மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது. மார்ஸ்டன் இங்கிலாந்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

Chris Marsden, National Secretary of the Socialist Equality Party (UK)

ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய போர் முனைவின் முன்னணி வரிசையில் இருக்க இங்கிலாந்தை விட வேறெந்த நாடும் இந்தளவுக்கு மிகவும் தீவிரமாக இருந்ததில்லை.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் கியேவுக்கு விஜயம் செய்த முதல் நேட்டோ தலைவரராக இருப்பதை உறுதி செய்தார். அங்கே அவர் பிரிட்டன் உக்ரேனுக்கு வழங்கிய பரந்த ஆயுதத் தொகுப்பைப் பெருமை பேசி ஜேர்மனியை ஏளனப்படுத்தி இருந்தார்.

ஜனாதிபதி செலென்ஸ்கியுடன் இணைந்து பேசிய அவர், உக்ரைனுக்காக 1.5 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைப் பிரிட்டன் திரட்டி இருப்பதாக தெரிவித்தார். பிரிட்டனால் வழங்கப்பட்ட டாங்கி தகர்ப்பு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உக்ரேனிய சிப்பாய்களுக்கு 'போர்க்களத்திலேயே' SAS இராணுவத்தினர் பயிற்சி அளித்து வருவது ஒரு வாரத்திற்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

2014 மைதான் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் இருந்து, உக்ரேனிய இராணுவத்தின் பத்தாயிரக் கணக்கானவர்களுக்கு பிரிட்டனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது கருங்கடலிலும் ஏனைய இடங்களிலும் உக்ரேன் உள்ளடங்கிய போர் ஒத்திகைகளுக்கு இட்டுச்சென்றது.

இந்த போர்த் தீவிரத்தை அதிகரிப்பதில் இங்கிலாந்து அரசியல்வாதிகள் முன்னிலையில் உள்ளனர். இந்த வாரம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி (James Heappey) ரஷ்ய மண்ணின் 'இலக்குகளை நோக்கி செல்வது முற்றிலும் நியாயபூர்வமானதே' என்று அச்சுறுத்தினார். இது, 'உக்ரேனைப் பாதுகாப்பதற்கும் ரஷ்யாவைத் தாக்குவதற்கும் இடையிலான கோடு அதிகளவில் மங்கி வருகிறது' என்று அடிவருடி பிபிசி கருத்துரைக்கத் தூண்டியது.

ஆனால் அது மங்கவில்லை, துடைத்தழிக்கப்பட்டுவிட்டது.

“இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கியேவ் ஆட்சியை இலண்டன் நேரடியாக ஆத்திரமூட்டுவது… எங்களிடம் இருந்து அதே விகிதத்தில் உடனடியான விடையிறுப்புக்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரித்தது.

'கியேவில் உள்ள முடிவெடுக்கும் மையங்களின் மீது மிகவும் துல்லியமான நீண்ட தூர ஆயுதங்களைக் கொண்டு பதிலடித் தாக்குதல்களை நடத்த ரஷ்ய ஆயுதப் படைகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன' என்று குறிப்பிட்டதனூடாக அங்கே தான் இங்கிலாந்து பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை வலியுறுத்துகின்றது.

முக்கிய வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளே இந்த திட்டநிரலுக்கு கட்டளையிடுகின்றன. பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் வெகு காலத்திற்கு முன்பே மறைந்துவிட்டது. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற போட்டியாளர்களுக்கு எதிராக அதன் உலக அந்தஸ்தை உயர்த்துவதற்காக அடிமைத்தனமான போர்வெறியைப் பயன்படுத்தும் நம்பிக்கையில், அதன் வீழ்ச்சி அதை வாஷிங்டனின் கரங்களுக்குள் தள்ளியுள்ளது.

இதே காரணத்திற்காக ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை முகங்கொடுக்கிறார். வாஷிங்டன் மற்றும் இலண்டனின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸ் நிறுவுனரை மவுனமாக்கும் நோக்கில் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் இந்த மே மாதம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பை வழங்க உள்ளார்.

