ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு ஜேர்மன் விமானப்படைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் பினாமி போரை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கையில், ஜேர்மன் ஆயுதப் படைகள் (Bundeswehr) அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி மாஸ்கோவை அச்சுறுத்தி வருகின்றன. Bild செய்தித்தாளின் ஒரு அறிக்கையின்படி, விமானப்படைத் தலைவர் இங்கோ கெர்ஹார்ட்ஸ் (Ingo Gerhartz) கீல் சர்வதேச கடல்சக்தி கருத்தரங்கில் (Kiel International Seapower Symposium) வெள்ளியன்று இவ்வாறு தெரிவித்தார்:

“நம்பகமான தடுப்புக்கு, தேவைப்பட்டால் அணுசக்தித் தடுப்பைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசியல் விருப்பம் இரண்டும் எங்களுக்குத் தேவை.” செய்தியிதழின்படி, அவர் அச்சுறுத்தும் வகையில் மேலும் கூறினார், “புட்டின் எங்களைத் தூண்டிவிடாதீர்கள்! 2030 ஆம் ஆண்டுக்குள், ஐரோப்பியர்கள் பால்டிக் கடல் பகுதியில் 600 நவீன போர் விமானங்களை கொண்டிருப்பார்கள். மேலும் அமெரிக்கர்களின் விமானங்களும் அங்கு உள்ளன.”

விமானப்படைத் தலைவர் இங்கோ கெர்ஹார்ட்ஸ் (Amit Agronov / IDF Spokesperson's Unit)

ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக ஒரு ஜேர்மன் ஜெனரல் பகிரங்கமாக அச்சுறுத்துகிறார் என்பது ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மூன்றாம் ரைஹ் வீழ்ச்சியடைந்து 77 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆளும் வர்க்கத்தில் மீண்டும் ஒரு பாசிச மனநிலை பரவி வருகிறது. அது தனது ஏகாதிபத்திய நலன்களை நிலைநாட்ட மீண்டும் ஒருமுறை மோசமான குற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளது.

81 ஆண்டுகளுக்கு முன்பு இன்று, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான வேர்மாஹ்ட் (Wehrmacht) ஆயுதப் படையின் அழிப்புப் போர் தொடங்கியது. அதில் அதன் அப்போதைய தலைவர் ஹெர்மான் கோரிங்கின் (Hermann Gohring) கீழ் லுஃப்ட்வாஃபே (Luftwaffe) படைப் பிரிவு முக்கிய பங்கு வகித்தது, இதன் விளைவாக சுமார் 30 மில்லியன் சோவியத் குடிமக்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யாவுடனான ஒரு முழுமையான அணுசக்தி போரானது, ஐரோப்பாவை ஒரு அணுசக்தி தரிசு நிலமாக மாற்றுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிர்வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும்.

கெர்ஹார்ட்ஸ் போன்ற பிரமுகர்கள் அத்தகைய சூழ்நிலையில் வெளிப்படையாக முற்றிலும் விடாப்பிடியாக இருந்தனர். ஜேர்மன் ஆயுதப் படைகளின் உத்தியோகபூர்வ YouTube சேனலின் சமீபத்திய நேர்காணலில், ரஷ்யாவிற்கு எதிராக ஜேர்மனி மற்றும் பிற முக்கிய நேட்டோ சக்திகளால் நடத்தப்படும் பினாமிப் போரை அவர் ஆதரித்தார், அது அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தலை அதிகரித்தளவில் நேரடியாகத் எழுப்புகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனிய விமானப்படையின் ‘வெற்றிகளை’ கொண்டாடுவதன் மூலம் ஜெனரல் தொடங்கினார். அவர் “அது அங்கு செயல்படும் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டினார்.” அந்த நாடு “அவ்வப்போது ரஷ்ய விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்துவதில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றது” என்றார். ஜேர்மனியின் “உதவி” இதில் முக்கிய பங்கு வகித்தது. உதாரணமாக, உக்ரேனுக்கு “எதிரி விமானங்களை எதிர்த்துப் போராட” ஸ்டிங்கர் ஏவுகணைகள் வழங்கப்பட்டன, மேலும் இவை “ஒன்று அல்லது மற்ற போர் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளன” என்று அவர் கூறினார்.

