மே தினம் 2022: வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் மத்தியில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலில் துருக்கியின் பங்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் உலாஸ் அட்ரெசி வழங்கிய அறிக்கை இதுவாகும். அட்ரெசி துருக்கியில் உள்ள சோசலிஸ்ட் இசிட்லிக் க்ருபு என அழைக்கப்படும் சோசலிச சமத்துவக் குழுவின் தலைவர். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

Ulaş Ateşçi, leading member of the Sosyalist Eşitlik (Socialist Equality Group) in Turkey

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட துருக்கி அமைப்பான சோசலிச சமத்துவக் குழுவின் புரட்சிகர வாழ்த்துக்கள்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உக்ரேனிய மண்ணில் நடந்து வரும் போருக்கு மத்தியில், அனைத்து மனித இனமும் அணுவாயுத உலகப் போரால் அச்சுறுத்தப்படுகையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் 2022 ஆம் ஆண்டு மேதினத்தை வரவேற்கிறது. இந்த உடனடி ஆபத்துடன் தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோயும் உள்ளது. பாரிய தொற்று மற்றும் இறப்புக்கான ஒரு உத்தியோகபூர்வ கொள்கையின் விளைவாக உலகளவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களை இந்நோய் கொன்றுள்ளது.

துருக்கியில், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான கிட்டத்தட்ட அனைத்து நடவடிக்கைகளும் நீக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம் உள்ளிடங்களில் முகக்கவசங்களை அணிவதற்கான கடமைப்பாட்டை முற்றிலுமாக நீக்கியுள்ளது.

எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களால் உந்தப்பட்ட இந்தக் குற்றவியல் கொள்கையின் விளைவாக துருக்கியில் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை 100,000 இனை நெருங்குகிறது. இது முதலாளித்துவ எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. உண்மையில், சோசலிச சமத்துவக் குழுதான் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மரணங்களை நிறுத்துவதற்கும் உலகளாவிய பூச்சிய கோவிட் கொள்கைக்காக தொழிலாள வர்க்கத்தை போராட அழைக்கும் துருக்கியில் உள்ள ஒரே அரசியல் போக்கு ஆகும்.

தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவியல் பூர்வமற்ற கூற்றுக்கள் தெரிவிக்கின்றபோதிலும், இவற்றில் 60,000 இறப்புகள் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 17,000 பேர்கள், தடுக்கப்படக்கூடிய இந்த நோயால் இறந்துள்ளனர். மேலும், துருக்கிய மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் செயற்குழுவின் உறுப்பினரான Güçlü Yaman இன் கணக்கீடுகளின்படி, தொற்றுநோய்களின் போது துருக்கியில் அதீத இறப்புகளின் எண்ணிக்கை 281,000 ஐ தாண்டியுள்ளது.

மறுபுறம், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் அருகில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள துருக்கி, அதன் இராணுவ-மூலோபாய உறவுகள் மற்றும் அதன் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் போரின் மையத்தில் உள்ளது. ஒரு நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, உக்ரேனை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் ஆதரிக்கிறது. அதேநேரம், ரஷ்யாவுடன் முக்கியமான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளையும் அது கொண்டுள்ளது. அங்காராவின் நிலை காரணமாக ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மோதலின் தீவிரம் இருந்தபோதிலும், கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே மத்தியஸ்தத்தை நாடத் தூண்டினாலும், துருக்கி இறுதியில் நேட்டோ ஏகாதிபத்தியத்தின் ஒரு புறக்காவல் நிலையமாக தொடர்ந்து செயல்படுகிறது.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பால்கன், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அதன் நட்பு நாடுகளின் ஆட்சி மாற்றத்திற்கான தலையீடுகள் மற்றும் போர்களில் துருக்கிய முதலாளித்துவம் உடந்தையாக இருந்து வருகிறது. உக்ரேன் போர், 30 ஆண்டுகால ஏகாதிபத்திய போர் உந்துதலினதும், நேட்டோவின் இடைவிடாத கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் விளைபொருளாகும். ஒரு கருத்துக்கணிப்பின்படி, கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் உக்ரேனில் போரை எதிர்ப்பதுடன், துருக்கி நடுநிலைமையாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக மாற்றிய இந்த ஏகாதிபத்திய கொள்ளைப் போர்கள், உலக சோசலிச வலைத் தளத்தால் விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட பல போர்க்குற்றங்களால் குறிக்கப்பட்டுள்ளன. யூகோஸ்லாவியாவிலிருந்து ஈராக் வரை, ஆப்கானிஸ்தானிலிருந்து லிபியா, சிரியா மற்றும் யேமன் வரை நீண்ட யுத்தத்துக்கு, துருக்கிய அரசின் நேரடி அல்லது மறைமுக ஆதரவை அவர்கள் பெற்றனர்.

