இலங்கை: பாடசாலைகளை மூடுவதற்கு எதிராக கல்வி உரிமையைப் பாதுகாக்க சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் போராடுவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாக நாட்டின் போக்குவரத்து கடுமையாகப் பாதித்துள்ள நிலைமையில், இந்த வாரம் அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படும், என இராஜபக்ஷ அரசாங்கம் இம்மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. கடந்த 20 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், தீவின் பிரதான நகரங்களிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததோடு, கிராமிய பாடசாலைகள் என பெயிரிடப்பட்டுள்ள பாடசாலைகளில் மாத்திரமே வகுப்புகள் இடம்பெற்றன.

எரிபொருள் இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் காலவரையறையின்றி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாடசாலைகள் மட்டுமின்றி அத்தியாவசிய பணியாளர்கள் தவிர ஏனைய ஊழியர்களுக்கான அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. தனியார்துறை ஊழியர்களுக்கு 'வீட்டில் இருந்து வேலை செய்யும்' முறையைப் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையின் நகரம் ஒன்றில் பேரூந்தில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் (Photo: Facebook)

மேலும் மேலும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால், நாட்டின் பாடசாலைக் கல்வியானது வரலாற்றில் மிகப்பெரிய சரிவில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த நாட்களில் அரசு பரிந்துரையின்படி இயங்க வேண்டிய சில பாடசாலைகள் கூட, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றாக்குறையால் மூடிவிடுவதற்கு அதிபர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஏனைய தொழிலாளர்கள் போன்று ஆசிரியர்களும் பல நாட்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தமையினால், அவர்கள் பாடசாலைகளுக்கு சமூகம் அளிப்பதில் பெரும் இடையூறு ஏற்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து, அவற்றில் நெரிசல், அதிக போக்குவரத்து மற்றும் தனியார் பள்ளி போக்குவரத்து வாகனங்களின் கட்டண உயர்வால், மாணவர்களின் வருகை விகிதமும் வேகமாகக் குறைந்து வந்தது.

பிரதான நகரங்களுக்கு வெளியே உள்ள பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதோடு மூடப்பட்ட பாடசாலைகள் இணையவழியில் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. காலத்துக்கு காலம் மாறும் கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அதே போல் பெற்றோர்களும் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். அதே நேரம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தற்காலிகமாக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாறிச் செல்லுமாறும் அரசாங்கம் பரிந்துரைக்கிறது. இது எந்த வகையிலும் நடைமுறையில் சாத்தியமற்றது.

இராஜபக்ஷ அரசாங்கம் மாணவர்களின் கல்வி உரிமையை இவ்வாறு அழிப்பதற்கு எதிராக அணிதிரளுமாறு ஆசிரியர்கள் உட்பட அனைத்துக் கல்விப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழு அழைப்பு விடுக்கிறது. இலங்கையின் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியின் காரணமாக, எந்தவொரு மாணவரினதும் கல்வியும் வெட்டப்படக்கூடாது.

மாணவர்களின் கல்வியைப் பாதுகாப்பதில் இராஜபக்ஷ அரசுக்கு எந்தவொரு உண்மையான அக்கறையும் கிடையாது. இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோய் பேரழிவாகப் பரவிய போதும், பொது மக்களின் உயிர் வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல், முதலாளித்துவ இலாபம் ஈட்டும் செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் 'புதிய இயல்பு' கொள்கையின் ஒரு பகுதியாக பாடசாலைகளைத் திறந்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. உண்மையான நோக்கத்தை மூடி மறைத்து, அரசாங்கம் “பாடசாலைகளை அதிக நேரம் மூடி வைப்பது மாணவர்களுக்கு செய்யும் அநீதி” என்று பாசாங்குத்தனமாக அரசாங்கம் கூறிக்கொண்டது. அதற்கு நேர் எதிராக, இப்போது அரசாங்கம் பாடசாலைகளை முடிந்தவரை மூடி வைக்க துடிக்கிறது.

பாடசாலைகள் மூடப்படுவதால் மாணவர்கள் இழக்கும் பாடங்களை ஈடுகட்ட இணையவழி முறையை அரசாங்கம் முன்மொழிகிறது. ஆனால், பெரும்பாலான மாணவர்களுக்கு அதற்கான வசதிகள் கிடையாது. பாரியளவில் அதிகரித்த வரிகள் மற்றும் ரூபாயின் பாரிய வீழ்ச்சியினால் கணனிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிப்பை பல பெற்றோர்களால் தாங்க முடியாது. அதே போல், மட்டுப்படுத்தப்பட்ட இணைய வசதிகள் மற்றும் அதிகரித்த கட்டணங்கள் காரணமாக, கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், மாணவர்கள் கல்வி அமர்வுகளில் வெற்றிகரமாக பங்கேற்க முடியாத நிலையிலேயே இணையவழி கல்வி நடத்தப்பட்டது என்பது பரவலாக தெரிந்த விடயமாகும்.

இந்த அவல நிலையை ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில், மக்களை 'இந்த சிரமங்களையும் கஷ்டங்களையும் ஒரு குறுகிய காலத்திற்கு சகித்துக் கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிக்கு பங்களிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கூற்றுப்படி, அனைத்து துன்பங்களையும் தொழிலாளர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் சுமக்க வேண்டும். ஆனால், இலங்கையின் உயர்மட்ட முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அதிகபட்ச பொருளாதார நிவாரணங்களை வழங்கும் கொள்கையின் விளைவாக, இந்த காலாண்டில் சாதனை இலாபத்தை அவை ஈட்டியுள்ளன. தொழிலாள வர்க்கத்தை 'தியாகம்' செய்யுமாறு கேட்டுக் கொண்டால், பெரும் முதலாளிகளின் இந்த இலாபங்களைப் பெறுவதற்கு அவர்கள் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும்.

இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான வெட்டுக்களை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்துகின்றது. அரச செலவினங்களைக் குறைத்தல், அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் மற்றும் வணிகமயமாக்குதல் மற்றும் வரிகளை உயர்த்துதல் உட்பட தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை கடுமையாக பாதிக்கும் நிலைமைகள் இதில் அடங்கும். அரச துறையில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளை அகற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இவ்வாறு, அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு, தொழிற்சங்கங்களின் தீவிர ஆதரவுடன் செயல்படுகிறது. கல்வித்துறையில் உள்ள சில தொழிற்சங்கங்கள், இப்போது பாடசாலைகளை மூடுவது எவ்வாறு என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கவே முன்வருகின்றன.

முதலாளித்துவ மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (இ.ஆ.சே.ச.), கல்வி அமைச்சுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று, 'காலை 07.30 - பிற்பகல் 01.30 வரை காலத்தை நீடித்து, பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது' ஆகும். கடிதத்தில், இ.ஆ.சே.ச. தங்களின் முன்மொழிவுகளுக்கு கவனம் செலுத்துமாறும் அது தொடர்பாக கலந்துரையாடவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது .

முன்னிலை சோசலிச கட்சி தலைமையிலான ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ பண்டார, ஜூன் 20 அன்று நடைபெற்ற ஊடக கலந்துரையாடலில், அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவை எதிரொலித்தார். மேலும், பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, தனியார் பாடசாலை பேருந்துகளில் சலுகை கட்டணத்தின் அடிப்படையில் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தி, மாணவர்களின் போக்குவரத்திற்கான அமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் இல்லை என்று அரசாங்கத்தின் தொடர்ச்சியான கூற்றுகளை நியாயப்படுத்திய பண்டார, தனது முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு 'அவ்வளவு பணம் செலவாகாது' என்று கூறினார்.

முதலாளித்துவ அரசாங்கங்களுடன் வட்டமேசை கலந்துரையாடல்களில் அமர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை ஆதரிப்பதே தொழிற்சங்கங்களின் நயவஞ்சகமான பாத்திரமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 200,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தம் செய்து உயர் ஊதியத்திற்கான போராட்டங்களை ஆரம்பித்தபோது, கல்வி தொழிற்சங்கத் தலைவர்கள், 'தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உடனடி ஊதிய உயர்வு சாத்தியமில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக” அப்போதைய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிற்கு முன்னால் தெரிவித்தனர். தாங்கள் கேட்பது ஊதிய உயர்வு தொடர்பான 'கொள்கை முடிவு' மட்டுமே எனக் கூறினர். 100 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு, தொழிற்சங்கங்கள் அசல் கோரிக்கையிலிருந்து மூன்றில் ஒரு பங்கு ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டு தங்கள் உறுப்பினர்களுக்கு துரோகம் இழைத்தன.

முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் நலன்களுக்காக செயல்படும் தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் மாறாக, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுவானது, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. உயர்தர கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது எப்படி? ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் சம்பளம் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்? மாணவர்கள், ஆசிரியர்கள், எஞ்சிய தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது? முதலியவற்றை, முதலாளித்துவ இலாபங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களால் முடிவெடுக்க இடமளிக்க முடியாது.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற முக்கியமான வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இனியும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் விட்டு வைக்காது, அதற்கு மாறாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. அதற்கு, வங்கிகள், பெரிய நிறுவனங்கள், பெருந் தோட்டங்கள் மற்றும் பிற பிரதான பொருளாதார மையங்களை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்குவது கட்டாயமாகும். ஒரு சில முதலாளிகளின் இலாப நலன்களுக்காக அன்றி, மனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முழு உற்பத்திப் பொருளாதாரத்தையும் மறுசீரமைப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காக, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களைச் சாராமல் தொழிற்சாலைகள், பெருந் தோட்டங்கள், வேலைத் தளங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் ஜனநாயக முறையில் செயற்படும் நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பு ஒன்றை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு பாடசாலையிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முன்வர வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

16 ஜூன் 2022 அன்று வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுவை வழிநடத்தும் சோசலிச சமத்துவக் கட்சி, முன்வைத்துள்ள பின்வரும் கோரிக்கைகளின் மீது இந்த நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பு போராட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

  • அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரி! சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் உலக வங்கியின் சிக்கன கோரிக்கைகள் வேண்டாம்!
  • பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பெரும் செல்வத்தை கையகப்படுத்துங்கள்!
  • ஏழை விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! உரம் உள்ளிட்ட அனைத்து விலை மானியங்களும் விவசாயிகளுக்கு திரும்ப வழங்கு!
  • அனைவருக்கும் ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் வேலை உத்தரவாதம் செய்! வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய உயர்வு வேண்டும்!

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளதால், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் இங்கு அவசியம் ஆகும். சோசலிச சமத்துவ கட்சிக்கு தலைமை தாங்கும் உலக தொழிலாள வர்க்க கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இந்த குழுக்களை இணைக்க நாங்கள் செய்ற்படுகிறோம்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ முன்னெடுக்கும் பினாமிப் போரினால் ஆழமடைந்துள்ள உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் கொடூரமான தாக்குதல்களை எதிர்த்து, அதற்கு விரோதமான போராட்டத்தில் இணைந்திருக்கும் பில்லியன் கணக்கான சர்வதேச தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இந்த போராட்டத்தை இணைத்து வழிநடத்த எம்மால் முடியும்.

மேலும் படிக்க

Loading