சீனாவிற்கு ஒரு உக்ரேன் மாதிரியிலான புதைகுழியை தயார் செய்ய தைவானை அமெரிக்கா ஆயுதமயமாக்குகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி பைடெனின் ஆசியப் பயணம், தைவான் தொடர்பாக சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களை கூர்மையாக முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. சீனாவுடனான ஒரு மோதலின் போது பல தசாப்தங்களான அமெரிக்கக் கொள்கையைத் தலைகீழாக மாற்றி தைவானை இராணுவரீதியாக ஆதரிப்பதற்கு அமெரிக்காவிற்கு 'உறுதிப்பாடு' இருப்பதாக பதவியேற்றதிலிருந்து மூன்றாவது முறையாக பைடென் உறுதியாக அறிவித்தார்.

இடமிருந்து: டோக்கியோவில் மே 24, 2022 செவ்வாய்க் கிழமை, கான்டேய் அரண்மனையில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடென், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா (AP Photo/Evan Vucci)

1979ல் அமெரிக்கா சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, தைவானுடனான அனைத்து சம்பிரதாய உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அது ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டது. இது தைவான் தீவு உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை அங்கீகரித்தது. இதன் விளைவாக 'மூலோபாய இரட்டைத்தன்மை' சீனாவுடனான போரில் தைவானுடன் பக்கபலமாக இருக்க உறுதியாக மறுத்தது. அந்தக் கொள்கையானது சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல், தைவானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகை வலியுறுத்திய நிலையில், அமெரிக்கா, முதலில் ட்ரம்பின் கீழும், இப்போது பைடெனின் கீழும், ஆசியாவின் மிகவும் சாத்தியமான வெடிக்கும் புள்ளியான தைவான் தொடர்பான நிலைப்பாட்டை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தைவானுக்கான உயர்மட்ட பயணங்கள், தீவில் அமெரிக்க இராணுவப் பயிற்சியாளர்களின் வெளிப்படையான இருப்பு, ஆயுத விற்பனையை அதிகரித்தல் மற்றும் தைவான் ஜலசந்தி வழியாக அதிகரித்த போக்குவரத்து ஆகியவை சீனாவிற்கு எதிரான கணிப்பிடப்பட்ட ஆத்திரமூட்டல்களாகும்.

இப்போது ரஷ்யாவை வலுவிழக்க மற்றும் ஸ்திரமின்மைக்கு ஆளாக்குவதற்கு உக்ரேனை ஒரு இராணுவ புதைகுழியாக மாற்றியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், தைவானிலும் சீனாவிற்கு அதேபோன்ற ஒரு பொறியை வேண்டுமென்றே அமைத்து, தூண்டில் போடுகிறது. உக்ரேன் போரை முன்மாதிரியாக கொண்டு, சீனாவுடனான நீடித்த மோதலுக்கு தைவானை ஆயுதமயமாக்குவது பற்றி ஊடகங்களிலும் மூலோபாய மற்றும் இராணுவ வட்டாரங்களிலும் வெளிப்படையான விவாதம் நடைபெறுகிறது.

நியூ யோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரை நேற்று பின்வருமாறு தெரிவித்துள்ளது: “அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனை ஆயுதமயமாக்கிய பாடங்களை எடுத்துக்கொண்டு, உலகின் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட சீனாவின் கடல் மூலமான படையெடுப்பை எதிர்க்க தைவானுடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஒரு வலுவான சக்தியை வடிவமைத்து விரட்டக்கூடிய கடல் பலத்தை உருவாக்குகின்றது. தாய்வானை சில அதிகாரிகள் 'முள்ளம்பன்றி' என்று அழைக்கும் ஒருபகுதியாக, ஆயுதங்கள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான ஆதரவின் பிற வடிவங்களுடன் தாக்கி மிகவும் வேதனையை உருவாக்கும் ஒரு பிரதேசமமாக்குவதே இதன் நோக்கமாகும்'.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான மோதலைப் போலவே, அமெரிக்க போர்த் திட்டமிடல் சீன ஆக்கிரமிப்பிலிருந்து 'ஜனநாயக தைவானை' பாதுகாப்பது என்பதாக காட்டப்படுகின்றது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஒரு பிற்போக்குத்தனமான பதிலடியாக இருந்தாலும், அமெரிக்கா பல ஆண்டுகளாக உக்ரேனை ஆயுதமயமாக்கி, பின்னர் ரஷ்ய தாக்குதலைத் தூண்டியது. வாஷிங்டனே சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கும் தைவான் விஷயத்தில், மோதலைத் தூண்டக்கூடிய எத்தனையோ ஆத்திரமூட்டல்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