இந்தக் குற்றங்களுடன் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் தொடர்ந்து துன்புறுத்துவதும் சேர்க்கப்பட வேண்டும். அங்காரா பாசாங்குத்தனமாக இஸ்ரேலுடனான உறவுகளின் போக்கின்படி அவ்வப்போது இதை கண்டிக்கிறது. ஆனால் குர்திஷ் மக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் எதிரான ஜனநாயக விரோத அழுத்தத்தை அது தொடர்கிறது.

இது, ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பைக் கண்டித்து, அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் கைகளில் விளையாடுவதுடன், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் உதவுகிறது. எர்டோகன் அரசாங்கம், சிரியா மற்றும் ஈராக்கில் சட்டவிரோத இராணுவப் படையெடுப்பை மேற்கொள்வதோடு, இந்த நாடுகளில் நிரந்தர இராணுவ இருப்பையும் பராமரிக்கிறது. இந்தக் கொள்கை நேட்டோ ஆதரவு துருக்கிய முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

ஈராக்கிலுள்ள குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் எல்லையில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) படைகளுக்கு எதிராக ஏப்ரல் நடுப்பகுதியில் துருக்கியால் தொடங்கப்பட்ட கடைசி இராணுவ நடவடிக்கை, அடிப்படையில் இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, ரஷ்யா மீது ஐரோப்பா எரிசக்திக்கு சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஆதரவுடைய திட்டங்களின் ஒரு பகுதியாக ஈராக்கிய எரிவாயுவை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்வதற்கு வழி வகுக்க வேண்டும். இரண்டாவதாக, உள்நாட்டில் கட்டுப்படுத்தமுடியாததாகிவிட்ட வர்க்கப் பதட்டங்களை ஒடுக்கவும் திசைதிருப்பவும் போரைப் பயன்படுத்துவதும் ஆகும்.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து துருக்கி உட்பட அனைத்து நேட்டோ படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் குழு பரிந்துரைக்கிறது. குர்திஷ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

ஒரு உலகளாவிய நிகழ்வான உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு, உக்ரேனில் போர் தொடங்குவதற்கும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கும் முன்பே துருக்கியில் சாதனை அளவை எட்டியது. பல தசாப்தங்களாக நிதி மூலதனத்தின் நலனுக்காகப் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட இந்த நிலைமை, தொற்றுநோயால் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட சீர்குலைவுடன் சேர்ந்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளை சகிக்க முடியாததாக ஆக்கியுள்ளது. அதே காலகட்டத்தில், துருக்கிய அரசாங்கம் முன்னோடியில்லாதவாறு தொழிலாள வர்க்க்கத்திடமிருந்து முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு செல்வம் மறுபங்கீடு செய்யப்படுவதை மேற்பார்வையிட்டது.

சுயாதீன பணவீக்க ஆராய்ச்சி குழுவின் நம்பகமான அறிக்கையின்படி உத்தியோகபூர்வ வருடாந்திர பணவீக்கம் மார்ச் மாதத்தில் 61 சதவீதத்தை எட்டியபோது, உண்மையான பணவீக்க விகிதம் 142 சதவீதமாக உயர்ந்தது. துருக்கி தனது கோதுமையில் 80 சதவீதத்தை உக்ரேன் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதால், போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் துருக்கியை உலகளாவிய உணவு நெருக்கடியின் மையமாக மாற்றியுள்ளன.

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெகுஜன எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் சூடானில் இருந்து கென்யாவிற்கும், ஈரானில் இருந்து கிரீஸிற்கும் பரவுகின்றன. 2022 ஜனவரி மற்றும் பெப்ரவரியில் துருக்கியை அடித்துச்சென்ற தன்னில்பான வேலைநிறுத்த அலையானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியடைந்துவரும் இயக்கத்தின் முன்னோடியாகும்.

