உக்ரேனின் ஆறு மில்லியன் அகதிகள் எதிர்கொள்ளும் உண்மைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, உக்ரேனில் இருந்து தற்போது 6 மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளனர். மேலும் 7.7 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 31 சதவிகிதம் பேர் நிராதரவாகிவிட்டதை இது குறிக்கிறது.

மேற்கத்திய ஊடகங்கள், உக்ரேனில் இருந்து அலையென வெளியேறும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அரசாங்கங்களின் அன்பான கரங்களில் தஞ்சம் புகுவது போல் நிலைமையை சித்தரிக்க முற்படுகின்றன, கடுமையான சிதைவு நிலையில் உள்ள —அதாவது, வறுமை, சமத்துவமின்மை, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் சீர்குலைவு, குறைந்த ஊதியங்கள், மனித கடத்தல், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரினவாதம் மற்றும் இனவெறி, மற்றும் வதிவிட அனுமதி (visa) இல்லாமல் எல்லைகளை கடக்க முடியாத நிலை போன்ற— உலகளாவிய முதலாளித்துவத்தின் அனைத்து சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளும் இவ்வாறான அகதிகள் நெருக்கடியில் இருந்தே வெளிப்படுகின்றன.

உக்ரேனுக்காக 40 பில்லியன் டாலர் நிதியுதவிப் பொதிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா, முதன்மையாக அந்நாட்டை கொலைக்களமாக மாற்றுவதற்கு அதை அர்ப்பணித்துள்ளது, அதேவேளை தனது நாட்டிற்குள் 100,000 அகதிகளை மட்டுமே அது அனுமதிக்கும். ‘United for Ukraine’ திட்டத்திற்கு இதுவரை 19,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால் வெறும் 6,000 பேருக்கு மட்டுமே அது விசா வழங்கியுள்ளது. நாட்டிற்குள் நுழைபவர்கள் முழுமையாக பின்னணி சோதனைகளை முடித்திருக்க வேண்டும், பயோமெட்ரிக் ஸ்கேன் செய்திருக்க வேண்டும், மற்றும் மிக முக்கியமாக, தங்களுக்கு ஆதரவளிப்பதற்கான நிதி ஆதாரங்களைக் கொண்ட தனியார் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

‘United for Ukraine’ திட்டம் தொடங்குவதற்கு முன்பே, உக்ரேனில் இருந்து 20,000 அகதிகள் அமெரிக்காவின் தெற்கு எல்லையில் குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிதறடிக்கப்பட்டிருந்தாலும், மெக்சிகோ நகரத்திற்கு அல்லது மீண்டும் ஐரோப்பாவிற்குச் சென்றாலும், சிலர் இன்னும் தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க மண்ணில் விசா நடைமுறையை முடிக்காத வரை உக்ரேனியர்கள் எவரும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என்று வாஷிங்டன் வலியுறுத்துகிறது.

இங்கிலாந்தில், உள்துறை அலுவலகப் பிரதிநிதி ஒருவர் புதன்கிழமை, ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் உக்ரேனியர்கள் நாடுகடத்தப்படுவார்கள், ஒருவேளை போரில் சிதைந்த ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள், இப்போது ஆபிரிக்க குடிபெயர்ந்தோர் அங்குதான் அனுப்பப்படுகிறார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அயர்லாந்தில் இருந்து வடக்கு அயர்லாந்திற்கும் பின்னர் பிரித்தானிய நிலப்பரப்பிற்கும் செல்வதன் மூலம் கிரேட் பிரிட்டனுக்குள் நுழையும் உக்ரேனியர் எவரும் சட்டவிரோதமாக குடியேறியவராகக் கருதப்படுவார். பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களும் இந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்களா என்பதை அரசு அதிகாரி கூறவில்லை.

கிரேட் பிரிட்டனின் ‘Homes for Ukraine’ திட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. புலம்பெயர்பவர்களில், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள், இந்த நடவடிக்கை தேவை என்று கூறப்பட்டாலும், குற்றப் பின்னணி சோதனைகள் செய்யப்படாத வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்ட இடங்களிலிருந்து 600 உக்ரேனிய குடும்பங்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்கள் மனித கடத்தல்காரர்களுக்கு இரையாவார்கள் என்று வழக்குரைஞர்கள் கவலைப்படுகிறார்கள்.

