முன்னோக்கு

செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் உலகளாவிய இயக்கம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், பணிச்சுமை மற்றும் கூர்மையான பணவீக்க அதிகரிப்பால் வாழ்க்கைத் தரங்கள் அரிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக, உலகெங்கிலும், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறைத் தொழிலாளர்கள் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனியில், நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா பல்கலைக்கழக மருத்துவமனைகளில் 2,500 க்கும் அதிகமான செவிலியர்கள், பணியாளர் எண்ணிக்கை மற்றும் சம்பளம் தொடர்பாக ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 'இனியும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது,' என்று எசெனில் வேலைநிறுத்தம் செய்து வரும் ஒரு செவிலியர் கூறினார். 'நாங்கள் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் உடைந்து போய் வீட்டுக்கு வருகிறோம் — இது இறுதியாக முடிவுக்கு வர வேண்டும்,' என்றார்.

உலகம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் [புகைப்படம்: WSWS]

பிரிட்டனில், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளின் 40,000 ஸ்காட்டிஷ் செவிலியர்கள் அவர்களின் 10 சதவீத உயர்வுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளனர். பிரிட்டனில் நூறாயிரக்கணக்கான தேசிய சுகாதாரச் சேவை (NHS) தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பொதுத் துறைத் தொழிலாளர்களின் 'அதிருப்திகரமான கோடை' வேலை நிறுத்தங்களில் இணைய விரும்புகிறார்கள்.

பிரான்சில், கொடுப்பனவு மறுக்கப்பட்டதை அடுத்து, அந்நாடெங்கிலும் சுகாதாரத் துறைத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர். இது, கடந்த மாதம் மாட்ரிட்டில் 11,000 ஸ்பானிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைநிறுத்தத்தையும், நல்ல கூலிகள் மற்றும் சலுகைகள் கோரி துருக்கியில் 20,000 மருத்துவர்கள் நடத்திய ஒரு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையும் தொடர்ந்து வருகிறது.

இந்தியாவில், மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 20,000 செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள இலங்கையில், இராஜபக்ஷ அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரியும், விலைவாசி உயர்வு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளுக்கு முடிவு கட்ட கோரியும் சுகாதாரத் துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜனப் போராட்டங்களில் முன்னணியில் உள்ளனர்.

கடந்த மாதம், நியூசிலாந்தில் 10,000 செவிலியர்கள் அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பான பணியாளர் எண்ணிக்கை கோரி வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலை மெதுவாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இது, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் நியூ சவுத் வேல்ஸில் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனை செவிலியர்களின் முதல் நிறுத்தங்களைத் தொடர்ந்து நடந்தது. இவர்கள், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு முறை அரசாங்க தடைகளை மீறி வேலைநிறுத்தத்தில் இறங்கியதுடன், ஒரு தகராறில் சிக்கி உள்ளனர்.

அமெரிக்காவில், நியூ ஜேர்சியின் நெவார்க் செயின்ட் மைக்கேல் மருத்துவ மையத்தின் 350 செவிலியர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் பொது மருத்துவமனைகளில் அங்கேயே தங்கியிருந்து பணியாற்றும் மற்றொரு 1,300 மருத்துவர்கள் —வழக்கமாக 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்யும் இவர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்திற்குச் சமமான சம்பளம் வழங்கப்படும் நிலையில்— இவர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தத்தில் இறங்க பெருவாரியாக வாக்களித்தனர். கடந்த வாரம், மின்னிசொடாவில் 15,000 செவிலியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர், மிச்சிகன், நியூ யோர்க், கலிபோர்னியா, வாஷிங்டன் மற்றும் பிற மாநிலங்களின் பத்தாயிரக் கணக்கான செவிலியர்கள் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் ஒப்பந்த போராட்டங்களை முகங்கொடுக்கிறார்கள்.

மே 27 இல், புளோரிடாவின் ஆர்லாண்டோ பிராந்திய மருத்துவ மையத்தில் (ORMC) டஜன் கணக்கான செவிலியர்கள் மனிதாபிமானமற்ற பணிச்சுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலையை நிறுத்தி வெளியேறினர், இது பல மணி நேரம் கவனிப்பாரின்றி இருந்த ஒரு நோயாளி பரிதாபகரமாகத் தற்கொலை செய்து கொள்ள இட்டுச் சென்றது. இதற்கு முன்னர், வாண்டெர்பில்ட் (Vanderbilt) பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நீண்ட கால பணியாளர் பற்றாக்குறை மற்றும் ஏனைய பாதுகாப்பு மீறல்களால் ஏற்பட்ட ஒரு மருத்துவப் பிழைக்காக முன்னாள் செவிலியர் ராடோண்டா வாட்டுக்கு (RaDonda Vaught) எதிராக சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் கைவிடக் கோரி, வாஷிங்டன் டி.சி. மற்றும் டென்னசி, நாஸ்வில் செவிலியர்களும் ஏனைய மருத்துவத் துறைத் தொழிலாளர்களும் பாரிய போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர்.

