மே தினம் 2022: ஆசிய-பசிபிக் பகுதியில் வர்க்கப் போராட்டம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் டாம் பீட்டர்ஸ் வழங்கிய அறிக்கை இதுவாகும். பீட்டர்ஸ் நியூசிலாந்தில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் ஆவார். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Tom Peters, leading member of the Socialist Equality Group in New Zealand

நியூசிலாந்தில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் சார்பாக, தென் பசிபிக் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் உட்பட, இந்த இணைய தளம் மூலமான மேதின பேரணியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தினால் முன்னெடுக்கப்படும் சீனாவிற்கு எதிராக முன்னோடியில்லாத வகையில் இராணுவத்தயாரிப்பின் மத்தியில் பசிபிக் சிக்கியுள்ளது. இந்த வறிய பிராந்தியம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் தொற்றுநோயால் பெருகிவரும் இறப்பினையும எதிர்கொள்கின்றனர்.

டொங்காவில், ஜனவரியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினாலும் சுனாமியினாலும் கிராமங்கள் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டு மற்றும் உணவுப் பயிர்களை அழித்து, நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டது.

இந்த பேரழிவுடன் இப்போது கோவிட்டின் தாக்கமும் இணைந்துள்ளது. இந்நோய் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து உதவிகளை வழங்க அனுப்பப்பட்ட இராணுவக் கப்பல்களில் ஒன்றின் மூலம் டொங்காவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். இதுவரை குறைந்தது 11 பேர் இதனால் இறந்துள்ளனர்.

முன்பு தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்காத சமோவா, வனுவாட்டு மற்றும் கிரிபாட்டி ஆகியவையும் இந்த ஆண்டு முதல் கோவிட் இறப்புகளைப் பதிவு செய்தன.

கடந்த ஆண்டு, பப்புவா நியூ கினியா, பிஜி மற்றும் பிரெஞ்சு பொலினேசியாவில் கோவிட் பரவியபோது, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன மற்றும் சவக்கிடங்குகள் முற்றாக நிரப்பப்பட்டன.

சிறிய சுகாதார உள்கட்டமைப்பு, குறைந்த தடுப்பூசி விகிதங்கள் மற்றும் நீரிழிவு போன்ற பரவலான வறுமை தொடர்பான நோய்கள் உள்ள நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் இப்போது ஆபத்தில் உள்ளன.

இந்த தடுக்கக்கூடிய மரணங்கள் நிகழ்ந்ததற்கான பொறுப்பு முதன்மையாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிடம் உள்ளது. அவை பசிபிக் பகுதியை தங்கள் காலனித்துவ 'கொல்லைப்புறமாக' கருதுகின்றன. கான்பெர்ராவும் வெலிங்டனும் அப்பகுதியில் சீனச் செல்வாக்கை அச்சுறுத்தலாகக் கண்டித்து இராணுவச் செலவினங்களில் பெரும் அதிகரிப்பால் அதனை எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகையில் அதே அரசாங்கங்கள் கோவிட்டைத் தடுக்கும் முயற்சியின் எந்தப் பாசாங்குத்தனத்தையும் கைவிட்டன.

நமது இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஒரு முற்றாக நிதியுதவியளிக்கப்பட்ட, விஞ்ஞானரீதியான உலக ஒழிப்பு மூலோபாயத்திற்காக மட்டுமே போராடுகிறது. இதனை ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் எதிர்க்கிறது.

கடந்த அக்டோபரில், நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சி-பசுமைக் கூட்டணி அரசாங்கம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அதன் பூச்சிய கோவிட் கொள்கையைக் கைவிட்டது. இந்த முடிவு நோயை அழிப்பது அடையக்கூடியது என்பதற்கு நிரூபணமாக நியூசிலாந்தை பார்த்த உலகெங்கிலும் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பூட்டுதல்கள் மற்றும் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் இலாபம் ஈட்டுவதற்கு சகிக்க முடியாத தடையாக கருதும் பெருவணிகத்தின் வற்புறுத்தலின் பேரில் ஜசிந்தா ஆர்டெர்னின் அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் ஏற்பட்டது. இது முற்றிலும் ஜனநாயக விரோத முடிவாகும். நோயை அழித்தலை வலுவாக ஆதரித்த தொழிலாளர்களிடம் இக்கொள்கையை விட்டுவிட்டு பாரிய நோய்த்தொற்றை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என்று ஒருபோதும் கேட்கப்படவில்லை.

ஓமிக்ரான் 'பாதிப்புகுறைந்தது' மற்றும் தடுப்பூசி மட்டுமே மக்களை வைரஸுடன் 'வாழ' போதுமானது என்ற “நோயை பரவ அனுமதிக்கும்” கொள்கையை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட அனைத்து உரிமைகோரல்களும் பொய்கள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி நான்கு மாதங்களில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு நியூசிலாந்தில் உள்ளவர் என்ற அடிப்படையில் 900,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக இருக்கும்.