மேலும், பிரிட்டனின் மொத்தத்தில் மிகக் குறைந்த நிதியுதவி பெற்ற தேசிய சுகாதார சேவை (NHS), கொள்கையளவில் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட உக்ரேனியர்களுக்கு அணுகக்கூடியது என்றாலும், இந்த மக்கள்தொகையின் தேவைகளை அதனால் கையாள முடியாது. அகதிகளுக்கான வக்கீல்கள், புலம்பெயர்ந்தோருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, மனநல ஆரோக்கியம் தொடர்புபட்ட சேவைகளின் தீவிர தேவை இருப்பதாக குறிப்பிடுகின்றனர். அவர்கள் இப்படி எதையாவது பெறுவதற்கு இரண்டு வருடங்கள் வரை காத்திருக்கவேண்டும் என்கின்றனர்.

10 மில்லியன் உக்ரேனியர்கள் வசிக்கும் மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தின் உற்பத்தி ஸ்தலமாக உள்ள கனடா, கனடா-உக்ரேன் அவசரகால பயண அங்கீகார திட்டத்தின் (Canada-Ukraine Emergency Travel Authorization program) மூலம் தற்காலிக, மூன்று வருட விசாவைப் பெறுபவர்களுக்கு வட அமெரிக்க நாட்டிற்குச் செல்வதற்கு எந்த வழியையும் வழங்கத் தவறியதற்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பதிலுக்கு, ஒட்டாவா மே மாத இறுதியில் மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் வெறும் 900 அகதிகள் ஏற்றிச் செல்ல மூன்று சாட்டர் விமானங்களை அனுப்புவதாக அறிவித்தது. ‘முதலில் வருபவர்களுக்கு, முதலில் இடம்’ கிடைக்கும் என்ற அடிப்படையில் இடம் கிடைக்கும். கனடாவிற்கு வந்ததும், “14 நாட்கள் வரை தங்குவதற்கு பொருத்தமான இடம் இல்லாத உக்ரேனியர்களுக்கு இலவச தங்குமிடம் வழங்கப்படும்” என அதிகாரி ஒருவர் கனேடிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார். ஐரோப்பாவின் வறிய நாட்டிலிருந்து வரும் நபர்கள் அந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தான் ஏற்றுக்கொள்ளவிருக்கும் உக்ரேனிய அகதிகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு எதையும் நிர்ணயிக்கப் போவதில்லை என அறிவித்த ஜேர்மனி, முன்னணி அமெரிக்க இதழான Foreign Policy இன் கூற்றுப்படி, உக்ரேனில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்யும் வகையில் தாலிபான்களிடமிருந்து பாதுகாப்பாக தஞ்சம் புகுந்திருந்த ஆப்கானியர்களை அவர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றியது.

ஒரு ஆப்கானிய குடும்பத்தின் சூழ்நிலைகளைப் பற்றி Foreign Policy இதழ், “அமிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டதில் இருந்து ஏற்கனவே இரண்டு முறை இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் இப்போது பேர்லினின் வடக்குப் புறநகரில் உள்ள ரைய்னிக்கென்டோர்ஃபில் ஒரு முன்னாள் ஹோட்டலில் வசிக்கின்றனர், இது ‘வீடற்ற’ மக்களுக்கு தற்காலிக தங்குமிடம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது; இது ஒரு மாதத்திற்குள் இந்த குடும்பம் மாறியுள்ள மூன்றாவது தங்குமிடமாகும்” என்று கூறியது.

பயோமெட்ரிக் உக்ரேனிய பாஸ்போர்ட் இல்லாத உக்ரேனியர்களுக்கு விசா அனுமதியை ஜேர்மனி மறுக்கிறது. ரஷ்யா-உக்ரேன்/நேட்டோ போரில் இருந்து தப்பித்தவர்களின் முதன்மை அடைக்கல பூமியாக உள்ள போலந்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். 3,200,000 பேர் அதன் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். எத்தனை பேர் அங்கே தங்கியிருக்கிறார்கள், அல்லது வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள் —அல்லது குறைந்தபட்சம் முயற்சிக்கிறார்கள்— என்பது தெளிவாக இல்லை, ஏனென்றால் இந்த மக்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பு பெரும்பாலும் நகர மற்றும் உள்ளூர் அளவிலான அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தேவாலய குழுக்கள் மற்றும் சாமானிய மக்கள் ஆகியோர், இந்த மக்களுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் உடை, மருத்துவ பராமரிப்பு, பள்ளிப்படிப்பு மற்றும் பல அத்தியாவசிய உதவிகளுக்கான வழிகளைக் கண்டறிவது போன்ற சேவைகளை முதன்மையாக வழங்குகிறார்கள். வார்சோவின் மேயர் சமீபத்தில் இந்த நடவடிக்கையை ஒரு ‘மேம்பாடு’ என விவரித்தார்.

