிகள் உடன்படிக்கையை ஆதரித்த அதேவேளை, RCL அதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்ததோடு போருக்கு தமது சொந்த வர்க்கத் தீர்வை காண்பதற்காக போராடுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது. RCL தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான அதன் முன்நோக்கை அபிவிருத்தி செய்வதன் பேரில் 1987 ஆகஸ்ட்டில் யாழ்ப்பாணத்தில் ஒரு தொடர்ச்சியான பகிரங்கக் கூட்டங்களை நடத்தியது. சரணவணப்பெருமாள் நல்லூர் கலாச்சார மண்டபத்தில் நடந்த பிரதான கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்தக் கூட்டம் உள்ளூர் தமிழ் செய்தித்தாள்களில் முதன்மையாக அறிக்கை செய்யப்பட்டிருந்தது.

சற்றே இரண்டு மாதங்களின் பின்னர், RCL இன் ஆய்வுகள் சரியானவை என்பது துன்பகரமாக நிரூபிக்கப்பட்டது. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடுத்த மிலேச்ச தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். வடக்கு கிழக்கில் இந்திய படைகளின் இருப்பு, தெற்கில் சிங்கள வெகுஜனங்கள் மீது கட்டவிழ்த்துவிட இலங்கை இராணுவத்தை விடுவித்தது. உடன்படிக்கைக்கு எதிரான JVP இன் வன்முறைப் பேரினவாத பிரச்சாரத்தை சாக்குப்போக்காக பயன்படுத்திக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம், 1989ல் வறுமைக்குள் தள்ளப்பட்டிருந்த கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான கொடூரமான அடக்குமுறை பிரச்சாரத்தை முன்னெடுக்க ஒரு சந்தர்ப்பமாக பற்றிக்கொண்டது. ஒரு மதிப்பீட்டின்படி இதில் 60,000 உயிர்கள் பலியாகியுள்ளன.

உடன்படிக்கை முறிந்து 1990ல் இந்திய இராணுவம் வெளியேறியதோடு நாடு மீண்டும் உள்நாட்டு போருக்குள் விழுந்தது. இராணுவம் சீநோரின் காரைநகர் கட்டிடத்தை ஆக்கிரமித்ததோடு, அது இன்னமும் கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மொத்தத்தில் சரவணப்பெருமாளின் வீடு உட்பட காரைநகரில் எல்லா வீடுகளும் மோதலில் அழிந்துபோயின. பக்கத்து வீட்டில் குடியிருந்த சரவணபெருமாளின் மாமாவும் மாமியும் ஒரு மோதலில் தீயில் எரிந்து உயிரிழந்தனர். இப்போது இந்தப் பிரதேசம் பற்றைகளாலும் புதர்களாலும் மூடப்பட்டுள்ளன.

இந்த கடினமான சூழ்நிலையிலும், சரவணபெருமாளும் மற்றும் சீநோரில் பணியாற்றிய எஸ். சந்திரசேகரனும் தொழில்களைப் பாதுகாப்பதற்காக ஒரு முக்கியமான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். 1991ல், தொழில் படையை 800ல் இருந்து வெறும் 100 ஆகக் குறைத்த பின்னர், குருநகரில் இயங்கிவந்த எஞ்சியிருந்த கிளை உட்பட யாழ்ப்பாணக் கூடாநாடு பூராவும் கம்பனியை மூடப் போவதாக சீநோர் நிர்வாகம் அறிவித்தது. இலங்கை வர்த்தக, தொழிற்துறை மற்றும் பொது தொழிலாளர் சங்கமும் (CMU) இலங்கை பொறியியல் தொழிலாளர் சங்கமும் அரசாங்கத்தின் திட்டத்தையும் அதன் 'தாமாக முன்வரும்' ஓய்வூதிய திட்டத்தையும் ஆதரித்தன.

சீநோர் CMU கிளையில் பதவிவகித்த சரவணப்பெருமாளும் சந்திரசேகரனும் ஏனைய 24 தொழிலாளர்களுடன் சேர்ந்து இந்த திட்டத்தை எதிர்த்தனர். அவர்களுடைய பிரச்சாரம் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமன்றி பாலா தம்பு தலைமையிலான CMU அதிகாரத்துவத்திற்கும் எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. முன்னாள் LSSP தலைவரான தம்பு, 1964ல் LSSP இன் காட்டிக்கொடுப்பை எதிர்த்த போதிலும் அதன் ஆழமான அரசியல் வேர்களை ஆராயத் தவறிவிட்டார். அவர் போர்க்குணமிக்க வாய்வீச்சுக்களாலும் மற்றும் தொழிற் சங்கத்திற்குள் அரசியல் விவாதத்தை கோரும் எவரையும், விசேடமாக உண்மையான சோசலிஸ்டுகளையும் வெளிப்படையாக கண்டனம் செய்வதன் மூலமும் தனது சந்தர்ப்பவாத அரசியலை மூடிமறைத்துக்கொண்டார்.

சரவணப்பெருமாளும் சந்திரசேகரமும் ஏற்பாடு செய்த சீநோர் பிரதிநிதிகள் குழுவொன்று CMU தலைமைத்துவத்தை எதிர்க்கவும் தங்களது தொழில்களை தொழிற்சங்கம் பாதுகாக்க வேண்டும் எனக் கோருவதற்காகவும் கொழும்புக்கு வந்தது. அந்தத் தொழிலாளர்களுக்கு அது ஒரு கசப்பான படிப்பினையாக இருந்தது. CMU தலைமைத்துவம் தொழில்களுக்காக போராட மறுத்தது மட்டுமல்லாமல், நடந்துகொண்டிருந்த போராட்டத்தை கீழறுப்பதை குறிக்கோளாகக் கொண்ட ஒரு கொடுக்கல் வாங்கல்களிலும் சேர்ந்துகொண்டது. 26 தொழிலாளர்களையும் விலக்க முடியாதிருந்த நிர்வாகம், CMU தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர்களுக்கு அரைச் சம்பளத்தில் இழுத்தடித்தது.