கடந்த ஆண்டு இறுதியில் 59 ஆக இருந்த நியூசிலாந்தின் இறப்பு எண்ணிக்கை கடந்த வாரத்தில் 700 க்கும் அதிகமாக இருக்கின்றது. கடந்த பதினைந்து நாட்களில், ஒன்பது வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையும், 19 வயதுக்குட்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பல அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில், பொது சுகாதார அமைப்பு நிரம்பி வழிகிறது. ஏழ்மையான பிராந்தியமான நோர்த்லாண்டில் உள்ள மருத்துவமனைகள், சமீபத்தில் பொதுவாக சுகாதாரப் பணியாளர்களால் செய்யப்படும் அடிப்படைப் பணிகளுக்கு நோயாளிகளின் குடும்பங்களை உதவுமாறு கேட்டன. ஒரு செவிலியர் நியூசிலாந்தின் நிலைமை பற்றி இது எங்களிடம் 'ஆன்மாவை அழிக்கிறது' என விவரித்தார்.

கோவிட் பரவல் மற்றும் சமூக சமத்துவமின்மையின் முன்னோடியில்லாத அதிகரிப்பு குறித்து தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

ஆர்டெர்ன் அரசாங்கம் பெருவணிகத்திற்கு மானியங்கள் மற்றும் பிணை எடுப்புகள் வடிவில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை வழங்க தொற்றுநோயைப் பயன்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் செய்யப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி, பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற வங்கி அல்லாத நிதி சொத்துக்களின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் 36 சதவீதமாக $257 பில்லியன் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தொழிலாள வர்க்கம் உயரும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கமானது 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.9 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வாடகை 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இதனால் வீடற்றோர் மற்றும் வீடுகளில் கூடுதலானோர் வாழ வேண்டிய நிலை அதிகரித்துள்ளது. ஏறக்குறைய நான்கில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது. மேலும் இது மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

தொழிலாளர்கள் மீண்டும் போராட முற்படுகையில், அவர்கள் தொழிற்சங்கங்களுடன் மோதலுக்கு வருகின்றனர். தொழிற்சங்கங்கள் பள்ளிகள் மற்றும் வணிகங்களை பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதற்கும், பொதுத்துறை ஊதிய முடக்கம் உட்பட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் அரசு அமைப்புடன் இணைந்து இயங்கி வருகிறது.

போதுமான பணியாளர்கள் மற்றும் கண்ணியமான ஊதியம் கோரி, கடந்த ஆண்டு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்திய செவிலியர்கள், அரசாங்கத்திற்கும் நியூசிலாந்து செவிலியர் அமைப்புக்கும் இடையே செய்யப்பட்ட ஊதிய சமபங்கு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதற்கு கோபத்துடன் தமது பிரதிபலிப்பை காட்டினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பல்வேறு தொழில்களில் உள்ள 10,000 சுகாதாரப் பணியாளர்களின் மற்றொரு வேலைநிறுத்தத்திற்கு வேலைவாய்ப்பு நீதிமன்றம் தடை விதித்தது. இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருகிய முறையில் பயன்படுத்தப்படும் ஜனநாயக விரோத வழிமுறைகளை சுட்டிக்காட்டும் ஒரு அசாதாரண தீர்ப்பாகும். பொது சேவை சங்கம் உடனடியாக நீதிமன்ற தீர்ப்பிற்கு சரணடைந்து வேலைநிறுத்தத்தை கைவிட்டது.

கோவிட்டை ஒழிப்பதற்கும் நியாயமான ஊதியங்களுக்கும் வேலை நிலைமைகளுக்கும் தொழிலாளர்கள் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தொற்றுநோயின் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவ அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான, சாமானிய தொழிலாளர்களின் பணியிடக் குழுக்கள் நிறுவப்பட வேண்டும்.

தீவிரமடைந்து வரும் உலகப் போரின் ஆபத்தாலும் இதே கடமையே முன்வைக்கப்படுகின்றது. பசிபிக் பகுதியில் நியூசிலாந்தின் சொந்த நவ-காலனித்துவ நலன்களுக்கு அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்காக, தொழிற்கட்சி அரசாங்கம் நியூசிலாந்தை ரஷ்யாவிற்கு எதிரான போருக்குள் இழுத்துள்ளது.

இந்த மாதம், அரசாங்கம் 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரையும் ஒரு விமானப்படை விநியோக விமானத்தையும் ஐரோப்பாவிற்கு அனுப்பியது. அத்துடன் உக்ரேனில் உள்ள அமெரிக்க-நேட்டோ பினாமிப்படைகளுக்கு ஆயுதங்களை வாங்க மில்லியன் கணக்கான டாலர்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டையும் போலவே, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போருக்கான முழக்கமானது தொற்றுநோய்க்கும் சமூக நெருக்கடி மீதும் எழும் கோபத்தை ஒரு வெளிப்புற எதிரியின் மீது திசை திருப்பும் நோக்கத்தை கொண்டதாகும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சியின் மத்தியதர வர்க்க தேசியவாத மற்றும் போலி-இடது கூட்டாளிகளால் ஆதரிக்கப்படும் போர் உந்துதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முற்படுவதில் சோசலிச சமத்துவக் குழு தனித்து நிற்கிறது.

போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவைப்படுகிறது. இது அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவெறிக்கு எதிராக, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமத்துவமின்மைக்கும் தொற்றுநோய்க்கும் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்தில் இருந்து இதனை பிரிக்க முடியாது.

நியூசிலாந்தில் இருந்து இவ்வுரைகளை கேட்கும் அனைவரையும் சோசலிச சமத்துவக் குழுவுடன் தொடர்பு கொண்டு, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நியூசிலாந்து பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Loading