மத்திய அரசு, உக்ரேனியர்களை எல்லையை கடக்க அனுமதிக்கும் அதேவேளையில், சிறிய தளவாட ஆதரவுகளை அளித்து வருவதாக அவர் கூறினார். பல முயற்சிகளுக்கான நிதியுதவி நகர வரவு செலவு திட்டத்தில் இருந்து கிடைக்கிறது, ஆனால் பெரும்பாலும் களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய தன்னார்வலர்களும், மற்றும் ஒதுக்கப்படும் பணமும் போதுமானதாக இல்லை என்கின்றனர்.

ஒரு போலந்து தன்னார்வலர் ஏப்ரல் நடுப்பகுதியில் The New Republic இதழுக்கு, “முதலில், சலவைக்காரர்கள் நமக்குத் தேவையான படுக்கை விரிப்புக்களை இலவசமாக சலவை செய்வார்கள்; உணவு வழங்குநர்கள் உணவுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். அது முடியத் தொடங்குகிறது,” ஆனால், “மக்கள் இன்னும் வருகிறார்கள்” என்று கூறினார். இந்த நிலைமை குறிப்பாக நீடிக்க முடியாதது, ஏனென்றால் தங்குவதற்கு இடம் தேவைப்படும் குடும்பங்களுக்கு தங்கள் வீடுகளைத் திறந்து விடுவதன் மூலம் குடிமக்கள் வீட்டுவசதி போன்றவற்றை வழங்குவதற்கான திறனை மாதக்கணக்கில் தொடர முடியாது, ஆண்டு முடிவில் மிகக் குறைவாகும்.

போலந்தின் தலைநகரில் இரண்டரை மாதங்களில் அதன் மக்கள்தொகை 15 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது, இப்போது அங்கு 300,000 உக்ரேனியர்கள் வசிக்கின்றனர் மற்றும் ஒவ்வொரு ஐந்து குடியிருப்பாளர்களில் ஒருவர் வீதம் உக்ரேனியர்கள் உள்ளனர். “போரின் முதல் இரண்டு வாரங்களில் வாடகைகள் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது, குறிப்பாக க்ராகோவில் (Krakow) 26 சதவிகிதமும் மற்றும் வ்ரோக்லாவில் (Wroclaw) 33 சதவிகிதமும் வாடகைகள் அதிகரித்துள்ளன” என்று The New Republic செய்தியிதழ் தெரிவிக்கிறது. பணவீக்கம், ஏப்ரல் நிலவரப்படி 12.3 சதவிகிதமாக உள்ளது, இது 1998 க்குப் பின்னர் மிக அதிகமாக உள்ளது.

இப்போது 120,000 உக்ரேனிய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய நிலையில் உள்ள வார்சோ, அகதிகள் ஆசிரியர்கள் இக்குழந்தைகளுக்கு நாள்தோறும் ஆறு மணிநேரம் கல்வி பயிற்றுவிக்க அவர்களை 40 டாலர் வீதம் ஊதியத்திற்கு பணியமர்த்துகிறது, அதாவது, ஒரு மணிநேரத்திற்கு 6.50 டாலருக்கு சற்று அதிகமாகும். இது ஒரு படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்புகளின் சராசரி வாடகைக்கு கூட போதாது. வேலை செய்யும் வயதில் உள்ள ஆண்கள் உக்ரேனை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், பல அகதிகள் குடும்பங்களில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் நிலை உள்ளது.

