முன்னோக்கு

பட்டினி மற்றும் அதிகரித்து வரும் உணவு விலைகளுக்கு யார் பொறுப்பு?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில், உலகின் முதலாளித்துவ அரசியல்வாதிகள், தலைமை நிறுவன நிர்வாகிகள் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட பத்திரிகையாளர்களும் உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர், இந்த உணவு நெருக்கடி விளாடிமிர் புட்டின் என்ற தனியொருவரால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்து டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார பேரவையில் இருந்த கொழுத்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென், “நலிந்த நாடுகளும் மற்றும் பலவீனமானவர்களும்' தான் இந்த அதிகரித்து வரும் உணவு விலைகளால் 'மிகவும் பாதிக்கப்படுவார்கள்' என்று புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கவலையை உதிர்த்தார். “வெட்கக்கேடாக' பட்டினியில் இருந்து இலாபம் ஈட்டுவதாக, முன்னாள் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஷ்யா மீது பழி சுமத்திய போது, சுய-நீதிமான்களான அந்த பில்லியனர்களின் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது. பெருந்திரளான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பட்டினி அச்சுறுத்தலைத் தணிக்க 'உடனடியாக தேவைப்படும் பொருட்களுடன் உலகளாவிய உணவுத் திட்டத்தை' வழங்குமாறு அப்பெண்மணி வலியுறுத்திய போது தலைகள் அசைந்து ஆமோதித்தன.

அப்பட்டமான பாசாங்குத்தனம். ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா. சபை உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி, 'பஞ்சத்தை எதிர்த்துப் போராட பில்லியனர்களுக்கு ஒரு முறை வேண்டுகோள் விடுத்தார்', உலகின் பணக்காரர்கள் அவர்கள் வசமிருக்கும் 13.1 ட்ரில்லியன் டாலர் நிகர செல்வத்தில் வெறும் 6.6 பில்லியன் டாலரை (அல்லது ஒட்டுமொத்தத்தில் 0.04 சதவீதத்தை) நன்கொடையாக வழங்கினால், 2022 இல் உலகளவில் பசியை அகற்றி விட முடியும், மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றி விட முடியும் என்று அந்த அறிக்கை விளக்கியது.

ஊகிக்கக் கூடிய வகையில் இந்த முறையீடு காதுகளில் விழவில்லை, அதற்கடுத்த ஆறு மாதங்களில், அதிநவீனத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்ட ஒரு நவீன உலகில், 4.5 மில்லியன் மனித உயிர்கள் பண்டைய காலத்திலேயே கற்பனை செய்யக்கூடிய விதத்தில் உயிரிழந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் 9 மில்லியன் பேர் பட்டினியால் இறக்கிறார்கள், போர் பிரச்சாரத்திற்காக சல்லடைப் போட்டு தேடி அதற்காக மட்டுமே இறந்தவர்களைக் குறிப்பிடும் முதலாளித்துவ ஊடகங்கள் இந்த பட்டினிச் சாவு குறித்து எதுவும் கவனம் செலுத்துவதில்லை.

பெருந்திரளான மக்களின் பட்டினி மற்றும் உலகளாவிய பசிக் கொடுமைக்கான நிஜமான ஆதாரம் முதலாளித்துவம் ஆகும். 20 மில்லியன் பேரைக் கொன்றுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் போது சமூக சமத்துவமின்மை பாரியளவில் அதிகரித்திருப்பதை விளக்கி ஆக்ஸ்ஃபாம் இந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வேளாண் வணிகத் துறையில் அதிகரித்து வரும் உணவு விலைகளில் இருந்து இலாபமீட்டும் 62 நபர்கள் உட்பட, “இந்த பெருந்தொற்றின் போது சராசரியாக ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய பில்லியனியர் உருவெடுத்துள்ளார்' என்று ஆக்ஸ்ஃபாம் குறிப்பிட்டது. 'நம் உணவு முறையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களும் பில்லியனிய வம்சங்களும் அவர்கள் இலாபம் உயர்வதைக் காண்கிறார்கள்' என்று அறிக்கை கூறுகிறது.