இப்போது ஆதரவு ‘இன்னும் கூடுதலாக’ வழங்கப்படவுள்ளது. “லுஃப்ட்வாஃபே படைப் பிரிவு Iris-T SLM அமைப்பை வழங்கும், மேலும் எதிரி விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்துவதற்காக யூரோஃபைட்டருக்காக நாங்கள் உருவாக்கிய ஏவுகணையை வழங்குவோம்,” என்றும் அவர் கூறினார்.

ஜேர்மன் இராணுவம் உண்மையில் ஏற்கனவே ரஷ்யாவுடனான போரில் ஈடுபட்டுள்ளது என்பதில் கெர்ஹார்ட்ஸ் எந்த சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு பேட்டியில், கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் விமானப்படை விரைவாக முன்னேறுவதை அவர் வரவேற்றார். “ரஷ்யப் படைகள் உக்ரேனை ஆக்கிரமித்ததன் பின்னர், ஜேர்மன் விமானப்படை தனது யூரோஃபைட்டர்களை ருமேனியாவிற்கு முதலில் நகர்த்தியது,” என்று அவர் கூறினார். அவர்கள் “விமானப்படை என்ன காட்ட வேண்டுமோ அதை, அதாவது நாங்கள் வேகமாக இருக்கிறோம் என்பதை” காட்டியுள்ளனர். மேலும், பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கள் ஏற்கனவே “படையெடுப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் ஸ்லோவாக்கியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.

மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு முழுமையான இராணுவ மோதலுக்கு ஜேர்மன் இராணுவம் தயாராகி வருகிறது என்பதை ஜெனரல் தெளிவுபடுத்தினார். மற்றவற்றுடன், தேசிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விரைவாக கொள்முதல் செய்ய அவர் அழைப்பு விடுத்தார். இது “இப்போது அவசரமாக நாம் மூட வேண்டிய ஒரு இடைவெளியாகும்” என்றார். விண்வெளியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில், அமெரிக்க-இஸ்ரேலிய ‘Arrow 3’ ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு அவர் அரசியல்வாதிகளுக்கு முன்மொழிந்தார், மேலும் விளக்கினார்.

குறிப்பாக, அமெரிக்காவின் F-35 ரக போர் விமானங்களை உடனடியாக வாங்கியது குறித்து கெர்ஹார்ட்ஸ் பெருமை அடைந்தார், இதற்கு ‘ஜேர்மன் இராணுவத்தின் சிறப்பு நிதியான’ 100 பில்லியன் யூரோவில் இருந்து நிதி அளிக்கப்பட்டது. “இந்த அரசாங்கத்தில் இதை எங்களால் சாதிக்க முடிந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும், “நாங்கள் இப்போது மிக மிக விரைவாக முன்னேறுவோம்” என்றும் அவர் கூறினார். இந்த F-35 ரக போர் விமானங்கள் “தற்போதைய மிக நவீன ஆயுத அமைப்பாகும்” மற்றும் விமானப்படை “ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிராக, புட்டினுக்கு எதிராக… கூட்டணியில் இணைந்து வலுவாக செயல்பட” பெரிதும் உதவுகிறது என்றார்.

அவசரகால நிலையில் இந்த ‘கூட்டணியில் இணைந்து செயல்படுவது’ என்பது துல்லியமாக ‘அணுசக்தி பங்கேற்பு’ என்று அழைக்கப்படும் நேட்டோ கருத்தாக்கத்தால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், ஜேர்மன் போர் விமானங்கள் ஜேர்மனியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க அணுகுண்டுகளுடன் ஆயுதம் ஏந்தியிருக்கும், மேலும் அவற்றைப் பயன்படுத்தும். பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையின்படி, F-35 இன் ‘சாத்தியமான ஆயுதங்களில்’ ‘free-falling அணு ஆயுதங்கள்’ அடங்கும்.

