மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும். வாண்ட்ரேயர் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர். அனைத்து உரைகளையும் கேட்க, படிக்க, wsws.org/mayday ஐ பார்வையிடவும்.

Christoph Vandreier, National Secretary of the Sozialistische Gleichheitspartei (Germany)

இந்த வரலாற்று சிறப்புமிக்க மே தினத்தில் கலந்துகொண்டு சோசலிச சமத்துவக் கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜேர்மனியிலும் வர்க்கப் போராட்டம் வேகமாக தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் முற்றிலும் தவிர்க்கமுடியாது கோவிட்டினால் இறக்கின்றனர். ஏனென்றால் அரசாங்கம் மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை விட இலாப நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

உணவுப் பொருட்களின் விலையதிகரிப்பு 20 முதல் 50 சதவிகிதமும் பயங்கரமான எரிசக்தி செலவுகளும் ஊதியத்தை பெருமளிவில் அழித்து தொழிலாளர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கின்றது. 'எந்த சுதந்திரத்திற்காக நான் குளிரில் உறைய வேண்டும்?' என ஒரு தொழிலாளி ஒரு பல்பொருள் அங்காடியின் முன்னால் எங்களிடம் கேட்டார். 'சுதந்திரத்திற்காக குறைந்த ஊதியத்திற்கும் நீண்ட நேரமும் வேலை செய்யவேண்டுமா?“ எனக் கேட்டார்.

உக்ரேனில் ஒரு பினாமிப் போரின் தன்மை இன்னும் தெளிவாகத் தெரிகையிலும் மற்றும் மூன்றாம் உலகப் போரின் ஆபத்து அதிகரிக்கையிலும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அது தொடர்பாக அதிக நிராகரிப்பு காணப்படுகின்றது. இரண்டு உலகப் போர்கள் மற்றும் மனித வரலாற்றில் மிக மோசமான குற்றங்களுக்குப் பின்னர், இராணுவவாதத்தின் மீதான எதிர்ப்பு ஜேர்மன் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

ஆனால் ஜேர்மன் அரசாங்கம் மீண்டும் அதன் பயங்கரமான மரபுகளை மீட்டெடுத்து மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகி வருகிறது. சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பிற்கு 81 ஆண்டுகளுக்கு பின்னர், ஜேர்மன் டாங்கிகள் மீண்டும் ரஷ்யாவினை நோக்கி உருண்டு கொண்டிருக்கின்றன.

கிழக்கு ஜேர்மனியின் முன்னாள் தேசிய மக்கள் இராணுவத்தின் கையிருப்பிலிருந்த டாங்கிகள் ஏற்கனவே உக்ரேனுக்கு வழங்கப்பட்ட பின்னர், மத்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு ரைன்மெட்டால் மற்றும் க்ராஸ்-மாஃபாய் போன்ற ஆயுத நிறுவனங்கள் நவீன காலாட்படை சண்டை வாகனங்கள், பிரதான போர் டாங்கிகள் மற்றும் விமான எதிர்ப்பு டாங்கிகளை வழங்க தயாராகி வருகின்றன.

இந்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே ஹிட்லரின் இராணுவத்திற்கான டாங்கிகளை உற்பத்தி செய்திருந்தன. அதற்காக பல்லாயிரக்கணக்கான கட்டாய உழைப்பாளிகளையும் மற்றும் வதைமுகாம் கைதிகளையும் சுரண்டி பின்னர் அழித்தன.
இந்த போர் எந்திரம் இப்போது ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் இயக்கிவிடப்பட்டுள்ளது. உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ஒரு ஆரம்பம் மட்டுமே.

ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பின்னர், அதிபர் ஓலாஃப் ஷொல்ஸ் நிலைமைகளின் திருப்பத்தை அறிவித்து ஜேர்மன் போர் வரவு-செலவுத் திட்டத்தின் மும்மடங்கு அதிகரிப்பை அறிவித்தார்.

இதன் பொருள் ஜேர்மனி வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட இந்த ஆண்டு ஆயுதங்களுக்காக கணிசமாக அதிக பணம் செலவழிக்கிறது.

வலதுசாரி ஹம்போல்ட் பேராசிரியர் ஹெர்ஃபிரைட் முங்க்லர் 2014 இல் மீண்டும் அழைப்பு விடுத்ததுபோல் ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த இராணுவ சக்தியாகவும் மற்றும் 'கடிவாளத்தை பிடிப்பவனும்' ஆக விரும்புகிறது.