சீனாவிடமிருந்து முறையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்த தைபேயில் உள்ள அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும் அல்லது தீவை அமெரிக்க செல்வாக்கு மண்டலத்தில் இணைத்துக்கொள்வது பெய்ஜிங்கிற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. தைவான் மூலோபாய ரீதியாக சீன நிலப்பகுதிக்கு சற்று அப்பால் அமைந்திருப்பது மட்டுமல்லாமல், அதன் தைவான் குறைகடத்தி (Semiconductor) உற்பத்தி உயர்நிலை கணினி சில்லுகளின் உற்பத்தியில் உண்மையான ஒரு உலகளாவிய ஏகபோகத்தைக் கொண்டுள்ளது.

உக்ரேனில் 'வெற்றியால்' உற்சாகமடைந்து, சீன இராணுவத்திற்கு எதிராக தைவானில் ஒரு நீடித்த இராணுவ மோதலுக்கான அமெரிக்கத் திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. நியூ யோர்க் டைம்ஸ் விளக்கியது போல்: “சமநிலையற்ற போருக்குத் தகுந்த ஆயுதங்களை வாங்க அமெரிக்க அதிகாரிகள் தங்கள் தைவானிய சகாக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவற்றால், இந்த மோதலில் ஒரு சிறிய இராணுவம் நகரக்கூடிய அமைப்புகளை பயன்படுத்தி மிகப் பெரிய படை மீது கொடிய தாக்குதல்களை நடத்தலாம் என்று அமெரிக்கா மற்றும் தைவான் அதிகாரிகள் கூறுகின்றனர்.'

அந்தக் கட்டுரை மேலும் கூறியது: “அது சமீபத்தில் வாங்கிய அமெரிக்கத் தயாரிப்பான ஆயுதங்கள், நகரக்கூடிய ஏவுகணைத்தளங்கள், F-16 போர் விமானங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு எறிகணைகள் ஆக்கிரமிப்பு படையை விரட்டுவதற்கு மிகவும் பொருத்தமானவை. சில இராணுவ ஆய்வாளர்கள் தைவான் பின்னர் கடல் கண்ணிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய ஆளற்ற ட்ரோன்களை வாங்கலாம் என்று கூறுகிறார்கள். உக்ரேனில் உள்ளது போல், அமெரிக்க அரசாங்கம் துருப்புக்களை அனுப்புவதைத் தவிர்த்தாலும் கூட, அழிவுகரமான ஆயுதங்களை அதிகரிக்க உளவுத்துறை வசதியை வழங்க முடியும்”.

வாஷிங்டன் இதற்கு 'அழுத்துவது' மட்டுமல்ல, பென்டகனின் போர்த் திட்டத்திற்கு ஏற்ப தைபே ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பைனான்சியல் டைம்ஸ் இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் மீரா ரெஸ்னிக், பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம், பைடென் நிர்வாகம் சமநிலையற்ற போருக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு 'தைவானை இன்னும் வலுவாக வழிநடத்த விரும்புகிறது' என்றும் அமெரிக்க உற்பத்தியாளர்கள் இந்த வரையறைகளுக்கு அப்பால் ஆயுதங்களை வெளியே விற்க அனுமதிக்காது என்றும் கூறியதாக இந்த மாத தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது.

இக்கட்டுரையின் படி: “12 MH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் கோரப்பட்டால் அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று வாஷிங்டன் பின்னர் தைபேயிடம் கூறியுள்ளது. E2-D முன்கூட்டிய எச்சரிக்கும் விமானத்தை வாங்கும் தைவான் திட்டத்தையும் அமெரிக்கா தடுத்துள்ளது”.

சீனப் படையெடுப்பின் கடுமையான 'அச்சுறுத்தல்' குறித்து அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் பெருகிவரும் தகவல்கள், சீன ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கான எந்த ஆதாரத்தையும் காட்டுவதிலும் பார்க்க பென்டகன் போர் திட்டமிடுபவர்கள் வேலை செய்யும் கால அட்டவணையை பற்றித்தான் அதிகம் பேசுகிறது. தைவானிய இராணுவ ஆய்வாளர் சு சூ-யுன் பைனான்சியல் டைம்ஸிடம்: 'தற்போது சீனா இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு என்று நான் நம்புகிறேன்' எனக் கூறினார்.