சான்றாக, விளாடிமிர் புட்டின் 'அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக பசி மற்றும் தானியங்களைப் பயன்படுத்துவதாக' வொன் டெர் லெயென் கண்டித்த போது, அங்கே இரண்டு பேர் இருந்தார்கள் —Cargill நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் மக்லெனன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரைன் சைக்ஸ்—இவர்களும் அந்த கைத்தட்டலில் இணைந்திருக்கலாம். ஆனால் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து Cargill குடும்பத்தின் ஒருமித்த செல்வ வளம் 14.4 பில்லியன் டாலர் அதிகரித்தது, இது உலகளவில் பசியைப் போக்க இரண்டு மடங்கு போதுமானது என்பதுடன், அதற்கு மேலும் பல பில்லியன்கள் மிஞ்சி இருக்கும்.

கோவிட்-19 பெருந்தொற்று நிரூபித்துள்ளதைப் போல, முதலாளித்துவ வர்க்கம் அதன் செல்வத்தில் மிகச் சிறிய பகுதியை வழங்குவதை விட எண்ணிக்கையின்றி உயிர்களைப் பலி கொடுக்கும். இதே போல ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரைக் கட்டமைப்பவர்களும் —பசி மற்றும் அணு ஆயுதப் பேரழிவின் மூலம்— ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும் அதன் செல்வத்தைக் கைப்பற்றுவதற்கும் பில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் உயிர்களைத் தியாகம் செய்ய தயாராக உள்ளனர்.

தற்போதைய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு, அமெரிக்க அரசாங்கமும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளுமே முக்கிய பொறுப்பாகின்றன. ஒரு 'நீண்ட மற்றும் வலி மிகுந்த போரை' உறுதி செய்வதே அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கம் என்பதை ஜோ பைடென் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார், உணவுப் பொருட்களின் விலை உயர்வு அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளின் பிரதிபலிப்பாகும். போர் நீடிப்பதன் விளைவாக, எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் பைனான்சியல் டைம்ஸிடம் கூறியது போல, 'மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பார்கள்.'

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் ஒரு தொழில்துறை நிபுணர் கூறுகையில், “இது அதிர்ச்சிகரமானது. நாம் அசாதாரண அளவிலான மனித துயரத்தின் அபாயத்தை எதிர் கொண்டிருக்கிறோம்,” என்றார். யுரேஷியா குழுவின் மே 23 அறிக்கையின்படி, வெறும் 90 நாட்களில் 400 மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பை இழந்துள்ளனர், இது மொத்த எண்ணிக்கையை மலைப்பூட்டும் அளவுக்கு 1.6 பில்லியனுக்குக் கொண்டு வருகிறது. இந்த போர் தொடர்ந்தால், உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை இந்த ஆண்டு 45 சதவீதம் உயரும், இது முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும் என்று அதே அறிக்கை விளக்குகிறது.

இந்த மாதம் அமெரிக்க காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட 40 பில்லியன் டாலர் இராணுவ உதவி மசோதா, வேண்டுமென்றே போரை நீடிக்க நோக்கம் கொண்டிருப்பதுடன், வேளாண் பருவக் காலத்தில் இடையூறு செய்வதன் மூலம் உணவுப் பொருள் நெருக்கடியைப் பாரியளவில் தீவிரப்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது. “மனிதாபிமான' உதவிக்காக வழங்கப்படுகிறது என்ற இந்த சட்ட மசோதாவின் ஒவ்வொரு பைசாவும் வெறுமனே கண்துடைப்பாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புகளின் போது அமெரிக்கா வழங்கிய 'உதவி' போலவே, ஏறக்குறைய இது மொத்தமும் ஊழல் அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளின் பைகளில் சென்று சேரும்.