அகதிகள் போலந்தின் ஸ்லோட்டிக்கு மாற்ற முயன்ற மதிப்பற்ற உக்ரேனிய நாணயத்தின் அளவை கையாள முடியாமல் போனதால், போலந்தின் வங்கி அமைப்பு மார்ச் மாதத்தில் நெருக்கடிக்குள் நுழையத் தொடங்கியதன் பின்னர், புலம்பெயர்ந்தோர் மூன்று மாதங்களுக்கு 300 யூரோ மதிப்புள்ள ஹ்ரிவ்னியாவை பரிமாறிக்கொள்ளும் தகுதி கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு கொள்கை வகுக்கப்பட்டது. அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

மற்ற நாடுகளும் கூட அகதிகள் நெருக்கடியின் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. 3 மில்லியன் மக்கள் வசிக்கும் மற்றும் ஐரோப்பாவின் வறிய நாடுகளில் ஒன்றான உக்ரேனுடன் சேர்ந்து, மிகச்சிறிய நாடான மால்டோவா, அதன் பிராந்தியம் ஊடாக பயணித்த 430,000 அகதிகளை சமாளிக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டது, அவர்களில் 95,000 பேர் இன்னும் அங்கு தங்கியுள்ளனர். மிகவும் பலவீனமடைந்த பொருளாதார வளர்ச்சி, 22 சதவிகித பணவீக்கம், உயர்ந்து வரும் இயற்கை எரிவாயு விலைகள், கோவிட்-19 தொற்றுநோயின் நீடித்த விளைவுகள் ஆகிய கடும் துயரங்களுக்கு மத்தியில் இந்த மக்கள்தொகையை அதனால் பராமரிக்க முடியாது.

2020 இல் 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு, அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10 சதவிகித அளவிற்கு இருந்ததான வெளிநாட்டில் பணிபுரியும் மால்டோவர்கள் அனுப்பும் பணமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரஷ்யாவுடனான மோதலில் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடான மால்டோவா உள்நோக்கி சிதைந்து விடாமல் இருக்க, அதற்கு பணம் வழங்குமாறு வெளிநாட்டு சக்திகளிடம் சர்வதேச நாணய நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்ச் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிய அகதிகளுக்கு ‘தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து’ (‘temporary protection status-TPS’) வழங்க முடிவு செய்தது, இது அவர்களை உறுப்பு நாடுகளில் வாழ அனுமதிக்கிறது, அத்துடன் அவர்கள் சில சமூக நலன்களைப் பெறவும், மற்றும் சட்டபூர்வ அடிப்படையில் வேலை செய்யவும் வாய்ப்பளிக்கிறது. இது ஒரு சிறந்த மனிதாபிமானம் மிக்க செயலாக புரூஸ்ஸெல்ஸால் சித்தரிக்கப்பட்டது. உண்மையில், இது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து முற்றிலும் நிராதரவாக வந்து சேர்ந்த —அதாவது மத்தியதரைக் கடலில் மூழ்க விடப்பட்ட, தடுப்புக் காவல் மையங்களில் அடைத்து வைக்கப்பட்ட, எல்லையில் தண்ணீர் பீரங்கிகளால் துன்புறுத்தப்பட்ட, காவல்துறையினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, மற்றும் நாடுகடத்தப்பட்ட— புலம்பெயர்ந்தோர் பெற்றதை விட அதிகமாகும்.

இருப்பினும், TPS இன் கீழ் அகதிகள் தங்க அனுமதிக்கப்படும் காலம் குறைந்தது 90 நாட்களில் இருந்து ஒரு வருடம் வரை என நாட்டிற்கு நாடு மாறுபடும். சில நேரங்களில், ஆனால் எப்போதும் இல்லை, இதை புதுப்பிப்பதற்கான சாத்தியமும் உண்டு. இதற்கிடையில், அகதிகள் நீண்ட கால வேலை அனுமதி அல்லது நிரந்தர புகலிடம் பெறுவதற்கு, முடிவின்றி காத்திருக்க வேண்டிய மற்றும் அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழலுக்கு மத்தியில் கடும் சுமையுள்ள உத்தியோகபூர்வ வழிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், உக்ரேன் பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உக்ரேனுக்கே திருப்பியனுப்பப்படுவார்கள்.

