ரஷ்யப் போர் ஆக்ரோஷமடையும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் சீனாவை "மிகவும் தீவிரமான நீண்ட கால சவால்" என்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இராணுவ மோதல் வெடித்திருந்தாலும், சீனாவை முடக்குவது, தனிமைப்படுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மைய நோக்கம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் வியாழக்கிழமை ஒரு முக்கிய கொள்கை உரையில் கூறினார்.

உக்ரேனில் போர் வெடித்ததைத் தொடர்ந்து பல மாதங்கள் தாமதித்து வழங்கப்படும் பிளிங்கெனின் கருத்துக்கள், பெய்ஜிங் தான் அமெரிக்க இராணுவத்தின் மைய இலக்கு என்று அறிவிக்கும், பைடென் நிர்வாகத்தின் சீனா மீதான உள் அலுவலக மூலோபாய ஆவணத்தைப் பகிரங்கமாக முன்வைப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

'ஜனாதிபதி புட்டினின் போர்த் தொடர்ந்தாலும் கூட, சர்வதேச ஒழுங்கிற்கு மிகத் தீவிரமான நீண்டகால சவால் மீது — சீன மக்கள் குடியரசால் முன்வைக்கப்படும் இதன் மீது — நாங்கள் ஒருமுனைப்பட்டிருப்போம்' என்று பிளிங்கென் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறினார், 'சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கவும், மற்றும் அதைச் செய்வதற்கான அதிகப் பொருளாதார, இராஜாங்க, இராணுவ மற்றும் தொழில்நுட்ப சக்தியையும் கொண்ட ஒரே நாடு சீனா ஆகும்.'

“எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் நம் நலன்களை நாங்கள் பாதுகாப்போம்,” பிளிங்கென் தெரிவித்தார்.

ட்ரம்பின் கீழ் உருவாக்கப்பட்ட பொருளாதார 'துண்டிப்பு', பிளிங்கென் இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், இந்தக் கட்டமைப்பை அவர் அறிக்கைத் தழுவியுள்ளது. பெய்ஜிங்குடன் நல்லுறவை ஏற்படுத்த நிக்சன் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளைப் பிளிங்கென் வெளிப்படையாக மறுத்தளித்தார். 'இன்றைய சீனா, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சீனாவில் இருந்து மிகவும் வேறுபட்டது, அப்போது ஜனாதிபதி நிக்சன் அந்த நாட்டுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பல தசாப்தங்களாக இருந்த இறுக்கமான உறவுகளை உடைத்தார்,” என்றவர் அறிவித்தார்.

பிளிங்கென் தொடர்ந்து கூறினார், “இப்போது, சீனா அசாதாரணமான பரப்பெல்லையில், செல்வாக்குடன் மற்றும் வேட்கையுடன் ஓர் உலகளாவிய சக்தியாக உள்ளது. அது இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் ஆகும் … அது எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறைகளில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. அதன் இராணுவத்தை அது விரைவாக நவீனமயமாக்கி உள்ளதுடன், உலகளவில் ஓர் உயர்மட்ட போர்ப் படையாக மாற விரும்புகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கி, உலகின் முன்னணி சக்தியாக மாறுவதற்கான அதன் நோக்கத்தை அது அறிவித்துள்ளது.

பிளிங்கெனின் அறிக்கை ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய வெளியுறவுக் கொள்கையில் இருந்து மற்றொன்றையும் தழுவி உள்ளது: அதாவது, சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்புகளைக் குறிப்பிடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், “கோவிட் இன் தோற்றுவாய்கள் குறித்து சுதந்திரமான விசாரணையை' முடக்குவதாகக் கூறப்படும் சீனாவின் முயற்சிகளைக் கண்டித்ததன் மூலம், கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கிய இனவாத சதிக் கோட்பாட்டைப் பிளிங்கென் பயன்படுத்தினார்.

பிளிங்கென் அவர் தொனியையும் வாய்சவுடால் வழங்கும் விதத்தையும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பாணியில் வைத்தவாறு, மரத்துப் போன வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் முற்றிலும் முன்னுக்குப் பின் முரண்பாடான வலியுறுத்தல்களை வழங்கினார். பிளிங்கென் இரத்தம் உறைய வைக்கும் அச்சுறுத்தல்களை வழங்கியதுடன், அதைத் தொடர்ந்து உடனடியாக அமெரிக்கா யாரையும் அச்சுறுத்தவில்லை என்ற ஓர் அறிவிப்பையும் வழங்கினார்.