தொழிலாளர் ஆய்வுக் குழுவால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 2022 இன் முதல் இரண்டு மாதங்களில் குறைந்தது 106 தன்னில்பான வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. முந்தைய ஐந்து ஆண்டுகளில் தன்னில்பான வேலைநிறுத்தங்களின் சராசரி ஆண்டு எண்ணிக்கை 97 மட்டுமே. இது தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க இயக்கம் தீவிரமடைந்து வருவதையும் அதிகரிப்பதையும் காட்டுகின்றது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக நாடு தழுவிய வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மே மாதத்தில் பரந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.

மிக முக்கியமாக, இந்த தொழிலாள வர்க்க இயக்கம், உலகம் முழுவதும் நடப்பது போல், தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுதந்திரமாகவும், அதை மீறியும் வளர்ந்து வருகிறது. தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்து வரும் இயக்கத்தின் கழுத்தை நெரிக்க ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமான ஒத்துழைத்து இயங்குகின்றன. DİSK போன்ற சில தொழிற்சங்கங்கள் போலி-இடதுசாரி சக்திகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களுக்கு எதிராக, சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் ஒரு பகுதியாக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க சோசலிச சமத்துவக் குழு அழைப்பு விடுக்கிறது.

பெருகிவரும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் முதலாளித்துவம் பயன்படுத்திய பிற்போக்குக் கருவிகளில் ஒன்று அகதிகளுக்கு எதிரான பிரச்சாரமாகும். பிராந்தியத்தில், குறிப்பாக சிரியாவில் ஏகாதிபத்திய போர்கள் காரணமாக பாதிக்கப்பட்டு தங்கள் நாடுகளை விட்டு வெளியேறியிருந்த அகதிகள், பெருகிய முறையில் முழு அரசியல் ஸ்தாபனத்தின் இலக்காக மாறியுள்ளனர்.

போலி-இடதுகளால் ஆதரிக்கப்படும் முதலாளித்துவ எதிர்க் கட்சிகளால் தொடங்கப்பட்ட 'அகதிகளை அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்' என்ற அழைப்புகளை சோசலிச சமத்துவக் குழு கடுமையாக நிராகரிக்கிறது. அகதிகளைப் பாதுகாக்காமல் மற்றும் தேசிய பேரினவாதத்தை நிராகரிக்காமல் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட முடியாது. அனைத்து அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் முழு குடியுரிமை உரிமைகளுடன் துருக்கி உட்பட அவர்கள் விரும்பும் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பளிக்க வேண்டும்.

Gezi Park வழக்கில் பிரதிவாதிகள் மீது அரசு தொடுக்கும் வழக்கு, இறுதியில் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரக் கொள்கைகளுக்கு எதிரான Gezi Park எதிர்ப்புக்களில் 2013 இல் மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்- இது எர்டோகன் அரசாங்கத்தை ஆழமாக உலுக்கியது. போராட்டங்களில் ஈடுபட்ட ஒரு டஜன் முக்கிய பிரமுகர்கள் மீது எர்டோகன் வழக்குத் தொடர்ந்தார். மேலும் 2020 இல் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களின் மீதான வழக்கை மீண்டும் தொடங்கி, இறுதியில் கடந்த திங்கட்கிழமை பிரதிவாதிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கினார்.

இன்று, போலி-இடதுகள் உட்பட முழு அரசியல் ஸ்தாபனமும், தொழிலாள வர்க்கத்திற்குள் பெருகும் கோபத்தையும் எதிர்ப்பும் ஒரு வெகுஜன புரட்சிகர இயக்கமாக வெடிப்பதைத் தடுப்பதில் ஒன்றுபட்டுள்ளது. பெருமளவில் மதிப்பிழந்த எர்டோகன் அரசாங்கம் போர் மற்றும் அடக்குமுறைக் கொள்கைகளின் அடிப்படையில் உயிர்வாழ முற்படுகையில், முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை வரவிருக்கும் தேர்தலுக்குள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.

ஏகாதிபத்தியத்துடன் ஆழமாக பிணைந்துள்ள துருக்கிய முதலாளித்துவத்தின் ஸ்தாபனக் கட்சிகள், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனற்றவை என்று சோசலிச சமத்துவக் குழு வலியுறுத்துகிறது.

கொடிய தொற்றுநோய்க் கொள்கை, ஏகாதிபத்தியப் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டம் என்பது தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்காகவும், முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராகவும் போராடுவதாகும். உலகில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரே அரசியல் போக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதில் சேருமாறு எங்கள் உரையை கேட்போர் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

Loading