சமாதான வாக்குறுதியளித்த சந்திரிகா குமாரதுங்க 1994 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால் 1995ல் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் போரை உக்கிரமாக்கியது. கடுமையான இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில் பத்தாயிரக்கணக்கான மக்களுடன் சரவணபெருமாளும் ஏனைய RCL அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறத் தள்ளப்பட்டனர். 1998 இல் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னதாக அவரும் அவரது குடும்பமும் பரந்தன் கிளிநொச்சி உட்பட பல இடங்களில் நெருக்கடியான நிலைமைகளில் அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.

1998ல் கட்சியின் சோசலிச முன்நோக்கிற்காக பிரச்சாரம் செய்தமைக்காக, தனது கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரில் சோ.ச.க அங்கத்தவர்கள் நால்வரை விடுதலைப் புலிகள் கைதுசெய்தனர். தெற்கிலிருந்து 70 கிலோமீட்டரில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகர ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்ததால் மட்டுமே சரவணப்பெருமாள் தப்பினார். இந்தத் தடுத்துவைப்பு பற்றிய செய்தியால் சீற்றமடைந்த சரவணப்பெருமாள், சோ.ச.க மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்த சர்வதேச பிரச்சாரத்தில் திறமையுடன் பங்களிப்பு செய்தார். இறுதியாக 1998 செப்டெம்பரில் சோ.ச.க உறுப்பினர்கள் விடுதலையானார்கள்.

1999ல் தொழில்களுக்காகவும் மற்றும் சீனோரை மீளத் திறப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருந்த பிரச்சாரங்களுக்கு மத்தியில் கம்பனியின் குருநகர் கிளையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது. சரவணப்பெருமாள் 2000ல் முதலாவதாக மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். மின்சார நிபுணர் என்ற வகையில் இயந்திரங்களை திருத்துவதற்கு அவர் தேவைப்பட்டார். RCL முன்னெடுத்த பிரச்சாரத்தின் காரணமாக அவர் CMU கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன் இறக்கும்வரை அவர் பதவியில் இருந்தார்.

சரவணப்பெருமாள் தனது அரசியல் துணிவிற்காக மட்டுமன்றி மின்சார நிபுணர் என்ற வகையில் அவரது திறமைகளுக்காகவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புகழ்பெற்றிருந்தார். 1990களின் முற்பகுதியில் காலி தெற்குத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வெளிநாட்டு கப்பலில் முக்கியமான மின்சார உபகரணத்தை திருத்துவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்ஸ்ட்ரூமென்ட் மின்சார நிபுணராக (Instrument Electrician) கெளரவிக்கப்பட்டிருந்தார். அவரது அறிவு மற்றும் திறமையினூடாகவே சீனோரில் உள்ள இயந்திரங்கள் மீண்டும் உயிர்பெற்றன.

சரவணப்பெருமாள் சாதாரணமானவராகவும் பெருந்தன்மையுள்ளவராகவும் வாழ்ந்து வந்தார். அவர் தனது மாத சம்பளத்தை பெற்றவுடன் வீடு திரும்பும் வழியில் வறுமையில் வாழுவதாக தனக்கு தெரிந்தவர்களுக்கு எப்பொழுதும் பணம் கொடுத்து உதவுவதை சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் நினைவுகூர்ந்தனர். காரைநகரில் அவரது வீடு அழிந்துபோன நிலையில் அவரும் அவரது குடும்பமும் யாழ்ப்பாணத்தில் ஒரு வாடகை வீட்டிலேயே வசித்து வந்தனர்.

கடந்த அக்டோபரில், சோ.ச.க வின் சகோதரக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான பில்வான் ஓக்கென் உரையாற்றிய பகிரங்க கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சரவணப்பெருமாள் ஏனைய சோ.ச.க அங்கத்தவர்களுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணமானார். இந்தக் கூட்டம் சரவணப்பெருமாள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அந்த விரிவுரை அமெரிக்காவிலான அரசியல் நிலைமையையும் அமெரிக்க மற்றும் இலங்கை தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பொது பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்வதற்கு உதவியாக இருந்ததாக அவர் ஏனைய தோழர்களிடம் ஆர்வத்துடன் விளக்கினார்.

சரவணப்பெருமாள் கடந்த பெப்பிரவரியில் கடைசியாக பங்குபற்றியிருந்த சோ.ச.க கிளைக் கூட்டத்தில், 1971ல் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின் வீழ்ச்சியைப் பற்றி ஒரு அறிக்கையை வழங்கினார். இந்த ஒப்பந்தத்தின் முடிவு, போருக்கு பிந்தைய உடன்படிக்கைகளின் பொறிவின் ஆரம்பத்தையும் அமெரிக்க இராணுவவாதத்தின் தோற்றத்தையும் குறித்தது. அவர் கட்சி கூட்டங்களில் நீண்ட பங்களிப்பு செய்வதில்லை, ஆனால் அவர் உறுதியாக பற்றிக்கொண்ட அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இருந்து புதிய உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பொறுமையாக பயிற்றுவிக்க எப்பொழுதும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். கட்சி உறுப்பினர்களும் அதேபோல் அவர் ஆழமாக செல்வாக்குச் செலுத்திவந்த குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் வட்டாரமும் அவரை இழந்துவிட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்திற்கான இந்த தைரியமான போராளியை கௌரவிக்கிறது. அவருடைய வாழ்க்கை, கட்சியின் பாரம்பரியத்தின் இன்றியமையாத பாகமாக உள்ளது.

Loading