இந்த மசோதாவை ஆதரித்த ஒவ்வொரு அரசியல்வாதியும் மற்றும் ஒவ்வொரு அமைப்பும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் வாயிலிருந்து உணவைப் பிடுங்க வாக்களித்துள்ளனர். இதில் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ், பேர்ணி சாண்டர்ஸ், ரஷிதா தலீப், இல்ஹான் ஒமர் மற்றும் ஜமால் பவ்மன், அமெரிக்க ஜனநாயகச் சோசலிஸ்டுகள் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் லீக் போன்ற சர்வதேச 'இடது' குழுக்கள், பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் உலகின் பசுமைக் கட்சிகள் ஆகிய அனைத்தும் உள்ளடங்கும். இந்தப் போரை ஆதரித்திருப்பதன் மூலம், அவர்கள் தங்களைத் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகள் என்று நிலையான முத்திரையைப் பதித்துள்ளனர், இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவுகரமான பாதிப்பைக் கொண்டுள்ளது.

உணவு நெருக்கடியின் தீவிரம் பெருந்திரளான தொழிலாளர்களை வர்க்கப் போராட்டத்திற்குள் இழுத்து வருகிறது. பாரியளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் நிதியச் சந்தைகளுக்குள் தொடர்ந்து பணம் பாய்ச்சுவது ஆகியவை பணவீக்கத்தை எகிறச் செய்துள்ளதுடன், இவை எல்லா பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் விலைகளை உயர்த்தி வருகின்றன.

உலகளாவிய உணவுத் திட்டத்தின் இயக்குனர் டேவிட் பீஸ்லி சமீபத்தில் கூறுகையில், “இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பெரு என்று நாம் பேசும் போது, ஏற்கனவே நாம் கலவரங்கள் மற்றும் போராட்டங்களைப் பார்க்கிறோம். புர்கினா பாசோ, மாலி, சாட் இல் இருந்து சஹேலில் வரை ஏற்கனவே நிலைகுலைக்கும் இயக்கவியலைப் பார்த்துள்ளோம். இவை வரவிருக்கும் விஷயங்களின் வெறும் அறிகுறிகள் மட்டுமே ஆகும்,” என்று எச்சரித்தார்.

8.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தெஹ்ரான் போன்ற நகரங்களில் நடக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுடன் சேர்ந்து, 300 சதவீதம் மாவு உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள ஈரான் எங்கிலும் பாரிய போராட்டங்கள் இப்போது வெடித்துள்ளன. நாடு தழுவி நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள், இலங்கை, பெரு மற்றும் பிற இடங்களிலும் தொடர உள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும், தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தை முறிக்கவும், அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தொழிலாளர்கள் ஓர் ஒன்றுபட்ட போராட்டம் தொடுப்பதைத் தடுக்கவும் சேவையாற்றுகின்றன.

துனிசியாவில், மிகப் பெரும் தன்னியல்பான நடவடிக்கையெனும் ஒரு பேராபத்தைத் தடுப்பதற்காக, முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் சுகாதாரத் துறை தொழிலாளர்கள் அதிகரித்து வரும் விலை உயர்வுகள் மற்றும் இந்த பெருந்தொற்று சுகாதாரத் துறை அமைப்புமுறை மீது ஏற்படுத்தி உள்ள நாசகரமான தாக்கம் ஆகியவற்றின் விளைவாக இம்மாதம் தொழிற்சங்கங்களின் ஒப்புதல் இல்லாமலேயே வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அர்ஜென்டினாவின் கார்டோபாவில் பேருந்து ஓட்டுநர்கள் உணவு மற்றும் பிற வாழ்வாதார செலவுகள் சம்பந்தமாக ஒரு தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இந்த இயக்கம் வளரும் நாடுகளோடு நின்று விடவில்லை. கோபன்ஹேகனில் சாமான் கையாளுபவர்கள் அதிகரித்து வரும் உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் சம்பந்தமாக திடீரென தன்னிச்சையான ஒரு வேலைநிறுத்தம் தொடங்கினர். டேனிஷ் பத்திரிகைகளின்படி, 'சாமான்கள் கையாளும் தொழிலாளர்கள் திங்கட்கிழமையில் இருந்து மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டும் என்று டேனிஷ் தொழிலாளர் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது, ஆனால் அது பின்பற்றப்படவில்லை.' பிரான்சின் Saint-Nazaire விமானத் துறை தொழிலாளர்கள் சம்பளங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் சம்பந்தமாக தினமும் தன்னிச்சையாக திடீர் வெளிநடப்புகளைச் செய்ய தொடங்கி உள்ளனர்.