ராடோண்டா வாட்டை பலிக்கடா ஆக்கியமை, செவிலியர்களும் சுகாதாரத் துறைத் தொழிலாளர்களும் நடைமுறையளவில் வேண்டர்பீல்டை புறக்கணிக்க இட்டுச் சென்றுள்ளது, அந்த மருத்துவ மைய அதிகாரிகள் மருத்துவப் பணிகளைச் செய்ய ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது.

உலகெங்கிலுமான சுகாதாரத் துறைத் தொழிலாளர்கள் இதே சகிக்கவியலாத நிலைமைகளையே எதிர் கொள்கின்றனர், இந்தச் சகிக்கவியலாத நிலைமைகள் இந்தப் பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கங்களின் பிரதிபலிப்பால் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன. முதலாளித்துவ அரசாங்கங்கள் மனித உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளிப்பது கிட்டத்தட்ட சுகாதாரத் துறை அமைப்புகளின் முறிவுக்கு இட்டுச் சென்றது, இது ஏற்கனவே பல தசாப்தங்களாகச் செலவின வெட்டுக்கள் மற்றும் குறைந்த பணியாளர் எண்ணிக்கையால் குழிபறிக்கப்பட்டிருந்தது.

சோர்வு, மன அழுத்தம் மற்றும் உடல்நலக் கவலைகளால் செவிலியர்கள் வெளியேறி இருப்பதால், இந்த நெருக்கடி இன்னும் கூடுதலாக ஆழமடைந்து வருகிறது. Healthcare IT News இன் மார்ச் 24 தகவல்படி, அமெரிக்க செவிலியர்களில் 90 சதவீதம் பேர் இத்தொழிலை விட்டு வெளியேற கருதி வரும் அளவுக்கு நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர்களின் துறைகளை மாற்றி வருகின்றனர்.

இந்த நிலைமைகளை எதிர்ப்பதற்கு சுகாதாரத் துறைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்களோ செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் செயல்படுகின்றன. அதே நேரத்தில், தொழிற்சங்கங்கள் அனைத்து வகையான அரைகுறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன — அதாவது, சட்டங்களைக் கொண்டு வருவதில் இருந்து செவிலியர்-நோயாளி விகிதங்களுக்கு வரம்புகள் கொண்டு வருவது வரை, “பணியாளர் பாதுகாப்புக்காக' அதிக தொழிலாளர்-நிர்வாகக் குழுக்களை அமைப்பது வரையில், பேர்ணி சாண்டர்ஸின் முட்டுச் சந்து முன்மொழிவான அமெரிக்காவில் 'அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு' வரை இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன, இவற்றுக்கும் இந்த நெருக்கடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதோடு இவற்றால் இந்த நெருக்கடியைத் தீர்க்கவும் முடியாது.

அரசின் பெருந்தொற்று நிவாரணங்களில் இருந்து பில்லியன் கணக்கில் பெற்ற, சங்கிலித் தொடராக அமைந்துள்ள இதே மிகப் பெரும் அமெரிக்க மருத்துவமனைகள் —டெனெட், யுனைடெட் ஹெல்த்கேர், அல்லினா, பிரைம் ஹெல்த்கேர் ஆகியவை— இப்போது முறிந்து விட்டதாகக் கதறுகின்றன, கூடுதல் பணியாளர்களைப் பணி அமர்த்தவும், தங்கள் உயிரையும் உடல்நலனையும் ஆபத்திற்குட்படுத்திய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரக் கூலிகளை வழங்கவும் பணம் இல்லை என அவை கூறுகின்றன.

சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் போராட்டமானது சுகாதாரத் துறையைத் தனியார் இலாபத்திற்கு அடிபணிய வைப்பதை நேரடியாக உயர்த்துகிறது. மிகப் பெரிய மருத்துவமனை ஏகபோகங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவச் சாதனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உலகளாவிய சுகாதாரத் துறை அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவது, வருமானத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவருக்கும் உயர்தர சுகாதாரக் கவனிப்பை வழங்க சாத்தியமில்லாமல் செய்கிறது.