ரஷ்யாவிற்கு எதிரான கெர்ஹார்ட்ஸின் அணுசக்தி அச்சுறுத்தல்கள் வெறுமனே ஒரு பைத்தியக்கார தளபதியின் சாட்சியம் மட்டுமல்ல, மாறாக போரின் தர்க்கத்துடன் ஒத்துப் போகின்றன. நேட்டோ சக்திகள், குறிப்பாக ஜேர்மன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை திட்டமிட்டு இராணுவ சுற்றிவளைப்பு செய்துள்ளமை, உக்ரேன் மீதான புட்டினின் பிற்போக்குத்தனமான தாக்குதலைத் தூண்டின. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இப்போதைய ஆழமான பொருளாதார நெருக்கடிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கும் போரை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் விடையிறுத்துக் கொண்டிருக்கின்றனர், அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உண்மையில் தூண்டுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜேர்மனியில் ஆளும் வர்க்கம் பெருகிய முறையில் பொறுப்பற்றதாக மாறி வருகிறது, இரண்டு உலகப் போர்களில் அவர்கள் செய்த கொடூரமான குற்றங்களுக்குப் பின்னர் ஒரு ஆக்கிரோஷமான வெளிநாட்டு மற்றும் பெரும் சக்தி கொள்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்பாக போரை பார்க்கிறது.

நேற்று Friedrich-Ebert-Stiftung கட்சி மாநாட்டில் ஒரு முக்கிய உரையில், SPD பொதுச் செயலர் லார்ஸ் கிளிங்பைய்ல் (Lars Klingbeil), “கிட்டத்தட்ட 80 ஆண்டுகால கட்டுப்பாட்டிற்குப் பின்னர்… ஜேர்மனி இப்போது உலகளாவிய ஒருங்கிணைப்பு அமைப்பில் ஒரு புதிய பங்கைக் கொண்டுள்ளது”, ஜேர்மனி இதில் “அதிகரித்தளவில் முக்கிய இடம் வகிக்கிறது” என்பதுடன், “ஒரு தலைமைத்துவ சக்தியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும்' என்றார்.

இராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்துவதை கிளிங்பைய்ல் வெளிப்படையாக குறிப்பிடுகிறார். 'என்னைப் பொறுத்தவரை, அமைதிக் கொள்கை என்பது இராணுவப் படையை ஒரு சட்டபூர்வமான அரசியல் கருவியாகப் பார்ப்பதும் ஆகும்' என்று அவர் கூறினார்.

அவர் ஜேர்மன் இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைகளை பாராட்டினார், அதாவது, SPD ஐ சேர்ந்த ஃபெடரல் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் “நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அதிக ஜேர்மன் துருப்புக்களை நிலைநிறுத்த” முடிவு எடுத்ததையும், மற்றும் ஐரோப்பாவுக்கு “ஒரு புவிசார் அரசியல் செயற்பாட்டாளராக மிகுந்த மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்று கோரியதையும் பாராட்டினார். சர்வதேச “உறவுகள், சார்புநிலைகள், இணைப்புகள், ஒத்துழைப்பு மற்றும் கணிப்புக்கான போட்டியில்” அதாவது உலகின் ஏகாதிபத்திய மறுபகிர்வில் “வரவிருக்கும் ஆண்டுகளில்” உயிர் வாழ்வதற்கான ஒரே வழி இதுதான் என்கிறார்.

இந்த பெரும் வெறி பிடித்த கொள்கைக்கான செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட வேண்டும். “ஒரு முன்னணி சக்தியாக இந்த புதிய பங்கு ஜேர்மனியிடம் இருந்து நிதி மற்றும் அரசியல் ரீதியான முடிவுகள் உட்பட கடுமையான முடிவுகளை கோரும்” என்று அவர் அச்சுறுத்தினார். நீங்கள் “கட்டமைப்புக்களை மாற்ற வேண்டும், மேலும் வரவு-செலவுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

கடந்த காலத்தைப் போலவே வெளிநாட்டு போர்க் கொள்கைக்கு சமூகத்தை இராணுவமயமாக்குவதும் உள்நாட்டில் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதும் தேவை என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அவர் “ஒரு சமூகமாக நாம் ஜேர்மன் இராணுவத்துடன் ஒரு புதிய இயல்புநிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு, பாராளுமன்றம் தீர்மானித்தால் உச்சகட்டத்திற்குச் செல்லத் தயாராக இருக்கும் நம் நாட்டிற்காக சேவை செய்பவர்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த ‘தீவிரங்களுக்கு’ இனி எந்த தார்மீக வரம்புகளும் இல்லை என்பதை ஊடகங்களில் உள்ள போர்வெறியர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். இந்த வார தொடக்கத்தில், டெர் ஸ்பீகல் செய்தி ஊடகத்தின் ஆசிரியர் Dirk Kurbjuweit “ஜேர்மன் அணு ஆயுதங்களுக்கு” வெளிப்படையாக அழைப்பு விடுத்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