இங்கிலாந்தில், டோரி நிதி அமைச்சகம் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை 'உலகப் பேரழிவாக' குறிப்பிட்டுள்ளது. அங்கே தொழிலாளர்கள் 9 சதவீத பணவீக்கம், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களில் 54 சதவீத உயர்வுடன் திண்டாடி வருகிறார்கள். Ipsos கருத்துக் கணிப்பின்படி, 85 சதவீத பிரித்தானியர்கள் இந்த அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

இந்த வெடிப்பார்ந்த சூழலில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிக சம்பள உயர்வுகளைக் கோரி வடக்குக் கடலில் உள்ள பல எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் 1,000 தொழிலாளர்கள் நடத்திய தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தமானது, இந்த அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்களை ஒத்துழைக்கும் அமைப்புகளாக அல்ல மாறாக தடைகளாக தொழிலாளர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு பலமான அறிகுறியாகும். இந்த வேலைநிறுத்தம் ஒரு பெருநிறுவன ஊடக இருட்டடிப்புக்கு உள்ளாகி இருந்தது என்ற போதும், ஒரு தொழில்துறை செய்தி அறிக்கை குறிப்பிடுகையில், 'சம்பளப் புரட்சி தொடங்கி விட்டது — நாங்கள் ஒரேயொரு நிறுவனத்தைக் குறிப்பிடவில்லை மாறாக ஒட்டுமொத்தமாக உலகெங்கிலுமான தொழில்துறையைக் குறிப்பிடுகிறோம்,” என்றது.

ஒரு முதலாளி அல்லது நிறுவனத்திற்கு எதிரான ஒரு தனிப்பட்ட போராட்டம் எவ்வளவு தான் போர்குணம் மிக்கதாக இருந்தாலும் அந்த கட்டமைப்புக்குள் இருந்து வாழ்க்கைச் செலவு நெருக்கடி அல்லது உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை. மலிவு விலை உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான மற்றும் அதிக சம்பள உயர்வுக்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் அதன் முழு பலத்தையும் பயன்படுத்த தொழில்துறைகளைக் கடந்து, நாடுகளைக் கடந்து, வேலையிடங்களைக் கடந்து ஒன்றுபட வேண்டும்.

இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான மற்றும் அவர்கள் கட்டுப்படுத்தும் அரசாங்கங்களுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாகும். மனிதகுலத்தின் தொழில்நுட்ப மேதைமையையும் தொழில்துறை வல்லமையையும் உறிஞ்சி, இவற்றை ஒவ்வொரு இடத்திலும் உயிர்களைக் காப்பாற்றி வாழ்வை மேம்படுத்த வேண்டிய கடுமையான தேவை வரும் போது மரணத்தை நோக்கியும் நாசத்தை நோக்கியும் திருப்பி விடும் ஏகாதிபத்திய போரை நிறுத்தாமல் இதை வென்றெடுக்க முடியாது. இதற்குப் பெரும் பணக்காரர்களின் செல்வத்தைப் பறிமுதல் செய்து, பசியை இல்லாதொழிக்கவும் தீராத பேராசையை ஒழிக்கவும், உலகின் உற்பத்தி சக்திகளைத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும் ஒரு சோசலிசப் புரட்சி தேவைப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் இந்த சர்வதேச இயக்கத்தில் இணைய ஆர்வமுள்ள அனைத்து தொழிலாளர்களும் இன்றே சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் சாமானிய தொழிலாளர் குழுவைத் (IWARFC) தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading