மே தினம் 2022: இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களின் முக்கியத்துவமும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் தீபால் ஜெயசேகர வழங்கிய அறிக்கை இதுவாகும். ஜெயசேகர இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் ஆவார். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

Deepal Jayasekera, Assistant National Secretary of the Socialist Equality Party (Sri Lanka)

தோழர்களே,

தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும், உலக முதலாளித்துவத்தின் பெரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் அகப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான கோவிட்-19 தொற்றுநோயினாலும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய அமெரிக்க-நேட்டோ பினாமி போரானாலும் இந்த நெருக்கடிகள், மேலம் மோசமாகத் தீவிரமடைந்துள்ளன. வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாக, தெற்காசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்கள் உட்பட போராட்டங்களில் இறங்கி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தங்கள் மீது சுமத்தி, தங்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஆளும் வர்க்கம் முன்னெடுக்கும் தாக்குதலுக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

அமெரிக்கா-நேட்டோ பினாமிப் போரில் இந்தியாவும் அகப்பட்டுக்கொண்டுள்ளது. புதுடில்லியானது சீனாவுக்கு எதிரான அமெரிக்க-இந்திய இராணுவ-மூலோபாய கூட்டுறவைப் பேணி வருகிறது. அது போலவே, இந்தியா, மாஸ்கோவுடன் பேணி வரும் பல தசாப்த கால உறவுகளைத் துண்டித்து, ரஷ்யாவுக்கு எதிராக, அமெரிக்காவுடன் நெருக்கமாக அணிவகுக்குமாறு டெல்லி நிர்வாகத்துக்கு வாஷிங்டன் தீவிரமாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரும் அதனுடன் பிணைந்த மாஸ்கோவிற்கு எதிரான கொடூரமான பொருளாதாரத் தடைகளும் அதன் விளைவாக உலகளாவிய விநியோகச் சங்கிலி முறிந்து போயுள்ளமையும், இந்தியாவின் மீது ஒரு கொடூரமன பாதிப்பை ஏற்படுத்தி, அதன் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளன. இந்தச் சூழ்நிலையிலேயே, இந்தியாவில் உள்ள தொழிலாள வர்க்கமும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களும், தங்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் தீவிரமான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மார்ச் 28-29 பொது வேலைநிறுத்தத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியானது இலங்கையில் கூர்மையாக வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்து, நாடு முழுவதும் பெருகும் பாரிய எதிர்ப்புக்களால் அரசாங்கதின் நிலை ஆட்டங்கண்டுள்ளது. ஏப்ரல் 9 முதல் கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள பிரதான எதிர்ப்புத் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய், எரிவாயு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பல மணிநேர மின்வெட்டு போன்றவற்றின் மீதான பரவலான வெறுப்பின் காரணமாக, வெகுஜன எதிர்ப்புக்கள் பெருமளவில் வெடித்துள்ளன.

உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் இனவாதத்தை தூண்டிவிடும் பிற்போக்கு முயற்சியில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் பல தசாப்த காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சவால் விடுக்கும் வகையில், இந்த வெகுஜன எழுச்சிகளில், அனைத்து மொழி மற்றும் மத இன வேறுபாடுகளைக் கடந்து, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என உழைக்கும் மக்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

இப்போது, தொழிலாள வர்க்கம் தலையிட முடிவு செய்துவிட்டதால் இந்த வெகுஜன எதிர்ப்பு இயக்கம் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. ஏப்ரல் 25 அன்று, இராஜபக்ஷ அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் சுமார் 250,000 ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இதே கோரிக்கைக்காக நாடு முழுவதும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைவதால் இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடி ஆழமடைந்துள்ளது. இப்போது அரசாங்கம் நூலில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. அதன் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் 'சுயாதீனமாக' செயல்படுவதாக அறிவித்துள்ளதால், அரசாங்கம் அதிகளவில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், இராஜபக்ஷ அரசாங்கமானது காலம் பார்த்து வெகுஜன எழுச்சிகள் மீது ஒரு கொடூரமான பொலிஸ்-இராணுவ அடக்குமுறையை அவிழ்த்து விடுவது பற்றி கணக்குப் போடுகின்றது. ஏப்ரல் 11 அன்று 'தேசத்திற்கு ஆற்றிய உரையில்', பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தினார். அவர்கள் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தாவிட்டால், அரசாங்கம் கொடூரமான அடக்குமுறையை முன்னெடுக்கும் என்று சமிக்ஞை செய்தார். அதன் பின்னர் 8 நாட்களுக்குள், ஆயுததாரி பொலிஸ் படை, ரம்புக்கனவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. சமிந்த லக்ஷான் என்ற தொழிலாளி கொல்லப்பட்டதுடன் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல்கள் தனது சிக்கன நடவடிக்கைகள் தொடர்பான வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது என்று உழைக்கும் மக்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் விடுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகவும். அதே போல் முதலீட்டாளர்களுக்கும் உலகளாவிய வங்கியாளர்களுக்கும் காட்டும் ஒரு தெளிவான சமிக்ஞையும் ஆகும்.