ஆயினும்கூட, போர் திட்டமிடல் மற்றும் அதுபற்றிய விவாதம் பொறுப்பற்ற முறையில் இராணுவ முன்னணியில் மட்டுமல்ல, சீனாவிற்கு எதிரான பொருளாதாரப் போரை நோக்கியும் வேகமாகச் செல்கிறது. நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்துள்ளபடி: “தைவான் மீது மோதல் ஏற்பட்டால், உக்ரேனை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருளாதாரத் தண்டனைகள் மற்றும் இராணுவ உதவிகளை எந்த அளவுக்குப் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே விவாதித்து வருகின்றனர்.”

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தைவான் ஜலசந்தி வழியாக ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்களின் போக்குவரத்தின் துணையுடன் அமெரிக்க போர்க்கப்பல்களின் போக்குவரத்து எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகவும் நியூ யோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனையும் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் 5 பில்லியன் டாலர்கள் உட்பட, 2010ல் இருந்து 23 பில்லியனுக்கும் அதிகமான கொள்முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் மீது வாஷிங்டனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் ஆத்திரமூட்டும் மற்றும் மோதலை துரிதப்படுத்தக்கூடும் என்பதை அமெரிக்க மூலோபாய வட்டங்களில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். நியூ யோர்க் டைம்ஸின் கருத்துகளில், அமெரிக்க ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் ஆசிய திட்டத்தின் இயக்குனரான ஆய்வாளர் போனி கிளேசர், சுருங்கிய விதத்தில் இதனை ஒப்புக்கொண்டார். 'சீனாவை எது தடுக்கிறது, எது சீனாவைத் தூண்டுகிறது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோமா?' என அவர் கேட்டார். 'அதற்கான பதில் 'இல்லை,' அது ஆபத்தான பிரதேசம்' என்பதாகும் என்றார்.

நியூ யோர்க் டைம்ஸின் வார்த்தைகளில்: 'இந்த வாரம் டோக்கியோவிற்கு விஜயம் செய்தபோது ஜனாதிபதி பைடெனின் வலுவான மொழி ஆத்திரமூட்டலுக்கு முனைந்தது என திருமதி கிளாசர் மற்றும் வாஷிங்டனில் உள்ள பிற ஆய்வாளர்கள் கூறினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 'மூலோபாய தெளிவின்மையை' அகற்றுவது, உக்ரேனைப் போலவே, அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு மோதலாக வெடிக்கும் சசாத்தியத்தைக் கொண்ட ஒரு போராக ஆசியாவை நகர்த்தக்கூடும் என்பது வாஷிங்டனில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

தைவான் மீது வாஷிங்டனின் வேண்டுமென்றே தூண்டில் சீனாவுடனான அதன் மோதலின் ஒரு பகுதியாகும். இது ஒபாமாவின் 'ஆசியாவிற்கு முன்னுரிமை' என்பதில் தொடங்கியது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அமெரிக்கா இராஜதந்திர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெய்ஜிங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்று, போருக்கான தயாரிப்பில் பிராந்தியம் முழுவதிலும் பாரிய இராணுவக் கட்டியெழுப்பலுடன் கைகோர்த்து வருகிறது.

அதன் வரலாற்றுச் வீழ்ச்சியின்போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய நிலைமையை பலமிழக்கச்செய்யும் மற்றும் ஸ்திமற்றதாக்கும் நிலையிலிருந்து பாதுகாக்க ரஷ்யா மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவின் சாத்தியமான சவால்களுக்கு எதிராகவும் மற்றும் யூரேசிய நிலப்பரப்பின் அபரிமிதமான வளங்கள் மற்றும் மூலோபாய பிராந்தியங்களுக்கு தங்குதடையற்ற அணுகலை பெறத் தீவிரமாய் உள்ளது. உக்ரேனில் நிரூபிப்பது போல், இதுவரை போர் உருவாக்கிய பேரழிவுகள் மற்றும் பெரும் உயிர் இழப்புகள் குறித்து குற்றவியல் அலட்சியத்துடன் அது செய்கிறது. இப்போது தைவானிலும் அதையே செய்ய அமெரிக்கா தயாராகி வருகிறது.

Loading