இந்த கொடூரமான ஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு, உக்ரேனிய போர் ஒரு போலிக்காரணத்தை மட்டுமே வழங்கியது. கடந்த இலையுதிர்காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் மற்றும் தாராளவாதக் கட்சியும் தங்கள் கூட்டணி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தியபோதே இத்திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டுவிட்டன.
இந்த நூற்றாண்டின் ஆயுதமயமாக்கல் திட்டமானது அனைத்து ஊடகங்களினாலும் காதடைக்கும் போர் பிரச்சாரத்தால் தூண்டப்படுகிறது. செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிரூபிக்கப்படாத அட்டூழியங்கள் பற்றிய பிரச்சாரத்துடன் ஒருவருக்கொருவர் மிஞ்சும் முன்னைய ரஷ்ய எதிர்ப்பு பேரினவாதம் மற்றும் அப்பட்டமான இனவெறியை மீண்டும் கொதிக்க வைக்கின்றன.

'அனைத்து ரஷ்யர்களும் எதிரிகள்' என்பது Frankfurter Allgemeinen Zeitung பத்திரிகையின் தலைப்பு.

Spiegel இதழானது பல நூற்றாண்டுகளாக ரஷ்யர்களிடையே, குறிப்பாக இரண்டாம் உலகப் போரில் மிருகத்தன்மை ஏன் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது என்பது குறித்த ஒரு பக்க நீண்ட போலி வரலாற்று கட்டுரையை வெளியிட்டது.
ரஷ்யர்கள் தீமையின் சந்ததிகளாக சித்தரிக்கப்படுகையில், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் திட்டமிட்டு குறைத்து மதிப்பிடப்பட்டு தீங்கற்றதாக காட்டப்படுகின்றது.

உதாரணமாக, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு இப்போது அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் 'அழிப்புப் போர்' என்று வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. இது முன்னர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான நாஜி போருக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. இது 27 மில்லியன் சோவியத் குடிமக்களின் பரந்த திட்டமிட்ட அழிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மிருகத்தனமான கொலை எந்திரங்கள் இப்போது அத்தகைய தன்மையுடன் ஒப்பிடக்கூட முடியாதளவிலான ஒரு போருடன் சமமானதாக காட்டப்படுகின்றன!

2014 இல் உக்ரேனில் வலதுசாரி சதித்திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் ஆதரித்து, 'ஜேர்மனியின் இராணுவ கட்டுப்பாட்டின் முடிவை' அறிவித்தபோதும், இது வேர்மாஹ்ட்டின் புத்துயிருப்பு மற்றும் ஹிட்லரை தீங்கற்றவராக காட்டும் முயற்சிகளால் ஊடகங்கள் நிரப்பப்பட்டன. Spiegel இல், வலதுசாரி தீவிர பேராசிரியர் ஜியோர்க் பார்பெரோவ்ஸ்க்கி ஹிட்லர் கொடூரமானவர் அல்ல என்றும், யூதப்படுகொலை ரஷ்ய உள்நாட்டுப் போரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை போன்றதைத் தவிர வேறொன்றுமில்லை என்று விளக்கினார்.

அடித்தளமற்ற இந்த வரலாற்று திரிபுபடுத்தலை, சமூக சமத்துவத்திற்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் எதிர்த்தபோது, பார்பெரோவ்ஸ்க்கி நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளாலும் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களாலும் பாதுகாக்கப்பட்டு கொண்டாடப்பட்டார்.

இது ஒரு தனிப்பட்ட பேராசிரியரைப் பற்றியது அல்ல, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை போக்கைப் பற்றியது என்பது இப்போது மிகவும் தெளிவாக தெரிகிறது. புதிய குற்றங்களை தயாரிக்க ஜேர்மன் இராணுவவாதத்தின் முன்னைய வரலாற்றுக் குற்றங்கள் அற்பமானதாக்கப்பட வேண்டும்.

கடந்த வாரம், Spiegel இதழில் ஒரு கருத்து, தொடர்ந்து இந்த பாதையை முடிவுக்குக் கொண்டுவந்து, வரலாற்றை மறந்து இறுதியாக ஜேர்மனியை அணுவாயுதங்களுடன் தயார்ப்படுத்த வேண்டும் என்று கோரியது.