அரசாங்கத்தைப் போலவே, முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும், தற்போதைய அரசாங்க எதிர்ப்பு வெகுஜன எழுச்சி ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சிக்கும் சவால் விடும் ஒரு போர்க்குணமிக்க இயக்கமாக வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டு அஞ்சுகிறது. ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் இந்த இயக்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்குள் சிக்க வைக்க வேலை செய்கின்றன. அத்தகைய இடைக்கால அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இது உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் நிலைமைகளை மேலும் மோசமாக்கும்.

அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைக்கான தயாரிப்பு, மற்றும் எதிரக்கட்சிகளின் இடைக்கால அரசாங்கப் பொறியின் கீழ், அரசாங்க-எதிர்ப்பு வெகுஜன இயக்கம் பெரும் ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த இயக்கத்துக்கு உறுதிப்பாடு மற்றும் போர்க்குணம் இருந்தபோதிலும், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கான தெளிவான அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத் திட்டம் இல்லாததாலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஏப்ரல் 13 அன்று பிரதமர் முன்வைத்த யோசனையை நிராகரித்து, போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட மாற்றுப் பிரேரணை பட்டியலில், இந்த உண்மைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.

அவர்கள், கோடாபயவையும் மஹிந்த இராஜபக்ஷவையும் இராஜினாமா செய்யக் கோரும் அதேவேளை, தற்போதைய பாராளுமன்றத்தில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க கோருகின்றனர். அதில் இராஜபக்ச குடும்பத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்கின்றனர். பரவலாக வெறுக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் சில அதிகாரங்களைத் துண்டிக்கும் 19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த முன்மொழிகின்றனர். இராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகளால் திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கான பொறிமுறையை அமைக்குமாறும், ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும், என்றும் கோருகின்றனர்.

காலி முகத்திடல் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் 'அரசியல் வேண்டாம்' என்று நிராகரிக்கும் அதே வேளை, அவர்கள் உண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி போன்ற முதலாளித்துவ பாராளுமன்ற எதிர்க் கட்சிகளுக்கு சமாந்தரமான ஒரு அரசியலை முன்வைக்கின்றனர். இந்தக் கட்சிகள் இன்னொரு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பைப் சுரண்டிக்கொள்கின்றன. அத்தகைய அரசாங்கம் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதில்லை மாறாக பிரச்சினைகளை மோசமாக்கும். உலகளாவிய நிதி மூலதனத்தின் பின்வாங்காத கோரிக்கைகள் குறைக்கப்படப் போவதில்லை, மாறாக அவை எதிர்காலத்தில் தீவிரமடையும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த வெகுஜன இயக்கத்தில் தீவிரமாக தலையிட்டு, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தையும் சுயாதீன தொழிலாள வர்க்க முன்னோக்கையும் முன்வைக்கின்றது. நாம் ஏப்ரல் 7 அன்று வெளியிட்ட அறிக்கையில், விரிவாகக் கூறப்பட்டுள்ளபடி, சோசலிச சமத்துவக் கட்சி, 'கோட்டா வீட்டுக் போ!' என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நிற்கின்றது. அதே வேளை நாம் ஒரு கேள்வியை எழுப்புகிறோம். இராஜபக்ஷவை பதிலீடு செய்வது எது? இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோருவது மட்டும் போதாது. அத்தோடு, 'தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதல் படியாக, கொடூரமான சர்வாதிகார அதிகாரங்களுடன், தொழிலாள வர்க்கத்தின் தலைக்கு நேரே துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி பதவியை உடனடியாக ஒழிக்க வேண்டும்' என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குப் போராடுமாறு தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்புகள் ஊடாக கட்டியெழுப்பப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதிராக, அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் தொழில்துறை பொலிசாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், அயல் புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு உழைக்கும் மக்களை நாம் வலியுறுத்துகிறோம்.

ஏப்ரல் 7 அன்று சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையானது, 'மக்களின் அவசரத் தேவைகளை அனுகக்கூடிய நடவடிக்கைக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு உயிர் கொடுக்க' ஒரு வேலைத் திட்டத்தையும் கொள்கையையும் முன்மொழிகிறது. “சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களின் கடன்களை ஒழிக்க வேண்டும், பொது வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கொண்டு வர வேண்டும். வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய கூட்டுத்தாபங்களும், பொருளாதார மையங்களும் தேசியமயமாக்கப்பட வேண்டும். அனைத்து வெளிநாட்டுக் கடனையும் நிராகரிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.”

ஏழை விவசாயிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிக்கொண்டு, சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக, இலங்கை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கின்ற போராட்டம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இது. தெற்காசியாவிலும் உலக அளவிலும் வாழும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டு நடத்தப்பட வேண்டிய போராட்டம் ஆகும்.

தெற்காசியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புங்கள்!

தோழர்களுக்கு நன்றி,

Loading