ஆனால் இது மட்டுமே ஒட்டுமொத்தம் பிரச்சனை அல்ல. போரை நோக்கி திரும்புவது உள்நாட்டில் ஒரு சமூக வெடிப்பு ஏற்படும் என்ற அச்சத்தாலும் உயிரூட்டப்படுகிறது. பிரிட்டன் ஒரு சமூக மற்றும் பொருளாதார கழிவிடமாகியுள்ளது. உலகளாவிய பெரும் பணக்காரர்களின் ஒரு சிறிய அடுக்கு நிதிய குற்றவியல் மற்றும் செழுமையான வாழ்க்கைக்கான சொர்க்கபுரியாக இலண்டனை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ள அதேவேளையில், அதை ஈடுசெய்வதற்காக மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் இன்னும் அதிக ஆபத்தான உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாதம், பிரிட்டனில் ஒவ்வொரு குடும்பமும் எரிபொருள் விலைகளில் 54 சதவீத பெரும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபரிலும் இதேபோன்ற ஓர் உயர்வு வரவிருக்கிறது. பணவீக்கம் 10 சதவீதத்திற்கு அண்ணளவாக ஊசலாடிக் கொண்டிருக்கையில், பிரிட்டன் குடும்பங்கள் கட்டணங்களுக்கும் மற்றும் பிற செலவுகளுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 2,620 பவுண்டு அதிகரிப்பை முகங்கொடுக்கின்றன.

மக்களால் வாழ முடியாதுள்ளது. பிரிட்டனின் மிகவும் பிரபலமான நிதித்துறை ஆலோசகர் மார்ட்டின் லிவிஸ் “நாம் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். நாம் அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இப்போது நாம் தவறாக நடந்துகொண்டால், பின்னர் உள்நாட்டு அமைதியின்மையின் ஆபத்து ஏற்படும் நிலைக்கு நாம் வருவோம்” என எச்சரித்துள்ளார்.

'பிரிட்டன் அதிருப்தியின் கோடையை நோக்கிச் செல்கிறதா?' என்று ஏப்ரல் 17 இல் Sunday Times கேள்வி எழுப்பி அதே முடிவுக்கு வந்திருந்ததுடன், “பல தசாப்தங்களாக நிர்வாகத்திற்கு ஆதரவாகவே இருந்த அதிகார சமநிலை மாறத் தொடங்கி இருப்பதாக ஓர் உணர்வு ஏற்பட்டு வருகிறது” என்று எச்சரித்தது.

40,000 இரயில் தொழிலாளர்கள், 40,000 பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் பள்ளித்துறை பணியாளர்கள் மற்றும் தபால் அலுவலக தொழிலாளர்களின் வாக்களிப்புடன் சாத்தியமான ஒரு வேலைநிறுத்த அலை உருவாகி வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ளதைப் போலவே, பிரிட்டிஷ் தொழிலாளர்களும் முதலாளிமார்களுக்கு எதிராக அவர்களின் மோதலை முன்னெடுக்க வர்க்கப் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளையும் மற்றும் ஒரு புதிய அரசியல் தலைமையையும் கட்டமைக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் பிரிட்டனின் ஆட்சியாளர்களின் பல தசாப்த கால தாக்குதலுடன் ஒத்துழைத்ததால், அவை கடும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களில், தொழிலாளர்கள் தங்கள் எதிரியை எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு வேலைத்தலங்களிலும் நிர்வாகத்துடனான நயவஞ்சகக் கூட்டை முடிவுக்குக் கொண்டு வர இப்போது அவர்கள் பகிரங்கமாகவே போராட்டங்களைத் தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கி உள்ளனர். அவர்கள் பழமைவாத அரசாங்கத்துடனும் தொழிற்சங்கங்களுடனும் மற்றும் அவற்றின் அரசியல் பங்காளிகளான தொழிற்கட்சியுடனும் உள்ள உயர்மட்ட வஞ்சகக் கூட்டையும் அவர்கள் எதிர்த்து போராட வேண்டியுள்ளது.