'நாங்கள் மோதலையோ அல்லது ஒரு புதிய பனிப் போரையோ விரும்பவில்லை,' என்று கூறிய பிளிங்கென், அதற்கு முன்னதாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை வாஷிங்டன் அதன் 'நலன்களுக்கு' ஓர் அச்சுறுத்தலாகக் கருதுகிறது என்பதையும், 'எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக எங்கள் நலன்களைப் பாதுகாக்க' தயாராக உள்ளோம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார்.

1992 அமெரிக்கப் பாதுகாப்பு திட்ட வழிகாட்டலில் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்ட 'வொல்போவிட்ஸ் கோட்பாடு' (“Wolfowitz doctrine”) என்றழைக்கப்படுவதே பிளிங்கென் கருத்துக்களுக்குக் குறிப்பிடப்படாத முன்மாதிரியாக இருந்தது, 'நம் நலன்களுக்கு முக்கியமான ஒரு பிராந்தியத்தில் எந்த விரோத சக்தியும் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கவும், அவ்விதத்தில் அமெரிக்கா மற்றும் நம் கூட்டாளிகளின் நலன்களுக்கு ஓர் உலகளாவிய அச்சுறுத்தல் மீண்டெழுவதற்கு எதிராகத் தடைகளை வலுப்படுத்தவும்' அந்தக் கோட்பாடு உறுதியளித்தது.

பிளிங்கெனின் பார்வையில், அமெரிக்க இராணுவமே அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இறுதி உத்தரவாதம் வழங்குகிறது. “நம் நாட்டில் பல்வேறு பலங்கள் உள்ளன. நம்மிடம் … ஏராளமான வளங்களும், உலகின் கையிருப்பு செலாவணியும், புவியிலேயே மிகவும் பலம் வாய்ந்த இராணுவமும் உள்ளன,” என்று பிளிங்கென் அறிவித்தார்.

'நம் பொருளாதார மற்றும் தொழில்நுட்பச் செல்வாக்கைத் தக்க வைப்பது மற்றும் விரிவாக்குவதற்கான நவீன தொழில்துறை மூலோபாயத்தில் தொடங்கி, நம் பொருளாதார மற்றும் வினியோகச் சங்கிலிகளுக்கு இன்னும் கூடுதலாக புத்துயிரூட்டுவது, நம் போட்டித்திறனின் முன்முகப்பைக் கூர்மைப்படுத்துவது என பைடென் நிர்வாகம் நம் தேசிய வலிமையின் முக்கிய ஆதார வளங்களில் நீண்டகால முதலீடுகளை செய்து வருகிறது,” என்று கூறி, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தலையாயதாக இருந்த இராணுவப் போட்டியை நோக்கிய 'ஒட்டுமொத்த சமூக' அணுகுமுறையையும் பிளிங்கென் பெரிதுபடுத்தினார்.

பிளிங்கெனின் போர் நாடும் கருத்துக்கள் அதேயளவுக்கு ஆக்ரோஷ நடவடிக்கைகளுடன் சேர்ந்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனைப் பயன்படுத்துவது போலவே, சீனாவுக்கு எதிரான முன்னணி போர்க் களமாக தைவானை மாற்றும் முயற்சியில், அமெரிக்கா அத்தீவுக்கு ஆயுதங்களைப் பாய்ச்சி வருகிறது.

உக்ரேன் போரில் அமெரிக்கா அதன் சொந்த ஈடுபாட்டை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பிளிங்கெனின் இந்த போர்வெறி சீனாவுக்கு எதிராக வருகிறது.

உக்ரேனுக்கு M142 High Mobility Artillery Rocket System (HIMARS) வழங்குவது குறித்து அமெரிக்கா தீவிரமாக விவாதித்து வருகிறது, இது நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரேனியப் படைகளுக்கு உதவும் ஓர் ஏவுகணை அமைப்பு என்று ராய்டர்ஸ் வியாழக்கிழமை குறிப்பிட்டது.

மிக முக்கியமாக, அமெரிக்க அதிகாரிகள் இந்த ஆயுத அமைப்பை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. 'அதிகரிப்பு குறித்து எங்களுக்கு கவலைகள் உள்ளன, இருந்தாலும் புவியியல் வரம்புகளை விதிக்கவோ அல்லது நாங்கள் அவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்து அவர்கள் கைகளை இறுக்கமாக கட்டி வைக்கவோ நாங்கள் விரும்பவில்லை,” என்று ஓர் அமெரிக்க அதிகாரி ராய்டர்ஸிற்குத் தெரிவித்தார்.

