இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான ஒரு இரக்கமற்ற தாக்குதலுக்கான தனது அரசாங்கத்தின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டி, புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திங்கள் அன்று தேசிய உரையை நிகழ்த்தினார்.
இலங்கை ஆளும் வர்க்கம், கோவிட்-19 தொற்று நோய் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான ஆமெரிக்க-நேடோ யுத்தத்தால் பாரியளவில் தீவிரமாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர்களின் முதுகில் சுமத்த முற்படுகின்றது. திட்டமிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கையானது விண்ணை முட்டும் விலைகள், நாளாந்த மின் வெட்டுக்கள், மற்றும் எரிபொருள், உணவு, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையால் உருவாக்கப்பட்ட ஏற்கனவே தாங்கமுடியாத நிலைமைகளை மோசமாக்கும்.
ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அராங்கத்தை பதவி விலகக் கோரும் பாரிய மக்கள் போராட்டமானது மே 9 அன்று அவரது சகோதரரான மஹிந்த இராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகி கட்டாயப்படுத்தியது. அவரின் பதிவிக்கு விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான ஜனாதியின் தீர்மானம், முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சி ஆகும்.
பரவலாக வெறுக்கப்பட்ட விக்கிரமசிங்க, அவரது வலது-சாரி ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை கொடூரமாக செயல்படுத்துவதிலும் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளின் பிற்போக்கு புவிஅரசியல் நலன்களுக்கு சேவைசெய்வதிலும் அவரது இழிவான சாதனையே இந்தப் பதவிக்கு அவரின் அடிப்டை தகுதியாக உள்ளது.
விக்கிரமசிங்கவின் நியமனமானது சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் ஊடாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் மீதான இலங்கை ஆளும் வர்க்கத்தின் தாக்குதலில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கின்றது. தற்போதைய மக்கள் போராட்டத்தை அடக்கத் தவறிய இராஜபக்ஷ, அந்த வேலைக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த முதலாளித்துவ அரசியல்வாதி என்று கணக்கிட்டு விக்கிரமசிங்கவை அழைத்து வந்துள்ளார்.
இலங்கையில் முகங்கொடுக்கின்ற முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை “மிகவும் ஆபத்தானது” என விக்கிரமசிங்க விபரித்தார். அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையின் 13 சதவீதமான உயர்வு, சுருக்கமடைகின்ற அந்நியச்செலாவணி கையிறுப்பு, கடுமையான எரிபொருள் மற்றும் அத்தியவசிய மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். அவர் 15 மணிநேர நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துவதாகவும் அச்சுறுத்தினார்.
விக்கிரசிங்க, நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப் புற ஏழைகள் மீது சுமத்துவதை நியாயப்படுத்த மோசமான பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்த முற்படுகின்றார். அவரது உரை, இராஜபக்ஷவால் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் எதிர்பார்க்க கூடியது என்ன என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் “சலுகை வரவு-செலவு திட்டத்தை வழங்க” உத்தேசித்துள்ளதாக விக்கிரமசிங்க கூறினார். சலுகைகள்” என்பது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேலும் அழிப்பதாகும்
ஸ்ரீலங்கன் விமானசேவை முகங்கொடுத்த பாரிய இழப்புக்களை சுட்டிகாட்டி, விக்கிரமசிங்க இந்த தேசிய காவியை தனியார்மயமாக்க முன்மொழிந்தார். இது தவிர்க்கமுடியாமல் விமான ஊழியர்களின் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் முன்னெடுக்கப்படும். இது எந்தவொரு அவசர கடனைப் பெறவும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டதன் படி, இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் நீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைப்புச் சபை உட்பட ஏனைய பல அரச நிறுவனங்களை மேலும் தனியார் மயமாக்குதல் அல்லது வணிகமயமாக்குதலுக்கு வழி வகுக்கும்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய விக்கிரமசிங்கவின் முறைப்பாடானது, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்ற எச்சரிக்கை ஆகும். இதேபோல தண்ணீர் வரி அதிகரிப்பும் முன்னெடுக்கப்படும். அதிகரிக்கப்ட்ட எரிபொருள் விலையானது பெரும்பாலான தொழிலார்கள் அன்றாடப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து செலவையும் மேலும் அதிகரிக்கச் செய்யும். இது உணவு உட்பட சகல அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்.
உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமையை ஏற்றுக்கொண்ட விக்கிரமசிங்க, “நாம் சில தியாகங்களைச் செய்வதற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என எச்சரித்தார். ஒரு குறுகிய காலத்துக்கு நாம் கடந்து வந்த கடினமான காலங்களை விட எமது எதிர்காலம் மிகவும் கடினமாக இருக்கும்.
விக்கிரமசிங்க “எம்மைப்” பற்றி பேசிய போதிலும், பெரும்-பணக்காரர்கள் மற்றும் புகோள முதலீட்டாளர்களைப் பாதுகாத்தும் அவர்களின் இலாப நலன்களை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, தொழிலாள வர்க்கத்தையே “தியாகங்கள்” செய்ய இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கும்.
“வருகின்ற மாதங்களில் எமது வெளிநாட்டு கூட்டாளிகள் எமக்கு உதவி செய்வார்கள் என்பதால்“ இந்த நெருக்கடியான காலம் நீடிக்காது” என கூறி விக்கிரமசிங்க தொழிலாளர்களை அமைதிப்படுத்த முயன்றார். இது ஒரு பொய் ஆகும். உழைக்கும் மக்களும் கிராமப்புற ஏழைகளும் அதி செல்வந்தர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் நன்மைக்காக தொடர்சியாக துண்பப்பட வேண்டியிருக்கும்.
சர்வதேச நாணய நிதியம் உட்பட ஏகாதிபத்திய சக்திகள், உலக வங்கிகள் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களால் கட்டுப்படுத்தப்படும் “வெளிநாட்டுக் கூட்டாளிகளிடம்” இருந்து கிடைக்கும் உதவிகள் என அழைப்படுவதானது வேலைகள், ஊதியங்கள் மற்றும் பிற நலன்களில் வெட்டுக்களுடன் மேலதிக மானிய குறைப்புகள், வரி அதிகரிப்பு மற்றும் பொதுத் துறையை “மறுகட்டமைத்தல்” அதாவது தனியார்மயமாக்குதல் அல்லது வணிகமயமாக்குதல் உட்பட கடுமையான நிபந்தனைகளுடனேயே வந்து சேரும். மேலும், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியன சீனாவுக்கு எதிரான தங்களது ஆத்திரமூட்டல் இராணுவ-மூலோபாயத்தினுள் மேலும் முழுமையாக ஒன்றிணைக்க கொழும்பை அழுத்துவதற்கு தமது உதவிகளைப் பயன்படுத்தும்.
இலங்கையில் முதலாளித்துவ ஆட்சி எதிர்கொள்ளும் தீவிரமான நெருக்கடியானது உலக முதலாளித்துவ நெருக்கடியின் பாகமாகும். இது தாங்களே நெருக்டிக்குள் மூழ்கியுள்ள அரசாங்கங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்தான உதவிகள் என அழைக்கப்படுதன் ஊடாக தீர்க்கப்பட முடியாது.
நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே வெளிப்பட்டுள்ளன. தற்போதுள்ள எரிபொருள் பற்றாக்குறையை காட்டி, அடுத்தநாள் அத்தியவசியமற்ற பொதுத் துறை ஊழியர்களைப் பணிக்குச் செல்ல வேண்டாம் என விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். “அத்தியவசியமற்ற” ஊழியர்களை அகற்றுதல் என்ற போலிச்சாட்டின் கீழ் பொதுத் துறையில் வேலைகள், ஊதியங்களை வெட்டுவதற்கே இது இட்டுச்செல்லும்.
இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கத்தால் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வர்க்கப் போரை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைதியாக ஏற்கமாட்டார்கள். அவர்கள், இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மாத நீண்ட எழுச்சியில் எற்கனவே ஈடுபட்டுள்ளார்.
இந்த வெகுஜன இயக்கமானது, ஏப்ரல் 28 மற்றும் மே 6 அகிய இரண்டு ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் மே 9 தொடங்கிய இன்னொரு பொது வேலைநிறுத்தம் உட்பட தொழிலாளர் வர்க்கத்தின் சக்திவாய்ந்த தலையீட்டுடன் ஒரு திருப்பு முனையை அடைந்தது. மே 9 தொடங்கிய வேலை நிறுத்தத்தை இரண்டே நாட்களில் தொழிற்சங்கங்கள் துரோகத்தனமாக காட்டிக்கொடுத்தன. சிங்கள, தமிழ், முஸ்லீம், இந்து, பௌத்தம் மற்றும் கிறிஸ்தவம் என அனைத்து வகுப்புவாத பிரிவுகளைக் கடந்து ஒற்றுமையுடன் மில்லியன் கணக்கான அரச, தனியார் மற்றும் அரை-அரச தொழிலார்கள் இந்தப் போராட்டங்களில் பங்குபற்றினர்.