ஒரு அணுவாயுத உலகப் போரின் இந்த பைத்தியக்காரக் கொள்கை ஆரம்பத்தில் ரஷ்யாவிற்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது. ஆனால் இது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் அனைத்து அடிப்படை வரலாற்று கேள்விகளையும் மீண்டும் முன்கொண்டுவருவதுடன் மேலும் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடனான பதட்டங்களையும் தீவிரமடையச் செய்கின்றது.

இதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கின்றன. மிக மோசமான போர்வெறியர்கள் பசுமைக் கட்சியினராகும். இக் கட்சியின் பிரதிநிதியில் ஒருவராவது வாய்நிறைய மேலும் மேலும் கனரக ஆயுத விநியோகங்களுக்கும் இன்னும் பாரிய ஆயுதமயமாக்கலுக்கும் அழைப்புவிடாது ஒரு நாள் கூட கடப்பதில்லை.

கியேவில் உள்ள பசுமைக் கட்சியின் ஹென்ரிச் போல் அறக்கட்டளையின் நீண்டகால தலைவர் செர்ஜி சும்லென்னி, அதன் அச்சுறுத்தல் திறனை அழிப்பதற்காக ரஷ்யாவிற்கு எதிரான அணுசக்தி போருக்கு கூட அழைப்பு விடுத்தார்.

இடது கட்சியும் போர் சதியின் ஒரு பகுதியாக இருக்கின்றது. ஷொல்ஸ் தனது நிலைமையின் திருப்பத்தை அறிவித்தபோது, அதன் நாடாளுமன்றக் குழு பெரும்பாலும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஆதரித்தது.

குழுவின் வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர் கிரிகோர் கீஸி, 100 பில்லியன் ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கக்கூட விரும்பினார். குட்டி-முதலாளித்துவ அமைதிவாதிகளின் முழுமையான திவால்நிலை வெளிப்பட்டமை ஆச்சரியமாக இல்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக என்று இருந்த வரை இராணுவக் கட்டுப்பாட்டை அவர்கள் ஆதரித்திருந்தனர். இன்று அவர்கள் போர் முகாமில் கொடிகளை அசைத்து நிற்கிறார்கள்.

ஜேர்மன் இராணுவவாதத்தை எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தொழிலாளர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிய இராணுவவாதத்திற்கு நாங்கள் ஒரு வெளிப்பாட்டையும் சோசலிச முன்னோக்கையும் முன்வைக்கின்றோம்.

அதனால்தான் ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் எல்லா வகையிலும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கிய ஊடகங்களில் எங்களுக்கு எதிராக ஒரு தொடர் தூற்றும் பிரச்சாரத்தை அவர் நடத்திய பின்னர், கூகுள் மற்றும் முகநூல் எங்களை தணிக்கை செய்தது. அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் எங்களை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இட்டது. 'ஒரு ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமுதாயத்திற்காக போராடுவது' மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் மத்திய அரசால் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கப்படுகிறது.

அவர்கள் இதை வலிமையான நிலையில் இருந்தல்லாது, பலவீனமான நிலையில் இருந்து செய்கிறார்கள். வரலாற்று அனுபவத்தினை திசைதிருப்பும் அவர்களின் இடைவிடாத போர் பிரச்சாரத்தினுள் உழைக்கும் மக்களை சிக்கவைக்காததால் அவர்கள் அதைச் செய்கிறார்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எங்கள் தோழர்களுடன் இணைந்து, எங்கள் போர் எதிர்ப்பு ஒளிப்பதிவை முகநூல் தணிக்கை செய்வதை நாங்கள் முறியடித்தோம். அதே வழியில் எங்களை குற்றவாளியாக்கும் அரசின் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவோம்.

ஏனென்றால், எங்கள் கட்சியான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் அனைத்து போர் இயந்திரங்களுடனும் உள்ள அரசு எந்திரத்தை விட மிகவும் வலுவான ஒன்றான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

இப்போது அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை போருக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான ஒரு நனவான அரசியல் சக்தியாக மாற்றுவதிலும், உலகின் ஒவ்வொரு நாட்டிலும் சோசலிச புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை உருவாக்குவதிலுமே தங்கியுள்ளது.

Loading