முன்னோக்கு

அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசியலைப்பிலிருந்து கருக்கலைப்பு உரிமையை நீக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை, ஒரே கையெழுத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆறு நீதிபதிகள் கருக்கலைப்புக்கான உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தனர், இது நாட்டின் சட்ட மற்றும் சமூகப் பரப்பை வியத்தகு முறையில் மாற்றி அமைக்கிறது. அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் பெரும் பெரும்பான்மை மக்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்படும் ஓர் அடிப்படை அரசியலமைப்பு உரிமையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Dobbs v. Jacksonமகளிர் சுகாதார அமைப்பில் 6 க்கு 3 தீர்மானம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒருமித்து 135 மில்லியன் மக்கள்தொகைக் கொண்ட குறைந்தபட்சம் 21 மாநிலங்களில் கருக்கலைப்பு இப்போது சட்ட விரோதமாகிறது அல்லது வரவிருக்கும் நாட்களில் சட்ட விரோதமாகி விடும். பெரும்பாலான பணிபுரியும் பெண்களுக்கு, கருக்கலைப்பு சட்டபூர்வமாக உள்ள பெரும்பாலான கடலோர மாநிலங்களுக்குச் செல்வது ஒரு வாய்ப்பாக இருக்காது.

கவனக் குறைவான இரகசிய அறுவைச் சிகிச்சைகளில் பலர் இறக்க நேரிடும் என்பது புதிய யதார்த்தமாகிவிடும். கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் அல்லது கர்ப்பத்தைக் கலைக்க மருந்துகள் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கர்ப்பம் தரித்தவர் ஒரு குழந்தையாக இருந்தாலோ அல்லது கற்பழிப்பு அல்லது முறையற்ற தொடர்பால் கர்ப்பம் தரித்திருந்தாலோ அவர்களுக்கும் பெரும்பாலும் இந்தக் கருக்கலைப்பு தடைகளில் இருந்து விதிவிலக்கு இல்லை.

இந்த முடிவு, அனைத்து ஜனநாயக உரிமைகள் மீதும் ஆளும் வர்க்கத்தின் வரலாற்று ரீதியில் முன்னோடியில்லாத தாக்குதலின் ஓர் ஆரம்ப தாக்குதலாகும். உச்ச நீதிமன்ற விசாரணைகளில் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்த இதற்கு முந்தைய எல்லா வழக்குகளையும் நீதிமன்றம் இப்போது மறுபரிசீலனைச் செய்யத் தொடங்கும் என்று இத்தீர்ப்புக்கு ஒத்துப் போகும் விதமாகக் கிளாரன்ஸ் தோமஸ் அறிவிக்கிறார். “எதிர்கால வழக்குகளில்' “கிரிஸ்வொல்ட், லோரன்ஸ், மற்றும் ஓபர்கெஃபெல் வழக்குகள் உட்பட, இந்த நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க முன்னோடி விசாரணைகள் அனைத்தையும் நாம் மறுபரிசீலனைச் செய்ய வேண்டும்,” என்று தோமஸ் எழுதினார். இத்தகைய தீர்ப்புகள், முறையே, கருத்தடைகளுக்கான உரிமையை பாதுகாத்தன, சில குறிப்பிட்ட உடலுறவு முறைகளைக் குற்றமாக்கிய சட்டங்களை நீக்கின, மற்றும் ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கி இருந்தன.

இந்த முடிவுகள் பலிபீடத்திற்கு முதலில் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாலும், அவை வெறும் தொடக்கப் புள்ளி தான் என்பதை தோமஸின் ஒத்திசைவான கருத்துக்கள் தெளிவுபடுத்துகிறது. “வெளிப்படையாகவே இத்தகைய பிழையான முடிவுகளை மாற்றிய பின்னர், நமது குறிப்பிடத்தக்க விசாரணை வழக்குகள் உருவாக்கி உள்ள மிகப் பல உரிமைகளுக்கு ஏனைய அரசியலமைப்பு வழிவகைகள் உத்தரவாதமளிக்கின்றனவா என்பது கேள்வியாக இருக்கும்,” என்றவர் எழுதினார்.

Brown v. Board of Education வழக்கு (பள்ளிகளில் பாகுபாட்டைத் தவிர்த்தல்), Gideon v. Wainwright (சுதந்திரமான குற்றவியல் தற்காப்பு குழு அமைப்பதற்கான உரிமையை நிறுவுதல்), Loving v. Virginia (கலப்பினத் திருமணத்திற்கு எதிரான சட்டங்களைத் தடை செய்தல்), West Coast Hotel Co. v. Parish (குறைந்தபட்ச கூலியைப் பாதுகாத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தல்) ஆகிய வழக்குகளும் இன்னும் பல வழக்குகளும் இத்தகைய வழக்குகளில் உள்ளடங்கும். Dobbs இல் அதன் முடிவை வெளியிடுவதற்கு முந்தைய நாள், அந்த நீதிமன்றம் கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளை மீறும் பொலிஸிற்கு எதிரான பாதுகாப்பை வெகுவாகக் குறைக்கும் ஒரு பிரத்யேக முடிவை வெளியிட்டது.