இராஜபக்ஸ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் திவிரமான அசியல் நெருக்கடி அதிகரிக்கின்ற அதேவேளை மேலதிக சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதானது, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சமூக கோபம் மற்றும் எதிர்ப்களைத் தீவிரமடையச் செய்யும்.
இதற்குப் பிரதிபலிப்பாக, இராஜபக்ஷ அரசாங்கம் ஒரு இராணுவ-பொலிஸ் அடக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதுடன் சர்வதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய அதன் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இராஜபக்ஷ, பொது வேலை நிறுத் தத்துக்கு முதல் நாள்ர மே 5 அன்று தீவு-தழுவிய அவரசகால சட்டத்தை அமுல்படுத்தினார். பின்னர் ஏப்ரல் 9 அன்று அவரின் சகோதரரான முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடன் சேர்ந்து, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒரு கொடூரமான குண்டர் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட சதி செய்ததுடன் ஊரடங்கை அமுல்படுத்தி தீவு முழுவதிலும் இராணுவத்தை நிலைநிறுத்த இந்த நிலைமையை சுரண்டிக்கொண்டார்.
தொழிலாளர் வர்க்கமானது இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் சகல முதலாளித்துவ ஒழுங்குடன் நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராக வேண்டும்.
அரசாங்கம் மற்றும் தொழில் வழங்குனர்கள் சார்பாக செயல்படும் ஒரு தொழிற்துறை பொலிஸ் படையாக தனது துரோகத்தனமாக வகிபாகத்தை தொழிற்சங்கங்கள் தெளிவாகக் காட்டியுள்ளனது. அரசாங்க-எதிர்ப்புப் போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு தலையீட்டையும் வாரக் கணக்கில் அடக்கி வைத்திருந்த தொழிற்சங்கங்கள், அடிமட்டத்தில் இருந்து வந்த பாரிய அழுத்தத்தால் ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று பொது வேலை நிறுத்தங்கைளுக்கு அழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுழ்படுத்த தயாராக உள்ள அனைத்து எதிர்கட்சிகளுடன் உழைக்கும் மக்களை கட்டிப்போடவுமே இந்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன.
மே 11 அன்று நடத்தப்படவிருந்த கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் எடுத்த தீர்மானமானது மே 9 அன்று ஆர்ப்பாட்டக்கார்கள் மீதான குண்டர் தாக்குதலை மேற்கொள்வதற்கு இராஜபக்ஷ அரசாங்கத்தை பலப்படுத்தியது. தபால் திணைக்களம் மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை உட்பட பல துறைகளில் தொழிலாளர்கள் தாமாகவே வேலை நிறுத்தத்துக்கு சென்றமையால் அதே நாள் அன்று மற்றொரு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்க தொழற்சங்கங்கள் கட்டாயப்படுத்தப்படன. ஆனால் தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த நடவடிக்கையை கைவிட்டன.
கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அரசாங்க அடக்குமுறைகளுக்கு எதிராக தமது போராட்டத்தை ஒழுங்கமைத்து முன்னெடுத்துச் செல்ல, தொழிற்சங்கஙகளிடம் இருந்து பிரிந்து அனைத்து தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பெருந் தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தொழிலார்கள் தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் படைகளை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு குழுக்களையும் காவலர்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அத்தகைய குழுக்களை அமைக்க தொழிலாளர்களுக்கு உதவும். அந்த குழுக்களின் போராட்டங்கள் அபிவிருத்திசெய்யப்பட வேண்டிய ஒரு தொகை அரசியல் மற்றுமு சமூக கோரிக்கைகளை சோ.ச.க. முன்வைத்துள்ளது.
சோசலிசக் கொள்கைளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தொழிலாளர் மற்றும் விவிசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை நோக்கி, நடவடிக்கைக் குழுக்கள் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு சோ.ச.க. முன்னோக்கிச் செல்லுகின்றது. இது தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகும். இதை உலகம் முழுவதும் உள்ள தமது வர்க்க சகோதார சகோரிகளுடன் இலங்கைத் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே முன்னெடுக்க முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்புகொள்ள கீழுள்ள படிவத்தை நிரப்புங்கள்:
மேலும் படிக்க
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
- இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள்
- தொற்று நோய், முதலாளித்துவத்தி பூகோள நெருக்கடி, வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சி மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்-பகுதி 1