இந்த வார ஆரம்பத்தில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் லாயிட் ஆஸ்டின், டென்மார்க் வழியாக ஹார்பூன் ரக போர்க் கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கும் என்று அறிவித்தார். ஹார்பூன் ரக தளவாடம், பெரிய போர்க் கப்பல்களை மூழ்கடிக்கும் திறன் கொண்ட, அமெரிக்கக் கடற்படையின் நிலையான கப்பல்-தகர்ப்பு ஆயுதமாகும்.

வாஷிங்டன் போஸ்ட், அதன் பங்கிற்கு, இந்த மோதலுக்கு ஓர் அமைதியான தீர்வு கோரும் அனைவரையும் கண்டித்து, கூடுதலாக இதை விரிவாக்க கோரி வருகிறது.

அமெரிக்கப் போரை விரிவாக்குவதற்காக இப்போது பிரச்சாரம் செய்து வரும் ஒரு முன்னாள் ரஷ்ய அதிகாரியான போரிஸ் பொண்டரேவ் கூறியதை ஒப்புக் கொள்ளும் விதமாக போஸ்ட் மேற்கோளிடுகிறது. 'இப்போது உங்களால் சமாதானத்தை ஏற்படுத்தி விட முடியாது … அப்படி நீங்கள் செய்தால், அது ரஷ்ய வெற்றியாகப் பார்க்கப்படும் … ஒவ்வொருவருக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஓர் ஒட்டுமொத்தமான தெளிவான தோல்வி மட்டுமே அவர்களுக்குப் பாடம் புகட்டும்,” என்றவர் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் குறித்து கருத்துரைத்து போஸ்ட் குறிப்பிடுகையில், “புட்டினின் முக்கிய போர் நோக்கங்கள் முறியடிக்கப்படுவதற்கு முன்னால் திரு. புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டால், அது —தார்மீக ரீதியிலும் மூலோபாய ரீதியிலும் — இரண்டு விதத்திலும் ஒரு தோல்வியாக இருக்கும்… உதவுவதற்கு உக்ரேனின் நண்பர்களுக்கு உள்ள சிறந்த வழி — அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி விட்டு — முக்கிய ஆயுதங்கள் அனுப்புவதைத் துரிதப்படுத்துவதாகும்,” என்று குறிப்பிட்டது.

இத்தகைய கருத்துக்கள், போருக்கு எந்தவொரு அமைதித் தீர்வு காண்பதற்கும் அமெரிக்கா முற்றிலும் விரோதமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. ரஷ்யா அதன் சொந்த இடமாக பார்க்கும் கிரிமியாவையும் டொன்பாஸையும் மீண்டும் கைப்பற்றுவதே இந்த மோதலின் நோக்கங்களாக உள்ளன.

உக்ரேனிலோ, தைவான் ஜலசந்தியிலோ அல்லது இந்த இரண்டு இடங்களிலோ, அமெரிக்கப் படைகளை உள்ளடக்கிய ஒரு நேரடி துப்பாக்கிச் சூடு விரைவிலேயே ஒரு நேரடி போராக விரிவடைய அச்சுறுத்தும் இராணுவ விரிவாக்க போக்கிற்கு அமெரிக்கா களம் அமைத்து வருகிறது. பைடென் நிர்வாகம் திட்டமிட்டு வரும் பாதை, ஏற்கனவே பத்து ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள உக்ரேன் போரில் உயிர்களை அச்சுறுத்துவதோடு மட்டுமில்லாமல், மாறாக நூறு ஆயிரக் கணக்கான, அல்லது இன்னும் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை அச்சுறுத்துகிறது.

உக்ரேனியர்களை, தைவானியர்களை, ஆஸ்திரேலியர்கள் அல்லது அமெரிக்கர்களையும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் 'நலன்களுக்காக' வரம்பின்றி உயிர் தியாகம் செய்ய விரும்புகிறது.

இந்த அபிவிருத்திகளை ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் மனிதகுலத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் போரால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடியானது, உலகெங்கிலும் தொழிலாளர்களை அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்வதற்கான ஆளும் வர்க்கங்களின் முயற்சிகளுக்கு எதிராகவும் போராட்டத்திற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த உலகளாவிய இயக்கம் ஒரு புதிய உலகப் போரைத் தடுப்பதற்கும் மற்றும் மனிதகுலத்தைச் சூழ்ந்துள்ள பேரழிவைத் தடுப்பதற்குமான சமூக அடித்தளத்தை வழங்குகிறது.

Loading