மேலும், சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரேனிய அகதிகளை ஒரு இலாபகரமான, குறைவூதியம் பெறும் தொழிலாள சக்தியாக பெரும்பாலும் பார்க்கின்றன என்பது தெளிவாகிறது. “எத்தனை உக்ரேனியர்கள் போலந்தில் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே பார்க்க முடியும், இவர்கள் பெரும்பாலும் போலந்தியர்கள் விரும்பாத வேலைகளை நிரப்புகிறார்கள், எனவே இந்த உதவி பரஸ்பரமானது என்பது தெளிவாகிறது” என்று போலந்து பிரதமர் மத்தேயுஸ் மொராவியஸ்கி (Mateusz Morawiecki) சமீபத்தில் கூறினார். போலந்தியர்கள் ‘விரும்பாத’ வேலைகள் என்பது தரமற்ற ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் கொண்டது என்பதைக் குறிக்கிறது.

மேலும், போர் வெடித்தபோது உக்ரேனில் கல்வி பயின்று வந்த ஆபிரிக்கர்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு போக்குவரத்துப் புள்ளியாகப் பயன்படுத்திய மத்திய கிழக்கை சேர்ந்த அகதிகள் போன்ற உக்ரேனிய குடியுரிமையை நிரூபிக்க முடியாத அகதிகளுக்கு TPS அந்தஸ்து மறுக்கப்படுகிறது. இரட்டை குடியுரிமை கொண்ட ரோமாக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. உதாரணமாக, செக் குடியரசு, அகதிகளை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் அவர்கள் அடையாளச் சான்றுகளைக் காட்ட புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது.

பத்திரிகைகளில் குறிப்பிடப்படும்போது, இந்த உண்மைகள் பெரும்பாலும் இனவெறியுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நீண்டகாலமாகவே அரேபிய-எதிர்ப்பு, ஆபிரிக்க-எதிர்ப்பு மற்றும் ரோமா-எதிர்ப்பு போன்ற மிகவும் கேவலமான பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆனால் மையப் பிரச்சினை அகதிகளின் தோல் நிறமோ அல்லது தோற்றமோ அல்ல. மாறாக, சர்வாதிகாரி விளாடிமிர் புட்டின், மற்றும் ‘சுதந்திரம்’ மற்றும் ‘ஜனநாயகம்’ மீதான அவரது வெறுப்பு ஆகியவற்றால் மட்டுமே முழுமையாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போரில் இருந்து உக்ரேனியர்கள் தப்பி ஓடுகிறார்கள் என்பதே உண்மை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதிக்க வேட்கையில் சிப்பாய்களாகவுள்ள உக்ரேனிய அகதிகள், மாஸ்கோவிற்கு எதிராக ஒரு நேரடிப் போரைத் தொடங்குவதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் அடித்தளம் அமைக்கும் ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரத்தில் எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அதனால் மட்டுமே அவர்கள் தற்போதைக்கு ஊடகங்களில் ஒப்பீட்டளவில் அனுதாபத்தையும், மேலும் சில அரசாங்க உதவிகளையும் பெறுகிறார்கள்.

எவ்வாறாயினும், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் பிற இடங்களில் இருந்து வரும் அகதிகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தெளிவாகவும் நேரடியாகவும் அந்தப் பிராந்தியங்களை முற்றிலும் நிர்மூலமாக்கியதன் விளைவாக அங்கிருந்து வெளியேறியவர்களாவர். மேலும் ஆபிரிக்காவை விட்டு வெளியேறுபவர்கள், கண்டத்தின் காலனித்துவ மற்றும் நவ-காலனித்துவ நிர்மூலமாக்கலின் தயாரிப்புகளான வன்முறை மற்றும் நிர்கதியான வறுமையிலிருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களாவர். சமூக கோபத்தை வலதுசாரி பக்கம் திசைதிருப்பும் ஒரு முயற்சியில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரினவாதத்தைத் தூண்டுவதில், வாஷிங்டனுக்கும் புரூஸ்ஸெல்ஸூக்கும் அவர்களுக்கான பயனைத் தவிர, இந்த அகதிகள் பெரும்பாலும் மனிதக் குப்பைகளாகப் பார்க்கப்படுகின்றனர்.

போர் சூழல்களால் நெருக்கடி கட்டவிழ்த்து விடப்படும்போது, உக்ரேனிய அகதிகள், தங்கள் நாட்டில் போலவே, மிருகத்தனமாக நடத்தப்படுவார்கள்.

Loading