கருக்கலைப்பு உரிமை ஆர்ப்பாட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை, மே 3, 2022 அன்று வாஷிங்டனில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர் (AP Photo/Jose Luis Magana) [AP Photo/Jose Luis Magana]

இந்த முடிவு சட்டப்படி முறையானது அல்ல. இது ஒரு அதிவலது அரசியல் சதியின் பாகமாக உள்ளது. அரசு கண்காணிப்பு, பொலிஸ் வன்முறை, வெகுஜன நாடு கடத்தல்கள் மற்றும் தேர்தல் முறையில் பெருநிறுவன ஆதிக்கம் ஆகியவற்றை சட்டபூர்வமாக்கும் நீண்ட தொடர்ச்சியான பல பிற்போக்குத்தனமான முடிவுகளில் இது சமீபத்தியதாகும். இது அரசாங்கத்தின் ஜனநாயகக் கிளையாக அமைந்துள்ள ஒரு நீதிமன்றத்தால் வெளியிடப்படவில்லை மாறாக இடைக்கால மதகுருவாதம் மற்றும் குருட்டுப் பிடிவாதத்தின் அலங்காரத் தேரோட்டமாக உள்ளது.

நீதிமன்றத்தில் இப்போது பாசிசச் சித்தாந்தவாதிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். டோப்ஸ் வழக்கில் பெரும்பான்மையுடன் வாக்களித்த நீதிபதிகளில் மூன்று பேர்கள் (Gorsuch, Kavanaugh மற்றும் Coney Barrett) டொனால்ட் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டவர்கள், சர்வாதிகாரியாக ஆக முயற்சித்த இவர் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க 2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்காக, ஜனவரி 6, 2021 இல் ஓர் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சியை முடுக்கி விட இரண்டு நீதிபதிகளுடன் சேர்ந்து (அலிட்டோ மற்றும் தாமஸ் ஆகியோருடன்) சதியில் ஈடுபட்டார்.

ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியின் நீதித்துறைத் தொடர்ச்சி தான் இந்த டோப்ஸ் விவகாரம். இது நாடு முழுவதும் அதி வலதுசாரிகளால் பரவலாகக் கொண்டாடப்படுகிறது, அவர்கள் இதை அவர்களின் பலத்திற்கும் எதிர்கால வாய்ப்புகளுக்கான ஒரு சான்றாகவும் காண்கிறார்கள்.

“இது கடவுள் எடுத்த முடிவு,” என்று அறிவித்து ட்ரம்ப் பக்திப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். டெக்சாஸில், ட்ரம்ப்-சார்பு மாநில அட்டார்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் ஜூன் 24 ஐ விடுமுறையாக அறிவித்ததுடன், Roe v. Wade வழக்கு நடந்த “1973 இல் இருந்து கருவிலேயே கொல்லப்பட்ட சுமார் 70 மில்லியன் பிறக்காத குழந்தைகளின் நினைவாக' மாநில அலுவலகங்களை மூட அறிவித்தார்.

கருக்கலைப்பு சட்டபூர்வமாக உள்ள மாநிலங்களில் கூட அதை ஒழிப்பதற்கான போராட்டத்திற்குக் குடியரசுக் கட்சி அழுத்தமளிக்க உள்ளது. காங்கிரஸ் சபையில் உள்ள பாசிசவாதி பெண்மணியும் ஜனவரி 6 இன் சக-சதிகாரருமான மர்ஜொரி டெய்லர் கிரீன் அறிவிக்கையில், 'அமெரிக்காவில் கருக்கலைப்பு என்ற பாரிய இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறோம்' என்றார், ஆனால் 'இது முழுமையாக முடிந்து விடவில்லை' என்றவர் எச்சரித்தார். முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், 'இந்நிலத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்வின் புனிதத்தை அமெரிக்கச் சட்டத்தின் மையத்தில் மீட்டமைக்கும் வரை நாம் ஓய்ந்து விடக் கூடாது, சளைத்து விடக் கூடாது,” என்றார்.

முதலாளித்துவ இரு-கட்சி அரசியல் கட்டமைப்புக்குள் மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவது சாத்தியமே இல்லை என்பதை ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு ஒரு துளியும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது.

வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், ஜனநாயகக் கட்சியின் சபாநாயகர் நான்சி பெலோசி ஒரு கவிதையைப் படித்து விட்டு, 'உச்ச நீதிமன்றம் அதன் கண்களைத் திறக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று ஆணித்தரமாகக் கூறினார். பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தலைமைச் செயலகக் கட்டிட படிகளில் ஒன்றுகூடி, “கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்,” என்று பாடினர், அதேவேளையில் போராட்டக்காரர்கள் பின்னணியில் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சம்பிரதாயமாக ஒரு 11 நிமிட உரை வழங்கிய ஜனாதிபதி ஜோ பைடென் தடுமாறியவாறு இந்த முடிவு 'சோகமானது' என்றதுடன், “Roe v. Wade வழக்குப் பாதுகாப்புகளைப் பெடரல் சட்டமாக காங்கிரஸ் மீட்டமைக்க வேண்டுமென' வலியுறுத்தினார், இது ஒருபோதும் நடக்கப் போவதில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.

முட்டுக்கட்டைகளை நீக்கவும், கூடுதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும், அல்லது ட்ரம்ப் ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் பாத்திரம் வகித்ததற்காக கிளாரன்ஸ் தோமஸிற்கு எதிராகக் குற்றவிசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கவும், ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் கொண்டுள்ள அதன் பெரும்பான்மையின் இந்தக் கடைசி மாதங்களைப் பயன்படுத்தும் என்று பைடென் அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, எதற்கும் பொறுப்பேற்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, “ஜனாதிபதியின் எந்த நடவடிக்கையும்' கருக்கலைப்பை பாதுகாக்க முடியாது என்று அறிவித்தார். கூட்டாட்சி மட்டத்தில் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பை பாதுகாக்க ஜனநாயகக் கட்சி எதுவும் செய்யப் போவதில்லை என்பதை ஒப்புக் கொண்ட பின்னர், வரவிருக்கும் இடைக்கால தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் பின்னர் மக்களை வலியுறுத்தினார்.

இந்த முடிவு மீதான பாரிய எதிர்ப்பு ஒரு சமூக வெடிப்பை உருவாக்கலாம் என்ற ஜனநாயகக் கட்சியின் பிரதான கவலைக்குக் குரல் கொடுக்கும் விதமாக, போராட்டக்காரர்கள் அதிவலதை 'அச்சுறுத்த வேண்டாம்' என்று பைடென் எச்சரித்தார். “அனைத்துப் போராட்டங்களையும் அமைதியாக நடத்துங்கள். மிரட்ட வேண்டாம். ஒருபோதும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் பேசுவதாகாது,” என்றார். பைடென் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, உச்ச நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே வெடித்திருந்த ஒரு போராட்டத்திற்கு விடையிறுக்கத் தலைமைச் செயலகப் பொலிஸ் வியூகம் அமைத்தது. குறிப்பாக ஜனவரி 6, 2021 இல் இருந்து வேறுபட்ட விதத்தில், பொலிஸ் முழுமையாகக் கலகம் தடுக்கும் கவசங்களை அணிந்திருந்ததுடன், நீதிமன்ற மேற்கூரையில் குறி பார்த்துச் சுடும் துப்பாக்கி ஏந்திய பொலிஸ்காரர்களும் நிலைநிறுத்தப்பட்டு இருந்தார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முந்தைய நாள், ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் குடியரசுக் கட்சி முழுமையாக ஈடுபட்டிருந்ததைக் காட்டும் விதத்தில் இருந்த ஐந்தாம் நாள் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போது, பைடென் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றின் போது குடியரசுக் கட்சியை 'என் சக குடியரசுக் கட்சி நண்பர்கள்' என்று குறிப்பிட்டார். அதே கருத்துக்களில், பைடென் அதிகரித்து வரும் எரிவாயு விலை உயர்வுகளுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மீது பழி சுமத்தியதுடன், “ஜனநாயகத்தைப்' பரப்பவும் மற்றும் 'புட்டினின் கொலைபாதக வழிகளை' எதிர்த்துப் போராடவும் உக்ரேனுக்குப் பாரியளவில் ஆயுதங்களை அனுப்புவது அவசியம் என்று பாதுகாத்தார்.

பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவப் போரை நடத்துவதற்கு அவர்களின் 'குடியரசுக் கட்சி நண்பர்களை' நம்பியுள்ளனர், கிழக்கு ஐரோப்பா மற்றும் யுரேஷியா முழுவதையும் கடிவாளமின்றி அமெரிக்கப் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்திற்குத் திறந்து விடுவதே இந்த நவ காலனித்துவப் போரின் நோக்கம் என்கின்ற நிலையில், இது அணு ஆயுதப் போருக்கு அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இருகட்சிகளின் ஒருமனதான நிலைப்பாடு தீவிர வலதுக்கு சட்டபூர்வத்தன்மை வழங்குவதுடன், பாசிசக் குடியரசுக் கட்சியாக அதிகரித்தளவில் மாறுவதற்கு உதவுகிறது, மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது உச்ச நீதிமன்றத்தின் வெறித்தனத்திற்கு வழி வகுக்கிறது.