Kurbjuweit இழிந்த முறையில் 'செயல்படும் அணுஆயுதத்தடுப்பு மட்டுமே பெரிய போர்களைத் தடுக்க முடியும்' என்று அறிவிக்கிறார். இதில் 'இதுவரை நடத்தப்படாத விவாதமும் அடங்கும்: ஐரோப்பா நூறு சதவிகிதம் அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது என்றால், ஜேர்மனி நூறு சதவிகிதம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை நம்பியிருக்க முடியாது என்றால், ஜேர்மனிக்கும் அணு ஆயுதங்கள் தேவை இல்லையா? அவர் இந்த வரிகளை எழுதியபோது, அது “அவரது முதுகுத்தண்டு நடுங்கியது” என்று அவர் கூறினார். “ஆனால் தற்போது நடக்கும் அனைத்தையும் நீங்கள் சிந்தித்தால்,” “இந்த கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.” என்று தொடர்ந்தார்.

அனைத்து மக்களிடமும் ஜேர்மன் அணுவாயுதங்களுக்கான அழைப்பு Kurbjuweit ஆல் எழுப்பப்பட்டது என்ற உண்மை, அறிவிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையின் 'புதிய சகாப்தத்தை' வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உண்மையில், 'புதிய சகாப்தம்' நீண்ட காலத்திற்கு முன்னரே தயாரிக்கப்பட்டதாகும். 2014 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் இராணுவக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்ததாக மத்திய அரசின் பிரதிநிதிகள் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், டெர் ஸ்பீகலில் “The Transformation of the Past” என்ற இழிவான கட்டுரையை Kurbjuweit வெளியிட்டார்.

முதல் உலகப் போர் வெடித்ததில் ஜேர்மன் பேரரசுக்கு பெரும் பங்கு இருந்தது என்பதை 1961 ஆம் ஆண்டு தனது புத்தகமான Griff nach der Weltmacht (உலக வல்லரசை கையாள) இல் நிரூபித்த வரலாற்றாசிரியர் ஃபிரிட்ஸ் ஃபிஷ்ஷர் ஐ Kurbjuweit தாக்கினார். ஃபிஷ்ஷர் இன் ஆய்வறிக்கைகள் “அடிப்படையில் அவதூறானவை” என்று அவர் இப்போது பணி ஓய்வு பெற்ற ஹம்போல்ட் பேராசிரியர் ஹெர்ஃபிரிட் முங்லெர் (Herfried Munkler) ஐ மேற்கோள் காட்டினார்.

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் குற்றங்கள் குறித்து, 2016 இல் இறந்த நாஜி மன்னிப்புக் கோரிக்கையாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட க்கு Kurbjuweit ஒரு மேடையை வழங்கினார். 1980 களில் வரலாற்றாசிரியர்களின் மோதலின் போது, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான யூதப் படுகொலை (Holocaust) ஒரு நியாயமான எதிர்வினை என்று நோல்ட ஏற்கனவே கூறியிருந்தார். நோல்ட இன் அறிவிக்கப்பட்ட பின்தொடர்பவரான பேர்லின் ‘வரலாற்றாசிரியர்’ ஜோர்க் பாபெரோவ்ஸ்கி “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. யூதர்களை அழிப்பதைப் பற்றி யாரும் தனது மேஜையில் பேசுவதை அவர் விரும்பவில்லை” என்று கூறியதை Kurbjuweit மேற்கோள் காட்டினார்.

இந்த அருவருக்கத்தக்க அறிக்கைகள் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, மற்றும் அந்த நேரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் விடுத்த அனைத்து எச்சரிக்கைகளும் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வரலாற்று குற்றங்களின் சார்புமயமாக்கல் புதிய போர்கள் மற்றும் புதிய குற்றங்களைத் தயாரிக்க உதவுகிறது. தேவையான முடிவுகளை எடுப்பதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான போராட்டத்தில் இணைவதற்கும் இதுவே மிகச் சரியான தருணமாகும்.

Loading