இந்த பெருந்தொற்றின் போது, தொழிற்சங்க காங்கிரஸ் சபை பில்லியன் கணக்கான தொகையை ஜோன்சன் பிரதான பெருநிறுவனங்களுக்கு வழங்கியதையும், பின்னர் 'வேலைக்குத் திரும்ப செய்யும்' திட்டத்தையும் அமுலாக்கியதையும் ஆதரித்தது. தொழிற்கட்சி, முதலில் ஜெர்மி கோர்பின் கீழும் பின்னர் கீர் ஸ்டார்மரின் கீழும், தேசிய நலனைப் பாதுகாக்க 'ஆக்கபூர்வமான விமர்சனங்களை' மட்டுமே வழங்க உறுதியளித்தது.

பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட இரண்டு பூட்டுதல்களின் போதும், சட்டவிரோத மதுபான விருந்துகளில் ஜோன்சன் கலந்து கொண்ட விவகாரத்தின் மீது இப்போது அவரின் தனிப்பட்ட தலைவிதி தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஸ்டார்மர் இறுதியில் தன்னை முற்றாக நிமிர்த்திக்கொண்டு இராஜினாமாவை கோரினார். ஏறக்குறைய 200,000 கோவிட் இறப்புகளுக்குக் காரணமானவரும் ஆயிரக் கணக்கில் அவர்கள் தொடர்ந்து சாகட்டும் என்று கூறிய, நோய்தொற்று ஏற்பட்ட தேசிய சுகாதார சேவையிலிருந்த நோயாளிகளைச் சட்டவிரோதமாக வெளியில் அனுப்பி மருத்துவமனைகளைக் கொலைக்களமாக மாற்றிய ஒரு மனிதரை மில்லியன் கணக்கான மக்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக அதை அவர் செய்யவில்லை. டவுணிங் தெருவின் 10 ஆம் இலக்க அலுவலகத்தை ஈட்டனில் படித்த கோமாளி ஆக்கிரமிப்பதை விட சிறப்பாக வின்ஸ்டன் சர்ச்சிலை உருவகப்படுத்தும் ஒரு டோரி தலைவரைத் தொழிற்கட்சி விரும்புகிறது.

தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant) நாடாளுமன்றத்தில் 'பிரதம மந்திரி இந்த சபைக்கு முன்வந்து 'நாம் தாக்கும் ஆயுதங்களைப்பற்றி பரிசீலிக்க வேண்டியிருக்கும். பிரிட்டிஷ் துருப்புக்களை அபாயத்திற்குட்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்” என்று கூறவேண்டியிருக்கலாம்' என்று எச்சரித்தார்.

இதனுடன் சேர்ந்து, 'பொருளாதாரம் மிகவும் கடினமான இடத்தில் இருப்பதாலும், அரசு நிதி மிகவும் சிக்கலான இடத்தில் இருப்பதாலும், கூடுதலாக தியாகங்களை செய்ய” அவர் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு கூற வேண்டியிருக்கலாம். அவர் தொடர்ந்து கூறினார், 'ஒரு தேசிய மற்றும் சர்வதேச நெருக்கடியின் தருணத்தில், நமக்கு முற்றிலும் முழுமையாக குற்றமற்ற தார்மீக அதிகாரம் கொண்ட ஒரு தலைவர் தேவைப்படுகிறார்' என்றார்.

ஸ்டார்மர் உட்பட, நாடாளுமன்றத்ததின் அரசியல் குற்றவாளிகளின் கும்பலில், அத்தகைய தலைவர் யாரும் இல்லை.

டோரிகள் மற்றும் தொழிற்கட்சியால் பகிர்ந்து கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள், வெகுஜன நோய்தொற்று மற்றும் போர் ஆகியவற்றை தோற்கடிக்க பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் அதன் கூட்டு பலத்தை அணித்திரட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, இந்த மே தினக் கூட்டம் எதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதோ அந்த உலகளாவிய சோசலிசத்திற்கான போராட்டத்தில் அவர்கள் தங்களுக்குரிய இடத்தை எடுத்துக்கொள்வார்கள்.

Loading