1857 இல் Sanford v. Dred Scott வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் போலவே, இந்த டோப்ஸ் வழக்குத் தீர்ப்பும் 'உள்நாட்டுப் போர்த் தீர்ப்பின்' சாயலைக் கொண்டுள்ளது, Sanford v. Dred Scott வழக்குத் தீர்ப்பு தெற்குப் பகுதி அடிமைகளைச் சுதந்திர வடக்கு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் போது அவர்கள் தனிச்சொத்துடைமையாக இருப்பார்கள் என்றும், ஆபிரிக்க வம்சாவழியினர் அனைவரும் அமெரிக்கக் குடிமக்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்றும் அந்த Sanford v. Dred Scott வழக்கு தீர்ப்பானது 1861-65 அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடிப்பை வேகப்படுத்தி இருந்தது.

இன்று பைடென் அப்போதைய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜேம்ஸ் புக்கெனின் பாத்திரம் வகிக்கிறார், ட்ரெட் ஸ்காட் (Dred Scott) தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பதவியேற்றிருந்தார், வலதுடன் இணக்கமாக இருப்பது தான் ஒன்றியத்தைப் பாதுகாக்கும் என்ற பிரயோஜனமற்ற பிற்போக்குத்தனமான நம்பிக்கையில் அடிமைகளை வைத்திருந்த அவரது 'நண்பர்களை' சமரசம் செய்வதற்கான அவரின் முயற்சிகளால் அவர் நிர்வாகம் வரையறுக்கப்பட்டிருந்தது.

ட்ரெட் ஸ்காட் வடக்குப் பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், மேலும் ஜனநாயகம் என்பது அடிமைத்தனத்தின் 'விசித்திர அமைப்புக்கு' பொருந்தியதில்லை என்ற உணர்வு வளரப் பங்களிப்பு செய்தார், அது அடிமைகளைச் சொந்தமாக வைத்திருந்த ஒரு சிறிய உயரடுக்கு ஒட்டுமொத்த நாட்டின் சட்டங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த அனுமதித்தது. அடிமைத்தனம் மீதான மோதல் 'ஒடுக்க முடியாததாக' பார்க்கப்பட்டது மற்றும் விடுதலைக்கான புரட்சிகரப் போரின் மூலம் அந்தப் பிரச்சினைத் தீர்க்கப்பட்டது.

இன்று, மில்லியன் கணக்கானவர்கள் முதலாளித்துவத்தைப் பற்றி அதே போன்ற முடிவுகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், இந்த முதலாளித்துவத்தில் ஒரு சில பிற்போக்குத்தனமான தன்னலக் குழுக்கள் அரசியல் அமைப்புமுறையில் ஆதிக்கம் செலுத்துவதுடன், சர்வாதிகாரங்களை நிறுவ முயற்சிக்கின்றன, பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்த கூடிய போர் நடத்துகின்றன, SARS-CoV-2 போன்ற தடுக்கக்கூடிய நோய்களைப் பரப்புவதன் மூலம் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களை அனுமதிக்கின்றன, இலாபத்திற்காகச் சுற்றுச்சூழலை அழிக்கின்றன, பாரியளவிலான சமூகச் சமத்துவமின்மை மற்றும் வறுமை மட்டங்கள் விரிவாக்குவதை மேற்பார்வையிடுகின்றன.

இன்று அடிப்படை ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது அழுகிய இந்த இரு கட்சி அமைப்புமுறையிலிருந்து சுயாதீனமாகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதைச் சார்ந்துள்ளது என்பதையே டாப்ஸ் வழக்கு முடிவு எடுத்துக் காட்டுகிறது. மில்லியன் கணக்கானவர்களை ஆழ்ந்த பொருளாதாரக் கடின நிலைமை மட்டங்களுக்குள் தள்ளி வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புகளால் தூண்டப்பட்டு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதுபோன்றவொரு இயக்கம் அபிவிருத்தி அடைந்து வருகிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் ஏகாதிபத்தியப் போரைத் தடுக்கவும், இந்த இயக்கமானது இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழிப்பதை அதன் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். நிதியப் பிரபுத்துவத்தின் செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து மறுபகிர்வு செய்வதும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலகப் பொருளாதார அமைப்பைச் சோசலிச அடிப்படையில் மாற்றுவதுமே இதன் அர்த்தமாகும்.

Loading