அமெரிக்கா தலைமையிலான பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள், சமூகத்தின் வளங்களை போருக்குத் திருப்பி விடுகின்றன, அதாவது, உயிரைக் காப்பாற்றுவதற்கு அல்ல, மரணத்திற்கான கருவிகளுக்குத் திருப்பி விடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பாதுகாப்புத் துறை விழுங்கும் கிட்டத்தட்ட 1 ட்ரில்லியன் டாலர் தவிர அதற்குக் கூடுதலாக ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரை விரிவாக்க பைடெனால் 40 பில்லியன் டாலரைக் காண முடிகிறது.

அதே நேரத்தில், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான அமெரிக்க அரசின் அறங்காவலர்கள் கடந்த வாரம் கூறுகையில், இரண்டு முக்கிய மத்திய அரசுத் திட்டங்கள் —47 மில்லியன் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் அவர்கள் வருமானம் மற்றும் சுகாதாரக் கவனிப்பு செலவுகளுக்குக் கூடுதலாக இவற்றையே நம்பி உள்ள நிலையில்— 2028 இல் இருந்து 2034 க்குள் சலுகைகளுக்கு முழுமையாக நிதி அளிக்க முடியாமல் போகும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

முதலாவதாக பெருநிறுவனவாத தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் குழுக்களை அபிவிருத்தி செய்வதன் மூலம், சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஐக்கியப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் மருத்துவத் துறை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து சண்டையிட ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுகாதார மையத்திலும் செவிலியர்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டுவதற்காக தேசிய வழிகாட்டி குழுவை உருவாக்கி இருப்பதன் மூலம் ஏற்கனவே ஒரு முக்கிய முதல் அடியை எடுத்துள்ளனர். இது, எல்லா தேசிய எல்லைகளையும் கடந்து சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும் மற்றும் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்யவும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் கட்டமைப்பதற்கான போராட்டத்தின் பாகமாக உள்ளது.

இரண்டாவதாக, இலாபத்தை விட உயிருக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்த போராட்டத்திற்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஓர் அரசியல் அணித்திரள்வு தேவைப்படுகிறது.

சமூகத் தேவைகளைத் தனியார் இலாபத்திற்கு அடிபணிய செய்வதன் விளைவுகள், சுகாதாரத் துறையின் இந்த பேரழிவுகரமான நிலையில் தெளிவாக வெளிப்படுகிறது. செவிலியர்களும் சுகாதாரத் தொழிலாளர்களும் இதை தினமும் பார்க்கிறார்கள். இந்த இலாபத்திற்கான அமைப்புமுறை சுகாதாரத் துறைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், மருத்துவத் துறை பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் முதலீட்டாளர்களின் அடித்தளத்திற்காக நோயாளிகளின் ஆரோக்கியத்தைத் தியாகம் செய்வதை அடிப்படையாக கொண்டுள்ளது. தனியார் காப்பீட்டு தொழில்துறையோ நோயாளிகளுக்கு தேவைப்படும் உரிய சிகிச்சையை மறுக்கும் ஒரே நோக்கத்திற்காக உள்ளது.

ஆனால் இதை ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்பு முறையின் தன்மையின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடாக புரிந்து கொள்ள வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில், அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உட்பட, 20 மில்லியன் பேர் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர், ஏனென்றால் கோவிட்-19 பரவுவதைத் தடுத்து அகற்றுவதற்கான மிகவும் அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைக் கூட ஆளும் வர்க்கம் நிராகரித்தது. பங்குச் சந்தைகள் உயர்ந்தன, உலக பில்லியனர்கள் அவர்களே விழுங்கிக் கொண்டார்கள்.

சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் இந்த உலகளாவிய இயக்கம், சமூக சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் பாகமாகும். மருத்துவத் துறையில் இருந்து இலாபம் ஈட்டுவதை நீக்கி, சுகாதாரத் துறைத் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் அனைவருக்கும் ஓர் அடிப்படை சமூக உரிமையாக உயர்தர மருத்துவச் சிகிச்சையை வழங்க பொறுப்பேற்ற ஒரு சோசலிச அமைப்புமுறையை ஸ்தாபிக்க போராடுவதே இந்த இயக்கத்தின் மத்திய நோக்கமாகும்.

Loading